ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
"ஸ்ரீ ஆண்டாள்" (கோதை நாச்சியார்) வரலாறு
பகுதி 1
"ஆழ்வார் திருமகளார்" என்று கோதை நாச்சியார் என்று வழங்கப்படும் ஸ்ரீ ஆண்டாளைப் போற்றியுள்ளார் ஸ்ரீமத் மணவாள மாமுனிகள். இவர் தான் அருளிச்செய்த "உபதேச இரத்தினமாலை" என்னும் பிரபந்தத்தில் "கோதை"யின் புகழை மூன்று அற்புதமான பாசுரங்களால் விவரித்துள்ளார். அவற்றை அனுபவித்தாலே கோதையின் சிறப்பை ஒருவர் நன்கு உணர்ந்துகொள்ளலாம். ஆகவே, கோதையின் வைபவத்தை இதிலிருந்து தொடங்கி அனுபவிப்போம்
"இன்றோ திருவாடிப்பூரம், எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் - குன்றாத
வாழ்வான வைகுந்தவான் போகந்தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய்." (பாசுரம் 22)
விளக்கம் : திரு ஆடிப்பூரம் என்னும் திருநாள் இன்றைக்கன்றோ! "நித்யஸ்ரீ"யான ஸ்ரீமஹாலக்ஷ்மி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள நித்ய போகத்தையும் விட்டு, சூடிக்கொடுத்த நாச்சியாராக இருள் சூழ்ந்த இந்தப் பூவுலகில் பெரியாழ்வாரது புதல்வியாய், நம் போன்றவர்களின் உஜ்ஜீவனத்திற்காக அன்றோ திரு அவதாரம் செய்தருளினாள்!
எம்பெருமான் இந்நிலத்தில் கண்ணனாக அவதரித்து கீதோபநிஷத்தைத் தன் முகத்தாலே வெளியிட்டு அருளினான். அது வடமொழியில் இருப்பதனால், அனைவர்க்கும் அது முழுவதுமாகப் பயன்படவில்லை. இந்தக் குறைதீர "பெரியபிராட்டியார்" (ஸ்ரீமஹாலக்ஷ்மி தாம் வந்து இந்தப் பூவுலகில் அவதரித்து "வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்" என்று புகழத்தக்கதான திவ்யப் பிரபந்தத்தை எளிய தமிழில் அருளிச்செய்து, நாம் உய்வதற்கான வழியைக் காட்டினாள் என்பது இங்கு உணரத்தக்கது.
"பெரியாழ்வார் பெண்பிள்ளையாய், ஆண்டாள் பிறந்த
திருவாடிப்பூரத்தின் சீர்மை - ஒருநாளைக்கு
உண்டோ மனமே உணர்ந்துபார், ஆண்டாளுக்கு
உண்டாகில் ஒப்பு இதற்கும் உண்டு." (பாசுரம் 23)
விளக்கம் : சூடிக்கொடுத்த நாச்சியார் "பெரியாழ்வார்" திருமகளாக அவதரிக்கப் பெற்ற திருவாடிப்பூர நன்னாளின் பெருமை மற்ற எந்த நாளுக்கும் உண்டோ? நெஞ்சே! இதை ஆராய்ந்து காண். ஆண்டாளோடு ஒத்த சிறப்பு வேறு ஒன்று இருக்குமானால், இந்த நாளுக்கு உண்டான சிறப்பும் அதற்கு(ம்) இருக்கும்.
"அஞ்சுகுடிக்கொரு சந்ததியாய் ஆழ்வார்கள் தம் செயலை
விஞ்சிநிற்கும் தன்மையளாய் - பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளை பத்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து." (பாசுரம் 24)
விளக்கம் : ஆண்டாள் திரு அவதரித்த சிறப்பை, "அஞ்சுகுடிக்கொரு சந்ததியாய்" என்று போற்றி மகிழ்கிறார் மாமுனிகள் இப்பாசுரத்தில். (1) ஐந்து குடும்பங்களுக்கு, (2) எம்பெருமானுக்கு என்ன தீங்கு நேருமோ என்று அஞ்சுகின்ற ஆழ்வார்கள் பதின்மரின் (பத்து பேர்) குடிக்கு ஒரு புதல்வியாய்த் தோன்றி, ஆழ்வார்களின் படியை (ஆழ்வார்களின் அருளிச்செயல்களில் அதிசயித்து இருக்கும் இயல்புடையவளாய், தன் இளம் பிராயத்திலேயே (வயதில்) எம்பெருமானிடம் அன்பு முதிரப்பெற்ற சூடிக்கொடுத்த நாச்சியாரை நெஞ்சே உகந்து, பக்தியோடு எப்போதும் துதிப்பாயாக.
"அஞ்சுகுடிக்கு" என்பது ஐந்து குடும்பகளுக்கும் என்றும், எம்பெருமானுக்கு என்ன தீங்கு நேருமோ என்று அஞ்சுகின்ற குடும்பத்திற்கு என்றும் பொருள்படும். ஐந்து குடும்பங்கள் எவை எனில், ஆண்டாளுக்கு முன்னே அவதரித்த ஏழு ஆழ்வார்களின் குடி ஐந்தாகும்; எவ்வாறு என்றால், முதலாழ்வார்கள் (பொய்கையார், பூதத்தார், பேயார்)))))]} மூவரும் சேர்ந்து ஒரு குடி; இரண்டாவது திருமழிசையாழ்வாருடைய குடி; மூன்றாவது நம்மாழ்வாரது குடி; நான்காவது குலசேகரருடைய குடி; ஐந்தாவது பெரியாழ்வாருடைய குடி. ஆக. இந்த ஐந்து குடிக்கும் ஆண்டாள் ஒருத்தியே சந்தானமாகத் தோன்றியவள் என்று கொள்க.
ஆண்டாளுக்குப் பின்பு அவதரித்த தொண்டரடிப்பொடிகள், திருப்பாணன் மற்றும் கலியன் (திருமங்கை மன்னன் ஆகிய மூவர்க்கும் கூட இவள் ஒருத்தியே சந்ததி என்று கொள்வதும் நிறைவே ஆகும். எவ்வாறு என்றால், "அஞ்சுகுடி" என்பதற்கு அஞ்சுகின்ற குடி என்றும் பொருள் கொள்ளலாம் என்பதால், ஆழ்வார்கள் பதின்மரையும் இச்சொல்லால் குறிப்பிடுவது குறையாகாது. எம்பெருமானுக்கு என்ன அபாயம் நேரிடுமோ என்ற அச்சம் அனைத்து ஆழ்வார்களுக்குமே இருந்ததால், "அஞ்சுகுடி" என்று இவர்களைச் சொல்வதில் குறை ஏற்படாது. எனவே, ஆழ்வார்கள் அனைவர்க்கும் ஆண்டாள் ஒருத்தியே புதல்வியாய்த் தோன்றியவள் என்ற பரமார்த்தமும் தெரிவிக்கப்பட்டதாயிற்று.
ஆழ்வார்கள் இயற்கையிலேயே ஆண்களாகப் பிறந்து, பெண்மையை ஏறிட்டுக்கொண்டு பேசினார்கள். அதாவது, எம்பெருமானிடம் கொண்ட பக்தி காதலாய் ஊற்றெடுக்க, தங்களைப் பெண்ணாய்ப் பாவித்து அவனிடம் மோகித்தார்கள். ஆண்டாளோ அப்படியல்லாமல் இயற்கையிலேயே பெண்ணாகப் பிறந்ததனால், புருஷோத்தமனை அனுபவிக்கும் திறத்தில் சிறந்த உரிமை உடையவளானது பற்றி, "ஆழ்வார்கள் தம் செயலை
விஞ்சிநிற்கும் தன்மையளாய்" என்று அருளிச்செய்துள்ளார் மாமுனிகள். இவள் பருவம் நிரம்புவதற்கு முன்னமேயே "வானிடை வாழும் அவ்வானவர்க்கு (நாச்சியார் திருமொழி, 1.5) என்பது முதலான பாசுரங்களில் தானே பணித்தபடி பகவத் விஷயங்களில் அன்பு அதிகரிக்கப் பெற்றவளாதலால், "பிஞ்சாய்ப் பழுத்தாள்" எனப்பட்டாள்.
*****
"கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம், ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய், மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.
"இன்றோ திருவாடிப்பூரம், எமக்காக அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் - குன்றாத வாழ்வான வைகுந்தவான் போகந்தன்னை இகழ்ந்து ஆழ்வார் திருமகளாராய்" என்ற பாசுரத்தின் மூலம் பெரியபிராட்டியார் என்று வழங்கப்படும் ஸ்ரீரங்கநாச்சியாரே இப்பூவுலகில் ஆண்டாளாய் வந்து அவதரித்தாள். ஆண்டாளை ஸ்ரீதேவி, பூதேவிகளின் அம்சம் என்றும் கூறுவர். அப்படி ஸ்ரீமஹாலக்ஷ்மியானவள் , பெரியாழ்வாரின் புதல்வியாய் ஆண்டாளாக இங்கு வந்து அவதரிக்க வேண்டியதன் நோக்கம் என்ன? என்பதை ஸ்வாமி வேதாந்த தேசிகர் தானும் தனது அற்புத க்ரந்தமான "ஸ்ரீ கோதாஸ்துதி"யில் விளக்குகிறார். முதலில் அவரது அனுபவித்து, பின் அதற்கான விளக்கத்தையும் ஒருங்கே அனுபவிப்போம்
"ஸ்ரீ விஷ்ணுசித்த குலநந்தந கல்பவல்லீம்
ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தன யோக த்ருச்யாம் |
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்
கோதாம் அநந்யசரண: சரணம் ப்ரபத்யே ||" (ஸ்லோ.1)
விளக்கம் : "கோதாஸ்துதி" என்பது கோதை நாச்சியாரின் புகழ் பாடும் அற்புத க்ரந்தமாகும். "ஸ்ரீ விஷ்ணுசித்த குலநந்தந கல்பவல்லீம்" - கோதை என்னும் பெயர் கொண்டு, விஷ்ணுசித்தர் என்னும் பெயர் கொண்ட பெரியாழ்வாரின் குலத்தில் வந்து அவதரித்து, அந்தக் குலத்திற்கே பெருமகிழ்ச்சியை அளித்த பிராட்டியே" என்று ஆண்டாளைப் புகழ்ந்துள்ளார் ஸ்வாமி. "விஷ்ணுசித்தரின் குலம்" என்றால் என்ன என்பதை அறிவோம். இங்கே குலம் என்பது எந்த ஒரு குறிப்பிட்ட சாதியைக் குறிப்பிடவில்லை ஸ்வாமி தேசிகன். "எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் என்று பெருமானுக்குத் தான் அருளிச்செய்த "திருப்பல்லாண்டு" என்னும் பிரபந்தத்தில் உரைத்துள்ளார் பெரியாழ்வார். அதாவது, இதுவே இவர்களது குலம் - எதுவென்றால், பெருமானுக்குக் கைங்கர்யம் செய்துகொண்டு தொண்டாற்றுவதையே பொழுதுபோக்காகக் கொண்டவர்கள் இவர்கள். தமக்கு முன்னோர்கள் அனைவரும் இதைத்தானே செய்து காட்டினார்கள் ஆகையால், நானும் அவர்களின் காட்டிய வழியிலேயே உனக்குத் தொண்டு செய்துகொண்டு இருப்பேன் என்று தெரிவிக்கிறார் பெரியாழ்வார். அப்படிப்பட்ட "தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுகும் குலத்தில், புதல்வியாய் வந்து அவதரித்தவளே என்று அழைத்து கோதையைப் புகழ்கிறார் ஸ்வாமி தேசிகன். தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும் என்பதற்கு ஏற்ப, கோதையும் திருப்பாவையில் "உந்தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்" என்று அருளிச்செய்தாள்.
அடுத்த வரியில், "ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தன யோக த்ருச்யாம்" என்கிறார் ஸ்வாமி. அதாவது, ஸ்ரீரங்கராஜனான திருவரங்கநாதன் என்னும் கற்பக விருக்ஷத்தையே எப்போதும் சார்ந்து நிற்பவள் கோதை நாச்சியார் என்று அர்த்தம். இப்படி அவனைச் சார்ந்து நிற்பதாலேயே இவள் தேஜஸ் (ஒளி) கொண்டு திகழ்கிறாள். "கதிமிகுத்தங் கோல் தேடி ஓடும் கொழுந்ததே போன்றதே மால் தேடி ஓடும் மனம்" என்று ஸ்ரீ பூதத்தாழ்வார் (இரண்டாம் திருவந்தாதியில்] அருளிச்செய்தது போல! அதாவது, பரமபதநாதனைத் தேடிக்கொண்டு விரைவுடன் செல்லும் மனமானது அழகிய கோலைத் தேடிச் செல்லும் கொடி போன்றது என்று அர்த்தம். அதைப்போலவே, கோதையும் எம்பெருமானுக்குப் "பாமாலைகள்" சூடி, அவனையே தனது மணாளனாகச் சூடிக்கொண்டாள்.
அடுத்து, "ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்" என்று அருளியுள்ளார் சுவாமி தேசிகன். அதாவது, "ஸாக்ஷாத் க்ஷமாம்" என்றால் பொறுமையில் பூமிப்பிராட்டியைப் போலே என்றும், அந்த பூமிப்பிராட்டியே இந்தப் பூவுலகில் வந்து ஆண்டாளாய் அவதரித்துள்ளாள் என்றும், நம் பாவங்களைப் பொறுத்துக்கொண்டு, அவைகளை விலக்கி, நற்கதி அளிக்கும் கருணையே வடிவானவள் என்றும் அர்த்தம். "கருணயா கமலாமிவாந்யாம்" என்று அருளிச்செய்து, கருணையில் பூமிப்பிராட்டியை ஸ்ரீதேவி நாச்சியாருக்கு நிகராகக் கூறுகிறார். ஆனால், பூமிப்பிராட்டியைக் காட்டிலும் ஸ்ரீமஹாலக்ஷ்மி தாயாரே கருணையில் சிறந்தவளாகக் கருதப்படுகிறாள். "திருமகளும் மணமகளும் ஆய்மகளும் சேர்ந்தால் திருமகட்கே தீர்ந்தவாரென்கொல்" என்று அருளிச்செய்துள்ளார் பொய்கையாழ்வார் (முதல் திருவந்தாதி, (பாசுரம் 42]. அதாவது, ஸ்ரீதேவி (ஸ்ரீமஹாலக்ஷ்மி-திருமகள்], பூதேவி (பூமிப்பிராட்டி-மண்மகள்\ நீளாதேவி (ஆய்மகள்] ஆகிய மூவரோடும் கலக்கும்போதும், ஸ்ரீதேவியான பெரியபிராட்டிக்கே அற்றுத் தீர்ந்ததாக இருக்கும்" என்று அர்த்தம். இருப்பினும், சில விஷயங்களில் (கருணையில்) பூமிப்பிராட்டி எப்படி ஸ்ரீதேவி நாச்சியாரை மிஞ்சுகிறாள் என்று பார்த்தால், எம்பெருமான் நம்மைப் பாவம் செய்தவர்கள் என்று விலக்கி விடுகிறான்; அப்போது, ஸ்ரீமஹாலக்ஷ்மி தாயார் குறுக்கிட்டு, "பாவம் செய்யாதவர்கள் எவர் உண்டு பூவுலகில்?" என்று நமக்காகப் பரிந்து பேசி, நமக்கு நற்கதியைப் பெற்றுத் தருகிறாள். ஆனால், பூமிப்பிராட்டியோ "பாவமா? இவர்கள் யாருமே பாவமே செய்யவில்லையே!" என்று கருணைபொங்க எம்பெருமானிடம் எடுத்துச் சொல்லி, நம்மை உய்விக்கிறாள் (நற்கதியைப் பெற்றுத்தருகிறாள். "கமலாமிவாந்யாம்" என்று சொல்லி கருணையில் ஸ்ரீமஹாலக்ஷ்மி தாயாரை ஒத்தவள் பூமிப்பிராட்டி என்று உரைத்துள்ளார் ஸ்வாமி. ஆகையால், ஆண்டாளை ஸ்ரீதேவி, பூதேவிகளின் அம்சம் என்றும் பூருவர்கள் கூறுவர்.
கடைசி வரியில் "கோதாம் அநந்யசரண: சரணம் ப்ரபத்யே" என்று அருளியுள்ளார் ஸ்வாமி. அதாவது, கோதையே என் கர்மங்களிலிருந்து என்னை மீட்டுக்கொள்ள உன் திருவடிகளையே தஞ்சமாகக் கொள்கிறேன் என்றும், உன் திருவடிகளைத் தவிர எனக்கு வேறு புகலிடம் இல்லை" என்றும் உரைத்துள்ளார் ஸ்வாமி.
இப்பூவுலகில் பிறந்தவர் எவரும் பாவிகளே இல்லை; அதாவது, எவரும் பாவமே செய்யவில்லையே என்று எம்பெருமானிடம் உரைத்து, நாம் உய்யும்படி செய்தவள் பூமிப்பிராட்டி என்று மேலே பார்த்தோம். அவளே இங்கு, திரு ஆடிப்பூர நன்னாளில் இந்தப் பூவுலகில் ஆண்டாளாய் வந்து தோன்றினாள். ஏன் என்று பார்த்தால், கலியுகத்தில் இப்புண்ய பூமியில் பிறந்த ஜீவன்களை சம்சார சாகரத்திலிருந்து (கடல்\ மீட்க, பகவான் பூமிப் பிராட்டியின் அம்சமான ஸ்ரீ ஆண்டாளை அவதரிக்கும்படி பண்ணி, அவள் வாயிலாகத் "திருப்பாவை" என்கிற அருளிச்செயலையும் அவதரிக்கும்படிப் பண்ணினான். "வேதமனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்" என்று ஆண்டாள் அருளிய திருப்பாவையைப் போற்றி உகந்தார்கள் பூருவர்கள். "மேலையார் செய்வனகள் (மாலே (மணிவண்ணா, பாசுரம் 26)] என்று பாடி ஆசார்யர்கள் காண்பித்த வழியே நல்வழி என்பதை உணர்த்தினாள். "அறிவொன்றும் இல்லாத ஆய்குலத்தினில்"("பாசுரம் 28) தோன்றிய பஸுப்ப்ராயர்களான நமக்குப் பரமனடி காட்டும் அருள் செய்கிறது கோதை அருளிய திருப்பாவை. "இறைவா நீ தாராய் பறை என்று நீசர்களான (குறையுடையவர்கள்] நாம் "நாராயணனே நமக்கே பறை (மோஷம்] தருவான்" என்று ஸ்ரீ ஆண்டாளாலே அறுதியிடப்பட்ட சித்தோபாயனான அவன் திருவடிகளிலே பாரத்தை சமர்ப்பித்து, உத்தர (உயர்ந்த]] வாக்யமான "தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித்தொழுது, வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க போயபிழையும் புபுகுகின்ற பிழையும் தீயினில் தூசாகும்படியாக அனுக்ரஹிப்பான் என்கிற உயர்ந்த தத்தவத்தை போதிக்கும் பிரபந்தத்தை நமக்காக அருளிச்செய்யவே இங்கு ஆண்டாள் அவதரித்தாள்.
*****
"பெரியாழ்வார் பெண்பிள்ளையாய், ஆண்டாள் பிறந்த திருவாடிப்பூரத்தின் சீர்மை" என்று மாமுனிகளும் ""ஸ்ரீ விஷ்ணுசித்த குலநந்தந கல்பவல்லீம்" என்று ஸ்ரீமத் வேதாந்த தேசிகரும் ஸ்ரீ ஆண்டாள் திருவவதரித்ததின் சிறப்பைப் போற்றியுள்ளார்கள். கடந்த இரு பகுதிகளில் இவைகளை ஓரளவு அனுபவித்தோம்.
பகவான் ஐந்து நிலைகளில் வியாபிக்கிறான். "வையம் தெய்வம் மனிசர் தெய்வம் மற்றும் மற்றும் மற்றும் முற்றுமாய்" (திருவாய்மொழி, "செய்யதாமரை பதிகம், 3.6.1) என்று இந்த ஐந்து நிலைகளை விவரிக்கிறார் நம்மாழ்வார். அதாவது, (1) பரவாசுதேவனாய் ஸ்ரீவைகுண்டத்திலும் , வியூஹ வாசுதேவனாய் திருப்பாற்கடலிலும், (3) இராம, கிருஷ்ண அவதாரங்கள் எடுத்ததன் மூலம் விபவ வாசுதேவனாயும், (4) அனைத்து திருப்பதிகளில் அர்ச்சாமூர்த்தியாகவும், அனைத்துக்கும் மேலாக "அந்தர் பஹிச்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித:" என்று வேதம் உரைத்ததன்படி அனைவர்குள்ளும் அந்தர்யாமியாகவும் இருக்கிறான். இந்த ஐந்து நிலைகளில் எளிதில் பெருமானை அடையும் ழி எது என்று கேட்டால், பலபல திவ்யதேசங்களில் அர்ச்சாமூர்த்தியாய் அவன் எழுந்தருளியுள்ளானே! அதுவே என்பதாய், அதாவது கைங்கர்யம் செய்வதற்குப் பர வ்யூஹ விபவங்களைக் காட்டிலும் அர்ச்சாவதாரமே எளிதென்று ஆழ்வார் அருளிச்செய்துள்ளார். இப்படி ஆழ்வார் உரைத்ததை மாமுனிகள் தானும் திருவாய்மொழியின் சாரமாக இருக்கும் "திருவாய்மொழி நூற்றந்தாதியில் (பாசுரம் 36) "எய்துமவர்க்கு இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிதென்றான் பன்னுதமிழ் மாறன் பயின்று" என்று அருளிச்செய்துள்ளார்.
அப்படிப்பட்ட அர்ச்சாமூர்த்தியாய் பலபல திவ்யதேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு அனுதினமும் புஷ்பமாலைகள் தொடுத்து அளிக்கும் கைங்கர்யம் புரிந்துவந்தார் "விஷ்ணுசித்தர்" என்ற பெயர் கொண்ட பெரியாழ்வார். இவரது திருக்குமாரத்தியாகவே அவதரித்தாள் ஆண்டாள்.
முன்பு திரேதா யுகத்திலே விதேஹ தேசத்தில் மிதிலை மாநகரில் ஜனகமஹாராஜன் யாகசாலை அமைத்ததன் பொருட்டு, கலப்பையைக் கொண்டு பூமியை உழுகையில் அவ்வுழுப் படைச்சாலிலே ஸ்ரீதேவியின் அம்சமான ஒரு மகள் தோன்ற, அவளை அவ்வரசன் (ஜனகன்) தன் புத்திரியாக பாவித்து, அவளுக்கு "சீதை" என்று திருநாமம் இட்டு வளர்த்து வந்தான். அதைப்போலவே பின்பு கலியுகத்திலே பாண்டிய நாட்டிலே ஸ்ரீவில்லிபுத்தூரிலே பெரியாழ்வார், அந்த திவ்யதேசத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்யும் பொருட்டு, ஒரு நந்தவனம் அமைக்கவேண்டி, களைக்கொட்டுக்கொண்டு திருநந்தவனத்தைக் கொத்துகையில், அந்நிலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியின் அம்சமான ஒரு மகள் ஆடி மாதம் பூர்வ பல்குனி நாளிலே (பூர நக்ஷத்திரத்தில்) தோன்ற, அவளை அவ்வாழ்வார் தமது மகளாகவே பாவித்து, அவளுக்குக் "கோதை" என்ற திருநாமம் சார்த்தி, வளர்க்கலானார். பகவான் இராமனாக சூர்ய குலத்தில் தோன்றியதை "வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய் தோன்றி" என்று குலசேகர ஆழ்வார் (பெருமாள் திருமொழி, 10.1) போற்றி உகந்தார். அதைப்போல், பகவான் கண்ணனாக ஆயர் (இடையர்) குலத்தில் தோன்றியதை "ஆயர் குலத்தினில் தோன்றிய அணிவிளக்கை" என்று திருப்பாவையில் (பாசுரம் 5) கோதை நாச்சியார் போற்றி உகந்தாள். இப்படிப் போற்றிய ஆண்டாளை "ஸ்ரீ விஷ்ணுசித்த குலநந்தந கல்பவல்லீம்" என்று ஸ்ரீமத் வேதாந்த தேசிகர் போற்றி உகந்தார். இப்படி தங்கள் குலத்துக்கே ஒரு விளக்காகத் தோன்றிய கோதையை பெரியாழ்வாரும் மற்றையோரும் கண்ணன் கதைகளையே அவளுக்குப் பாலாகவும் தேனாகவும் ஊட்டி சீரும் சிறப்புமாய் வளர்த்து வந்து, அவளுக்குப் பஞ்ச ஸம்ஸ்காரங்கள் செய்வித்து, பரமஞானத்தை போதித்தனர்.
தந்தை முதலியோர் கண்டு வியக்கும்படி, எம்பெருமானிடத்திலே பக்திப்பெருவேட்கை (ஆசை) கொண்டு, அவனையே தான் மணம் செய்துகொள்ளக் கருதி, அப்பிரானது மகிமையையே எப்பொழுதும் சிந்தித்தல், துதித்தல் முதலியன செய்து நிற்கிற அச்சுரிகுழற் கோதை, நாள்தோறும் வடபெரும் கோயிலுடையானுக்குச் சாத்துதற்காக பெரியாழ்வார் தொடுத்துவைத்திருந்த திருமாலையை அவர் இல்லாத சமயம் பார்த்து, அதை எடுத்துத் தன் குழலிலே (கூந்தலில்) சூடி அழகுபார்த்து, அப்பெருமானின் அழகுக்குத் தான் ஒத்தவள்தானா என்று பார்க்க, சிறந்த ஆபரணங்களை அணிந்து, உயர்ந்த பட்டாடையை உடுத்தி தன்னை அலங்கரித்து, தன் அழகைக் கண்ணாடியிலே கண்டு, தந்தையார் வருவதற்குமுன் மலர்மாலையைக் களைந்து முன்போலவே செண்டாகச்சுற்றி, பூங்கூடையினுள்ளே நலங்காமல் (கசங்காமல்) சுற்றிவைத்தாள். தினம்தினம் ரஹஸ்யமாக நடக்கும் இந்த விஷயத்தை உணராமல் ஆழ்வார், அந்த மாலையைக் கொண்டுபோய் பெருமானுக்குச் சாத்திவர, பெருமானும் அதைப் ப்ரீதியுடன் ஏற்று அருளினான்.
இவ்வாறு பலநாட்கள் கழிந்தபின், ஒருநாள் ஆழ்வார் வெளியில் சென்றுவிட்டு விரைவில் திரும்பிவர, அச்சமயம் பெருமானுக்காக தான் கட்டிவைத்திருந்த பூமாலையைத் தன்மகள் சூடி அழகு பார்ப்பதை அறிந்து, கோபம் கொண்டு, "பெண்ணே! நீ செய்த இக்காரியம் மிகவும் அபச்சாரம் ஆகும்; இனி இப்படிச் செய்வதற்கு எப்போதும் எண்ணம் கொள்ளாதே" என்று புத்திசொல்லி, அன்று வடபத்ரசாயிக்கு மாலை சாத்த்தாமல், திருப்பணிக்குத் தடை ஏற்பட்டதற்கு வருந்தி, தன் இல்லத்திலேயே இருந்தார். அன்று இரவு வடபெரும் கோயிலுடையான் ஆழ்வாரின் கனவினில் தோன்றி, "இன்று நீர் நமக்கு மாலை கொண்டுவந்து சமர்ப்பிக்காதது ஏன் ?" என்று கேட்க, ஆழ்வார் தம் திருமகளார் (ஆண்டாள்) செய்த தவறான செய்கையை விண்ணப்பம் செய்ய, அதுகேட்டு அப்பெருமான், "அவள் சூடிக்கொடுத்த மாலையே தனக்கு உகப்பானது (மகிழ்வு) என்றும், இனி தினமும் தனக்கு எடுத்துவரும் மாலையை, அவள் சூடிக்கொடுத்த பின்பே எடுத்துவந்து சாத்தவேண்டும் என்றும் அருளிச்செய்தான்." உடனே கண்விழித்த விஷ்ணுசித்தர், தன் மகளான அம்மங்கையை மலர்மங்கை என்றே எண்ணி, அவளிடம் அளவற்ற அன்புகொண்டு, அனைத்துலகுக்கும் அன்னையாய் அவற்றை ஆண்டுவருகின்ற இலக்குமியின் அவதார விசேஷமென்ற காரணத்தால், அவளுக்கு ஆண்டாள் என்றும், மாதவனுக்குரிய மலர்மாலையைத் தான் சூடிக்கொண்டு பார்த்துப் பின்பு கொடுத்தது காரணமாக அவளுக்கு "சூடிக்கொடுத்த நாச்சியார்" என்றும் திருநாமம் சாத்தி அருளினார்.
அந்நாச்சியார் தனது பருவம் வளருந்தோறும், ஞானபக்திகளும் உடன் வளரப்பெற்று, தனக்கு ஏற்ற காதலனாகக் கருதிய கடல்வண்ணன் விஷயமான வேட்கை விஞ்சியவளாகி (மிஞ்சியவளாகி), இனி அவனை ஒருநொடிப்போழுதும் கூடாமல் இருப்பதைப் பொறுக்காமல், கண்ணனது பிரிவை ஆற்றாத ஆயர்மங்கைகள்போலத் தானும் நோன்புநோற்று உயிர் தரிப்பவளாய், மிகவும் இளம்வயதான அந்தப்பருவத்திலேயே "திருப்பாவை" (30 பாசுரங்கள் மற்றும் "நாச்சியார் திருமொழி (143 பாசுரங்கள் என்ற இரண்டு திவ்யப்ரபந்தங்களை பகவத் சந்நிதியிலே விண்ணப்பம் செய்து வாழ்ந்துவந்தாள்.
இப்படி இருக்கையில், இவளுக்கு விவாஹத்துக்கு ஏற்ற பருவம் வந்தபோது, இவள் தந்தையான பெரியாழ்வார் இவளுக்கு ஏற்ற மணாளனை அடையாளம் காணமுடியாமல் கவலைப்பட்டு, இவளை அழைத்து, ,"நீ யாருக்கு வாழ்க்கைப்பட விரும்புகின்றாய்?" என்று கேட்க, ஆண்டாள் தானும் அதற்கு தான் ஒரு சாதாரண மனிதருக்கு வாழ்க்கைப்பட விரும்பவில்லை என்றும், அந்த பகவானையே தான் மணாளனாக அடைய விரும்புகிறேன் என்பதை "ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கென்று உன்னித்தெழுந்த என்தடமுலைகள் மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன்" (நாச்சியார் திருமொழி, 1.5) என்று அருளிச்செய்தாள். இதைக்கேட்ட பெரியாழ்வார், "அவனை மணாளனாக அடைவது எப்படி சாத்தியமாகும்?" என்றுகேட்க, சூடிக்கொடுத்தவள் "பெருமானுக்கே உரியவளாக இருக்கிறேன்" என்று பதில் அளித்தாள். அதுகேட்டு பெரியாழ்வார் அவளிடம், 108 திருப்பதிகளில் உள்ள எம்பெருமான்களில் யாருக்கு வாழ்க்கைத் துணைவியாகத் துணிகிறாய்?" என்றுகேட்க, அவள் அதற்கு தந்தையிடம், "அவ்வெம்பெருமான்களின் வைபவங்களை விளங்கும்படி அருளவேண்டும்" என்று கூறினாள். விஷ்ணுசித்தரும் அவ்வாறே அருளிச்செய்ய, வடமதுரையில் எழுந்தருளியுள்ள கண்ணபிரானது வரலாற்றைக் கேட்ட மாத்திரத்திலே மயிர்ச்சிலிர்ப்பும், திருவேங்கடமுடையானது வரன்முரையைக் கேட்டபோது முகமலர்ச்சியும், திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகை அறிந்த மாத்திரத்தில் மனமகிழ்ச்சியும் பெற்று, ஸ்ரீரங்கநாதனது மகிமையைக் கேட்டவுடனே அளவற்ற ஆனந்தமடைந்து நிற்க, அப்பொழுது அந்தந்தத் திருப்பதிகளில் எழுந்தருளியுள்ள எம்பெருமான்கள் எல்லாரும் வந்து இவளது சுயம்வரத்தில் கலந்துகொள்ள உத்தேசித்து, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு எழுந்தருளி, இவளது ஞானக்கண்ணுக்கு விஷயமாக (அதாவது அவர்கள் இவள் மனதினுள் புகுந்து தரிசனம் தர), இவள் அவர்களிடத்தில் ரங்கநாதனிடத்தே மனத்தைச் செலுத்தி, அவனுக்கே தன்னை மணமகளாக நிச்சயித்து, அவனையே சதாகாலமும் நினைத்திருந்தாள்.
அதனை அறிந்து ஆழ்வார், "நம்பெருமாள் இவளைக் கடிமணம் செய்தல் எவ்வாறு கைகூடுமோ?" என்று சிந்தித்து இருக்கையில், திருவரங்கச்செல்வன் இவருடைய கனவினில் தோன்றி, "உமது திருமகளைக் கோயிலுக்கு அழைத்துவாரும்; அப்போது அவளை யாம் அங்கீகரிப்போம் (மணம் புரிவோம்)" என்று அருளிச்செய்ய, ஆழ்வார் மிக்க மகிழ்வடைந்தார். பின்பு, ஸ்ரீரங்கநாதன் ஸ்தாநீகர் (பட்டர்) முதலிய கோயில் பரிஜனங்களுடைய கனவில் தோன்றி, "நீங்கள் ஸகல மங்கள வாத்தியங்களோடும், சத்திர சாமராதிகளோடும் (விசிறி), நமது நவரத்தினப் பல்லக்கையும் உடன்கொண்டு வில்லிபுத்தூருக்குச் சென்று, ஆண்டாளைப் பல்லக்கில் ஏற்றி அழைத்துவாருங்கள் என்று கட்டளை இட்டான். அவ்வாறே எல்லா பரிகத்தாரும் சென்று, பெரியாழ்வாரை அடுத்து நம்பெருமாளது அருளிப்பாட்டைக் (கட்டளையை) கூற, கர்ணாம்ருதமான அவ்வருளிப்பாட்டைக் கேட்டு மகிழ்ந்து, கோதை வடபெரும் கோயிலுடையானுடைய சந்நிதியிலே ஸ்ரீரங்கநாதனது நியமனத்தை விண்ணப்பம் செய்து, அவனிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு ஸ்ரீரங்கத்தை நோக்கிப் பிரயாணம் செய்தனர். அச்செய்தியைக் கேட்டு, அந்த நாட்டு ராஜாவான ஸ்ரீவல்லபன் அக்கல்யாண மகோத்ஸவத்தைத் தானும் உடனிருந்து விசேஷமாக விரும்பி, தன் சேவகர்களைக் கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூரையும் ஸ்ரீரங்கநகரையும் இவ்விரண்டுக்கும் நடுவிலுள்ள நெடுவழியெங்கும் தண்ணீர் தெளித்தும், பூப்பந்தலிட்டும், தோரணம் கட்டியும் வாழை கமுகு (மரம்) நாட்டியும் நன்றாக அலங்கரித்தும், யானை குதிரைப் படைகளோடு சதுரங்க பலத்துடனே பெரியாழ்வார் அருகில் வந்துசேர்ந்தான். பின்னர் ஆழ்வார் முத்துப்பல்லக்கில் எழுந்தருளப்பண்ணி, மங்கள வாத்திய கோஷத்துடன், "ஆண்டாள் வந்தாள்! சூடிக்கொடுத்த நாச்சியார் வந்தாள்! சுரும்பார் குழற் கோதை வந்தாள்! திருப்பாவை பாடிய செல்வி வந்தாள்! பட்டர்பிரான் புதல்வி வந்தாள்! வேயர்குலவிளக்கு வந்தாள்! என்று பல திருச்சின்னங்கள் பரிமாற, மெய்க்காப்பாளர் உடன்சூழ்ந்து நிற்க, தாமும் அரசனுமாக இருபுறமும் இடைவிடாது அழைத்துவந்து, திருவரங்கம் பெரியகோவிலை அடைந்து, பெருமானுடைய முன்மண்டபத்திலே அப்பிராட்டியை நிறுத்தி, பெருமாளை ஸேவிக்கப்பண்ணிவிக்கையில், அத்திருமாலின் திவ்யஸௌந்தர்யம் இரும்பைக் காந்தம் இழுப்பதுபோல, ஆண்டாளைக் கவரத்தொடங்கியதனால், சிலம்பார்க்க, சீரார் வளையொலிப்ப, கொடியிடையார் காதளவுமோடிக் கயல்போல் மிளிரும் கடைக்கண் பிறழ, அன்னமென்னடை கொண்டு, அருகிற்சென்று ஆனந்தக்கடலில் ஆழ்ந்து, திருவரங்கன் திருவடி வருடக் கருதி, நாகபர்யங்கத்தை (ஆதிசேஷன்) மிதித்து ஏறி,நம்பெருமாள் திருமேனியிலே ஐக்கியமானாள்.
****
ஆண்டாளைப் பற்றி மேலும் சில விஷயங்களையும், அவள் அருளிய "திருப்பாவை" என்னும் பிரபந்தத்தின் சாரம் என்ன என்பதையும் அனுபவிப்போம். ஆழ்வார்கள் பதின்மர் (பத்து பேர்கள்). அவர்கள்: பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பாணாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் ஆகியோர் ஆவர். இவர்களைத் தவிர, இன்னும் இரண்டுபேரும் ஆழ்வார்களாகவே அவதரித்தனர். அவர்களில் ஒருவர் நம்மாழ்வாரையே தெய்வமாகக் கொண்டு, அவருடைய சிஷ்யராக இருந்த மதுரகவி ஆழ்வார் ஆவார். மற்றொருவர், பெரியாழ்வாருடைய பெண்ணாய்ப் பிறந்து, கண்ணனுக்கே மணம் முடிக்கப்பட்ட "கோதை" என்று வடமொழியிலேயும், "ஆண்டாள்" என்று தென்மொழியிலேயும் கொண்டாடப்படுகிற ஆண்டாள்.
"பூதம் ஸரச்ச மஹதாஹ்வய பட்டநாத
ஸ்ரீபக்திஸார குலசேகரயோகிவாஹான் |
பக்தாங்க்ரிரேணுபரகாலயதீந்த்ரமிச்ராந்
ஸ்ரீமத்பராங்குசமுனிம் ப்ரணதோஸ்மிநித்யம் ||"
இது எல்லா ஆழ்வார்களையும் வணங்கும் ஸ்லோகம் ஆகும். முதலில் ஆழ்வார்கள் 10 பேர் என்று பார்த்தோம். பின்னர், இன்னும் இரண்டுபேரைச் சேர்த்து பன்னிருவர் (12 பேர்கள்) என்று பார்த்தோம். "பத்தா?" அல்லது "பன்னிரண்டா?" என்று பார்த்தால், "பன்னிரண்டு" என்பதே உண்மை. ஆனால் ஏன் பத்து பேரை ஒரு குழுமமாகவும், எஞ்சியுள்ள இரண்டுபேரை ஒரு பிரிவினராகவும் கருதுகிறோம் என்றால், அந்த பத்துபேர் பகவானையே தெய்வமாகக் கொண்டு, அவனே எல்லாம் என்று இருந்தார்கள்; ஆனால், மற்ற இருவருக்கோ அதாவது, ஆண்டாளுக்கும் மதுரகவிகளுக்கும் தெய்வம் தெய்வமல்ல! ஆசாரியன், குரு, பக்தனே தெய்வம் என்ற பக்தி மிகுந்திருந்தது. அதனால்தான், இவ்விருவருக்கும் ஒரு தனி நிலை, உயர்ந்த நிலை கொடுக்கப்பட்டிருக்கிறது. பத்து ஆழ்வார்களுடைய நிலை வேறு; இந்த இருவருடைய நிலை வேறு. அந்த பத்து ஆழ்வார்களுடைய நிலை மிகவும் சுலபம். தெய்வத்தை தெய்வம் என்று ரொம்ப சுலபமாக ஏற்றுக்கொண்டுவிடுவார்கள். ஆனால், நம்மைப்போல் இருக்கும் ஒரு மனுஷ்யரை தெய்வமென்று ஏற்றுக்கொள்ளவேண்டுமானால், மனது அதற்கு இசையவே இசையாது. ஆனால், அதைத்தான் இவ்விருவரும் சாதித்துக் காட்டினார்கள். இவர்களில் இப்போது நாம் அனுபவித்து வருவது, "ஆண்டாளை"ப் பற்றி. ஆண்டாள் அருளிய திருப்பாவையைப் பற்றினால், பகவானை எளிதில் பற்றலாம்.
ஆண்டாள் என்று சொன்னதும் எது நினைவுக்கு வரவேண்டும் என்றால், பகவானைக் காட்டிலும், பாகவதனை உயர்வாக வைத்தவள்; பகவானுக்கு சமமாகவே அவனைக் காட்டிலும் உயர்ந்த ஸ்தானத்தில் வைத்தவள் என்பது நினைவுக்கு வரவேண்டும். ஏன் அப்படி வைத்தாள் என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். அதை எதன்மூலமாக தெரிந்துகொள்ளப்போகிறோம் என்றால் அவள் அருளிச்செய்த "திருப்பாவை" மூலமாக. திருப்பாவை என்பது இரத்தினத்தைப் போன்றது. இரத்தினம் என்பது ஒரு விலை மதிப்பற்ற பொருளாகும். அது தெரியாமல், அதை ஒரு சாதாரணமான பொருளாக நினைத்தால், அதாவது அதை வெறும் கல் என்று நினைத்தால், அதன் பயன் என்ன என்பது புரியாமலே போகும். அதைப்போல, திருப்பாவையும் இப்போது நம் கையில் சிக்கிக்கொண்டிருக்கிறது. இது அன்று பூருவாசார்யர்களின் கையில் கிடைத்ததாலே, இரத்தினமான இந்த விஷயம் நீலமா, மஞ்சளா, சிவப்பா அல்லது பச்சையா என்று ஆராய்ந்து, அவர்கள் அதற்கு மெருகூட்டினார்கள். ஆனால், அதே இரத்தினம் இப்போது நம் கையில் உள்ளது. நமக்கு அதன் மதிப்பு தெரியவேண்டுமே! இரத்தினத்தை வெறும் கல் என்று நினைத்தாலும் பரவாயில்லை; திருப்பாவை அப்படி ஒரு சாதாரண விஷயமாகிவிடக்கூடாது. திருப்பாவையின் வாசனை அதன் வாசனையை அறிந்தவர்களுக்கே புரியும். அது யாருக்குப் புரிந்திருக்கும் என்றால், முதலில் பகவத் ராமானுஜருக்குப் புரிந்தது. அவருக்கு "திருப்பாவை ஜீயர்" என்ற பட்டமே உண்டு. ராமானுஜர் திருப்பாவை பாசுரங்களைச் சொல்லிக்கொண்டுதான் எப்போதும் உஞ்சவிருத்திக்குச் செல்வாராம். இவர் ஒரு பெரிய ஸம்ஸ்க்ருத வித்வான்! வேதாந்தி! யதிசிகாமணி! இருந்தாலும், அதென்ன ஒரு பெண் பாடின, அதுவும் தமிழில் பாடின முப்பதே பாட்டைப்போய் இவ்வளவு தூரம் தன் உள்ளத்தில் ஒசத்தியாக வைத்திருக்கிறாரே ! திருப்பாவை என்ன உபநிஷத்துக்களில் ஏதாவது ஒன்றா இல்லையே. ஏதோ முப்பது பாசுரங்கள் கொண்ட தமிழ்ப்பாடல்தானே என்று நமக்குத் தோன்றலாம். அதற்குத்தான் திருப்பாவையைப் போற்றும் ஒரு பாசுரம் உள்ளது "பாதகங்கள் தீர்க்கும், பரமனடி காட்டும், வேதமனைத்துக்கும் வித்தாகும் கோதைதமிழ்" என்பதே அது. "பாதகங்கள் தீர்க்கும் - நம்மிடம் என்னென்ன பாவங்கள் உள்ளதோ, அத்தனையையும் தீர்த்துவிடும். அடுத்து, "பரமனடி காட்டும்" என்றால், பகவானுடைய திருவடித்தாமரைகளையே நமக்குக் காட்டி, பெற்றுத்தரும். அடுத்து, "வேதமனைத்துக்கும் வித்தாகும்" என்றால், வேதவேதாந்தங்களில் என்னென்ன அர்த்தங்களும் விஷயங்களும் இருக்குமோ, அவை அத்தனையும் திருப்பாவையில் உண்டு. "வேதமனைத்துக்கும் வித்தாகும்" - எவையெவை? வேதத்தைப்போல இதில் 1000 சாக்கைகள் உள்ளதா? அல்லது 7 சாக்கைகள் உள்ளதா? அல்லது 100 சாக்கைகள் உள்ளதா? அல்லது இதை ரிஷிகளோ, வேதவ்யாஸரோ அல்லது பெருத்த பண்டிதர்களோ பாடினார்களா? இல்லவே இல்லை. ஒரு சிறு பெண் குழந்தை தெற்கு கோடியிலே, ஸ்ரீவில்லிபுத்தூரிலே, ஆடி மாசம் பூர நட்சத்திரத்திலே பெரியாழ்வாருடைய திருக்குமாரத்தியாக அவதரித்து, தன்னுடைய சிறு பிராயத்திலே (வயதிலே பாடின முப்பதே பாசுரங்கள் கொண்டதே திருப்பாவை.
இப்படிப்பட்ட உயர்ந்த பிரபந்தமான திருப்பாவையை அனைவரும் அறிந்துகொண்டே ஆகவேண்டும். இல்லையென்றால் என்னாகும் என்பதை "கோதைதமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு" என்று பூருவர்கள் காட்டியுள்ளனர். இந்த "ஐயைந்தும் ஐந்துமான" முப்பது பாசுரங்களுக்குள்ளே வேதாந்தங்களின் அர்த்தங்கள் அனைத்தும் பொதிந்து கிடக்கும். யாருக்காவது இந்த முப்பது பாசுரங்கள் தெரியவில்லை என்றால், அவரை "வையம் சுமப்பதுவும் வம்பு!" - அதாவது, பூமிதேவி அவர்களை சுமந்துகொண்டிருப்பதே வம்பு என்று இந்தப்பாட்டு உரைக்கிறது. "வீண்" என்று உரைத்திருந்தால் பரவாயில்லை; "வம்பு" என்று வேறு பாட்டில் உள்ளது. இந்த அர்த்தம் சரியாகத் தெரியாததால், வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டு, சண்டையைக் கிளப்புவார்கள் சிலர். ஒழுங்காக இந்த முப்பது பாட்டுக்களைப் படித்திருந்தால், எந்த சந்தேகமும் வராது. அப்போது வம்பில்லாமல் இருக்கும். சந்தேகம் வந்துவிட்டது என்றாலே, வம்பு வளர்கிறது என்று அர்த்தம். படித்திருந்தால், வம்பு வரவே வராது. ஏன் அப்படிக் கூறினார்கள் என்று பார்த்தால் "கூடியிருந்து குளிர்ந்து" என்று ஆண்டாள் பாடியுள்ளாள். அதாவது, அனைவரும் சேர்ந்து இருக்கவேண்டும்; ஒற்றுமையாக இருக்கவேண்டும். இது ஆண்டாள் செய்துள்ள பிரார்த்தனை. ஒரு சிறு குழந்தைக்கு இத்தனையும் தெரியுமா என்று கேட்டால், அது நடந்தது பகவத் அனுக்ரஹத்தாலே; அவளது திருத்தகப்பனாரான பெரியாழ்வார் பெருமானுடைய கதைகளையே பாலும் தேனுமாக அவளுக்கு ஊட்டி வளர்த்திருக்கிறபடியாலே, இந்தப் பரந்த நோக்கு ஆண்டாளுக்கு வந்துள்ளது. .கூடியிருந்து குளிரணும்; மொத்தபேரும் சேர்ந்து இருக்கவேண்டும். "வைமநஸ்யம்" (சண்டை சச்சரவுகள்) கூடாது; இதைத்தான் ஆண்டாள் தெரிவித்துள்ளாள். இது தெரிய, திருப்பாவை தெரியவேண்டியது அவசியமாகிறது. இல்லையென்றால், அவர்களை "வையம் சுமப்பது வம்பாகும்." ஆகையால், அவசியம் நாம் அனைவரும் திருப்பாவையைத் தெரிந்துகொள்ளவேண்டும். இதுவரை தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை; இனியாவது ஒரு சிறு முயற்சி செய்தால், எளிதில் வந்துவிடும். தெரிந்துகொண்டால் நல்லது. ஒன்றைமட்டும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஒன்று தெரியவில்லை என்றால், அதைத் தெரிந்துகொள்வதால் எந்த நஷ்டமும் ஏற்படாது. திருப்பாவை என்பது வேதவேதாந்தத்தின் கருத்துக்கள் நிரம்பப்பெற்றது ஆகும். ஆகவே அனைவரும் அதைக் கற்றால் அதனால் விளையும் பயன்....."பரமனடி காட்டும்.".
ஆண்டாள் அருளிய திருப்பாவையின் சுவையை இன்னும் சற்று அனுபவித்து, மேலும் அவள் "நாச்சியார் திருமொழியும்" (143 பாசுரங்கள்) அருளியுள்ளாளே - அதைப்பற்றியும் சுருக்கமாக அனுபவிப்போம்.
"கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர்
சோதிமணிமாடம் தோன்றுமூர் - நீதியாய்
நல்லபத்தர் வாழுமூர் நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக்கோனூர்.
"பாதகங்கள் தீர்க்கும், பரமனடி காட்டும்,
வேதமனைத்துக்கும் வித்தாகும் - கோதைதமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு"
*****
தன் தந்தையான பெரியாழ்வாரிடமிருந்து கிருஷ்ணானுபவங்களைக் கேட்ட ஆண்டாளுக்கு அதிலே மிகுந்த ஈடுபாடு உண்டாயிற்று. கிருஷ்ணானுபவத்தைச் செய்த கோபியாகத் தன்னை பாவித்துக் கொண்டாள். திருவாய்ப்பாடியில் மழைபொழியவேண்டும் என்று ஆயர்கள் நோன்பு நோற்ற விஷயத்தை எடுத்துக்கொண்டு, வேதமனைத்துக்கும் வித்தான திருப்பாவை 30 பாசுரங்களை அருளிச்செய்தாள். இந்தப் பிரபந்தம் வருடத்தின் 365 நாட்களிலும் எங்கும் அனுஸந்தானம் செய்யப்படும் தனிப்பெருமை பெற்றது. திருப்பாவையில் ஒவ்வொரு பாசுரமும் "எம்பாவாய்" என்று முடிவதால், "திரு" என்னும் அடைமொழி சேர்ந்து, "திருப்பாவை" என்று பெயர் பெற்றது.
இதில் முதற்பாசுரத்தில், நாராயணன் என்று தெரிவித்து,30ஆம் பாசுரத்தில், வங்கக்கடல் கடைந்த மாதவனை என்று பிராட்டியோடு உள்ள பெருமானை, "மாதவன்" என்று நிறைவு செய்துள்ளாள். முதற்பாசுரத்தில் "நாராயணனே நமக்கே பறைதருவான்" என்று அறுதியிட்டபடி, 29ஆம் பாசுரத்தில் "உனக்கே நாம் ஆட்செய்வோம்” என்று தெரிவிக்கிறார். இரண்டாம் பாசுரத்தில், "பரமன் அடிபாடி" என்று பெருமானின் திருவடியைப் பாடி, 29ஆம் பாசுரத்தில் "உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்” என்கிறாள். மேலும், 2ஆம் பாட்டில் "பரமன் அடிபாடி" என்று ஆரம்பித்து, 30ஆம் பாட்டில் "கேசவனை" என்று திருமுடியில் முடிக்கிறாள். 27, 28, 29ஆம் பாசுரங்களில், கோவிந்தனைப்பாடி, “உந்தன்னோடு உற்றோமே ஆவோம், உனக்கே நாம் ஆட்செய்வோம்" என்று தெரிவித்து, திருப்பாவை பாடுவதனால் விளையும் பயன் யாது என்று கேட்டால், "செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்" என்று அருளிச்செய்தாள். மேலும் திருப்பாவையில், பகவத் பக்தி, பாகவத பக்தி, மந்திர பக்தி, புருஷகார வைபவம் (இரட்சிக்கும் செயல்), ப்ரபத்தியின் அங்கங்கள், சரணாகதி ஆகியவற்றின் அர்த்தங்களை ஆண்டாள் நமக்குத் தெளிவாகக் காட்டித் தந்திருக்கிறாள். இதனாலேயே, "கோதைதமிழ் ஐயைந்தும் ஐந்துமான" முப்பது பாசுரங்களை அனைவரும் அவசியம் அறிந்துகொள்ளவேண்டும் என்று நம் பூருவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
திருப்பாவையில் எம்பெருமானே உபாயம் (வழி) என்றும், அவன் உகப்புக்கு (ஆனந்தம்) அடிமை செய்வதே பேறு என்றும் தன் உறுதியை அறுதியிட்டும்,, எம்பெருமானைப் பெறவில்லை ஆண்டாள். அதனால், அவனைப்பெறவேண்டும் என்ற பரபரப்பு அவளிடம் மிகுந்து இருந்தது. இதற்காகவே இவள் "நாச்சியார் திருமொழி" என்ற இன்னொரு பிரபந்தத்தை அருளிச்செய்துள்ளாள். இந்தப் பிரபந்தம் 14 பதிகங்கள் கொண்டு, 143 பாசுரங்கள் கொண்டதாகும். அதில் முதல் பதிகத்தில், பிரிந்தாரைக் கூட்டும் காமதேவனிடம் "வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே" என்று வேண்டினாள். உடனே எம்பெருமான் முகம் காட்ட, தான் சிற்றில் இழைத்ததை சிதைக்க வேண்டாம் என்று வேண்டியதை, இரண்டாம் பதிகமான "நாமம் ஆயிரத்தில் வேண்டுகிறாள். பின்பு, "தாங்கள் நீராடும்போது, அவன் கவர்ந்த இவர்களுடைய ஆடைகளைக் கொடுக்கும்படி கேட்பதை 3ம் பதிகமான "கோழி அழைப்பதில்" பாடினாள் மறுபடியும், இவனைக் காணவல்லோமோ என்று ஊடல் இழைத்ததை 4ம் பதிகமான "தெள்ளியார் பலரில்" பேசினாள். கூடல் மறுமொழி கூறாததால், குயிலைப்பார்த்து,எம்பெருமான் வரும்படி, கூவ வேண்டினாள் "மன்னுபெரும் புகழ்" என்ற ஐந்தாம் படிகத்தில் பாடினாள். குயில்கள் கூவியும் அவன் வராததாலே, வருத்தமுற்ற இவளைத் தரிக்கச்செய்ய, கண்ணன் இவளை மணம் புரிவதாகக் கொடுத்த கனவு அனுபவத்தை 6ஆம் பதிகமான "வாரணமாயிரம்' பதிகத்தில் தோழிக்குத் தெரிவித்தாள். உடனே எம்பெருமானை எப்போதும் அனுபவிக்கும் சங்கைப்பார்த்து பவதனுபவம் இருக்கும்படியைக் கேட்கிறாள் 7ஆம் திருமொழியான "கருப்பூரம் நாறுமோ" என்ற பதிகத்தில். மழைக்காலம் முடிந்தவுடன் வருவதாகச் சொல்லிப் போனவன் வராததனால், திருவேங்கடத்திற்கு மேகங்களைத் தூதுவிட்டாள் 8ஆம் பதிகமான "விண்ணீல மேலாப்பில்". மேகங்கள் தூது செல்லாமல் மழை பொழிந்ததால் உண்டான மலர்கள், கனிகள், முதலியவை கண்ணனை நினைவுபடுத்தி, தன்னை நலிவதை 9ஆம் பதிகமான "சிந்துரச் செம்பொடி"யில் உரைத்தாள். அப்படி இருந்தாலும், பெரியாழ்வாரோடு ஆசார்ய சம்மந்தம் தன்னை அவனோடு சேர்த்துவிடும் என்ற உறுதியைப் பத்தாம் பதிகமான "கார்க்கோடல் பூக்காளில்" உரைத்தாள். என்றாலும், ஆற்றாமையால் மெலிந்த தம்மைக் காணவந்தவர்களிடம், "அவன் நம்மை வைத்த பரிசு இது" என்று 11ம் பதிகமான "தாமுகக்கும் தன்கையில் காட்டி, 12ம் பதிகமான "மற்றிருந்தீரில்" தம்மை அவன் இருக்கும் இடத்திற்குக் கொண்டு சேர்க்கும்படி வேண்டினாள். அவர்களால் இவளை அவன் இருக்கும் இடத்திற்குக் கொண்டுபோக முடியாவிடில், அவன் சம்மந்தம் உடைய ஒன்றைக்கொண்டுவந்து கொடுத்து, உயிர்தரிக்கச் செய்யும்படி வேண்டினால். அவள் பக்தியின் எல்லையில் இருப்பதை உணர்ந்த கண்ணன் எம்பெருமான் நேரில் வந்து காட்சியளித்து ஆட்கொண்டதை, "கண்டீரோ" என்று கேட்பவர்களாயும், "கண்டோமே" என்று பதில் சொல்கிறவர்களாயும் தானே இரண்டு நிலைகளில் பேசி, தான் பெற்ற பேற்றைச்சொல்லி, பிரபந்தத்தைத் தலைகட்டுகிறாள் (நிறைவு செய்கிறாள்). நாச்சியார் அருளிச்செய்த பிரபந்தமாகையால், பெரியாழ்வார் திருமொழி போல, இந்தப்ரபந்தமும் "நாச்சியார் திருமொழி" என்று பெயரிடப்பட்டது.
தாழ்வொன்றில்லா மறைதாழ்ந்து தலமுழுதும் கலியே
ஆள்கின்ற நாள்வந்து அளித்தவன் காண்மின் - அரங்கர்மௌலி
சூழ்கின்ற மாலையைச் சூடிக்கொடுத்தவள் தொல்லருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமானுசன் என்னும் மாமுனியே.
(திருவரங்கத்தமுதனார், இராமானுச நூற்றந்தாதி, பாசுரம் 16).
விளக்கம்: பெரியபெருமாளுடைய திருமாலையைத் தன்னுடைய திருக்குழலிலே சூடி, மிக்க மணமுள்ளதாக்கிக் கொடுத்த வைபவமுடைய ஆண்டாளுடைய க்ருபையாலே வாழ்பவரும், நம்மை உய்விப்பவருமான இராமானுச முனியானவர் எப்படிப்பட்ட்டவர் என்றால் ஒருகுறையும் இல்லாதிருந்த வேதமானது குத்ருஷ்டிகளாலே (தீவினைகள் கொண்டவர்கள்) இழிவுபெற, பூமியெங்கும் கலி புருஷனே சாம்ராஜ்யம் பண்ணுகிற காலத்திலேயே இங்கே வந்து அவதரித்து, அந்த வேதத்தை உய்ப்பித்து உலகத்தை இரட்சித்து அருளினவர் காணுங்கோள். அதாவது இராமானுசர் இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்தவராக இருந்ததற்கு ஆண்டாளின் அருளாலே என்கிறார் அமுதனார். திருமாலிருஞ்சோலை எம்பெருமானுக்கு ஆண்டாள் நூறு அண்டாக்கள் நிறைய வெண்ணையும், அகாரவடிசலும் சமர்பிப்பதாய் வாய்வழியே நேர்ந்துகொண்டாள் ஆண்டாள். ஆனால், இராமானுசரே அவள் நேர்ந்துகொண்டதை நிஜத்தில் நிறைவேற்றிவைத்தார். இதனால் அகமகிழ்ச்சி கொண்ட ஆண்டாள் இவரைப்பார்த்து "அண்ணலே!" என்று அழைத்தாளாம். ஏனென்றால், தங்கையின் விருப்பத்தை நிறைவேற்றுபவனே சிறந்த அண்ணன் ஆவான். தான் நேர்ந்துகொண்டதை இவர் நிறைவேற்றியதனாலேயே, ஆண்டாள் இவரை இப்படி மரியாதையுடன் அழைத்தாளாம். இதை உணர்த்தும் வண்ணமே, "பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே" என்று ஆண்டாள் வாழித்திருநாமத்தில் பாடியுள்ளனர் பூருவர்கள்.
ஆண்டாள் வாழித்திருநாமம்:
திருவாடிப்பூரத்தில் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒருநூற்றுநாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவைநகர் கோதை மலர்ப்பதங்கள் வாழியே.
ஆண்டாள் மங்கள ச்லோகம் :
ஸ்ரீமத்யை விஷ்ணுசித்தார்யை மனோநந்தன ஹேதவே |
நந்தநந்தன ஸுந்தர்யை கோதாயை நித்யமங்களம் ||
ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
No comments:
Post a Comment