ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீ வரவரமுநயே நம:
திருமங்கை ஆழ்வார் வைபவம்
"ஆழ்வார் அவதாரமும், அவர் வாழ்க்கை
வரலாறும்"
“வ்ரிஸ்சிகே க்ருத்திகாஜாதம் சதுஷ்கவி ஸிகாமணீம் |
ஷட்ப்ரபந்தக்ருதம் ஸார்ங்கமூர்த்திம் கலி ||”
திருமாலின் வில்லான ஸார்ங்கத்தின் அம்சமாய், சோழ நாட்டில் திருமங்கை
என்னும் பகுதியில், திருவாலி என்ற (இப்போது, திருநகரி என்று
வழங்கப்படுகிறது) திவ்யதேசத்தின் அருகே உள்ள
திருக்குறையலூரில் கள்ளக்குடியில், கலியுகத்தில் 398ஆவதான நள வருடத்தில்
பௌர்ணமி திதி அன்று, வியாழக்கிழமை, கிருத்திகை நட்சத்திரம்
ஆகியவை பொருந்திய கார்த்திகை மாதத்தில் ஒருவர் அவதரித்தார். சோழ அரசனின் சேனைத்
தலைவர்களில் ஒருவருக்கு மகனாகப் பிறந்த இவர் "நீலன்" என்று நிறம் கொண்டு
பெயரிடப்பட்டார்.
குடிப்பிறப்புக்கு (தோன்றிய குலம்) ஏற்றவாறு, போர்த் தேர்ச்சி பெற்று
அரசனுக்காகப் பல போர்களில் வெற்றி பெற்று, மகிழ்வுற்ற அரசனால் திருமங்கை
நாட்டின் அரசனாக "பரகாலன்" என்ற பெயருடன் மகுடம் சூட்டப்பட்டார் சிற்றரசன் என்ற முறையில்
சோழ அரசனுக்குக் கப்பம் (வரி) செலுத்தி வந்தார் அந்நாட்டில்
திருவெள்ளக்குளம் என்னும் திருப்பதியிலுள்ள தாமரைப் பொய்கையில் நீராட வந்த தேவ
மாதர்களில் ஒருத்தி, மற்றவர்களை (தேவ கன்னிகைகள்) விட்டு மனித உருக்கொண்டு, குமுத மலர் கொய்து
(பறித்து)
நின்றாள். அப்போது அந்த வழி வந்த, மலடனான வைணவ வைத்தியன் ஒருவனைத்
தன்னைப் பாதுகாக்க வேண்டினாள். அவனும் அவள் கூறியதை
ஏற்றுக்கொண்டு, அவளைத் தன வீட்டிற்கு
அழைத்துச் சென்று "குமுதவல்லி" என்று பெயரிட்டு வளர்த்தான்.
ஒற்றர்கள் மூலம் குமுதவல்லியின் சிறப்பினையும் அழகையும்
பற்றி அறிந்த "திருமங்கை" மன்னன், வைத்தியனிடம் சென்று
அவளைத் தனக்குத் திருமணம் செய்து தருமாறு
வேண்டினார். குமுதவலல்லியோ, "பஞ்சஸம்ஸ்காரம்"
(ஸமாஸ்ரயனம்) என்ற ஐந்து வகைச் சிறப்புடைய வைணவர் ஒருவரைத் தான், தன் துணைவனாக
ஏற்றுக்கொள்வேன் அன்றி, மற்றோவருக்குத்
துணையாகமாட்டேன் என்று மறுத்துவிட்டாள். திருநறையூருக்குச் சென்று
அந்த ஊரில் கோயில் கொண்டுள்ள "நம்பி" எம்பெருமானிடமிருந்து (திருநறையூர்
நம்பி) , திருவாழி திருச்ச்சங்கு
ஆகியவற்றைத் தன் தோள்களில் பொறித்துக்கொண்டு, திருக்கண்ணபுரம் என்னும்
திவ்ய தேசத்தில் கோயில் கொண்டுள்ள பெருமானிடம் "மந்திர" உபதேசம்
பெற்றும், பன்னிரு (12) திருமண்காப்புகள் அணிந்து, திருமங்கை மன்னன்
குமுதவல்லியிடம் மீண்டும் சென்று, தன்னை மணந்துகொள்ளுமாறு
வேண்டினார்.
அப்போது, 1008 திரு வைட்டணவர்களுக்கு
(ஸ்ரீ வைஷ்ணவர்) நாள்தோறும், ஓராண்டு காலம் அமுது
செய்வித்து (உணவளித்து) , அவர்கள் உண்ட மிச்சத்தை
உண்டு, அவர்கள் திருவடிகளை
விளக்கிய (கால்களை அலம்பி) நீரை உண்டு வாழ்ந்தால் தான், மங்கை மன்னனை மணம்புரிய
ஒத்துக் கொள்வதாக குமுதவல்லி கட்டளை இட்டாள்.
அவளைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற ஆசையால், திருமங்கை மன்னன் அதற்கும்
சம்மதித்து, உறுதி அளிக்க திருமணம்
நிறைவேறியது. "மங்கை மடம்" என்ற
இடத்தில், வைணவர்களுக்கு உணவளிக்க
ஏற்பாடு செய்து,
பெருந்தோட்டம்
என்ற இடத்தில் வாழை முதலிய காய் கனிகளுக்குத் தோட்டம் அமைத்து, திருமங்கை மன்னன் வைணவ
அடியார்களின் பூசனையை (பூஜையை) சிறப்புற நடத்திவந்தார்
இதற்காகப் பொருள் மிகவும் வேண்டியிருந்தமையால், திருமங்கை மன்னன் சோழ
அரசனுக்குச் செலுத்தவேண்டிய வரியை செலுத்த முடியாமல் போனது. அரசனின் ஊழியர்களிடம் தவணை
கேட்டுத் தாமதித்ததால், அரசன் தன சேனைத்தலைவனை
அனுப்ப, அவன் இவரைப் பிடிக்க
முயற்சி செய்கையில், இவர், "ஆடல்மான்" என்ற தன்
சிறந்த குதிரையின் மீது ஏறி, அவனைத் துரத்தி துரத்தி
ஓடச் செய்தார். பிறகு, அரசனே சேனையுடன் நேரில்
வந்து இவரை வளைத்துப் பிடிக்க, இவரும் முன்போல் அவர்களை
எதிர்த்துப் போரிடத் தொடங்கினார்.
அதுகண்டு அரசன் சூழ்ச்சியால் இவர் வலிமையைப் பாராட்டுபவன்
போல் இவரைத் தன் அருகில் அழைத்து, தன் அமைச்சனிடம்
ஒப்படைத்து, வரிப்பணம் தந்தால்தான்
இவரை விடுதலை செய்வேன் என்று கூறிச்சென்றான். "கச்சியம்பதி"
(காஞ்சி தேவபெருமாள்) இவர்
கனவில் தோன்றி, காஞ்சியில் செல்வம்
கிட்டும் என்று கூற,
இவரும்
அமைச்சனிடம் கூறி, அவனுடன் சென்று, மீண்டும் அந்த
எம்பெருமானாலேயே "வேகவதி" என்னும் ஆற்றங்கரையில் புதையலாய் இருந்த நிதி
(செல்வங்கள்) காட்டப்பட்டு, நிதியைத் தோண்டி
எடுத்தார்.
அந்தப் புதையலிலிருந்து கிடைத்த நிதியில், தான் செலுத்த வேண்டிய
வரியைச் செலுத்தி, மீதம் இருந்ததைக் கொண்டு, அடியார்களின்
ததீயாராதனத்திர்க்குப் பயன்படுத்தினார். அரசனும், "திருமங்கை மன்னன்"
செய்யும் இந்த மகத்தான சேவையைப் பற்றி அறிந்து, அவர் செலுத்திய
வரிப்பணத்தைத் திருப்பித்தந்து, அவர் செய்யும் சேவைக்குப்
பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறினான். இவற்றை எல்லாம் கொண்டு, அவர் தான் ஏற்றுக்கொண்ட சேவையைச் செய்து வந்தாலும், ஒரு கால கட்டத்தில், அவர் கையில் இருந்த
நிதியெல்லாம் கரைந்துவிட, மேலும் அவர் செய்ய வேண்டிய
சேவைக்கு நிதித்தேவை அதிகமாய் இருந்தது. இதனால், அவர் தன் தோழர்களான "நீர்மேல் நடப்பான், நிழலில் ஒதுங்குவான், தாள் ஊதுவான், தோலா வழக்கன்" என்ற நால்வரின்
துணைகொண்டு, வழிப்பறி செய்து அடியார்களைப்
பூசிக்க (அவர்களுக்கு உணவளித்து உபசரிக்க) பொருள் சேர்க்க முயன்றார்.
இவருடைய அடியார்க்கடிமையைக் (அடியவர்களுக்குத் தொண்டு
செய்யும் அடிமைத்தனம்) கண்டு அளவிலா இன்பமுற்ற எம்பெருமான், இவர்க்குத் தன் இன்னருளைக்
காட்ட எண்ணி, திருமணக்கோலத்தில் சிறந்த, உயர்ந்தரக அணிகலன்களுடன்
தானும் தன் மனையாளுமாக, இவர் வழிப்பறி
செய்வதற்காகப் பதுங்கி இருக்கும் வழியாக
வந்தான். திருமணங்கொல்லையில், திருவரசின் அடியில்
பதுகியிருந்த "பரகாலர்" (திருமங்கை மன்னன்) அவர்களைத் தன் தோழர்களைக்
கொண்டு வழிப்பறி செய்தார். அபோது, மணமகன் (எம்பெருமான்)
காலில் இருந்த மோதிரம் கழற்ற முடியாமல் போக, பரகாலர் அதைக் கழற்ற, தன் பல்லால் கடித்து வாங்க, மணமகனான எம்பெருமான்
இவரைப் பார்த்து, என்ன தைர்யம் உமக்கு என்று
மெச்சும் (பாராட்டும்) வகையில், "மிடுக்கனோ நீர்" என்ற
அர்த்தத்தில் இவருக்குக் "கலியன்" என்று பெயரிட்டான். பெருமானிடம் வழிப்பறி
செய்த பொருள்களை மூட்டையாகக் கட்டிக்கொண்டு, அதைத் தூக்க முயன்ற பொது, மூட்டையின் கனம் மிகவும்
அதிகமாக இருந்ததால், அவரால் அதைத்
தூக்கமுடியாமல் போயிற்று. இப்படி, மூட்டை தூக்கமுடியாமல்
இருப்பதற்கு என்ன மந்திரம் செய்தாய்? என்று அவர் மணமகனை
மிரட்டிக்கேட்டு, தன் கையிலிருந்த வாளை வீசி
மிரட்டினார்.
மணமகனான எம்பெருமான் மந்திரத்தைக் கூறுவதாக இவரை அருகில்
அழைத்து,
"பெரிய
திருமந்திரம்" (ஓம் நமோ நாராயணாய) என்னும் அஷ்டாக்ஷர மந்திரத்தை
இவருக்கு உபதேசித்து, பெரிய திருவடியின்
(கருடன்) மேல், பிராட்டியுடன் இவர்முன்
தோன்றி அருளினான். பெருமானின் தரிசனம்
கிட்டியபின்,
மெய்ஞானத்தைப்
பெற்ற பரகாலர், எம்பெருமானை நோக்கி, "வாடினேன் வாடி வருந்தினேன்” என்று தொடங்கிப்
பாசுரங்கள் இயற்றி, வடமொழி வேதங்கள்
நான்குக்கு ஒப்பான நம்மாழ்வார் அருளிச்செய்த திவ்யப் பிரபந்தங்களுக்கு ஆறு அங்கங்கள் போன்று "(1) பெரிய திருமொழி, (2) திருக்குறுந்தாண்டகம், (3) திருவெழுக்கூற்றிருகை, (4) சிறிய திருமடல் (5) பெரிய
திருமடல் மற்றும் (6) திருநெடுந்தாண்டகம்" ஆகிய ஆறு திவ்ய நூல்களை
அருளி,
"திருமங்கை
ஆழ்வார்" என்ற திருநாமத்தைப் பெற்றார்.
இவற்றுள், பெரிய திருமொழிப் பாடல்கள்
இயற்றும்போது இறைவன் அர்ச்சாமூர்த்தியாய் கோயில்கொண்டுள்ள திவ்ய தேசங்களுக்குத் தானே
நேரில் சென்று வணங்கி "திருப்பிருதி" முதல்
"திருக்கோட்டியூர்"வரைப் பாசுரம் பாடினார். இப்படிப் பாடிச்செல்லும்
இவரைக்கண்டு, ஞான சம்பந்தர் என்ற
சைவரின் சீடர்கள், இவ்வழி செல்லக்கூடாது
என்று தடுக்க, இருவருக்கும் வாதப்போர்
மூள, அப்போது இவ்வாழ்வார் "ஒரு குறளாய்" என்று தொடங்கி, அருகில் இருந்த காழிசீராம
விண்ணகர் எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாட, இவரது கவித்திறனைக் கண்டு மகிழ்ந்த ஞானசம்பந்தர், தன் கையில் இருந்த
"வேலை" ஆழ்வாருக்கு அன்பளிப்பாகக் கொடுத்து வணங்கி நின்றார்.
திருவரங்கநாதனின் ஆணையின்படி, அப்பெருமானுக்கு மண்டபம், கோபுரம் விமானம், பிரகாரம் முதலிய
பணிகளைச்செய்ய, திருநாகையில் புத்தவிகாரம்
ஒன்றில் இருந்த பொன்னால் ஆன சிலையை, அதற்கு மேல் உச்சியில்
சுழன்று வந்த இயந்திரத்தை, வாழைத்தண்டுகளால்
சிக்கவைத்து நிறுத்தி உள்புகுந்து "ஈயத்தால் ஆகாதோ, விரும்பினால் ஆகாதோ, பூயத்தான் மிக்கதொரு
பூதத்தால் ஆகாதோ, தேயத்தே பித்தளை
நற்செம்புகளால் ஆகாதோ, மாயப்பொன் வேண்டுமோ மதித்தென்னைப்
பண்ணுகைக்கே என்று அந்தச் சிலை அலறி
விழுமாறு, அதன் தூய்மையைப் போக்கி, சிலையின் பொன் கொண்டு
அரங்கன் இட்ட திருப்பணிகளைக் குறைவின்றிச் செய்து வந்தார்.
திருமதிள் கட்டும்போது, தொண்டரடிப்பொடி ஆழ்வார்
திருமாலை கட்டிவந்த இடம் கண்ணுக்குத் தெரிய, அதனை ஒதுக்கி, அதாவது, அது மறைந்து விடாதபடி,
மதிள்சுவரைக் கட்டினார். திருவரங்கனின் அனுமதியோடு
திருக்குருகூரில் நம்மாழ்வாரின் அர்ச்சையில் உள்ள விக்ரஹ மூர்த்தியைத்
திருவரங்கத்துக்கு எழுந்தருளச் செய்து, வேதங்களுக்கு இணையாக
நம்மாழ்வார் முதலிய ஆழ்வார்களின் அருளிச் செயல்களை அரங்கனின் திருமுன்பே இசைத்து, அத்யயனத் திருவிழாவை
நடத்தி அருளினார். ஆழ்வார்களில் கடைசியாகத்
தோன்றியதால், இவருக்கு, மற்ற ஆழ்வார்கள் அனைவரது
அருளிச்செயல்களையும் (திவ்ய பிரபந்தங்களையும்) இசைத்துப் பாடும் வாய்ப்பு இதன்
மூலம் கிடைத்தது.
கலி காலத்தின் கொடுமையை, அடியார்க்கு அடிமையாய்
இருந்து ஒழித்தவர் என்பது பற்றி திருமங்கை ஆழ்வார் "கலிகன்றி" என்று
பெயர் பெற்றார். 105 இவ்வுலகில் ஆண்டுகள்
வாழ்ந்த இவர், இறுதியாகத்
திருக்குறுங்குடி சென்று, அங்கு எழுந்தருளியுள்ள
"நம்பி" எம்பெருமானை, சில காலம் தொழுது
குமுதவல்லியாருடன் நலம் அந்தம் இல்லதோர் திருநாட்டை (வாழ்சிக்கு முடிவே இல்லாத பரமபதம்) எய்தினார்.
" திருமங்கை ஆழ்வாரின் அருளிச்செயல்கள் - ஒரு
அறிமுகம்"
இவ்வாழ்வார் அருளிச்செய்த "பெரியதிருமொழி"
என்னும் பிரபந்தத்திற்கு பூருவாசாரியர்கள் அருளிச்செய்துள்ள தனியன்கள்:
(திருக்கோட்டியூர் நம்பி
அருளிச்செய்தது)
கலயாமி கவித்வம்ஸம் கவிம்லோகதிவாகரம் |
யஸ்யகோபி: ப்ரகாஸாபி: ஆவித்யம்நிஹதம்தம: ||
(எம்பெருமானார் - இராமானுசர் அருளிச்செய்தது)
வாழி பரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர் வாழ்வேந்தன் - வாழியரோ
மாயோனை வாள்வலியால் மந்திரம்கொள் மங்கையர்கோன்
தூயோன் சுடர்மான வேல்.
(கூரத்தாழ்வான் அருளிச்செய்தது)
நெஞ்சுக்கு இருள்கடி தீபம் அடங்காநெடும்பிறவி
நஞ்சுக்குநல்லவமுதம் தமிழநன்நூல் துறைகள்
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்
பஞ்சுக்கனலின்பொறி பரகாலன்பனுவல்களே.
(எம்பார் அருளிச்செய்தது)
எங்கள்கதியே இராமானுசமுனியே
சங்கைகெடுத்தாண்டதவராசா - பொங்குபுகழ்
மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்
தங்குமனம் நீயெனக்குத்தா.
தனியனுக்கான விளக்கங்கள்:
“வாழி பரகாலன்”…. : எம்பெருமானார்
(இராமானுசர்) திருக்குறையலூர் என்னும் ஊரில் அவதரித்த இவ்வாழ்வாரின்
திருநாமங்களான "பரகாலன்", "கலியன்" ஆகியவற்றை உரைத்து,
அவருக்கு "வாழி வாழி"
என்று பல்லாண்டு பாடி, அவரது வீரத்தைப் பற்றியும் எடுத்துரைத்து, அதாவது, வழிப்பறி செய்யும்போது எம்பெருமானிடமே தன்
வீரத்தை வெளிப்படுத்தி, மந்திரோபதேசம் பெற்ற பெருமையையும், ஞானசம்பந்தர் என்னும்
சிவச்சீலரிடம் வாதப்போர் செய்து, அதில் வென்றபோது, அதற்குப் பரிசாக "வேலை" ஞானசம்பந்தரிடம்
பெற்றுக்கொண்டதனைப் போற்றியுள்ளார்.
“நெஞ்சுக்கு இருள்கடி”….. : இவ்வாழ்வார் அருளியுள்ள திவ்யப்ரபந்தங்களின் சிறப்பைப் பற்றி கூறும்
வகையில் உள்ளது. குறிப்பாக, "நெஞ்சுக்கு இருள் கடி
தீபம் அடங்கா நெடும்பிறவி நஞ்சுக்கு நல்லமுதம்
தமிழநன்னூல் துறைகள்" என்பதன்
மூலம், இந்த ஆழ்வாரின் பிரபந்தங்கள்
நம் மனதினுள் சூழ்ந்துள்ள அறியாமை என்னும் இருளை நீக்கி, எம்பெருமானைப் பற்றிய ஞானம் என்னும் நிறை
விளக்கை ஏற்றிவைத்து, நம்முடைய இந்தப் பிறவியானது முடியும்போது, மீண்டும் இப்படிப் பிறவா வண்ணம், அதாவது, பிறவி என்னும் துயர் நீங்கி, எம்பெருமானின்
திருவடிகளில் நீங்கா இடம் பெற்று உஜ்ஜீவிக்கும் வகையில் அமைந்துள்ளது
விளக்கப்பட்டுள்ளது. "பஞ்சுக்கனலின்பொறி
பரகாலன் பனுவல்களே" என்பதன் மூலம், ஆழ்வாரின் பிரபந்தங்கள்
எப்படி உள்ளது என்றால், பஞ்சுக்களில் ஒரு சிறு
நெருப்புத்துளி பட்டால் அது எப்படி பெரிய தீயாக வளருமோ, அந்த வகையில், ஆழ்வார் அருளியுள்ள
பிரபந்தங்களில் உள்ள ஒரே ஒரு சொல்லை உச்சரிக்க, அது நம் மனது என்னும்
பஞ்சினில் பட்ட ஒரு சிறு தீப்பொறியைப்போல் ஆகி, அதனுள் இருந்த
அறியாமையையும் அச்சத்தையும் போக்கி, எம்பெருமானைப் பற்றிய
சிந்தையை விதைத்து, அறிவுக்கண்களைத்
திறந்துவைக்கும் என்பது விளக்கப்படுகிறது.
“எங்கள்கதியே”…..
: இந்தப் பிரபந்தங்களை
தேர்ந்து கற்று, அதன் ஆழ்ந்த
அர்த்தங்களையும் நன்கு அறிந்துகொண்டு, ஆழ்வார் செய்த உயர்ந்த
பணிக்குச் சிறிதும் குறை ஏற்படாதபடி, அதை நெறிமுறைப்படுத்தி, மற்றோர்களுக்கும் அதைப்
பற்றி எடுத்துரைத்து, அனைவரும் உயர்ந்த நிலையை அடையவேண்டும்
என்றும், குறையல்பிரான் (திருமங்கை
ஆழ்வார்ப் திருவடிக்கீழ் விள்ளாத
(குறைவில்லாத) அன்பனாயும் இருந்த இராமானுசரை வேண்டி, திருமங்கை ஆழ்வார்
அருளிச்செய்த பிரபந்தங்களும் அதன் ஆழ் பொருள்களும் நம் மனதில் என்றென்றும்
நீங்காமல் இடம்பெறவேண்டும் என்று பிரார்த்திப்பதாய் அமைந்துள்ளது.
இனி, இவ்வாழ்வாரின்
அருளிச்செயல்களைப் (திவ்யப் பிரபந்தங்கள்) பற்றி சிறிது
அறிந்துகொள்வோம்:
ஆலி (திருவாலி) நாட்டு அரசரான திருமங்கை மன்னன், தெய்வங்களுக்கு அரசரான அரங்கர் திருமணக்கோலத்தில் தன் மணாட்டியுடன் வரும்போது அவனிடம் வழிப்பறி செய்ய அவன்
அணிந்திருந்த மோதிரத்தைக் கழற்றும்போது, அதைக் கழற்றமுடியாமல் போக, இவர் தன் கையில் இருந்த வாளை எடுத்து எம்பெருமானிடம் காட்டி மிரட்டி, மோதிரம் கழலாத அளவுக்கு என்ன மாயமந்திரம் செய்துவைத்திருக்கிறாய் என்று கேட்க, அதற்காகவே காத்திருந்த பெருமான், இவரை மரங்களுக்கு அரசான
திருவரசின் (அரசமரம்) அடியில் அமர்த்தி, , மந்திரங்களுக்கு அரசான
"திருமந்திரத்தை" ஓதி, இவருக்கு ஞானத்தை அருளி, திருத்திப்பணிகொண்டான்.
இப்படி, "மயர்வற மதிநலம்" (அஜ்ஞானம் விலகப்பெற்ற) பெற்ற இவ்வாழ்வார், திருநறையூர் எம்பெருமானான நம்பியிடம் வைணவ தீட்சை
(பஞ்ச ஸம்ஸ்காரம்) பெற்றார். திருக்கண்ணபுரம்
பெருமானிடம் திருமந்திரப்பொருளை அறிந்து, "நின் திருவெட்டெழுத்தும்
கற்று, உற்றது, உன் அடியார்க்கு
அடிமை"
என்று கூறி, எம்பெருமானின்
தொண்டர்களுக்குத் தொண்டராகத் திகழ்ந்தார்
தான் "மயர்வற மதிநலம்" பெற்றதை உணர்த்தும் வண்ணம், "கண்டுகொண்டேன் நாராயணா
என்னும் நாமம்" என்று "பெரிய திருமொழி" பிரபந்தத்தின் முதல்
பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும்
தெரிவிக்கிறார். "நஞ்சுதான்
கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா என்னும்
நாமம்"
என்று பாடி, இந்தப் பதிகத்தை
முடித்துள்ளார் - அதாவது, நம் பாவங்களுக்கெல்லாம்
நஞ்சாக (விஷமாக) இருந்து, அவற்றை உருவழிப்பது
"நாராயணன்" என்னும் திருநாமம் என்று அந்த நாமத்தின் மகிமையை, எடுத்துரைத்துள்ளார். இதுவே, இவ்வாழ்வார் அருளிய "பெரிய
திருமொழி"
என்னும் ப்ரபந்தத்தின் முதல் பதிகமாக (பத்து பாடல்கள்) அமைந்துள்ளது. இது தொடங்கி, இந்தப் ப்ரபந்தத்தில்
மொத்தம் 1084 பாடல்களை அருளியுள்ளார்
இவ்வாழ்வார். எம்பெருமானின் அர்ச்சையில் மூழ்கி, தன் "ஆடல்மான்"
என்னும் குதிரையில் ஏறி, எம்பெருமான் கோயில்
கொண்டுள்ள திருத்தலங்களுக்கு நேரே சென்று, அவனுக்கு மங்களாசாசனம்
அருளியுள்ளார். 86 திவ்யதேசங்களுக்குச் சென்று, அங்கு எழுந்தருளியுள்ள
எம்பெருமானுக்கு மங்களாசாசனம் செய்துள்ளார் இவர். இந்தப் பிரபந்தத்தில், இவ்வாழ்வார் திவ்யதேசங்களை
அனுபவிக்கும்போது, அந்த திவ்யதேசத்தின்
நீர்வளம், நிலவளம், எழில்வளம் (அழகு), பொழில் வாய்ப்பு (குளிர்ந்த
நீரோடை உள்ள சூழல்), இயற்கைக்காட்சிகள், திவ்யதேசங்களில் உள்ள
மாளிகைகள், ஊரில் வசிப்போரின் சிறப்பு
ஆகியவற்றோடு, ஏழிசை (ஏழு ஸ்வரங்களைக்
கொண்ட இசை), நான்கு வேதங்கள், ஐந்து வகை வேள்வி, ஆறங்கம் வல்லவர் (வேதத்தின்
ஆறு பகுதிகளை நன்கு கற்றவர்கள்) பற்றிய குறிப்புகளையும் அனுபவிப்பர்.
இவர் அருளிய இரண்டாவது பிரபந்தம் "திருக்குறுந்தாண்டகம்" என்னும் பிரபந்தமாகும்.
இவர் இதில், 20 பாசுரங்கள் அருளியுள்ளார்.
மூன்றாவதாக, "திருவெழுகூற்றிருகை" என்னும் ப்ரபந்தத்தை
அருளினார். "எழுகூற்றிருகை" என்பது ஏழு கூறுகள் முறையாக அமையும்படி
செய்யப்படும் சித்திரத்தைப் போல இருக்கும். இந்தப் பிரபந்தத்தில், "ஒன்று என்று எண் பெயரில்
தொடங்கி, ஒவ்வொன்றாய், படிப்படியாக ஏறியும்
இறங்கியும், ஒன்று வரையில் குறைந்தும், ஒன்று முதல் ஏழு வரை எண்
பெயர்கள் அமையுமாறு இயற்றியுள்ளார். அதாவது, 1-2-1, 1-2-3-2-1,
1-2-3-4-3-2-1, 1-2-3-4-5-4-3-2-1, 1-2-3-4-5-6-5-4-3-2-1,
1-2-3-4-5-6-7-6-5-4-3-2-1, 1-2-3-4-5-6-7-6-5-4-3-2-1, 1-2-3-4-5-6-5-4-3-2-1, 1-2-3-4-5-4-3-2-1, 1-2-3-4-3-2-1, 1-2-3-2-1,
1-2-1.
இவை
ஒவ்வொன்றையும் ஒவ்வொரு வரிசையில் எழுதிப்பார்த்தால், ஒரு ரதத்தின் (தேர்)
சித்திரத்தைப் போல் இருக்கும். இந்த எண்களைக் கொண்டே, உயர்ந்த பொருள்களை
விளக்கும் சொற்களை வைத்து இந்தப் பிரபந்தத்தை அருளியுள்ளார் இவ்வாழ்வார். இதனாலேயே இந்தப் பிரபந்தத்திற்கு "ரதப்ப்ரபந்தம்"
என்றும் பெயரிட்டுள்ளனர்
ஆசார்யர்கள்.
சிறிய திருமடல், பெரிய திருமடல்:
இந்த இரண்டு மடல்களுமே (பிரபந்தங்கள்) சில தனித்தன்மை
வாய்ந்தவை ஆகும். "சிறிய திருமடல்" என்னும் பிரபந்தத்தில், "நாராயணன்" என்ற பெயருக்கு
ஏற்ப,
"காரார்", "சீரார்", "நீரார்", "ஆரார்", "தேரார்" என்ற சப்தம் ஒவ்வொரு வரியிலும்
"எதுகை" (ஒரு வரியில் வரும் முதல்
சொல்லின் அமைப்பு) மாறாமல் இருக்கும். "சிறிய
திருமடல்" 77 அடிகளைக் கொண்டாலும்,
கணக்கில்
இதை ஒரு பாசுரமாகவே கொள்ளப்பட்டுள்ளது. இரண்டாவது கருத்தாக, 77 பாசுரங்கள் என்றும்
கூறுவர்.
"பெரிய திருமடல்" என்னும் பிரபந்தத்தில், "கண்ணன்" என்ற
பெயருக்கு ஏற்ப,
"மன்னிய", "மன்னும்", "மின்னும்", என்ற சப்தம் ஒவ்வொரு வரியிலும்
"எதுகை" மாறாமல் இருக்கும். "பெரிய திருமடல்" 148-1/2' அடிகளைக் கொண்டாலும், கணக்கில் இதை ஒரு
பாசுரமாகவே கொள்ளப்பட்டுள்ளது. இரண்டாவது கருத்தாக, 148 பாசுரங்கள் என்றும்
கூறுவர்.
இவ்வாழ்வார் கடைசியாக அருளியது "திருநெடுந்தாண்டகம்" என்னும் ப்ரபந்தம். இது, 30 பாசுரங்களைக் கொண்டது.
இசையால் தமிழ் வளர்த்தவர்:
திருமங்கை ஆழ்வார், தமது திவ்யப்பிரபந்தங்களை
அருளிச்செய்த பிறகு திருவரங்கத்திற்குச் சென்று, தமது நிறைவுப் பிரபந்தமான "திருநெடுந்தாண்டகத்தை" தேவகானத்தில்
இசைத்துப்பாடினார். அதனைக் கேட்டு, திருவுள்ளம் உகந்த
(மகிழ்ந்த) அரங்கன் இவரைப் பார்த்து, "உமக்கு வேண்டிய வரத்தைக்
கேளும்" என்று கூற, உடனே இவ்வாழ்வார், ஆண்டுதோறும் மார்கழி
மாதத்தில் வைகுண்ட ஏகாதசி அன்று தொடங்கி நடக்கும் விழாவில், நம்மாழ்வாரின் திராவிட
வேதத்தை (திருவாய்மொழி) திருச்செவி சாத்தவேணும் (கேட்கவேண்டும்) என்று
வேண்டிக்கேட்டார் பெருமானும் அப்படியே
ஆகட்டும் என்று உறுதி அளித்தான். அதன்படி, திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வாரை அவரது அவதாரத்
தலமாகிய "ஆழ்வார் திருநகரி"யிலிருந்து திருவரங்கத்திற்கு எழுந்தருளச்செய்து, திருவரங்கன் முன்னிலையில்
தாமே நம்மாழ்வாரின் திருவாய்மொழியை 10 நாட்கள் தேவகானத்தில் பண்
இசையோடு பாடி, அத்யயன உத்சவத்தைத்
தமிழ்த் திருவிழாவாக அமைத்தார்.
அத்யயன விழா, பின்னர் ஆசார்யர்கள்
காலத்தில் 21 நாள் விழாவாக அமைந்து, 4000 பாசுரங்களையும் இயல், இசை நாடகமாக, முத்தமிழ் விழாவாக அனைத்து
திவ்ய தேசங்களிலும் நடைபெறத்தொடங்கி, இன்றும்
கடைபிடிக்கப்படுகின்றது (வழக்கத்தில் உள்ளது).
இவ்வாறு தமிழ் இலக்கியத்தில் புதுமை
படைத்தும், இசை இன்பத்தோடும், ஒலி மாலை பாடியும், திவ்யதேசத்து
எம்பெருமானோடு ஊடியும் (எம்பெருமானைப் பிரிந்தால் ஏற்படும் துக்கம்), கூடியும் (எம்பெருமானுடன்
சேர்ந்திருந்தால் ஏற்படும் இன்பம்), திவ்யதேச வர்ணனையில்
இயற்கைக் காட்சிகளைப் படம் பித்துக் காட்டியும், இசையால் தமிழ் வளர்த்த திருமங்கை ஆழ்வார்
அருளியுள்ள திவ்யப்ப்ரபந்தங்களை அனைவரும் கற்கும் ஆவல் கொண்டு, கற்றது உள்ளத்தில் நன்கு
பதிந்து, அதன் படி வாழ்கையை நெறிப்ப்படுத்திக்கொண்டு,
எம்பெருமானாரின் இன்னருளால், ஆழ்வார்களின் அனுக்ரஹத்தைப் பெற்று, எம்பெருமானைப்
பற்றிய "துய்யமதி" பெறுவோம்.
ஆசார்யர்கள் பாரித்த
திருமங்கை
ஆழ்வார்
இராமாநுசர் புகழ்
பாடும்
இராமாநுச
நூற்றந்தாதி
என்னும்
திவ்யப்ரபந்தத்தில்,
திருவரங்கத்தமுதனார்,
"கள்ளார்பொழில்
தென்னரங்கன்
கமலப்பதங்கள்
நெஞ்சில்
கொள்ளாமனிசரை நீங்கிக்
குறையல்பிரானடிக்கீழ்
விள்ளாத அன்பன்
இராமாநுசன் "
என்று
திருமங்கை
ஆழ்வாரைப்
போற்றி,
அவர்
அடிபணிந்த
இராமாநுசரைப்
புகழ்ந்து
பாடுகிறார்.
அதாவது, "தேன் நிறைந்த
சோலைகளையுடைய
தென்திருவரங்கத்திலே
பள்ளிகொள்ளும்
பெருமானுடைய
தாமரை
போன்ற
திருவடிகளை,
தமது
நெஞ்சிலே
வைக்காத
மனிதர்களை
விட்டொழித்து,
திருமங்கை
மன்னனுடைய
திருவடிகளிலே
என்றென்றும்
நீங்காத
பக்தியுடையவர்
இராமாநுசர்"
என்று
அர்த்தம்.
திருமங்கை ஆழ்வார் அவதாரத்தைப் போற்றி, மணவாள மாமுனிகள், "உபதேச இரத்தினமாலை"
என்னும் பிரபந்தத்தில் இரண்டு பாடல்களை (பாசுரம் 8, 9) அருளியுள்ளார். அவை
"பேதைநெஞ்சே இன்றைப் பெருமை
அறிந்திலையோ
ஏதுபெருமை இன்றைக்கு என் என்னில் - ஓதுகின்றேன்
வாய்த்த புகழ் மங்கையர்க்கோன் மாநிலத்தில் வந்துதித்த
கார்த்திகையில் கார்த்திகை நாள் காண்".
பாசுர விளக்கம்: அறிவில்லாத மனமே!
இன்றைக்குள்ள பெருமையை நீ அறிந்துகொள்ளவில்லையோ? அப்படி என்ன இன்றைய நாளின்
பெருமை என்று அசாதாரணமாக என்கிறாயோ? கேள் சொல்கிறேன். "பொருந்திய புகழை
உடையவரான திருமங்கை ஆழ்வார் விசாலாமான இவ்வுலகில் வந்து தோன்றப்பெற்ற கார்த்திகை
மாதத்துக் க்ருத்திகா நக்ஷத்திரமன்றோ இன்று? என்று தன் (நம்) நெஞ்சுக்கு
அறிவுறுத்துகிறார் மாமுனிகள்.
"மாறன் பணித்த தமிழ்
மறைக்கு மன்கையர்க்கோன்
ஆறங்கம் கூற அவதரித்த - வீறுடைய
கார்த்திகையில் கார்த்திகை நாள் இன்று என்று காதலிப்பார்
வாய்த்த மலர்த் தாள்கள் நெஞ்சே வாழ்த்து"
பாசுர விளக்கம்: "ஓ மனமே! நம்மாழ்வார் அருளிச் செய்த
திராவிட வேதமான "திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும்
திருவாய்மொழி"ஆகிய நான்கு பிரபந்தங்களுக்கும், ஆறு பிரபந்தங்களை ("பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருகை, சிறிய திருமடல், பெரிய திருமடல் மற்றும் திருநெடுந்தாண்டகம்") ஆறு அங்கங்களாக அருளிச்செய்யும் பொருட்டு, திருமங்கை ஆழ்வார் அவதரிக்கப்பெற்ற கார்த்திகை மாதத்து கிருத்திகை அன்றோ இன்று! என்று கொண்டு குதூஹலிப்பவர்களுடைய (நமக்கு) ப்ராப்தமான பாதாரவிந்தங்களைத் (பாத அரவிந்தம் - திருவடித் தாமரை) தோத்திரம் செய்வாயாக" என்று மீண்டும் தன் (நம்) நெஞ்சுக்கு
அறிவுறுத்துகிறார் மாமுனிகள்.
"மண்ணியில் நீர்த் தேங்கும்
குறையலூர் சீர்க்கலியன் தோன்றிய ஊர்" (உப.இர., 30) -மண்ணியாற்றின் தீர்த்தம்
வந்து தேங்கும் இடமான திருக்குறையலூரானது திருமங்கை ஆழ்வார் அவதரித்த
திருத்தலமாகும் என்று போற்றுகிறார் மாமுனிகள்.
இவையனைத்துக்கும் மேலாக, திருமங்கை ஆழ்வாரின் வடிவழகை எப்படியெல்லாம்
அனுபவிக்கிறார் மாமுனிகள்!
"அணைத்த வேலும், தொழுத கையும்,
அழுந்திய திருநாமமும், ஓம் என்றவாயும்,
உயர்ந்த மூக்கும், குளிர்ந்த முகமும்,
பரந்த விழியும், பதிந்த நெற்றியும்,
நெறித்த புருவமும், சுருண்ட குழலும்,
வடிந்த காதும், அசைந்த காதுகாப்பும்,
தாழ்ந்த செவியும், சரிந்த கழுத்தும்,
அகன்ற மார்பும், திரண்டதோளும்,
நெளித்த முதுகும், குவிந்த இடையும்,
அல்லிக்கயிறும், அழுந்திய சீராவும்,
தூக்கிய கருங்கோவையும், தொங்கலும் தனிமாலையும்,
தளிருமிளிருமாய் நிற்கிற நிலையம்,
சாற்றிய திருத்தண்டையும், சதிரான வீரக்கழலும்,
தஞ்சமான தாளிணையும், குந்தியிட்ட கணைக்காலும்,
குளிரவைத்த திருவடி மலரும், வாய்த்த மணங்கொல்லையும்
வயலாலி மணவாளனும், வாடினேன் வாடி (என்று)
வாழ்வித்தருளிய நீலக்கலிகன்றி மருவலர்தம்
உடல்துணிய வாள்வீசும் பரகாலன்
மன்கைமன்னனான வடிவே!
உறைகழித்த வாளையொத்த விழிமடந்தை மாதர்மேல்
உருகலைத்த மனமொழித்து இவ்வுலகளந்த நம்பிமேல்
குறைவைத்து மடலெ டுத்த குறையலாளி திருமணங்
கொல்லைதன்னில் வழிபறித்த குற்றமற்ற செங்கையான்
மறையுரைத்த மந்திரத்தை மாலுரைக்க, அவன்முனே
மடியொடுக்கி மனமடக்கி வாய்புதைத்து, ஒன்றலார்
கரைகுளித்த வேலணைந்து நின்றவிந்தநிலைமை, என்
கண்ணைவிட்டகன்றிடாது கலியனாணை ஆணையே.
காதும்சொரிமுத்தும் கையும் கதிர்வேலும்
தாதுபுனைதாளிணையும் தனிச்சிலம்பும்
நீதிபுனைதென்னாலி நாடன்திருவழகைப்போல
என்னாணை ஒப்பாரில்லையே.
வேலணைத்த மார்பும், விளங்கு திருவெட்டெழுத்தை
மாலுரைக்கத்தாழ்ந்த வலச்செவியும்
தாளிணைத் தந்தையும், தார்க்கலியன் நன்முகமும்,
கண்டு களிக்குமென்கண்.
இதுவோ திருவரசு இதுவோ திருமணங்கொல்லை
இதுவோ எழிலாலி என்னுமூர்
இதுவோ தாள்வெட்டும் கலியன்வெருட்டி நெடுமாலை
எட்டெழுத்தும் பறித்தவிடம்.
ஐயனருள்மாரி செய்ய அடியிணைகள் வாழியே
அத்துகிலும் சீராவும் மணியரையும் வாழியே
மையிலகுவேலணைத்த வண்மைமிகுவாழியே
மாறாமல் அஞ்சலிசெய் மலர்க்கரங்கள் வாழியே
செய்யகலனுடனலங்கள்சசேர் மார்பும் வாழியே
திண்புயமும் பணிலமன்ன திருக்கழுத்தும் வாழியே
மையல் செய்யும் முகமுறுவல் மலர்க்கண்கள் வாழியே
மன்னுமுடித்தொப்பாரம் வளையமுடன் வாழியே.
மங்கள ச்லோகம் :
ஸ்ரீமதாலி ஸ்ரீநகரிநாதாய கலிவைரிணே |
சதுஷ்கவிப்ரதானாய பரகாலாய மங்களம் ||
"திருமங்கை ஆழ்வார் வாழி
திருநாமம்"
கலந்த திருக்கார்த்திகையில் கார்த்திகை வந்தோன் வாழியே
காசினியில் குறையலூர்க் காவலோன் வாழியே
நலம் திகழும் ஆயிரத்து எண்பத்து
நாலுரைத்தான் வாழியே
நாலைந்தும் ஆறைந்தும் நமக்கு உரைத்தான் வாழியே
இலங்கெழு கூற்றிருகை இருமடல் ஈந்தான் வாழியே
இம்மூன்றில் இருநூற்று இருபத்து ஏழு ஈந்தான் வாழியே
வலந்திகழும் குமுதவல்லி மணாளன் வாழியே
வாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழியே.
திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
1 comment:
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏🙏🙏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. Each post is a priceless treasure. Namaskarams. We are HUGELY BLESSED 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Post a Comment