ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
"திருப்பாணாழ்வார்" வைபவம்
“வ்ருஸ்சிகே ரோஹிணீ சாதம் ஸ்ரீபாணம் நிகளாபுரே |
ஸ்ரீவத்ஸாம்ஸம் காயகேந்த்ரம் முநிவாகனமாஸ்ரயே ||”
விளக்கம் : சோழ வளநாட்டில் தருமவர்மன் என்னும் செம்பியனுக்கு மகளாக நீளாதேவி அவதரித்த இடமான உறையூரில், துர்மதி ஆண்டு, கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில், திருமாலின் திருமருவான ஸ்ரீவத்ஸத்தின் அம்சமாய், அந்தணன் கழனியில் நெற்கதிரில் தோன்றியவரும், லோகசாரங்கர் என்னும் முனிவரைத் தனது வாகனமாகக் கொண்டவருமான திருப்பாணாழ்வாரை வணங்குகிறேன்.
இவ்வாழ்வாரது அவதாரத்தில் ஊற்றம் கொண்டவராய், ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் தனது "உபதேச இரத்தினமாலை" என்னும் பிரபந்தத்தில்.
"கார்த்திகை உரோகிணி நாள் காண்மின் இன்று காசினியீர்
வாய்த்தபுகழ் பாணர் வந்துதிப்பால் - ஆத்தியர்கள்
அன்புடனேதான் அமலனாதிபிரான் கற்றதற்பின்
நன்குடனே கொண்டாடும் நாள்"
(பாசுரம் 10) என்று புகழ்ந்து பாடியுள்ளார்.
விளக்கம் : உலகத்தவர்களே! இந்நாள், கார்த்திகை மாதத்து ரோகிணி நக்ஷத்திரமாகும். பொருந்திய புகழை உடையவரான திருப்பாணாழ்வார் இப்பூவுலகில் வந்து தோன்றியபடியால், ஆஸ்திகர்கள் பக்தியோடு இவ்வாழ்வார் அருளிச்செய்த "அமலனாதிபிரான்" என்கிற திவ்யப்ரபந்தத்தைக் கற்கப்பெற்றோம் என்று மகிழும் நாளாகவும், நலமாகக் கொண்டாடப்படும் நாளாகவும் உள்ளது.
ஜகதாசார்யரான பகவத் இராமானுசரின் துதி பாடும் "இராமாநுச நூற்றந்தாதி" என்னும் பிரபந்தத்தில், திருவரங்கத்தமுதனார் என்னும் ஆசார்யர், திருப்பாணாழ்வாரின் புகழைப் பாடி, அவர் திருவடி பணிந்த இராமானுசரைக் கொண்டாடும் வண்ணம்,
"சீரிய நான்மறைச் செம்பொருள் செந்தமிழால் அளித்த
பாரியலும் புகழ் பாண்பெருமான் - சரணாம் பதுமத்
தாரியல் சென்னியிராமாநுசன் தன்னைச் சார்ந்தவர்தம்
காரியவண்மை என்னால் சொல்லொணாது இக்கடலிடத்தே"
(பாசுரம் 11) என்று பாடியுள்ளார்.
விளக்கம் : சிறந்த நால்வேதங்களில் உள்ள பொருள்களை, அழகிய தமிழ்ப் பாசுரங்களால் அருளிச்செய்தவரும், பூமியெங்கும் பொருந்தின புகழை உடையவருமான திருப்பாணாழ்வாருடைய திருவடிகளாகிற தாமரைப்பூவாலே அலங்கரிக்கப்பட்ட திருமுடியை உடையவருமான எம்பெருமானாரை ஆச்ரயமாகப் பற்றினவர்களுடைய அனுஷ்டான லக்ஷணமானது, கடல்சூழ்ந்த இப்பூமியில் என்னால் சொல்லித்தலைக் கட்டமுடியாதது.
இவ்வாழ்வார் அருளிச்செய்த திவ்யப்ரபந்தமானது ""அமலனாதிபிரான்" (அமலன் ஆதி பிரான்) என்று வழங்கப்படுகிறது. பத்து பாசுரங்கள் கொண்ட இந்த திவ்யப்ரபந்தம், ப்ரணவ மந்திரம் போன்று மிகவும் சுருக்கமானதும் அல்ல; அதே சமயம் வேதம் போன்றும், வேதங்களின் உட்பொருளை விளக்கவல்ல மகாபாரதத்தைப் போன்று மிகவும் விரிவானதும் அல்ல. மேலும், அனைவரும் புரிந்துகொள்ள முடியாதபடி கடினமாதும் அல்ல. இதனைக் கற்பதற்குத் தகுதியை (அதிகாரி) எதிர்பார்ப்பதும் அல்ல. "இராமாயணம்" – “வேதோபப்ருஹ்மாணார்த்தாய தாவக்ராஹயத ப்ரபு:" - அதாவது, வேதத்தை அவர்களின் சரித்திரம் மூலமாக விவரிப்பதாக வால்மீகி முடிவு செய்தார் - என்று உரைக்கின்றது. "மஹாபாரதம்" - வேதாநத்யாபயாமாஸ மஹாபாரதபஞ்சமாந - அதாவது, வேதவ்யாசர் ஐந்தாவது வேதமான மஹாபாரதத்தை அருளிச்செய்தார் - என்றது. இப்படியாக உள்ள இராமாயணமும், மஹாபாரதமும், நாராயணகதாமிமாம் - அதாவது, நாராயணனின் கதைகளைக் கூறியபின், மற்ற கதைகளையும் கூறின. ஆனால், இதுபோன்ற குறையேதும் ""அமலனாதிபிரானுக்கு" இல்லை; காரணம், இந்தப்ரபந்தம் "நாராயணனைப் பற்றி மட்டுமே" கூறுகிறது என்று கருத்து.
இந்தப் ப்ரபந்தத்தின் தொடக்கச்சொல்லே, அதன் தலைப்பாக, ""அமலனாதிபிரான்" என்று வழங்கப்பட்டுள்ளது. "அமலன்" என்றால் தூய்மையானவன் என்று பொருள்; "ஆதி" என்றால், இந்த உலகின் காரணமானவன் என்று \பொருள்; "பிரான்" என்றால் அனைத்தும் செய்பவன் என்று பொருள். திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் பெரியபெருமாளின் (ஸ்ரீரங்கநாதர்) வடிவழகைத் திருவடி தொடங்கி திருமுடி வரை வர்ணித்து பத்து பாசுரங்கள் அருளிச்செய்துள்ளார் இவ்வாழ்வார்.
இந்த பத்து பாசுரங்களையும் அருளிச்செய்த திருப்பாணாழ்வரைப் போற்றியும், இந்தப் பிரபந்தத்தின் சாராம்சத்தையும் உணர்த்தும் வண்ணம், அற்புதமான தனியனை அருளிச்செய்துள்ளார் "திருமலை நம்பிகள்" என்னும் ஆசார்யர். அதனை இன்றைய பகுதியில் அனுபவித்து, ஆழ்வாரது வைபவைத்தையும் அனுபவிப்போம்:
"காட்டவே கண்ட பாதகமலம் நல்லாடை உந்தி
தேட்டரும் உதரபந்தம் திருமார்வு கண்டம் செவ்வாய்
வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனிப்புகுந்து
பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவினோமே."
விளக்கம் : தாமரை போன்ற திருவடிகள் (பாசுரம் 1), சிவந்த பீதாம்பர ஆடை (பாசுரம் 2), அழகான தொப்பூழ் (பாசுரம் 3), மிகவும் அரியதான அரைநாண் (பாசுரம் 4), பெரியபிராட்டி அமரும் திருமார்பு (பாசுரம் 5), அழகான கழுத்து (பாசுரம் 6), சிவந்த வாய் (பாசுரம் 7), சோர்வில்லாத திருக்கண்கள் (பாசுரம் 8), நீண்ட திருமேனி (பாசுரம் 9) ஆகியவற்றுடன் திகழும் பெரியபெருமாளை, லோகசாரங்கர் என்னும் முனிவரின் தோள்களில் அமர்ந்து சென்று திருப்பாணாழ்வார் வணங்கி ஆனந்தம் அடைந்தார். அந்த ஆனந்தத்தைத் தன் பாசுரங்கள் மூலமாகத் தெரிவித்து மகிழும் திருப்பாணாழ்வாரின் திருவடிகளைத் துதிப்போமாக. அதாவது, பெரியபெருமாளின் திருவடி தொடங்கி திருமுடி வரை நின்று அனுபவிக்கப் பெற்ற பாண்பெருமாளை ஸ்தோத்ரம் பண்ணி வணங்குமாறு இந்தத் தனியன் அறிவுறுத்துகிறது.
அடையவேண்டியவனும் அவனே; அவனை அடையும் வழியை ஏற்படுத்தித் தருபவனும் அவனே. இங்கே, பாணருக்குக் கிடைத்தது அந்த அனுபவம். அதைப் போற்றும் வண்ணமே, "காட்டவே கண்ட பாதகமலம்" என்று இந்தத் தனியனை அமைத்துள்ளார் போலும் திருமலை நம்பிகள். ஒருபுறம், எம்பெருமான் தன்னைக் காட்டி ஆழ்வாருக்கு அருள் புரிந்தான் என்றும் வைத்துக்கொள்ளலாம்; அதேசமயம், ஆழ்வாருக்கு அருள்புரிவதற்காகவே தன்னைக் காட்டினான் அவன் என்றும் வைத்துக் கொள்ளலாம். இவரது அவதாரத்தை நேற்றைய பகுதியில் அனுபவித்தோம். இவரது வைபவத்தை இன்றைய பகுதியில் அனுபவிப்போம்:
"தொழிலெனக்குத் தொல்லைமால் தன்நாமம் ஏத்த
பொழுதெனக்கு மற்றதுவே போதும்" (பாசுரம் 85) என்று நான்முகன் திருவந்தாதியில் அருளிச்செய்தார் திருமழிசைப்பிரான். பெருமானின் திருநாமங்களை எப்போதும் இடைவிடாது சொல்லி, அவனைப் புகழ்வதே தன் தொழிலாகவும் பொழுதுபோக்காகவும் இருக்கிறது என்று உரைத்துள்ளார் இவ்வாழ்வார். இதைத் தானும் அப்படியே செயலில் கொண்டிருந்தார் "பாணர்" என்பவர். தென் திருக்கவிரியின் தென்கரையிலேயே யாழும் கையுமாக, திருவரங்கன் புகழை இசைத்துப்பாடி, அவனை அதிகாலைப் பொழுதிலிருந்தே தொழுது வந்தார்
இப்படி, அவர் ஒருநாள், திருவரங்கம் தென்திருக்காவிரி ஆற்றின் ஒரு கரையில் அமர்ந்து கொண்டு, எம்பெருமானின் புகழ்களைப் போற்றி பண்ணிசைத்துக் கொண்டிருக்க, அப்போது அரங்கன் பூசைக்காக புது நீர் எடுக்க அந்த இடத்திருக்கு வந்த லோகசாரங்கர் என்னும் முனிவர், பாணர் தீண்டத்தகாத குலத்தில் பிறந்ததால், அவரைத் தான் செல்வதற்கு வழிவிட்டு நகரச் சொன்னார். பெருமானின் புகழை பண்ணிசைத்துப் பாடி, அதனுள் பக்தியில் மூழ்கியிருந்த பாணரின் காதில் முனிவர்சொன்னது விழாமல் போக, முனிவரும் தன்னை மதியாமல் இப்படி இருக்கிறானே என்று கோபம் கொண்டு, பாணர் மீது கற்களை வீசி அவரை நகரச்செய்ய, பாணர் அதையும் பொருட்படுத்தாமல் பக்தியில் திளைத்திருந்தார் தன் அடியவன் துன்புருவதைக்கண்ட திருமகள் (திருத்தாயாரான பெரிய பிராட்டி) அவர் துன்பத்தைப் போக்கும்படி பெருமானிடம் (அரங்கனிடம்) பரிந்துரை செய்ய பெருமானும் பாணர் மீது அன்புகொண்டு அவரைத் தன்னுடன் சேர்த்துக்கொள்ள திருவுள்ளம் கொண்டான். மேலும், முனிவர் வீசிய கற்களால் காயமடைந்த பாணரின் முகத்தில் இரத்தம் சிந்த, அதற்கு வருந்திய பெருமானின் அர்ச்சை உருவிலும் இரத்தம் சிந்தத் தொடங்கியது. இதைக்கண்ட மக்கள் பயந்து, அந்தச் செய்தியை அரசனுக்குக் கூறினார். இதைக்கேட்ட அரசனும் கலங்கி அஞ்சினான்.
அன்று இரவு, லோகசாரங்க முனிவரின் கனவில் எம்பெருமான் தோன்றி, பாணரைத் தன் தோள்களில் ஏற்றி, தன் சன்னிதிக்கு அழைத்துவரும்படி கட்டளை இட்டான். இதைக்கேட்ட முனிவரும், தன் தவற்றை உணர்ந்து, பாணரைத் தேடிச்செல்ல, ஓரிடத்தில் அவரைக் கண்டுபிடித்து, அவரை நோக்கிச் செல்ல, பாணரும் மீண்டும் முனிவரால் தனக்கு ஆபத்து என்று அஞ்சி ஓட, அவரைத் தொடர்ந்து சென்ற முனிவர்,நடந்த விஷயங்களைக் கூறி, அவரிடம் மன்னிப்பு கேட்டு, அவரைத் தன் தோள்களில் ஏறுமாறு வேண்டி, அவரை அரங்கனின் சன்னிதிக்கு எழுந்தருளச் செய்ய, அரங்கனும் மகிழ்ந்து, கதவுகளைத் திறக்கச்செய்து, அனைவருக்கும் சேவை சாதித்தான் (தரிசனம் தருதல்). இதைக்கண்டு அதிசயித்த "பாணர்" அரங்கனிடம் கொண்ட பக்தியின் மிகுதியால்,திருவரங்கனின் அழகை, அவனது திருவடி முதல் திருமுடி வரை அனுபவித்து அதை அப்படியே பண்ணிசைத்துப் பாடிக்கொண்டு, கடைசி அடியில், "அரங்கனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே" என்று பாட, அரங்கனும் அவரை ஏற்றுக்கொண்டு, அவரைத் தன் திருவடியிலேயே புகலிடம் செய்தருள, பாணரும், அங்கு கூடியிருந்தவர்களின் கண்களிலிருந்து மறைந்து, அரங்கனோடு ஒன்றெனக்கலந்தார்.
"பச்சைமாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண், அச்சுதா அமரரேரே ஆயர்தம் கொழுந்தெயென்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே" என்று அருளிச்செய்தார் தொண்டரடிப்பொடி ஆழ்வார் "திருமாலை" (பாசுரம் 2) என்னும் பிரபந்தத்தில். திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானே! அரங்கனே! உன் திவ்ய வடிவழகைக் கண்டு எப்பொழுதும் மகிழ்ந்துகொண்டு, இந்தத் திருவரங்கத்திலேயே இருந்துகொண்டு உனக்கு அடிமைத்தொழில் செய்வதில்தான் எனக்கு விருப்பம் ஆகும்; அதைவிட்டு, நீ எனக்கு உயர்ந்த இந்திரப்பதவி கொடுத்தாலும், அதைத்தாண்டி, பரமபதத்தில் உன்னுடன் எப்பொழுதும் கூடியிருக்கும் பாக்கியத்தை அளித்தாலும், அதை நான் ஏற்கமாட்டேன்" என்று தொண்டரடிப்பொடிகள் விண்ணப்பித்துள்ளார்.
இங்கே பாணரோ, பெரியபெருமாளின் திருக்கண்களின் அழகைத் தரிசித்தபின், தனது கண்கள் வேறு எதையும் தரிசிக்கமாட்டாது என்பதை, "அரங்கனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே!" என்று அறுதியிடுகிறார். மேலும், பெரியபெருமாளுக்கே தான் அற்றுத் தீர்வேன் என்றும், இப்பெருமாளது அழகைத் தரிசித்தபின், தனது கண்கள் பரமபதநாதனைக் கூட காணத் தயாராக இல்லை என்றும் தெரிவிப்பதாக உள்ளது.
முக்கியமாக அறிந்துகொள்ளவேண்டியது:
இந்தப் பிரபந்தத்தில் ஆழ்வார் அருளியுள்ள 10 பாசுரங்களில், முதல் மூன்று பாசுரங்களின் முதல் சொற்கள்:
முதல் பாசுரத் தொடக்கச் சொல்: "அமலனாதிபிரான்".
2ஆம் பாசுரத் தொடக்கச் சொல்: "உவந்தவுள்ளத்தனாய்"
3ஆம் பாசுரத் தொடக்கச் சொல்: "மந்திபாய்"
மேற்கண்ட மூன்று பாசுரங்களின் மூன்று தொடக்கச் சொற்களிலும், ஆழ்வார் ஒரு மிக உயர்ந்த கருத்தினை அருளியுள்ளார்: அது யாது? அறிவோம்:
"அமலனாதிபிரான்" என்னும் சொல்லில் வரும் முதல் எழுத்தான "அ" என்ற எழுத்தம் , "உவந்தவுள்ளத்தனாய்" என்னும் சொல்லில் வரும் முதல் எழுத்தான "உ" என்ற எழுத்தும், "மந்திபாய்" என்னும் சொல்லில் வரும் முதல் எழுத்தான "ம" என்ற எழுத்தும் சேர்ந்து பிரணவ மந்திரத்தைக் குறிப்பதாய் அமைந்துள்ளது. (அ +உ+ம = ஓம்).
மேலும், இன்னும் மூன்று பாசுரங்களை இதேபோல் எடுத்துக்கொள்வோம்:
5ஆம் பாசுரத் தொடக்கச் சொல்: "பாரமாய".
6ஆம் பாசுரத் தொடக்கச் சொல்: "துண்டவெண்பிறையன்"
7ஆம் பாசுரத் தொடக்கச் சொல்: "கையனார்"
இவற்றை ஆராய்ந்தால், அதாவது "பாரமாய", "துண்டவெண்பிறையன்" மற்றும் "கையனார்" ஆகிய மூன்று சொற்களின் தொடக்க எழுத்துக்களை ஒன்று கூட்ட, "பா+து+கை" = பாதுகை என்று வரும். பாதுகை என்றால் "திருவடி" என்று அர்த்தம்.
ஆக, இந்தப் பிரபந்தத்தின் மொத்த கருத்தும், வேத முதல்வனை, அதாவது, "ஸ்ரீமன் நாரயாணனாகிய" எம்பெருமானை, வேதத்தின் முதல் மந்திரத்தை (பிரணவம்) மூலாதாரமாகக் கொண்டு, அவன் திருவடிகளில் சரணடையவேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது. இதுவே "திருமந்திர" (ஓம் நமோ நாராயணாய) உபதேசம் என்று வழங்கப்படுகிறது.
"திருப்பாணாழ்வார் வாழித்திருநாமம்"
உம்பர்தொழு மெயஞானத்து உரையூறான் வாழியே
உரோகிணி நாள் கார்த்திகையில் உதித்த வள்ளல் வாழியே
வம்பவிழ்தார் முனி தோளில் வந்த பிரான் வாழியே
மலர்க்கண்ணை வேறொன்றில் வைய்யாதான் வாழியே
அம்புவியில் மதிள் அரங்கர் அகம் புகுந்தான் வாழியே
அமலனாதிபிரான் பத்தும் அருளினான் வாழியே
செம்பொன் அடி முடியளவும் சேவிப்பொன் வாழியே
திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே.
திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
No comments:
Post a Comment