Tirumazhisai Azhwar Vaibhavam - 5



ஆழ்வார் வாழ்வில் நடந்த சில முக்கிய விஷயங்கள்
சுக்திஹாரன் என்பவன் ஆகாயத்தில் திரிகிறவன். இவன் நிறைய யோகங்கள் எல்லாம் செய்து அஷ்டமஹாஸித்தியைப் பெற்றிருந்தான். அதன் சக்தியாலேயே இவன் ஆகாயத்தில் புலியை வாகனமாக் கொண்டு திரிந்து வந்தான். இப்படி ஒருநாள் அவன் ஆகாயத்தில் திரிந்துகொண்டிருந்தபோது, கீழே திருமழிசை ஆழ்வார் தான் அணியும் ஒரு கந்தலான ஆடையைத் தைத்துக் கொண்டிருந்தார்.


இராமாயணத்தில் ஹனுமான் இக்கரையிலிருந்து அக்கரைக்குச் செல்ல கால்மீது ஆகாய மார்கத்தில் செல்லும்போது, சில தீய சக்திகள் அவரைச் செல்லவிடாமல் தடுக்க முயன்றன. ஆனால், இங்கே ஒரு தீய சக்தியின் நிழல் ஆழ்வார் மீது பட, அது தானும் மேலே நகர முடியாமல் தவித்தது. இதைப் பார்த்த சுக்திஹாரன் கீழே இறங்கி, யார் இந்தப் புலியை நகர விடாமல் தடுக்கிறார்கள் என்று அறிவதற்காகக் கீழே இறங்கினான். யோகா நிலையில் திருமழிசை ஆழ்வார் கந்தல் ஆடையுடன் இருக்க, "ஓ! இவர்தான் புலியை நகர விடாமல் தடுக்கிறார் என்று அறிந்து, ஆழ்வாரைப் பார்த்து, "நீர் என்ன இந்தக் கந்தல் ஆடையை அணிந்துகொண்டிருக்கிரீர்? நான் உமக்குச் சிறந்த பட்டு ஆடைகளைத் தருகிறேன்" என்று சொல்லி, தான் கற்றிருந்த யோகா சித்தியாலே, உயர்ந்த பீதாம்பரத்தை வரவழைத்து ஆழ்வாரிடம் கொடுக்க, ஆழ்வார், "இந்தப் பீதாம்பரமெல்லாம் நமக்கு வேண்டாம்! ஏதோ கந்தல் என்று நீ பார்த்து சொன்னாயே! அந்தக் கந்தலே நமக்குப் பீதாம்பரமாகவும், சிறந்த பொன்மணிகள் பொருந்திய கவசமாகவும் உள்ளது" என்று சொல்லி, தன்னுடைய திருமேனியிலே காட்டி, அவன் கொடுத்த பீதாம்பரத்தை வாங்கிக் கீழே போட்டு, இந்தப் பீதாம்பரத்தை அணியமாட்டோம் என்று கூறினார். அடுத்து, அவன் தன்னுடைய கழுத்தில் இருந்த ஒரு சாதாரண மாலையைக் கழற்றி, அதை ஒரு இரத்தினமாலையாக மாற்றி, இதையாவது அணிந்துகொள்ளுங்கள் என்று ஆழ்வாரிடம் கொடுக்க, ஆழ்வார் உடனே, தான் தனது கழுத்தில் அணிந்திருந்த ஒரு துளஸி மாலையைத் தொட, அந்தத் துளஸி மாலை இரத்த்தினங்கள் பொருந்திய மாலையாக மாற, அவன் கொடுத்த இரத்தினமாளையையும் வாங்கிக் கீழே போட்டார். மேலும், திருமழிசை ஆழ்வாரும் அவனிடம், இனி நீ கொடுத்த பீதாம்பரத்தையோ, நான் உருவாக்கின இரத்தின ஹாரத்தையோ அணியமாட்டேன். இந்தக் கந்தல் ஆடையே போதும் என்று கூறினார்.



இந்த சம்பவத்தைப் பற்றி, பிள்ளை லோகாசார்யார் என்னும் வைணவ மகாசார்யர் "கந்தல் கழிந்தால் பகவானை அறியலாம்" என்று கூறினார். எந்தக் கந்தல் கழியவேண்டும்? நான் எனது என்னும் அகங்கார மமகாரங்கள் என்ற கந்தல்கள் கிழிந்தால், ஈஸ்வரனை அடையலாம் என்று, மனதில் இருக்கும் கந்தல்கள் கழியவேண்டுமே தவிர, உடையில் இருக்கும் கந்தல்கள் கழியவேண்டும் என்ற அவசியமே இல்லை என்று தெரிவித்தார். அந்தக் கந்தலைக் கிழித்தார் திருமழிசை ஆழ்வார். மீண்டும் யோகத்தில் ஈடுபட்டார்.


மறுபடியும் ஒருத்தன் வந்து சேர்ந்தான்! கொங்கணசித்தன் என்பவன். அவன் ஆழ்வாரைப் பற்றி சில விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறவன் ஆவான். அப்படிக் கேள்விப்பட்டது சரியா என்று அறிய, ஆழ்வாரை சோதித்துப் பார்க்க விரும்பினான் - பசுமாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்ப்பதுபோல! அவன் ஒரு ரஸ குளிகனைத் தன் கையில் வைத்திருந்தான். அந்த ரஸ குளிகை என்பது எதைத் தொட்டாலும் ஸ்வர்ணமாக மாற்றிவிடும். ஆகையால், அதை ஆழ்வாரிடம் கொடுத்து, ஆழ்வாரே! நீர் ஒன்றுமில்லாமல் கஷ்டப்படுகிறீர்; இதை வைத்துக் கொள்ளும்; இது எல்லாவற்றையும்பொன்னாக மாற்றிக் கொடுக்கும் என்று சொல்ல ஆழ்வார் தன்னுடைய திருமேனியில் (உடம்பில்) இருந்த புழுதியை எடுத்து அவனிடம் கொடுத்து, "நீ இதைக் கொண்டுபோய் எவ்வளவு ஸ்வர்ணமாக வேண்டுமானாலும் மாற்றிக்கொள்" என்று கூறினார். ஆழ்வார் திருமேனி ஏன் புழுதி சேர இருந்தது? அவர் யோகத்திலே, கண்ணனையே தியானம் செய்துகொண்டிருந்ததால், அந்தச் சிந்தனையிலேயே காலாழ்ந்து, நெஞ்சழிந்து, தீர்த்தமாடவேண்டும் என்று நினைப்புமின்றி இருந்ததால், புழுதிபடிந்திருந்த அவர் திருமேனி பொன்மேனியைப்போல் ஜொலித்துக் கொண்டிருந்தது. இப்படி அவர் தன் திருமேனியிலிருந்த புழுதியை அவனிடம் கொடுத்து ,"இதை எடுத்துக்கொண்டுபோய் எவ்வளவு ஸ்வர்ணம் வேண்டுமோ அவ்வளவும் பெற்றுக்கொள்" என்று கூற, அவனும் அதை சோதித்துப் பார்க்க, அவர் கொடுத்த புழுதியைக் கொண்டு எதைத் தொட்டாலும் அது ஸ்வர்ணமாக மாறியது! இதைக்கண்டு ஆச்சரியப்பட்ட அவன் உடனே ஆழ்வாரிடம், "இப்படி ஒரு சக்தி உம்மிடம் இருக்க, நீர் ஏன் இப்படி இருக்கிறீர்?" என்று ஆழ்வாரிடம்கேட்க, ஆழ்வார்அதற்கு, "நான் இப்படி இருப்பதால்தான் இந்த ஸித்தி இருக்கிறது! இப்படி இல்லையென்றால், ஸித்தி இருக்கவே இருக்காது" என்று கூறினார். ஆக, ஆழ்வார் அத்தனை ஸித்திகளைப் பெற்றிருந்தாலும், அவர் நினைத்தது என்னவென்றால் "ஸித்தோபாயம் ஒருத்தனேதவிர, ஸாத்யோபாயம் நம்மிடம் இல்லை" என்பதே.



"ஸித்தோபாயம்" என்றால், பகவானை நேரே சரணடைவது. சரணாகதி என்று இதற்குப் பெயர். அப்படி நீயே கதி என்று அவனைப் பற்ற, அவன் நம் புண்ணிய பாவங்களைக் கழித்து, நற்கதியான மோக்ஷத்தை அளிக்கிறான். "உபாயம் என்றால் வழி. நாம் அவனிடம் சரணாகதி செய்ய, அவன் சித்தமாய் இருந்து நம்மைக் காக்கிறான். இதுவே, "ஸித்தோபாயம்" ஆகும்.


"சாத்யோபாயம்" என்றால், மற்ற உபாயங்களின் (வழிமுறைகள்) மூலம் அவனைப் பற்றுவது. மற்ற வழிமுறைகள் என்றால், கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் போன்ற தர்மங்கள் ஏதாவது ஒன்றை மேற்கொண்டு, அதன் பலனாக, அவன் அருளைப் பெறுவதாகும். ஆனால், இப்படிப்பட்ட யோகங்களை மேற்கொள்ளும்போது, நிறைய தடைகள் வந்து சேரும்; அதனால், அவற்றின் மூலம் அவனை அடைவது என்பது சற்று தள்ளிப்போகும்; தள்ளிப்போகும் என்றால், பல பிறவிகளைப் பெற்று அவனை அடையும் விதத்தில் தள்ளிப்போகும்.


ஆகையால், "சாத்யோபாயம்" மூலம் அவனைப் பற்றுவதைக் காட்டிலும், "ஸித்தோபாயம்" மூலம் அதாவது பகவான் ஒருத்தன் கிருஷ்ணன், தர்மம், சனாதனம் அவ்வளவுதான் என்று அவனை நேரே பற்றி, சரணடைதலே எளிதில் அவன் அருளைப் பெற்றுக் கொடுக்கும். இதனை, "ஸித்தபுண்ணியம்" என்று கூறுவார்கள். "ஸித்தபுண்ணியம்" என்றால் பகவான் நம்மிடத்தில் விருப்பம் கொண்டு, அவனை நாம்அடையும்படி அருளுவது. பகவான் நம்மிடத்தில் விருப்பம் கொள்ளவேண்டும் என்றால், நாம் எப்படி இருக்கவேண்டும் என்று சொல்லித் தெரியவேண்டியது இல்லை! ஆண்டாள் ரொம்ப அழகாக இதைத் தமிழ்படுத்திக் காட்டினாள் - "உந்தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்"என்று! புண்ணியத்தை உடையோமென்றால், ஸித்தபுண்ணியமாக பகவானை அடையலாமே தவிர, நாம் பெற்றுள்ள யோகஸித்தியையும் அஷ்டமஹாஸித்தியையும் கொண்டு ஒருநாளும் பகவானை அடையமுடியாது என்பது. பிறகு ஆழ்வார் தான் பெற்றிருந்த இந்த யோகசித்திகளையெல்லம் துறந்தார்


அத்தனையும் ஜெயித்தாலும் ஆழ்வாருக்கு உள்ளூர ஒரு வருத்தம் இருந்தது. நாம் பாட்டுக்கு பகவானை அனுபவித்துக் கொண்டு ஒரு இடத்தில் இருக்கணும்னு ஆசைப்பட்டால், சுக்திஹாரன், கொங்கணசித்தன் போன்றோர் வந்து தங்கள் ப்ரபாவங்களைக் (சக்திகளைக்) காட்ட முயல, பதிலுக்குத் தாமும் அவர்களிடத்தில் நம் ப்ரபாவங்களைக் காட்ட வேண்டியுள்ளதே என்று வருத்தம் கொண்டார்; இப்படி பயனற்ற சக்திகளைக் காட்டுவதிலே துளிகூட அவருக்கு விருப்பமில்லை. ஆகையாலே யோகஸித்தி அனைத்தையும் துறந்தார். ஆகவே, தான் இருந்த இடத்தையும் துறந்தார்.


ஏகாந்தமான ஒரு இடத்துக்குப் போய் நாமும் தவம் செய்வோம் என்று எண்ணி, தான் அவதரித்த திருமழிசையைத் தேர்ந்தெடுத்து, அங்கு இருந்துகொண்டு தவம் செய்யத் தொடங்கினார். இங்கே திருமழிசையில் ஆழ்வாருக்குத் திருமண்காப்பு (நாமக்கட்டி) கிடைக்காமல் போக, திருவேங்கடத்து எம்பெருமானான பகவான் ஸ்ரீநிவாசன் (அலர்மேல்மங்கை உறை மார்பன்), ஆழ்வாருக்கு முன்னே தோன்றி, "இங்கே திருமண்காப்பைத் தேடவேண்டாம்; நேரே திருவெக்காவுக்குச் சென்று, அங்கே திருமண்காப்பு தேடித் பெற்றுக் கொள்ளும்" என்று கூறி மறைந்தான். உடனே, ஆழ்வாரும் காஞ்சிபுரத்தில் உள்ள "திருவெக்கா" என்ற திவ்யதேசத்திற்கு வர, அந்த இடத்தில் திருமண்காப்பு கிடைக்க, அங்கேயே 700 ஆண்டுகள் இருந்தார்.


அப்படி அங்கே (திருவெக்காவில்) ஆழ்வார் இருந்தபோது, ஒரு நிகழ்ச்சி நடந்தது. அது, இவர் சொன்னபடி அந்த திவ்யதேசத்து எம்பெருமான் நடந்ததே! சொன்னபடி நடந்தான் என்றால், "அந்த ஊரைவிட்டே நடந்தான்" என்பதே. சொன்னபடி ஊரைவிட்டு நடந்தவன், ஆழ்வார் சொன்னதால், மீண்டும் அந்த ஊருக்குள் திரும்பியும் வந்தான். "யதோர்தகாரி" - "சொன்னவண்ணம் செய்த பெருமான்" என்றே அந்த ஊர் (திருவெக்கா) பெருமாள் அழைக்கப்படுகிறார்.



திருமழிசை ஆழ்வார் சொன்னவண்ணம் செய்த பெருமாள்


இப்படி திருவெக்காவில் இருந்துகொண்டு யோகம்செய்துவர, அங்கே வந்து சேர்ந்தாள் ஒருத்தி. இவருக்குக்கைங்கர்யங்கள் (தொண்டு) புரியவேண்டும் என்பதற்காக. அவள் திருமணம் செய்துகொள்ளாதவள்; வயதானவளாக இருந்தாலும், ஆழ்வார் தவம் செய்துவந்த திருமுற்றத்தை (இடம்) தினமும் மெழுகிக் கோலமிட்டு அழகுபடுத்தி வந்தாள். "கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடுவினை களையாலாமே" என்று திருவாய்மொழியில் (10-2-8) நம்மாழ்வார்பாடியுள்ளார் ஒரு திவ்யதேசத்திற்குச் சென்று அங்கு சுத்தம்செய்தால், பெருக்கும்போது எப்படி குப்பைகள் விலகுமோ, அதைப்போல், நம்முடைய மனதில் இருக்கும் குப்பைகளும் விலகி, எம்பெருமானின் அருளைப்பெறலாம் என்று திருவனந்தபுரம் திவ்யதேசத்தைப் பாடும்போது தெரிவித்து, மேலும் "நடமினோ நமர்களுள்ளீர் நாம் உமக்கறியச் சொன்னோம்" (நம்மாழ்வார், திருவாய்மொழி, 10-2-9) (கடுவினை களைய, திருவனந்தபுர திவ்யதேசத்தை நோக்கி நடங்கோள்) என்று பாடியுள்ளதைக் கேட்ட ஆளவந்தார் என்னும் ஆசார்யர், உடனே தானும் திருவனந்தபுரத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார் என்பது ஆளவந்தார் சரித்திரத்தில் உள்ளது.


இப்படி அந்த மூதாட்டி மெழுகிச் சுத்தம் செய்துகொண்டுவர, ஆழ்வாரின் அனுக்ராஹத்தாலே (அருளாலே) இளமையான தோற்றத்தை மீண்டும் பெற்றாள். அவள் இளமை அழகில் மயங்கி, அந்த தேசத்து ராஜா அவளைத் திருமணம் செய்துகொண்டான். ஆனால், அவள் என்றும் இளமைப் பொலிவுடன் இருக்க, ராஜா நாளுக்கு நாள் முதுமை அடைந்து கொண்டே போக, அவன் அவளிடம் "நீ மட்டும் எப்படி இளமையோடு இருக்கிறாய்? நான் மட்டும் கிழவனாகிக் கொண்டே போகிறேனே" என்று கேட்க, அவள் அதற்கு பாகவத உத்தமரான ஆழ்வாரது அனுக்ராஹம்தான் இதற்குக் காரணமே தவிர, என்னுடைய முயற்சி ஒன்றுமில்லை என்று கூறினாள். உடனே ராஜா தானும் ஆழ்வாரிடம் தனக்காகப் பேசி, தனக்கும் இளமையைப் பெற்றுத்தரவேண்டும் என்றுகேட்க, “அவள் அது சாத்தியமில்லை” என்று கூறிவிட்டாள்.



மேலும் ராஜா தன் மந்திரிகளை அழைத்து ஆழ்வாரை அணுகுவது எப்படி என்று விசாரிக்க, அவர்கள் ராஜாவிடம், "நேரே போய் ஆழ்வாரைப் பார்த்தால் ஏதும் கிடைக்காது! எனவே அவருக்குக் கணிகண்ணன் என்று ஒரு சீடன் இருக்கிறார். அவர் மூலமாக ஆழ்வாரை அணுகுவது எளிது என்று தெரிவிக்க, அவனும், கணிகண்ணனை அழைத்துவரும்படி தெரிவித்தான்.

கணிகண்ணன் யார்?


ஆழ்வார் சிறுவயதிலே, அதாவது, குழந்தையாக இருக்கும்போது, வளர்ப்புப் பெற்றோரான பிரம்பருப்பவன் வீட்டில் அவன் மனைவி பங்கயச்செல்வி கொடுத்த முலைப்பாலை அருந்தாமல், ஸ்ரீஜகன்னாதப் பெருமான் ஊட்டிய ஞானப்பாலை உண்டதாலே வளர்ந்துவந்தார் என்று பார்த்தோம் அல்லவா? அப்படி அவர் வளர்ந்துவரும்போது, அந்த ஊர் (திருமழிசை) வாசியான ஒரு வயதானவர் இருந்தார். அவர், நான்காம் வருணத்தில் தோன்றியவர், குழந்தை இல்லாதவர், ஞானவானாய் இருப்பவர். அவர் ஒருநாள், பால் அருந்தாமல் வளரும் குழந்தையான ஆழ்வாரைப் பற்றி கேள்விப்பட்டு, தானும் பாலை நன்கு காய்ச்சி, தன் மனைவியோடு வந்து, குழந்தையான ஆழ்வாரை மிகவும் வேண்டி, தாங்கள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள்; ஆகையால், இந்தப் பாலை உண்டு எங்களுக்குக் குழந்தை பாக்கியம் ஏற்படும்படி செய்யவேண்டும் என்று பிரார்த்திக்க (வேண்டிக்கொள்ள), ஆழ்வாரும் அவர்கள் வேண்டுதலை அங்கீகரித்து, அந்தப் பாலைச் சிறிது தான் உண்டு, மிச்சத்தை அவர்களிடத்தில் "போனகம் செய்தசேடமாக" (தான் அமுது செய்து, மிச்சத்தைப் பிறர் உண்ணக் கொடுப்பது) கொடுத்து, “இதை அருந்துங்கள்; உங்களுக்கு நல்ல புத்திரன் உண்டாவான் என்று அனுக்ரஹித்தார். அந்தப் பாலை அருந்தி, அவர்கள் மீண்டும் இளமை பெற்று, நல்லநாளில் ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்தனர். அவனுக்குக் "கணிகண்ணன்" என்று பெயரிட்டு எல்லாக் கலைகளையும் கற்பித்தனர்.


கணிகண்ணனும் ஆழ்வாரின் மகிமையை அறிந்து, அவருக்குத் தொண்டுசெய்யும் சீடனானான். அவருக்கே தொண்டுபுரிந்தான்! "எப்படி சத்ருக்கணனுக்குப் பரதனைத்தவிர வேறு யாரையும் தெரியாதோ, ஆண்டாளுக்குப் பெரியாழ்வாரைத்தவிர, வேறுயாரையும் தெரியாதோ, "தேவுமற்றறியேன் குருகூர் நம்பிபாவின் இன்னிசை திரிவனே" என்று பாடியுள்ள மதுரகவிஆழ்வாருக்கு நம்மாழ்வாரைத் தவிர வேறு யாரையும் தெரியாதோ," அதைப்போலவே, கனிகண்ணனும், திருமழிசை ஆழ்வாரைத் தவிர வேறு ஒருவரையும் அறியாது, அவரே தெய்வம் என்று இருந்து, அவருக்குக் கைங்கர்யங்கள் (தொண்டு) புரிந்து வந்தான். சாஸ்திர தர்மப்படி யோகிகள் பிக்ஷை எடுத்தே ஜீவிக்கவேண்டும் (வாழவேண்டும்) என்பதன்படி, யோகியான ஆழ்வாரின் சீடனாக இருந்ததால், அவனும் பிக்ஷை எடுத்தே உண்டு வந்தான்.


இப்படி அவன் பிக்ஷை எடுக்க அந்த ராஜாவின் அரண்மனைக்கு வர, தன்னைப் பற்றி ஒரு பாடல் ஆழ்வாரைப் பாடவைத்தால், தான் முதுமை நீங்கி இளமை அடைந்துவிடுவேன் என்றுகூற, கணிகண்ணன் ராஜாவிடம், "எம் ஆசார்யர் (குருவான ஆழ்வார்) ஒருநாளும் மானிடம் பாடார் (மனிதரைப் பற்றிப் பாடமாட்டார்) என்றுகூற, என்னசெய்வது என்று தெரியாமல் ராஜாவும் திகைக்க, மந்திரிகள், "சரி பரவாயில்லை;ஆழ்வார் பாடவேண்டாம்! ராஜாவைப் பற்றி நீர் ஒரு பாடல் பாடும் என்று சொல்ல, அவனும் இந்த நாக்கொண்டு நானும் மானிடம் பாடேன்; நான் ஒரே ஒருவரைப் பற்றித்தான் பாடுவேன்; அவர் என் ஆசார்யரான திருமழிசை ஆழ்வார் ஒருவர் மட்டுமே என்றான். இருந்தாலும், ராஜா அவனை நிர்ப்பந்திக்க, வேண்டுமென்று ஒரு பாட்டிசைத்தார் கணிகண்ணன். இதுபோல, ஒருமுறை, சிவனின் பரம பக்தனான கிருமிகண்ட சோழன் கூரத்தாழ்வான் என்னும் வைணவ ஆசாரியரை (குரு) அழைத்து, "சிவாத் பரதரம் நாஸ்தி", அதாவது, சிவனுக்கு மேற்பட்ட தெய்வம் இல்லை என்று எழுதித் தரும்படி வற்புறுத்தி, அப்படிச் செய்யாவிட்டால் அவர் கண்களைப் பிடுங்கிவிடுவேன் என்று கட்டளை இட்டான். ஆனால், கூரத்தாழ்வான் சகல வேத சாஸ்திரங்களையும் நன்கு கற்றுத் தேர்ந்தவர். பகவத் ராமானுஜரே தஞ்சம் என்று அவருக்குக் கைங்கர்யங்கள் செய்துவந்தவர். கிருமிகண்ட சோழன் இப்படி கட்டளை இட்டும், உண்மை என்றும் மாறாது - அதாவதுவிஷ்ணுவிற்கு மேற்பட்ட தெய்வம் இல்லை என்று வேதங்கள் காட்டியபடி, வேண்டுமென்றே, அரசனைக் கேலி செய்வதாய் "சிவாது பரதரம் நாஸ்தி நத்ரோணமஸ்தி தத்பரம்" (சிவம் என்பதற்குக் குறுணி என்று ஒருபொருள்; அதனால், அதைக் காட்டிலும் பெரியது பதக்கு - அதாவது, சிவனைக் காட்டிலும் விஷ்ணுவே பெரியவர் என்று பொருள்) என்று! அதைப்போல, கணிகண்ணனும் அந்த ஊர் பெருமானைப் பற்றியே ஒரு பாசுரத்தை எழுதிக் கொடுத்தார். இதைக் கேட்டு, என்னைப் பற்றிப்பாடச்சொன்னால், என் ஊரைப் பற்றிப் பாடுகிறாயே என்று மிக்க கோபமுற்று அவனைத் தேசத்தை விட்டுப் போகும்படி ஆணையிட்டான் ராஜா.


இதைக்கேட்ட கணிகண்ணன் அதிவேகமாகத் திருமழிசை ஆழ்வார் முன் வந்து நின்றார். நடந்ததைக்கூறி, “அரசனின் ஆணைப்படி நான் ஊரைவிட்டுப் போக உம்மிடம் உத்தரவு பெற வந்துள்ளேன்” என்று கூறினார். இப்படி வேகமாக வந்து கணிகண்ணன் ஆழ்வார் முன்நின்றதை "குருபரம்பரை"யில் ஸ்ரீராமாயணத்திலிருந்தும், பாகவத புராணத்திலிருந்தும், ஆழ்வார்கள் ஸ்ரீஸுக்திகளிலிருந்தும் நிறைய வ்யாக்யானங்கள் (Explanations) காட்டப்பட்டுள்ளன.

அவை அனைத்தையும் அனுபவிக்க இங்கு முடியாது. இருந்தாலும், ஒரே ஒரு உதாரணம் பார்ப்போம்:


விபீஷணன் எப்படி இன்னொருத்தனின் மனைவி, அதுவும் பகவான் இராமன் என்று அறிந்தும், அவனது தேவியான சீதாபிராட்டியை சிறைவைத்த தனது சகோதரனான இராவணனை வெறுத்து, , இனி நமக்கு ’இராமபிரானே கதி” என்று நினைத்த அந்த நிமிடமே விருட்டென்று தன் ஊரான இலங்கை நகரை விட்டு வெளிவந்து, வேகமாக இராமனை வந்து அடைந்தானோ, அதைப்போல, கணிகண்ணன், அரசன் இட்ட கட்டளையை நிறைவேற்ற, ஊரைவிட்டு வெளியேற உத்தரவு கேட்டு வேகமாக ஆழ்வாரிடம் வந்து நின்றார்.


நடந்ததை அறிந்த ஆழ்வார், தன் சிஷ்யன் இல்லாத இடத்தில் தனக்கும் ஒன்றுமில்லை என்று தானும் அவருடன் செல்லமுற்பட்டு, சற்றே திருவெக்கா எம்பெருமானைத் திரும்பிப்பார்க்க, “நாங்கள் இல்லாத இடத்தில் உமக்கு மட்டும் என்ன வேலை?” என்பதை,


"கணிகண்ணன் போகின்றான்; காமருபூங்கச்சி மணிவண்ணா! துணிவுடைய செந்நாப் புலவனும்போகின்றேன்; நீயும்உன்பைந்நாகப்பாய்சுருட்டிக்கொள்"என்றுபாடி, பெருமானையும் தங்களுடன் எழுந்தருளும்படி கூற, பெருமானும் ஆழ்வாரின் வாக்குக்கு இசைந்து (வார்த்தைக்குக் கட்டுப்பட்டு) அவர்களுடன் புறப்பட்டான். இப்படி, அவர்கள் புறப்பட்டதை ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தின் முக்கிய நூலான "குரு பரம்பரை"யில் (ஆசார்ய பரம்பரை) , வனவாசம் செய்ய இராமன், சீதை மற்றும் லக்ஷ்மணன் சென்றதை, பிரணவ மந்திரமான “ஓம்”காரமே கால்கொண்டு நடந்ததுபோல இருந்தது அங்கு, "அ"காரமான இராமன் முன்னேபோக, "உ"காரமான சீதை நடுவேசெல்ல, "ம"காரமான லக்ஷ்மணன் பின்னே சென்றான் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது . அதை மேற்கோள்காட்டி,,

"அ" "உ" "ம" என்ற மூன்று சப்தங்கள் சேர்ந்த எழுத்துக்களே பிரணவமந்திரமான "ஓம்" என்று அழைக்கப்படுகிறது. "அ"காரம்என்றால் உபாயம் (அடையப்போகும்இடம்- அதாவது, பெருமான்); "உ"காரம் என்றால் புருஷகாரம் (அடைவிப்பது – ஆசாரியன், குரு); "ம"காரம் என்றால் ஜீவாத்மா - அதாவது, ஆசார்யர் மூலமாக பகவானை அடைய முயலவேண்டியவர்கள்.


இங்கோ, “ஓம்” காரம் தலைகீழாக நடந்துசெல்கிறது! அதாவது, "ம"காரமான கணிகண்ணன் (சிஷ்யன்) முன்னே செல்ல,"உ"காரமான ஆழ்வார் (ஆசாரியன்,) நடுவில் செல்ல, "அ"காரமான எம்பெருமான் பின்னே சென்றான் என்று காட்டப்பட்டுள்ளது.


அவர்கள் மூவரும் அந்த நகரைத் துறந்து சென்றபின், அந்தநகரமே பொலிவிழந்து, இருள்சூழ்ந்து கிடந்தது. இதற்கான காரணம் அறிந்து, மன்னனும் அமைச்சர்களும் கணிகண்ணனைத் தேடிக்கொண்டு சென்று அவனிடம் தங்களை மன்னிக்கும்படி வேண்டிச் சரணடைந்தார்கள். கணிகண்ணன், ஆசார்யரான ஆழ்வார் உடன் இருக்க, தான் அவர்களை மன்னிப்பது குற்றமாகும் என்று எண்ணி, ஆழ்வாரிடம் அவர்களை மன்னிக்குமாறு வேண்ட, ஆழ்வாரும் அவர்களை மன்னித்தார். அரசனும் அமைச்சர்களும் மகிழ்ந்து, அவர்களைத் தங்கள் நாட்டுக்கு அழைக்க. ஆழ்வார்,


"கணிகண்ணன் போக்கொழிந்தான்; காமருபூங்கச்சி மணிவண்ணா! துணிவுடைய செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன்; நீயும் உன்பைந்நாகப்பாய் விரித்துக்கொள்" என்று எம்பெருமானையும் அழைத்துக்கொண்டு மீண்டும் காஞ்சி திருவெக்கா தேசத்தை அடைந்தார்கள்.


பின்னர், அந்தநகரம் (திருவெக்கா) பழைய பொலிவை (ஒளியை) அடைந்தது. ஆனால், இவர்களுடன் செல்லுமுன் பெருமான் சயனித்திருந்த திசைவேறு, இவர்களுடன் திரும்பிவந்தபின் சயனித்துக் கொண்ட திசை வேறு! அதாவது, முன்னே திருமுடியை (தலை) வைத்திருந்த திசையில் திருவடியையும் (கால்), திருவடி வைத்திருந்த திசையில் திருமுடியையும் வைத்து, திசைமாற்றி எழுந்தருளினார். இப்படி, ஆழ்வார் சொன்னதைக் கேட்டு, அவர் உடன் சென்றும், அவர் மீண்டும் அழைத்தபோது உடன்வந்தும் அருளிச்செய்ததால், திருவெக்கா எம்பெருமானுக்கு,"சொன்னவண்ணம் செய்தபெருமான்" (யதோர்த்தகாரி) என்ற திருநாமம் (பெயர்)வழங்கலாயிற்று. இப்படி, கணிகண்ணன், ஆழ்வார் மற்றும் எம்பெருமான் ஆகியோர் கச்சி (காஞ்சி) தேசத்தைவிட்டு புறப்பட்டு, ஒரு இரவு தங்கியிருந்த இடம் "ஓரிரவு இருக்கை" என்று அழைக்கப்படுகிறது..

No comments: