Tirumazhisai Azhwar Vaibhavam - 2

திருமழிசை ஆழ்வார் அவதரித்த ஊரான திருமழிசை என்னும் திவ்ய க்ஷேத்திரத்தின் மகிமை (பெருமை) என்ன என்பதைச் சற்று அறிவோம்: 

"உலகும் மழிசையும் உள்ளுணர்ந்து தம்மில் 
புலவர் புகழ்கோலால் தூக்க - உலகுதன்னை 
வைத்தெடுத்த பக்கத்தும் மாநீர் மழிசையே 
வைத்தெடுத்த பக்கம் வலிது" 

என்று திருமழிசை என்னும் ஊரானது போற்றப்படுகிறது.  அதாவது, உலகங்களில் உள்ள அத்தனை இடங்களை ஒரு தட்டிலும், திருமழிசை என்னும் ஊரை ஒரு தட்டிலும் வைத்து, புகழ் என்னும் தராசுக் கோலில் நிறுத்துப் பார்க்க, உலகின் மற்ற இடங்கள் வைக்கப்பட்டிருந்த தட்டைக் காட்டிலும், திருமழிசை என்னும் திவ்யக்ஷேத்ரம் வைக்கப்பட்டிருந்த தட்டானது கனத்து நின்றதாம்.  அத்தனை பெருமை வாய்ந்த ஊர் திருமழிசை என்று போற்றப்படுகிறது. 

அப்படி என்ன பெருமை இந்தத் திருமழிசை க்ஷேத்ரத்திற்கு என்பதை அறிவோம்.  

மஹரிஷி பார்கவர் என்பவர் தவங்கள் புரிந்து வாழ்ந்து வந்தவர்.  எல்லா ரிஷிகளும் வசிஷ்டரும், அத்ரியும், பிருகு முனிவரும் மற்றும் பார்கவரும் மஹரிஷியும் சேர்ந்து பிரம்மதேவனிடம் சென்று, தாங்கள் ஏகாந்தமாக தவம் செய்யவேண்டும்; அப்படி, தனித்து அமைதியாய் இருக்கும் ஒரு இடத்தைத் தெரிவிக்குமாறு வேண்டி நிற்க, பிரம்மதேவன் அவர்களிடம், மேற்சொன்னபடி, உலகங்களை ஒரு தட்டிலும், திருமழிசையை ஒரு தட்டிலும் வைத்து நிறுத்து, அதில் திருமழிசை வைக்கப்பட்டிருந்த தட்டு ஓங்கி நிற்க, அவர்கள் தவம் செய்வதற்கு உகந்த மட்டும் உயர்ந்த இடம் திருமழிசையே என்று அறிவித்தார்.  அவர்களும் பிரம்மதேவன் கூறியபடி, இந்தத் திருமழிசை என்னும் இடத்துக்கு வந்து தவம் புரியத் தொடங்கினர்.  "மஹீசாரபுரம்" என்று பிரமனால் அடையாளம் காட்டப்பட்ட இடமே தமிழில் திருமழிசை என்று வழங்கப்படுகிறது.  இந்த பூமி மண்டலத்திற்கே சாரமாக இருப்பதால், மஹீசாரபுரம் என்று அழைக்கப்படுகிறது.   திருமழிசையில் கோயில் கொண்டுள்ள பெருமாளின் திருநாமம் (பெயர்) "ஸ்ரீ ஜகந்நாதர்" என்பதாகும்.  ஜெகத்திற்கு நாதர் (தலைவர்) "ஜகந்நாதர்".  


பார்கவ மகரிஷியும் இந்த இடத்திலே ஸ்ரீ ஜகந்நாதப் பெருமாளின் அருளுடன் தவம் செய்துவந்தார்.  அப்போது, அவரது தவத்தின் வலிமையைப் பொறுக்காமல், வழக்கம்போல், இந்திரன் அப்ஸர ஸ்திரீகளை அழைத்து, அவர் தவத்தைக் கலைத்து, அவரைக் காமத்திற்கு வசப்படவைக்கவேண்டும் என்று சொல்ல, ரம்பை, ஊர்வசி மற்றும் மேனகை ஆகியோர் ஒருவர்பின் ஒருவராக வந்து அவரிடம் தங்கள் அழகைக் காட்டி மயக்க முயற்சி செய்ய, அவர் எதற்கும் இசையாமல் இருந்தார்.  அவர்களும் பார்கவ மகரிஷியைத் தங்களால் மயக்கி ஆட்கொள்ளமுடியாமல் இருந்தார்கள்.  ஆனால், அவர்களிலும் ஒரு சாமர்த்தியக்காரி இருந்தாள்; அவள் பெயர் கனகாங்கி என்பதாகும்.  அவள் எப்படியோ பார்கவ மகரிஷியை மயக்கி, அவருடன் உயர்ந்த தாம்பத்தியத்தை நடத்தி, ஒரு குழந்தையையும் ஈன்றெடுத்தாள்.  12 மாதங்கள் கருவில் அந்தக் குழந்தையைச் சுமந்து பெற்றாள்/  "ததச்ய துவாதஸே மாஸே சைத்ரே நாவமிகே திதௌ" என்று இராமயாணத்திலே வால்மீகி பகவான் இராமபிரானின் திரு அவதாரத்தைப் பற்றி தெரிவித்துள்ளார்.  அதாவது, 12 மாதங்கள் கௌஸலை இராமபிரானைத் தன் கருவில் சுமந்திருந்தாள்.  ஆக, கனகாங்கியும் இந்தக் குழந்தையைத் தன் கருவில் 12 மாதங்கள் சுமந்திருந்தாள்.  மேலும், தேவகி கண்ணனைத் தன் கருவில் சுமந்ததும் 12 மாதங்கள்தான்.  ஆக, கனகாங்கி பெற்றெடுத்த குழந்தை, இராமனைப் போல், கண்ணனைப் போல், ஒரு தாயின் கர்ப்பத்தில் 12 மாதங்கள் வாசம் செய்த குழந்தை ஆகும்.  அந்தக் குழந்தையே, திருமழிசை ஆழ்வார் ஆவார்.  ஆனால், இவர் எப்படிப் பிறந்தார்? என்றால், வழக்கமாகப் பிறக்கும் மனித உருவில் இருக்கும் அங்கங்கள் எதுவும் இல்லாமல், ஒரு பிண்ட ரூபமாய் வந்து இந்த பூமியில் விழுந்தார், கனகாங்கியின் கருவிலிருந்து!   இப்படி, எந்த உறுப்புகளும் இன்றி பிண்ட ரூபமாய் இருந்த ஒரு உருவத்தைக் கண்டு மிகவும் வெறுப்பு கொண்டாள் கனகாங்கி.  அதனால், பிண்டமாகப் பிறந்த குழந்தையை ஒரு புதரிலே வீசிவிட்டாள் அவள்.  இதைப் பார்த்த பார்கவரும் மிகுந்த வருத்தம் கொண்டு, இவளைப் போய் நாம் மனைவியாகக் கொண்டோமே என்று மனம் வருந்தி, பழையபடி ஞானம் கொண்டு, தவம் செய்யச் சென்றார்.

No comments: