"நம்மாழ்வார்" வரலாறு -
பகுதி 1 (வியாழன், 12.03.2015)
"வ்ருஷபேது விஸாகாயாம் குருகாபுரிகாரிஜம்
பான்ட்யதேஸே கலேராதௌ ஸடாரிம்னைந்யயம்பஜே."
என்பது இவ்வாழ்வார் அவதாரம் செய்த நாள், நக்ஷத்திரம், ஊர் ஆகியவற்றைக் குறிக்கும் ஸ்லோகம்
ஆகும்.
ஸ்ரீயப்பதியான (திருமகள் கேள்வன்) எம்பெருமானால் மயர்வற
மதிநலம் அருளப்பெற்றவர் நம்மாழ்வார். இவ்வாழ்வார் அவதரித்தது
"திருக்குருகூர்" என்னும் திவ்யதேசத்தில். இவர் அவதரித்த தினம் வைகாசி மாதம் விசாகம் என்னும்
திருநக்ஷத்திர நன்னாளாகும். வழிவழியாக திருமால் அடியார்களின் குடியில் (வம்சம் வந்த காரியார் என்பவர்க்கும்,திருவண்பரிசாரத்தைச் சேர்ந்த உடையநங்கையார் என்ற பெண்மணிக்கும் கலியுகம் தொடங்கிய 43ஆம் நாளானபிரமாதி ஆண்டு வைகாசித் திங்கள் பௌர்ணமி கூடிய வெள்ளிக்கிழமையில் அவதரித்தார். இவர் அவதரித்த இடம் தற்காலம் ஆழ்வாரின் தோற்றத்தாலேயே சிறப்புற்று "ஆழ்வார் திருநகரி" என்று அழைக்கப்படும் திருக்குருகூர் என்ற வைணவ திருத்தலமாகும். திருமாலது அம்சமும் திருமால் மணியான ஸ்ரீகௌஸ்துபத்தின் அம்சமும், திருமாலின் சேனை முதல்வரான ஸ்ரீ விஷ்வக்ஸேனரது அம்சமும் பொருந்தியவராக ஆழ்வார் கருதப்படுகிறார். திருமாலைப் பிரியாது அடிமை செய்யும் அரவரசரான திருவனந்தாழ்வான் (ஆதிசேஷன்) திருமால் நம்மாழ்வாராக
அவதரிக்கும் முன்பே, திருநகரியில் (திருக்குருகூர்) ஒரு புளியமரமாக, பின் ஆழ்வாருக்கு வெயில் மழை படாதவாறு வந்து தோன்றினான். அதாவது, திருக்குறுங்குடி என்னும் திவ்யதேசத்தில்
எழுந்தருளியுள்ள எம்பெருமானே நம்மாழ்வாராக அவதரித்தார்
என்று சாத்திரங்கள் உரைக்கின்றன. இதை பகவான் தானும் உரைத்ததாக நிறைய
புராணங்களில் மேற்கோள்கள் உள்ளன. அவற்றை அடுத்த பகுதியில் அனுபவிப்போம். எம்பெருமானுக்கு நிழலாக இருப்பவர் ஆதிசேஷன். ஆக, நம்மாழ்வாராக அவதரித்த அந்த
எம்பெருமானுக்கு நிழல் தருபவராய்
தானும் ஒரு புளியமரமாக இருந்துவந்தார். இன்றும், இந்தப் புளியமரமானனது ஆழ்வார் அவதரித்த திவ்யதேசமான திருக்குருகூரில்
உள்ள கோயிலுள் உள்ளது.
இவ்வாழ்வார் அவதரித்ததைக் குறிக்கும் வடமொழி (sanskrit) ஸ்லோகத்தை மேலே பார்த்தோம். இவரது அவதாரத்தைப் போற்றி, மணவாள மாமுனிகள்
என்னும் ஆசாரியர் தனது "உபதேசரத்தினமாலை" என்னும் நூலில்,
"ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தைப்
பாரோர் அறியப் பகர்கின்றேன் - சீராரும்
வேதம் தமிழ்செய்த மெய்யன் எழில்குருகை
நாதன் அவதரித்த நாள்"
என்று பாடியுள்ளார்.
ஆழ்வார்கள் அனைவருமே எம்பெருமானால் மயர்வற மதிநலம்
அருளப்பெற்றவர்கள். மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள் என்றால், மனதினுள் சூழ்ந்துள்ள அஞ்ஞானம் முற்றிலும் விலகி, உண்மையான தத்துவமான எம்பெருமானைப் பற்றிய முதிர்ந்த ஞானத்தைப் பெற்றவர்கள் என்று பொருள். இதனை அருளுபவனும்
எம்பெருமானே.
இப்படி எம்பெருமானால் ஞானம் பெற்ற ஆழ்வார்கள் பாடிய பாடல்களே
"திவ்யப்ரபந்தம்" என்று உலகோர்களால் கொண்டாடப்படுகிறது. பத்து ஆழ்வார்களும், ஆசார்ய அபிமானத்தால் ஆழ்வார்களின் வரிசையிலேயே சேர்க்கப்பட்ட மதுரகவி ஆழ்வார் மற்றும் ஆண்டாள் நாச்சியார் ஆகிய இருவரும், மொத்தமாக இந்த பன்னிரண்டு பேரும் சேர்ந்து எம்பெருமானுக்குச் செய்த மங்களாசாசனங்களே திவ்யப்ரபந்தம்
ஆகும். இது நாலாயிரம் பாடல்களைக் கொண்டதாகும்.
இனி நம்மாழ்வாரின் அவதாரத்தைப் பற்றிச் சற்று
அறிவோம்:
நம்மாழ்வார் இவ்வுலகில் அவதரித்த போது, சாதாரண குழந்தையைப் போல் இல்லாமல், உலக இயற்கைக்கு மாறாக அழுதல், பால் உண்ணுதல் முதலிய செய்கைகள் அற்று இருந்தார். கருப்பையில் அறியாமை தீண்டாத கருவை சடமென்ற காற்று வெளிப்பட்டவுடன் தீண்டி, அறியாமைக்குள்ளாக்கி அழுதல், அரற்றுதல் முதலிய செய்கைகளைத் தூண்டுகிறது என்பர். அதனை "ஹூம்" என்று எதிர்த்து, ஆழ்வாராகி, குழவி ஓட்டியதால், "கோபர்" என்று திருநாமம்ஆயிற்று. சடகோபர் உலக இயற்கைக்கு மாறாக உள்ளதைக் கண்டு வருந்தாமல், அவருடைய தாய், தந்தையர் தெய்வக் குழந்தையாகக் கருதி, தோன்றிய பன்னிரண்டாவது நாளில் திருக்குருகூரில் கோயில் கொண்டிருக்கும் பொலிந்துநின்ற பிரானைத் தொழவைத்து, உலக நடைமுறைக்கு மாறாக இருந்ததால், "மாறன்" என்று பெயரிட்டு,அருகிலிருந்த திருப்புளி ஆழ்வார் என்று அழைக்கப்படும் புளியமரத்தின் அடியில் தொட்டிலிட்டு வளர்க்கத்தொடங்கினர்.
இவ்வாறு பதினாறு ஆண்டுகள் கண் விழியாமல், வாய் திறக்காமல் வளரந்த சடகோபரைக் கண்டுபெற்றோர் மனம் கலங்கினர் இதற்கிடையில் திருமாலின் சேனைத் தலைவர், அப்பெருமானின் ஆணைக்கு இணங்கமற்றவர் எவரும் அறியாமல், சடகோபர்க்குத் திருவாழி திருச்சங்குகள் கொண்டு இலச்சினையிட்டு (திருமாலின் அம்சங்களான சங்கு சக்கரம்
ஆகிய சின்னங்களைப் பொறித்து) வைணவ மந்திரங்களை உபதேசித்து அருளினார்.
No comments:
Post a Comment