Tirumazhisai Azhwar Vaibhavam - 1


ஸ்ரீமதே ராமாநுஜாய நம:   ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திருமழிசை ஆழ்வார் வைபவம் - 1

"மகாயாம் மகரே மாஸே சக்ராம்ஸம் பார்கவோத்பவம் |
மஹீசாரபுராதீசம் பக்திஸாரம் அஹம் பஜே ||"

என்பது இவ்வாழ்வாரின் அவதாரத்தைப் பற்றி உரைக்கும் ஒரு எளிமையான ஸ்லோகம் ஆகும்.  இதன் விளக்கமாவது,

"மக (மகம்) நக்ஷத்திரத்தில், தை மாதத்தில், விஷ்ணுவானவர் தன் திருக்கையில் ஏந்தியுள்ள திவ்ய ஆயுதமான சக்கரத்தின் அம்சமாக, பார்கவ மகரிஷியின் புத்திரராக, மஹீசாரபுரம் என்னும் திவ்யக்ஷேத்திரத்தில் அவதரித்த "பக்திஸாரரை" எனது மனமார தியானித்து வணங்குகிறேன்" என்பதாகும்.

இவ்வாழ்வார் அவதரித்தது "மஹீசாரம்" என்னும் இடமாகும்.  "மஹீசாரம்" என்னும் இடமானது  தமிழில்  திருமழிசை என்று  அழைக்கப்படுகிறது.  ஆக, இவர் பிறந்த ஊரைக் கொண்டே இவர், "திருமழிசை ஆழ்வார்" என்று அழைக்கப்படுகிறார்.   

"மஹீசாரம்" என்பதன் அர்த்தம் : "மஹீ" என்றால் இந்த பூமி மண்டலத்தைக் குறிக்கும்.  "சாரம்" என்றால் இந்தப் பூமி மண்டலத்திற்கே சாரமாக (அடித்தளமாக) இருப்பது என்று அர்த்தம்.  

மேலும், இவர் "பக்திசாரர்" என்ற திருநாமத்தால் (பெயர்) அழைக்கப்படுகிறார்.  இதன் அர்த்தம், "பக்தி" என்ற சொல்லுக்கு சாரமாக இருப்பவர் என்பதாகும்.  இவருக்கு "பக்திசாரர்" என்ற திருநாமத்தைக் கொடுத்தவர், பரமசிவனார் ஆவார்.  அதற்கான விளக்கத்தைப் பின்னர் அனுபவிப்போம்.  

"தையில் மகம் இன்று தாரணியீர் ஏற்றம் இந்தத் 
தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன் - துய்யமதி 
பெற்ற மழிசைப்பிரான் பிறந்த நாள் என்று 
நற்றவர்கள் கொண்டாடும் நாள்" 

என்று இவரது அவதாரத்தைப் போற்றி வைணவ ஆசார்யரான (குரு) ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் தனது "உபதேசரத்தினமாலை" என்னும் உபப் பிரபந்தத்தில் பாடியுள்ளார்.  

இதன் அர்த்தம், இவ்வாழ்வார் அவதரித்ததால் தை மாதத்திற்கு ஏற்றம்; மகம் நக்ஷத்திரத்திற்கு ஏற்றம்; இந்த பூமி மண்டலத்திற்கே ஏற்றம் என்பதாகும்.  "துய்யமதி பெற்ற மழிசைப்பிரான்" - "துய்யமதி" - தூய, தெளிவான ஞானம், அறிவு.  எதைப்பற்றித்  தூய அறிவு என்றால், விஷ்ணுவே பரதெய்வம் - அதாவது, எல்லாவற்றுக்கும் மேலான தெய்வம் விஷுவே ஆவார் என்பதைத் தெளிவாக அறிந்த உயர்ந்த ஞானத்தைப் பெற்றவர் என்று அர்த்தம்.  மேலும், "நற்றவர்கள் கொண்டாடும் நாள்" என்றால், இவர்  அவதரித்த (பிறந்த) நன்னாளை தவசீலர்கள், யோகிகள், முனிவர்கள், தேவர்கள் என்று எல்லோரும் கொண்டாடுகிறார்கள். அப்படி அனைவரும் கொண்டாடும் நாளாக, தை மாதம் மகம் நக்ஷத்திரம் இருக்கின்றது என்பதே மேலே உள்ள பாடலின் தெளிவான அர்த்தமாகும்.  

No comments: