Tirumazhisai Azhwar Vaibhavam - 6

உலகத்தின் பார்வையாலும், வேதத்தின் பார்வையாலும், பக்தியின் பார்வையாலும், எம்பெருமான் தானே தன்னைக் கொண்டுவந்து காட்ட, முதலாழ்வார்கள் மூவரும் எம்பெருமானைக் கண்டு அனுபவித்தார்கள். அதாவது, இவர்கள் மூவருக்கும் பகவான் நேரே ஞானத்தை வழங்கி, தானே பரம்பொருள் என்பதையும் உணர்த்த, அவர்களும் அவனை மனமாரத் தரிசித்து, அவன் புகழைப் பாடினார்கள். நான்காமவரான திருமழிசை ஆழ்வார் முதலில் நெடுங்காலம் பிற சமயங்களில் இருந்துவிட்டு, பின்னர் எது உண்மையான பரம்பொருள் என்பது பேயாழ்வாரால் காட்டப்பட்டு, அதன்பின் இவரும் முதலாழ்வார்களைப் போலவே, அந்த நிலையை அடைந்தபோது, தானும் அனுபவித்து மகிழ்ந்தார். ஆனால், வேதத்தின் அடிப்படையில், நியமிப்பவன் எம்பெருமான்; நியமிக்கப்படுபவர்கள் ஜீவாத்மாக்கள் என்கின்ற உண்மைத் தன்மை உலகில் வெளிப்படாமல் மறைந்திருப்பதைக் கண்டு, இப்படி, எது உண்மையான பரம்பொருள் என்று உலகோர்கள் அறியாமல் இருப்பதைக் கண்டு, அப்படி அஜ்ஞானத்துடன் இருப்பவர்கள் மீது பரிவு (இரக்கம்) கொண்டு, அனைத்து வேதங்களின் ரகசியங்களையும் உபதேசித்து அருளினார் (அறிவுறுத்தினார்) தனது திவ்யப் பிரபந்தங்களின் மூலம். 

பெருமான் மீது எத்தனையோ பிரபந்தங்களைப் பாடியுள்ளார் திருமழிசைபிரான். ஆனால், இன்று நமக்குக் கிடைத்துள்ளது இரண்டே இரண்டு. அதாவது, ஆழ்வார் தானும், தான் இயற்றிய அபாரமான ப்ரபந்தங்கள் அத்தனையையும் காவிரி ஆற்றினில் போட, இரண்டே இரண்டு பிரபந்தங்களை மட்டும் இந்தக் காவிரி ஆறு அவரிடத்திலே மீண்டும் கொண்டுவந்து சேர்த்ததாம்! உடனே திருமழிசை ஆழ்வார் நினைத்தார் - இந்த ரெண்டு போதும், "ஸ்ரீமன் நாராயணனே பரதெய்வம் என்று உலகத்தாருக்கு அறிவிக்க! இன்னும் அவர் இயற்றிய அத்தனையும் இருந்திருந்தால் மற்ற சமயங்கள் என்ன பாடுபடுமோ தெரியாது! இந்த ரெண்டை வைத்துக்கொண்டே இவரை "உறையிலிடாதவர்" என்று நாம் சொல்லிக்கொண்டிருக்கிறோம் என்றால், அவர் பாடினது அத்தனையும் நம் கைக்கு வந்திருந்தது என்றால், எப்படி இருக்கும் என்பதை நாம் அறியோம். நமக்குக் கிடைத்த அந்த இரண்டு பிரபந்தங்கள் : நான்முகன் திருவந்தாதி மற்றும் திருச்சந்தவிருத்தம் ஆகியவை ஆகும். 

நான்முகன் திருவந்தாதியின் முதல் பாடலிலேயே "நான்முகனை நாராயணன் படைத்தான்" (பிரமனைப் படைத்தவன் நாராயணன்) என்று சொல்லி, அவனே ஜகத்காரணன் - அதாவது, இந்தப் பிரபஞ்சமானது அவனிடத்தில் இருந்துதான் உருவாகிறது என்பதால், அப்படிப் பட்டவனே முழுமுதற்கடவுள் ஆவான் என்று உணர்த்தி, இதை "சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து" - நாராயணனே பரம்பொருள் என்பதை நான் உணர்ந்தேன்; அதை உங்களுக்கும் அறிவிக்கிறேன்; நீங்களும் நன்கு ஆராய்ந்து, கை நழுவவிடாமல் இதைக் கொள்ளுங்கள்" என்றும் உணர்த்தினார். 

அடுத்து, நான்.திரு.2ஆவது பாடலில், "தேருங்கால் தேவன் ஒருவனே என்றுரைப்பர், ஆரும் அறியார் அவன் பெருமை, ஓரும் பொருள் முடிவும் இத்தனையே" என்று உபதேசித்தார். இதன் அர்த்தம், "ஆராய்ந்து பார்த்தால் பரதேவதை ஒருவனே என்று ஞானிகள் கூறுவார்; யாரும் அவன் பெருமையை (வேதத்தில்) உள்ளபடி யாரும் அறியமாட்டார்கள். வேதங்களில் ஆராயப்படும் அர்த்தத்தின் முடிவும் இவ்வளவே" என்பதாகும். "ஓரும் பொருள்" - வேத வாக்கியங்களின் அர்த்தம். "வேதைஸ்ச ஸர்வை: அஹமேவ வேத்ய:" (கீதை, அத்யாயம் 15, ஸ்லோகம் 15) - "வேதங்கள் எல்லாவற்றாலும் நானே அறியப்படுகிறேன்" - என்று கண்ணன் எம்பெருமான் கீதையில் உரைத்துள்ளான். ஆழ்வார் இதை நேரே தமிழ்படுத்திக் காட்டினார் "ஓரும் பொருள் முடிவும் இத்தனையே" என்று!

"பரம்பொருள்" (முழுமுதற்கடவுள்) தானே என்பதை கீதை முழுவதும் உபதேசித்துள்ளார் கண்ணன் எம்பெருமான். "மாமேகம் சரணம் வ்ரஜ:" - என் ஒருவனையே சரணடை; அதுமட்டுமே உன் துன்பங்களைத் தீர்க்கும் என்று கீதையின் இறுதியில் வெளியிட்டு, தன் பரத்வத்தை (தானே பரம்பொருள் என்னும் தத்துவத்தை) உறுதிபடுத்துகிறார். மேலும் கண்ணன் எம்பெருமான், "யோ மாமேவமஸம்மூடோ ஜாநாதி புருஷோத்தமம், ஸ ஸர்வவித்பஜதி மாம் ஸர்வபாவேந பாரத" (கீதை, அத்.15, ஸ்லோ.19) - எவன் புருஷோத்தமனான என்னைக் கலக்கமில்லாமல் அறிகிறானோ, அவன் என்னை அடைவதற்குரிய வழி அனைத்தையும் அறிந்தவனாகிறான்; என்னை எல்லாப் பிரகாரங்களாலும் (வழிகள்) பக்தி செய்தவனாகிறான்" என்று உரைத்துள்ளார். இப்படி கண்ணன் எம்பெருமான் கீதையில் உரைத்துள்ளதை நன்கு உணர்ந்து, தேர்ந்தால் நல்லது நடக்கும்; அப்படி உணராமல் இருப்பவர்களை மிகவும் தாழ்ந்தவர்கள் என்று சாடுகிறார் இவ்வாழ்வார். "மாயன் அன்று ஓதிய வாக்கு அதனைக் கல்லார் உலகத்தில் எதிலராய் மெய்ஞானம் இல்" (நான்.திரு., 71) - "எம்பெருமான் பாரத யுத்தம் நடந்தபோது அருளிய சரமச்லோகமாகிய வாக்கைக் கற்காதவர்கள் எதுவும் இல்லாதவர்களாய் மெய்யான அறிவும் இல்லாதவர்கள் ஆவர்" என்று சாடியுள்ளார். 

இவ்வாழ்வார் அருளியுள்ள ரெண்டு பிரபந்தங்களாலே, தேறின பொருள் எதுவென்று பார்த்தால், நாராயணனே பரதெய்வம்! மற்றபேரைப் (மற்ற தெய்வங்கள், தேவதைகள்) பற்றி நாம் பேசுவதற்குக்கூட யோக்கியதை கிடையாது! என்பது தெளிவாகும். இவர் அருளிய "திருச்சந்த விருத்தம்" பிரபந்தத்தில் ஒரு பாடலை ஆராய, ஆழ்வார் கூற வந்தது என்ன என்பது இன்னும் நன்கு விளங்கும். 


"காணிலும் உருப்பொலார் செவிக்கினாத கீர்த்தியார்
பேணிலும் வரம்தர மிடுக்கிலாத தேவரை 
ஆணமென்றடைந்து வாழும் ஆதலால் எம்மாதர்காள் 
பேணி நும் பிறப்பெனும் பிணக்கறுக்ககிற்றிரே!" (திருச்.விரு., 69)

மேற் பாசுரத்தின் (பாடல்) சுருக்கமான அர்த்தம்: மற்ற தேவதைகள் காண்பதற்குச் சகியாதவர்களாய் இருக்கிறார்கள்; அவர்கள் சரித்திரமோ கேட்பதற்குச் சகியாமல் உள்ளது; அவர்கள் கேட்கும் வரங்களைக் கொடுக்க முடியாதவர்களாய் இருக்கிறார்கள்; கம்பீரம் அற்றவர்களாய் இருக்கிறார்கள்; இப்படிப் பட்ட பலவீனமான தேவதைகளைத் தேடிப்போய் பற்றி, ஆதரவாகக் கொள்பவர்கள் "குருடர்கள்" (ஆதர்காள் - குருடர்கள்) ஆவார்கள். குருடர்களே! இனியும் அவர்களிடத்தில் சிக்கி உழலாமல், எது பரம்பொருளோ, எவன் காணக்காண அழகாக இருக்கிறானோ, எவனது சரித்திரம் கேட்கக்கேட்க திகட்டாமல் இருக்கிறதோ, எவன் கேட்கும் வரம் எதுவாக இருந்தாலும் கொடுக்கக்கூடியவனோ, எல்லாவற்றுக்கும் மேலாக, எவன் நம் பிறவி என்னும் துயர்க்கடலை வற்றச் செய்து "மோக்ஷம்" என்னும் நற்கதி அளிப்பவனோ, அவனையே பற்றி உய்யுங்கள் (நல்ல கதியை அடையுங்கள்) என்று அறிவுறுத்துகிறார். இது மேலோட்டமான அர்த்தம். இதற்கு "பெரியவாச்சான் பிள்ளை" - இவர் ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள் அத்தனைக்கும் அற்புதமான விளக்க உரை அருளியுள்ளார் (எழுதியுள்ளார்). கண்ணன் எம்பெருமானே, ஆழ்வார்களின் பாடல்களுக்கு விளக்கம் தருவதற்காக "பெரியவாச்சான் பிள்ளை" என்னும் மகானாக அவதரித்தார் என்று வைணவப் பெரியோர்கள் இவரைப் போற்றுகின்றனர். ஏனென்றால், கண்ணன் எம்பெருமானும் ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார்; பெரியவாச்சான் பிள்ளையும் ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார். இனி, இவ்வாசாரியர் (பெரியவாச்சான் பிள்ளை) மேற்பாசுரத்திற்கு அளித்துள்ள விரிவான உரையைக் கீழே அனுபவிப்போம். 

அதாவது, மற்ற தேவர்கள் "பேணிலும் வரம்தர மிடுக்கிலாத தேவர்களே" என்கிறார். மேலும், "காணிலும் உருப்பொலார்" என்கிறார். மற்ற தேவர்களை (தெய்வங்களை) அப்படியே போய் ஆஸ்ரயித்தாலும் (பற்றினாலும்), அவர்கள் பார்ப்பதற்கும் அழகாக இல்லை; பகவான் புண்டரீகாஷன் (தாமரைக் கண்ணன்) - மற்றொருத்தன் (சிவன்) விரூபாக்ஷன். பகவான் சந்தனத்தைத் தன் திருமார்பிலே ஈஷிக்கொண்டவன்; சிவனோ சாம்பலை எடுத்து திருமார்பிலே பூசிக்கொண்டவன். பகவானுக்கு இருப்பதோ சிறந்த கேஸ வாசம்; சிவனுக்கு இருப்பதோ சடைமுடி! பகவான் தலையில் இருப்பதோ உயர்ந்த புஷ்பஹாரம்; சிவன் தலையில் இருப்பதோ வெறும் கங்கா தீர்த்தம்! இவன் ஏறுவது கருடன்மீது; அவன் ஏறுவது ரிஷபமான தாழ்ந்த வலிய பந்தமான ஜந்துவைப் படைத்திருக்கிறான்! இவனுக்கு அடியார்கள் அத்தனைபேரும் நித்யஸுரிகள்; அவனது அடியார்களோ பேய்க்கணங்களும் பூதகணங்களும்! இவன் பிடித்திருப்பதோ சிறந்த சங்க சக்கரங்களை; அவன் பிடித்திருப்பதோ ஒண்மழுவான ஆயுதத்தை! எப்படிப் பார்த்தாலும் இருவருக்கும் ஒருநாளும் ஒத்துவரப்போவது கிடையாது. ஆகவே "காணிலும் உருப்பொலார்" என்று பாடியுள்ளார் ஆழ்வார். சிவனது காட்சி ஒருநாளும் உருப்பெறுவது முடியாது. "செவிக்கினாத கீர்த்தியார்" -செவிக்கு இனிய கீர்த்தி என்றால், பகவானுடைய திரிவிக்கிரம அவதாரமா - வாமன மூர்த்தியாய் உலகளந்தானே - அந்தப் புகழைக் கேட்பதா அல்லது ந்ருசிம்ஹ மூர்த்திக்காகவா? ஒவ்வொன்றும் அடியார்க்காக அடியார்க்காக என்று அவன் புகழ் செவிக்கு இனியதான கீர்த்தியாக இருக்கிறது. "ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய: ஸ்தோத்ரம்" என்பது விஷ்ணு ஸஹஸ்ரநாம அத்தியாயத்திலே தெரிவித்ததார். "ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய:" - "ஸ்தவ்ய:" என்றால் ஸ்தோத்ரம் என்று பண்ணணும்னா, பகவான் ஒருத்தன்தான்; அதற்கு அருகதை என்றும், மற்ற யாருக்கும் அதற்கு அருகதையே கிடையாது என்று அர்த்தம். ஆக, பகவான் ஸ்தவ்யன்! ஆனால், சிவனை என்னவென்று சொல்லி ஸ்தோத்ரம் செய்வது? இவர் தானும் சுடுகாட்டிலே பஸ்பதாரியாய் சுற்றித் திரிகிறார்; தன் தகப்பனார் பிரமனின் தலைகளில் ஒன்றைக் கிள்ளித் தன் கையில் வைத்துக்கொண்டிருந்தவர்; பத்மாசுரனைக் கண்டு பயந்து ஓடிவிட்டார்; வாணாசுரனையும் கண்டு பயந்து ஓடிவிட்டார்; தன் சிஷ்யனிடத்திலேயே அவர் "பிள்ளைக்கறி கொண்டுவா என்று! தலையை அறுத்து தனக்கு யாகயஞ்ஞம் செய்" என்று கூறினார். இவற்றை எல்லாம் பாடினால் அது கீர்த்தி (புகழ், தோத்திரம்) ஆகுமோ? அப்படியே இவற்றைப் பற்றிப் பாடினாலும், அது செவிக்குத்தான் இனியதாக இருக்குமா? இத்தனையும் உங்களுக்குத் தெரிந்திருந்தாலும், மறுபடியும் நீங்கள் அவனைத்தான் விடாமல் பிடித்துக்கொள்வோம் என்று பிடிவாதம் பிடித்தாலும் பிடிக்கலாம்! அவர்களுக்கும் ஆழ்வார் சமாதானம் சொல்லிவிட்டார் - "பேணிலும் வரம்தர மிடுக்கிலாத தேவரை" என்று பாடி! அதாவது, இத்தனையும் தாண்டி நீங்கள் அவனையே ஆஸ்ரயிக்க (பற்ற) நினைத்தாலும், நீங்கள் கேட்கப்போவதைக் கொடுக்கிற சக்தி மட்டும் அவனுக்குக் கிடையாது! அது இருக்குன்னாலும் அவனிடத்தில் போய் நீங்கள் ஆஸ்ரயிப்பதில் அர்த்தமுண்டு. அதுவும் இல்லாதவனைப் போய் ஆஸ்ரயிப்பதில் ஏதானும் இலாபம் உண்டா? அவனே லக்னனாகத் திரிய, அவனிடத்தில் போய் வேஷ்டி தானம் வேணும்னு கேட்டா தருவானா? ஒரு கடையில் நிறைய வேஷ்டிகள் அடுக்கப்பட்டிருக்க, அவனிடத்தில் ஒரு வேஷ்டி தானமாகக் கேட்டால் கேட்டால், அவன் கொடுத்துவிடுவான். ஒருத்தன் இடுப்பில் ஒன்று ஒன்று கொடியில் மாட்டிவைத்திருக்க, அவனிடம் ஒரு வேஷ்டி தானமாகக் கேட்டாலும் ஒன்றைக் கொடுத்துவிடுவான்; இன்னொருத்தன் ஒரே ஒரு வஸ்திரத்தை இடுப்பில் அணிந்து கொண்டிருக்க, அவனிடம் தானம் கேட்டாலும் அவன் அதையும் கழற்றிக் கொடுத்துவிடுவான்! ஆனால், சிவனோ, லக்னனாக, அவனே வேஷ்டி இல்லாதவனாக இருக்க, அவனிடம் போய் வஸ்திர தானம் வேணும்னு கேட்டா, கொடுக்கமுடியலை என்றுமட்டுமில்லை; அவனும் கொடுக்கபோறதில்லை; நமக்கும் கிடைக்கப் போறதில்லை!ஐயோ! என்னிடமே ஒன்றுமில்லை; என்னிடத்தில வந்து கேட்கிறாயே! என்று வருத்தமும் படுவான். இதனால்தான், ஆழ்வார் தெரிவித்தார்: "அப்படி உங்கள் சிவனுக்கு வருத்தம் ஏற்படும்படி நீங்கள் இருக்கவேண்டாம்! நீங்கள் ஒவ்வொரு நாளும் அவனிடத்தில் போய் கேட்கக்கேட்க, கொடுக்கமுடியாத ஸ்ரமத்தாலே அவர் துடிக்கபோறார்! ஏன் வீணாக அவனையும் சிரமப்படுத்திண்டு, உங்களுக்கும் கிடைக்காமால்....! ஆகையால், சிரமப்படவேண்டாம் என்று தவிர்க்கிறார் ஆழ்வார். 

ஏதோ, ஆழ்வார்கள் வேதங்களைத் தமிழ்படுத்திப் பாடிவிட்டுச் சென்றுவிட்டார்கள்; அத்தோடு அவர்கள் வேலை முடிந்துவிட்டது என்று இல்லாமல், அவர்கள் மனதில் இருந்த ஆதங்கம் என்ன என்பதை அணு அணுவாக ஆராய்ந்து, ஏன் இப்படி ஆழ்வார்கள் பாடியுள்ளார்கள் என்பதை அறிய, அவர்களுக்கும் மேலே ஒருபடி ஏறி, அவர்கள் பாடிய பாடல்களுக்கு உரை அளித்துள்ளார் பெரியவாச்சான் பிள்ளை என்னும் பெரியவர். இவர் மட்டும் பிறக்காமல் இருந்திருந்தால், ஆழ்வார்களின் தேனிலும் இனிய பாடல்களின் அர்த்தம் என்ன என்றே தெரியமாமல் போயிருக்கும். வெறுமே ஆழ்வார்கள் பாடலுக்கு உரை அளித்ததோடு நின்றுவிடாமல், வேதங்களிலிருந்தும், இதிகாசங்களிலிருந்தும், புராணங்களிலிருந்தும் ஆழ்வார்களின் பாடல்களுக்கு ஏற்ப என்னென்ன மேற்கோள்கள் (உதாரணங்கள்) காட்டவேண்டுமோ காட்டித்தான், உரைநூலை அருளிச்செய்துள்ளார் பெரியவாச்சான் பிள்ளை. மேலே உள்ள பாடலுக்கு வேத அர்த்த ரீதியாகவும் இவர் மேற்கோள்கள் காட்டியுள்ளார். அதனைக் கடந்த பகுதிகளில் ஒன்றில் (பகுதி 8) “திவுக்ரீடாயாந் தாது; || திவு விஜிஹீஷாந் தாது; || திவு வியவஹாரந்: தாது; || திவு த்யுதீந்: தாது; || திவு ஸ்துதிந்:தாது; || திவு மோதாந்: தாது; || திவு மதாந்: தாது; || திவு காந்தீந்:தாது; || திவு கதீந்:தாது.” என்பதன் மூலம் அனுபவித்துள்ளோம். இந்த வேத வாக்கியங்களின் விரிவான அர்த்தங்களையும், மேலே உள்ள "காணிலும் உருப்பொலார்" பாசுரத்தின் விரிவான அர்த்தங்களையும் ஒன்றுசேர்த்து அனுபவித்தால்தான் ஒரு பாடலுக்கான உரை (வியாக்யானம், explanations) எவ்வளவு அழகாக அமைந்துள்ளது என்பது புரியும். 

ஏன் உரைநூல் எழுதுபவர் இவ்வளவு சிரமப்படவேண்டும் என்றால், அது நம் பயனுக்காக என்று புரிந்துகொள்ளவேண்டும். ஏனென்றால், ஆழ்வார்கள் எம்பெருமானைப் பற்றிய மெய்ஞானத்தைப் பெற்றபின், இதுபோதும் என்று இருந்திருக்கலாம்; ஆனால், நாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டு, பகவான் அருளிய ஞானத்தைக் கொண்டு, நாமும் அவற்றை அறிந்து, இன்பம் பெறவேண்டும் என்பதாலேயே பகவானின் திருக்குணங்களைப் போற்றிப்பாடி, அவற்றை நாமும் அறியும்படிபரப்பினார்கள். மேலும், ஆழ்வார்கள் பாடிய பாடலின் அர்த்தங்களை நன்கு புரிந்துகொண்டார்கள் முன்பு வாழ்ந்திருந்த வைணவப் பெரியோர்கள். சரி; அவர்களுக்குப் புரிந்து அவர்கள் நன்மை பெற்றார்கள் என்று அதை அப்படியே விட்டுவிடாமல், அந்த உயர்ந்த, மங்களகரமான பாடல்களின் அர்த்தங்கள் எல்லோரையும் சென்று அடைந்து, எல்லோரும் நன்மை பெறவேண்டும் என்று அவர்கள் நல்லெண்ணம் கொண்டார்கள்; அதனால், ஆழ்வார்களின் பாடல்களுக்கு மேலே சொன்னபடி 
வேதங்களிலிருந்தும், இதிகாசங்களிலிருந்தும், புராணங்களிலிருந்தும் உதாரணங்களைக் காட்டி, உரைநூல் (Explanations அண்ட் Commentaries) அருளினார்கள். வைணவப் பெரியோர்களால், அவை அனைத்தும் இன்றும் நன்று பாதுகாக்கப்பட்டு, அனுதினமும் பல இடங்களில் சொற்பொழிவுகளின் மூலமும் பரப்பபடுகின்றன என்றால், ஒருபோதும் இவ்வுலகத்தார் உண்மையை அறியாமல் சீரழிந்துவிடக்கூடாது என்ற நன்னோக்கே ஆகும். இனி, ஆழ்வாரின் வரலாற்றுக்கு வருவோம். 



ஏற்கனவே தெரிவித்தபடி, தெய்வம்னு ஒருத்தன் இருக்கிறான் என்றால், அவன் "கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்தனே! (இராமபிரான்) (நான்.திரு.53) - அவன் ஒருத்தன்தான் தெய்வமே தவிர, மற்ற அனைவரும் பொல்லாத தேவரே" என்றும், அதனால் "திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு" - எவனுக்குத் திருமகள் சம்மந்தம் இருக்கிறதோ அவனே பரதெய்வம்; அப்படிப்பட்ட சம்மந்தம் இல்லாதவர்கள் தெய்வம் அல்லர்; ஆகையால், அவர்களை வணங்குவதில் எந்தப் பயனும் இல்லை என்று அற்புதமாகத் தன் பாசுரத்தில் காட்டினார் திருமழிசை ஆழ்வார் . இவருக்கும் பரமசிவனாருக்கும் நடந்த வாக்குவாத யுத்தத்தை ஏற்கனவே அனுபவித்துள்ளோம். அந்த யுத்தத்தின் முடிவில்தான் பரமசிவன் இவர் பக்தியை மெச்சி, இவருக்கு "பக்திஸாரர்" என்ற திருநாமத்தையும் கொடுத்தார் பரமசிவனார்.

அதன்பின்,திருமழிசைப்பிரான் திருக்குடந்தையிலே பல ஆண்டுகள் யோகத்தில் அமர்ந்து உலகத்தோர் இனிதுடன் வாழ அருளி, திருநாட்டுக்கு எழுந்தருளினார் (எம்பெருமான் திருவடியில் முக்தியை அடைந்தார்) திருமழிசை ஆழ்வார்.

திருமழிசைப்பிரான் அவதரித்தது திருமழிசையில். பரமபத கதியை (முக்தி) அடைந்தது திருக்குடந்தை என்னும் திவ்யதேசத்தில். ஆழ்வாரது "திருவரசு" (முக்தி அடைந்த இடம்)திருக்குடந்தையில் உள்ளது. ஆழ்வாரை ஸ்தூலமாக திருமழிசையிலும் மற்ற தேசத்துக் கோயில்களிலும் ஸேவிக்கலாம்; சூஷ்ம ரூபமாகவும் அவரை, திருக்குடந்தையில் உள்ள அவரது திருவரஸில் ஸேவிக்கலாம். ஸேவித்து, ஆழ்வார் பெற்றிருந்த ஞான வைராக்யத்தை எளிதில் அடையலாம்.



"தையில் மகம் இன்று தாரணியீர் ஏற்றம் இந்தத்
தையில் மகத்திற்குச் சாற்றுகின்றேன் - துய்யமதி 
பெற்ற மழிசைப்பிரான் பிறந்த நாளென்று 
நற்றவர்கள் கொண்டாடும் நாள்"

என்று திருமழிசைப்பிரானின் அவதாரத்தைப் போற்றிப் பாடியுள்ளார் மணவாள மாமுனிகள் (உபதேச இரத்தினமாலை, பா.12). ஸ்ரீமன் நாராயணனே பரதெய்வம் என்ற தூய்மையான அறிவைப் பெற்றிருந்ததனால், "துய்யமதி பெற்ற" மழிசைப்பிரான் என்று போற்றியுள்ளார் மாமுனிகள். இப்படித் தூய்மையான மதியுடன் திகழ்ந்த திருமழிசைப்பிரானின் திருவடிகளிலேயே தன்னைப் புகுத்திக்கொண்டவர், இந்த உலகோர் உய்ய பகவானால் அருளப்பட்ட ஆசார்யரான பகவத் இராமானுசர்.


"ஆழ்வார்கள் வாழி அருளிச்செயல் வாழி" என்றும், "ஏழ்பாரும் உய்ய அவர்கள் உரைத்தவைகள்தாம் வாழி" என்றும் - அதாவது, அவர்கள் அருளிச்செய்த திவ்யப்பிரபந்தங்களுக்கு அற்புதமான உரைகள் (வியாக்யானம் - Explanations) இட்ட ஆசார்யர்களையும் வணங்குகிறேன் என்று சொல்வதற்குத் துளியும் அருகதை இல்லாதவனாய் அடியேன் இருந்தாலும்,அவர்கள் அனுக்ரஹத்தைப் பெறும் பாக்கியம் திருமழிசை ஆழ்வார் அருளியுள்ளபடி இன்று இல்லாவிட்டாலும் சரி; நாளை இல்லாவிட்டாலும் சரி; அல்லது இன்னும் சிறிது நாட்கள் கழிந்தாலும் அது கிடைக்காமல் போகாது என்ற நம்பிக்கையுடன் இருந்து, ஆன்மீக எழுத்துப் பணியைத் தொடரும் பாக்கியத்தையாவது அவர்கள் அருளுவார்கள் என்று இருக்கக் கடவேன்.

இத்துடன் திருமழிசை ஆழ்வாரின் வைபவம் (வாழ்க்கை வரலாறு) நிறைவடைகிறது. இவ்வாழ்வாரைப் போற்றும் "வாழித் திருநாமத்தை" அனுபவிப்போம்: 



அன்புடன் அந்தாதி தொண்ணூற்றாறுரைத்தான் வாழியே 
அழகாரும் திருமழிசை அமர்ந்த பிரான் வாழியே 
இன்பமிகு தையில் மகத்திங்குத்திதான் வாழியே 
எழில் சந்தவிருத்தம் நூற்றிருபதீந்தான் வாழியே 
முன்புகத்தில் வந்துதித்த முனிவனார் வாழியே 
முழுப்பொன்னி எதிர்பெருக்கில் மிதந்தசொல்லோன் வாழியே 
நன்புவியில் நாலாயிரத்தெழுநூற்றான் வாழியே 
நங்கள் பத்திசாரர் இருநற்பதங்கள் வாழியே. 
திருமழிசைப்பிரான் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

No comments: