"திருவாய்மொழியில் 'உத்' என்னும் திருநாமம்"
திருவாய்மொழியை அறிந்தார் "பிறந்தார் உயர்ந்தே" என்று பலன் சொல்லித் தலைக்கட்டினார் (நிறைவு செய்தார்) ஆழ்வார்.திருவாய்மொழிப் பிரபந்தமானது "உயர்வற உயர்நலம் உடையவன் எவனவன்" என்று தொடங்குகிறது அதாவது "உ"காரத்தில் தொடங்கி, "உயர்ந்தே" என்று "த"காரத்தில் முடிகிறது. முதல் பாசுரத்தில் "உயர்வற, மயர்வற, அயர்வறும்" என்று உ, ம. அ" என்ற பிரணவ (ஓம்)எழுத்துக்களைச் சிறிது மாற்றி, அதாவது, "அ, உ, ம" என்பது பிரணவ எழுத்து - ஆனால் ஆழ்வார் "உ, ம. அ" என்று அமைத்துள்ளார். மேலும், திருவாய்மொழியின் முதற் பாசுரத்தின் முதல் சொல்லின்
("உயர்வற") முதல் எழுத்தான "உ" மற்றும் கடைசி பாசுரத்தின் (1102வது பாசுரம்) கடைசி சொல்லின் ("உயர்ந்தே")கடைசி எழுத்தான "த" ஆகிய இரண்டையும் சேர்த்தால் "உத்" என்ற சொல் கிடைக்கும் அதாவது, சாந்த்யோகத்தில் சூரியன் நடுவில் உள்ள பரமபுருஷனான எம்பெருமானைச் சொல்லி, அவன் புண்டரீகாக்ஷன்; பொன்போல்அழகியவன்; அவன் "உத்" என்று பெயர் பெற்றவன் என்று சொல்லப்பட்டுள்ளது "உத்" என்ற திருநாமத்தின் அர்த்தமானது, எம்பெருமான் தோஷமற்றவன்; பிறர் தோஷங்களைத் துடைக்க வல்லவன் என்பதாகும்.
திருவாய்மொழியைக் கற்பவர்கள் ஸம்ஸாரத்திலே இருந்தாலும், நித்யசூரிகளோடு சமமாக இருப்பார். ஸர்வேஸ்வரனுடைய அவதாரம் போன்றதே இதைக்
கற்பவர்கள் பிறப்பும் இருக்கும் என்பாராம் நம்பிள்ளை என்னும் வைணவ ஆசார்யர்.
ஸ்ரீமன் நாராயணனே பரதத்வம். சரீர ஆத்மபாவமே சித்தாந்தம். பிராட்டியை (ஸ்ரீமஹாலக்ஷ்மி - பகவானின் துணைவியார்) முன்னிட்டுக் கொண்டு , எம்பெருமான் திருவடிகளையே உபாயமாக, அதாவது,, அடையவேண்டிய நிர்பந்தத்தை
எல்லோரும் கொள்ளவேண்டும். பிராட்டியும் அவனுமான சேர்த்தியைப் பெறுவதற்கு அவனுடைய அவனது நிர்ஹேதுக கருணையே வழியாகும். நிர்ஹேதுக கருணை என்றால் பகவான் நமக்கு
அருள்புரிவதற்கு எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல், நம்மிடம் எதுவும் இல்லாதபோதும், நமக்காக இறங்கி, அவன் மேன்மைகளைப் பாராமல்
நம் அளவுக்கு இரங்கி நமக்காகக் காரியம் செய்யும் விஷயமாகும். அங்கு வழுவிலா (குறைவில்லாமல்) அடிமை (தொண்டு) செய்கையே ப்ராப்யம் (பேறு) ஆகும். "அயர்வறும் அமரர்கள் அதிபதி" (1.1.1) என்று தொடங்கி, "அடியார் குழாங்களுடன் கூடுவது என்று கொலோ" (2.3.10) என்று வேண்டி, "பயிலுஞ்சுடரொளி (3.7), நெடுமாற்கடிமை (8.10)" பதிகங்களில் அடியார் (பகவானுக்குத் தொண்டர்களாய்
இருப்பவர்கள்) பெருமைகளை விரித்துரைத்து, "அந்தமில் பேரின்பத்து அடியரோடு இருந்தமை" (10.9.11) (முடிவற்ற பேரின்பம்) என்று முடிப்பதால், பகவானுக்கு ஆட்பட்டிருப்பதன் எல்லை நிலம் என்பது, அவன் அடியார்களுக்கு ஆட்பட்டிருத்தல்" என்று காட்டி அருளுகிறார்
பகவானிடம் தன்னை அர்ப்பணித்து, சரணாகதர் ஆனவருக்குப் பொழுதுபோக்கு திருவாய்மொழி என்னும் பிரபந்தம் ஆகும். இதன் இனிமை அமுதத்தோடு ஒக்கும். "தொண்டர்க்கு அமுதுண்ணச் சொல்மாலைகள் சொன்னேன்" என்றும், ""ஆயிரத்துள் இப்பத்தும் கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே" (10.6.11) என்றும் ஆழ்வார் தாமே அருளிச்செய்துள்ளார். ஆகையால், திருவாய்மொழியைப் பாடிப் பரவுவதே பரமபுருஷார்த்தம் (உயர்ந்த
நிலை).
இதுவே திருவாய்மொழியின் சீரிய பொருள் (உயர்ந்த அர்த்தம்) ஆகும்.
வேத சாரமான திருவாய்மொழியின் சிறப்பம்சங்கள் கடலளவு
ஆகும். அவற்றை சுருங்க, மிகக் குறைந்த அளவில்தான் அனுபவித்திருக்கிறோம். ஆழ்வார்களில் தலைவரான நம்மாழ்வாரின் வாழ்க்கைச் சரிதம் இத்துடன் மிகக் குறைந்த அளவில் அனுபவிக்கப்பட்டு நிறைவு செய்யப் படுகிறது. "மாதவன் பொற்பாதுகையாய் வளர்ந்தருள்வோன்
வாழியே" என்பது இவ்வாழ்வாருக்குப் பாடப்பட்ட மங்களாசாசனம் (பல்லாண்டு, துதி) ஆகும். மாதவன் - பகவான். பொற்பாதுகை - பகவானது திருவடி நிலை. பகவானது திருவடி நிலையாய் இருந்து நம் எல்லோருக்கும் நல்ல ஞானத்தை
அருளுபவர் நம்மாழ்வார். கோயில்களிலும், பகவான் வெளியில் புறப்பாடு கண்டருளும்போதும் நம் தலையில் வைக்கப்படுவதே
"ஸ்ரீசடாரி" ஆகும் அந்த ஸ்ரீசடாரியே நம்மாழ்வார் ஆவார். "நம்
ஆழ்வார்" என்று திருவரங்கநாதனால் உகக்கப்பட்டவர் நம்மாழ்வார். ஆழ்வாரின் அருள் இல்லையேல், பகவானின் அருள் இல்லை. பகவானின் திருவடியாக இருப்பவர் நம்மாழ்வார். ஆக, நம் துயர் அறுக்கும் சுடர் அடி நம்மாழ்வாரே என்று கொண்டு, மேன்மை அடைவோம்.
நம்மாழ்வார்
திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
No comments:
Post a Comment