ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
மதுரகவி ஆழ்வார் வைபவம்
“மேஷே சித்ராஸமுத்பூதம் பாண்ட்யதே ஸேகணாம்ஸ கம் \
ஸ்ரீபராங்குஸ ஸத்பக்தம் மதுரகவிமாஸ்ரயே ||”
பாண்டிய நாட்டில் திருக்குருகூர் என்கிற நம்மாழ்வார் அவதரித்த திருநகரிக்கு அருகிலுள்ள திருக்கோளூரில் துவாபர யுகத்தில், ஈசுவர ஆண்டில், சித்திரைத் திங்கள் சித்திரை நட்சத்திரத்தில், திருமாலின் கணங்களின் ஈசரான குமுதரது அம்சமும், கருடனது அம்சமும் சேர்ந்து ஒருவர் தோன்றினார். பராங்குசரான நம்மாழ்வார் அவதரிப்பதன் முன்னம் தோன்றிய இவர் வேதங்களையும், சாத்திரங்களையும் கற்றுத்தேர்ந்து செவிக்கினிய செஞ்சொற்கவி பாடும் ஆற்றல் பெற்று மதுரகவி என்று பெயர் பெற்றார்.
ஆழ்வார்கள் பதின்மர், அதாவது பத்து பேர் - பொய்கையார், பூதத்தார், பேயார், திருமழிசையார், நம்மாழ்வார், குலசேகரர், பெரியாழ்வார், தொண்டரடிப்பொடிகள், திருப்பாணர் மற்றும் திருமங்கை மன்னன் ஆகியோர். இவர்களுடன், ஆசார்ய பக்தியால் உயர்ந்த மதுரகவி ஆழ்வாரும், ஸ்ரீ ஆண்டாளும் சேர்த்து ஆழ்வார்கள் பன்னிருவர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
தமது "கண்ணிநுண் சிறுத்தாம்பு" என்னும் பிரபந்தத்தில், நம்மாழ்வாரையே தன் ஆசார்யனாகவும் தெய்வமாகவும் கொண்டு போற்றிப் பாடியுள்ளார். இந்தப் பிரபந்தத்தில், பகவானின் வைபவத்தில் முதல் அடியில் மட்டும் பாடி, அடுத்த அடியிலும் மற்ற பத்து பாடல்களிலும் நம்மாழ்வாரே தனக்கு தெய்வம் என்பதை பரம பக்தியுடன் வெளிப்படுத்திப் பாடியுள்ளார். "தேவுமற்றறியேன் குருகூர் நம்பி" என்பது இவரது வாக்கு. அதாவது, தனக்கு நம்மாழ்வாரைத் தவிர தெய்வம் வேறு ஒன்றும் இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளார். நம்மாழ்வாரும் வைணவ திருவிலச்சினைகளை (எம்பெருமானின் சங்கு சக்கரம் ஆகியவற்றைத் தோள்களில் பொறித்துக் கொள்ளுதல்) மதுரகவிகளுக்கு அளித்து, தெய்வத்தமிழ் நூல்களை அருளத்தொடங்கி மதுரகவிக்கு உபதேசித்து அருளினார். நம்மாழ்வாருக்கு உள்ளம், உரை, செயல்களால் (மனம், வாக்கு, கருமம்) தொண்டுபூண்டு, அவர் நூல்களைப் பரப்பி, பரமத் தொண்டாற்றியவர் இவர்.
மதுரகவிகளின் அவதாரச்சிறப்பையும், அவர் அருளிச்செய்த பிரபந்தத்தையும் பற்றி மணவாள மாமுனிகள் தன் "உபதேச இரத்தினமாலை"யில் போற்றிப் பாடியுள்ளதை அனுபவிப்போம்:
"ஏரார் மதுரகவி இவ்வுலகில் வந்துதித்த
சீராரும் சித்திரையில் சித்திரைநாள் - பாருலகில்
மற்றுள்ள ஆழ்வார்கள் வந்துதித்த நாள்களிலும்
உற்றது எமக்கு என்று நெஞ்சே கூறு" (பாசுரம் 25)
விளக்கம்: சிறப்பு பொருந்திய மதுரகவிகள் இந்நிலத்தில் வந்து தோன்றப்பெற்ற சிறப்புடைய சித்திரையில் சித்திரை நாள் எப்படிப்பட்டது என்றால், பூலோகத்தில் பொய்கையார் முதலான ஆழ்வார்கள் வந்து தோன்றிய நாள்களைக் காட்டிலும் நமக்கு மிகவும் வழிகாட்டியாக இருக்கக் கூடியது என்று மனமே! பக்தி பண்ணுவாயாக!.
மேற்பாசுரத்திலோ, மாமுனிகள் மதுரகவிகளின் அவதாரத்தைப் பற்றி போற்றுகையில், மற்ற ஆழ்வார்கள் அவதாரத்தைக் காட்டிலும் சிறப்பானது என்று கூறியுள்ளார். மதுரகவிகள் தஞ்சமாகக் கொண்டது "நம்மாழ்வாரின்" திருவடிகளையே. நம்மாழ்வாரின் திருவடி நிலைகளாக (ஸ்ரீசடகோபம் - சடாரி) மதுரகவி ஆழ்வாரும், இராமநுசரும் கருதப்படுகிறார்கள். ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தின் சிறப்பே "ஆசார்யனே உபாயம்" (வழி) என்று இருப்பதாகும். அதை அனைவரும் உணரும் வண்ணம் உலகுக்கு எடுத்துரைத்தவர் மதுரகவிகள். இதனாலேயே, மாமுனிகள் இவரது அவதாரத்தை மிகவும் உயர்ந்ததாகக் கருதிப் பாடியுள்ளார். மேலும், மதுரகவிகள் அருளிய "கண்ணிநுண் சிறுத்தாம்பு" பிரபந்தத்தைப் போற்றும் வண்ணம்,
"வாய்த்த திருமந்திரத்தின் மத்திமமாம் பதம்போல்
சீர்த்த மதுரகவி செய்கலையை - ஆர்த்தபுகழ்
ஆரியர்கள் தாங்கள் அருளிச்செயல் நடுவே
சேர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து"
என்று பாடியுள்ளார் மாமுனிகள் (உப.இர.மாலை, 26).
விளக்கம் : நமக்கு ஏற்றதான அஷ்டாக்ஷர மஹாமந்திரத்தில், இடையில் உள்ளதான "நம:" பதம் போன்றதாக மதுரகவிகள் செய்தருளிய திவ்யப்ரபந்தத்தை, நிறைந்த புகழுடையவர்களான பூர்வாசார்யர்கள் நாலாயிர திவ்யப்ரபந்தங்களோடே, சேர்த்து அருளினார்கள். எதனால் என்றால், அது அவர் தாம் அருளிய "கண்ணிநுண் சிறுத்தாம்பு" என்னும் ப்ரபந்தத்தில் வெளிப்படுத்திய ஆசார்ய பக்தியே ஆகும்.
ஆழ்வார்கள் அருளிச்செய்த திவ்யப் பிரபந்தங்கள் எல்லாம் எம்பெருமானுடைய ஸ்வரூபரூப குணவிபூதி சேட்டிதங்களைப் பற்றிப் பேசுவன ஆகும். ஆனால், மதுரகவிகள் அருளிய "கண்ணிநுண் சிறுத்தாம்பு" என்னும் பிரபந்தமோ, நம்மாழ்வாரின் புகழ்பாடும் தோத்திரமாக இருக்கிறது. இருந்தும் இது எப்படி மற்ற ஆழ்வார்களின் அருளிச்செயல் வரிசையோடே சேர்ந்தது என்று கேட்பவர்களின் ஐயத்தைத் (சந்தேகம்) தீர்க்கும் வண்ணம், மாமுனிகள் அருளிச்செய்துள்ள மேற்பாசுரம் உள்ளது. அதாவது, ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தங்கள் எல்லாம் பெரும்பாலும் "திருமந்திரம், த்வயம், சரமச்லோகம்" ஆகிய ரஹஸ்யத்ரயத்தின் பொருள்களையே விவரிப்பான ஆகும். அவற்றில், திருமந்திரத்தின் நடுவே உள்ள "நம:" பதத்தில், நம் ஆசார்யர்கள் முக்கியமாக பாகவத சேஷத்வத்தை (அடியாருக்கு அடியவனாய் இருப்பது, தொண்டருக்குத் தொண்டராய் இருப்பது) அனுசந்தித்து இருப்பார்கள். சேஷத்வம் என்றால் அடிமைப் பட்டிருக்கும் நிலை ஆகும். பகவான் சேஷி (தலைவன்). நாம் எல்லோரும் சேஷபூதர்கள் (அவருக்கு அடிமைப் பட்டவர்கள்). ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் (கொள்கை) நல்ல ஒரு ஆசானைத் தனக்குத் தலைவராகவும், அப்படித் தலைவராய் இருக்கும் அவருக்கு இன்னொருவர் அடிமைப்பட்டிருப்பதும் உயர்ந்த கொள்கையாகக் கருதப்படுகிறது. அப்படிப்பட்ட பாகவத சேஷத்வத்தை விவரித்தும் போற்றியும் பேசுவதாய் இருக்கும் மதுரகவி ஆழ்வார் அருளிச்செய்த "கண்ணிநுண் சிறுத்தாம்பு" என்ற பாடல் தொகுப்பானது மற்ற ஆழ்வார்களின் அருளிச்செயல்களோடே (திவ்யப் பிரபந்தங்கள்) சேர்ந்து இருப்பது அவசியம் என்று நம் ஆசார்யர்கள் திருவுள்ளம் பற்றினார்கள் (எண்ணினார்கள்) என்பதே நாம் அறியவேண்டிய விஷயமாகும் என்று மாமுனிகள் தெளிவுபடுத்தியுள்ளார்.
*******
"தேவு மற்றறியேன் குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவனே" என்று அருளியுள்ளார் ஸ்ரீ மதுரகவிகள் தமது "கண்ணிநுண்சிறுத்தாம்பு" ப்ரபந்தத்தில். அதாவது திருவாய்மொழி மற்றும் இதர மூன்று ப்ரபந்தங்களை அருளிச்செய்த நம்மாழ்வாரைத் தவிர வேறு தெய்வம் ஒன்று தெரியாது; அவரது அருளிச்செயல்களைப் பாடிக்கொண்டிருப்பதுதான் தன் செயலாகும் என்று தெரிவிக்கிறார் மதுரகவிகள்.
"மாறன் அடிபணிந்து உய்ந்தவன்" என்று அமுதனார் இராமாநுசரைப் போற்றிப் பாடினார் இராமாநுச நூற்றந்தாதியில். இதில், இன்னொரு பாசுரத்தில்
எய்தற்கரிய மறைகளை ஆயிரம் இன்தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனை - சிந்தையுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்களெல்லாம்
உய்தற்கு உதவும் இராமாநுசன் எம் உறுதுணையே!
என்று இராமாநுசரைப் போற்றியுள்ளார் அமுதனார். அதாவது, அளவற்ற வேதங்களை இனிய தமிழாகிய ஆயிரம் பாசுரங்களினால் அருளிச்செய்வதற்காக இவ்வுலகில் வந்து அவதரித்த நம்மாழ்வாரைத் தமது இதயத்தினுள்ளே தியானிப்பதற்கு இசைந்த (இணங்கின) ஸ்ரீமதுரகவிகளுடைய ஞானாதிச குணங்களை போற்றி, அனைத்து ஆத்மாக்களும் உய்யுமாறு ( நற்கதி பெறுமாறு) செய்த இராமாநுசரே எனக்கு உற்ற துணை என்பதாய்ப் பாடியுள்ளார் அமுதனார்.
மதுரகவிகள் கல்வி நூல்கள் பலவற்றையும் ஓதி உணர்ந்தவர் தென்மொழிக் கலைகளிலும், வடமொழி கலைகளிலும், ஆகமங்களிலும், வேதங்களிலும் பெரும் புலமையும் பெற்று சிறந்த ஒழுக்கம் உள்ளவராகத் திருமாலிடத்தெ அன்பு உடையவராக, உலகத்து உயிர்களிடம் அருள்கொண்டவராக விளங்கிவந்தார் மதுரகவிகள். இவர் மதுரமாகக் கவிபாடும் திறமையையும், திருமகள் நாதனின் அரும்பெரும் கருணையினால் கைவரப் பெற்றார். கடவுள் அருளால் உண்மை உணர்வு கொண்டார். உலகப்பற்றை அறவே துறந்தார். அவருக்கு இன்ப துன்பங்களில் அகப்பட்டு துன்புறும் மக்களுடன் வாழவும் பழகவும் பிடிக்கவில்லை அதனால் அவர் அயோத்தி, வடமதுரை, மாயை, காசி, காஞ்சி அவந்தி, துவாரகை என்னும் ஏழு திருத்தலங்களுக்குச் சென்று புண்ணிய நீராடி, பரந்தாமனைத் தரிசித்து வரவேண்டும் என்று விரும்பினார்/ உடனே அவர் தன் யாத்திரையைத் தொடங்கினார். வடநாட்டிலுள்ள பல திவ்யதேசங்களையும் தரிசித்துக்கொண்டு, அயோத்தி மாநகரை வந்தடைந்தார். விக்கிரக வடிவில் அங்கே எழுந்தருளியிருக்கும் இராமபிரானை வணங்கிச் சில காலம் அங்கேயே தங்கி வாழ்ந்துவந்தார்
அந்த சமயம் ஒரு புளிய மரத்தடியிலே நம்மாழ்வார் தொட்டிலிட்டு சீராட்டப் பெற்று வந்தார் எம்பிரானைத் தவிர வேறு எவரையும் கண்ணால் காணமாட்டேன் என்று சபதம் செய்து அதே மன நிலையோடு பதினாறு வயதுவரை அங்கேயே தங்கியிருந்தார் நம்மாழ்வார். அவரது பெருமைகள் உலகெங்கும் பரவியது.
ஒருநாள் இரவு மதுரகவியாருக்குத் தாம் பிறந்த திருக்கோளூரின் நினைவு வந்தது. உடனே அவர் அவ்வூரில் பெருமான் எழுந்தருளியிருக்கும் திசை நோக்கி கைகூப்பி வணங்கினார் அப்போது தென் திசையில் அதிசயமான பேரொளி அபாரமான த்வ்யதேஜசாக விண்வெளியில் வெளிப்பட்டுத் தோன்றியது. அதைக் கண்டு மதுரகவியார் பெரிதும் ஆச்சர்யம் அடைந்தார். "இதென்ன அதிசயம்?" இரவுப்பொழுதில் கதிரவனின் ஒளியையும் தோற்கடிக்கும் தன்மையாக இந்தப் பேரொளி எங்கிருந்து வருகிறது? என்று தமக்குள்ளே கேட்டுக்கொண்டார். அவ்வொளி எங்கிருந்து வருகிறது என்பதை அறிய அவர் மனம் துடித்தது. தென் திசையிலிருந்து வரும் அவ்வொளியைக் காணச் சென்றார். அதை அவர் நோக்கிச் செல்லச் செல்ல அவ்வொளியும் தென்திசையாக அவர் முன்பு கண்டவாறே அருகிலேயே சென்று கொண்டிருந்தது. இப்படியாக இரவு முழுவதும் மதுரகவியார் அவ்வொளியைப் பின்பற்றி நடந்து கொண்டிருந்தார். பொழுது மெல்ல விடிந்தது. இரவு காணப்பட்ட அந்த ஒளியும் மறைந்தது. அந்த ஒளி மறைந்த இடத்திலேயே மதுரகவியார் தங்கிவிட்டார்
மீண்டும் மறுநாள் இரவு தோன்றியவுடன், அவ்வொளியும் மறுபடியும் வான்வெளியில் எழுந்தது. இவ்வாறாக அவ்வொளி பகலில் மறைவதும் இரவில் தோன்றுவதுமாக இருக்கவே மதுரகவியாரும், இரவில் அப்பேரோளியைத் தொடர்ந்து சென்று அவர் பல திருப்பதிகளைக் கடந்து, பாண்டிய நாட்டிலுள்ள திருக்குருகூர் என்னும் ஊரை அடைந்தார். உடனே, அவ்வொளி அங்கேயுள்ள பெருமானின் திருக்கோயிலுக்குள் சென்று மறைந்தது. அதைக்கண்ட மதுரகவியார் வியப்படைந்தார். "இக்கோயிலினுள் ஏதோ ஒரு சிறப்பு இருக்கிறது" என்பதை உணர்ந்து அதை அறியவேண்டி, அங்குள்ள மக்களை விசாரித்தார். அக்கோயிலினுள் புளிய மரத்தடியில் உண்ணாமலும் பேசாமலும் யோக நித்திரையில் ஆழ்ந்திருக்கும் சடகோபரைப் (நம்மாழ்வார்) பற்றிய அதிசயமான வரலாற்றை அவருக்கு ஊர் மக்கள் எடுத்துச் சொன்னார்கள். மதுரகவியார் அதைக்கேட்டு மிகவும் மகிழ்ந்து கோயிலினுள் சென்று பார்த்தார் அங்கே புளிய மரத்தடியில் சடகோபரான நம்மாழ்வார் 16 வயதினாராக மெய்ஞானத்திலே திளைத்து முழு நிலவைப் போன்ற முகப்பொலிவோடு பத்மாசனமாக அமர்ந்து கண்மூடி, யோக நிஷ்டையில் ஆழ்ந்திருப்பதைக் கண்டார். சடகோபரின் முக காந்தியால் (ஈர்ப்பு) கவரப்பட்டாலும், அவர் பிறந்தது முதல் உண்பதையே துறந்து அசைவற்று பேச்சற்று இருப்பதை நினைத்து அவருக்குக் காது கேட்குமா? அவர் கண் திறந்து தன்னைப் பார்த்து அருள் செய்வாரா என்று மதுரகவியார் சோதிக்க விரும்பி அவரை நோக்கி,
"செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?" என்று கேட்டார். அதன் உட்பொருளாவது, "உயிரற்ற பிரகிருதியினால் உருவான உடம்பில், அணுவடிவமான ஜீவாத்மா பிறந்தால், எதை அனுபவித்துக் கொண்டு, எங்கே (இன்பம் உண்டென்று) கிடக்கும்?" என்று பொருள்படக் கேட்டார்? அதற்கு சடகோபர், "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்று பதில் கூறினார். அதாவது, மெய்ஞான உணர்வு நினைவு பெற்ற ஜீவாத்மாவாக இருந்தால், அத்தை (பரமாத்மாவை) தின்று (அனுபவித்துக் கொண்டு) அங்கே (பரமாத்விலேயே) கிடக்கும். ஒருவேளை அப்படிப்பட்ட ஞானத்தைப் பெறாத ஆத்மாவாக இருந்தால், அத்தைத் தின்று, அதாவது, உடலின் தொடர்பால் உருவாகும் ஐம்புலன் இச்சைகளின் நல்வினை தீவினைகளை அனுபவித்துக் கொண்டு அங்கேயே கிடக்கும். இதனால், அந்த ஆத்மாவானது பிறவிச் சுழலிலேயே கட்டுண்டு கிடக்கும். பகவான் கீதையில் அருளியுள்ளதை இங்கே நினைவுகொள்வது தகும்:
உத்தரே தாத்மநாத்மாநம் ஆத்மாநம் அவஸாதயேத் |
ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்து: ஆத்மைவ ரிபுராத்மந:||
(அத்தியாயம் 6, ஸ்லோகம் 5)
ஆத்மாவே நமக்கு நண்பன்; ஆத்மாவே நமக்கு எதிரி. ஆகையால், தானே தன்னை சம்சாரக் கடலிலிருந்து உயர்த்திக் கொள்ளவேண்டும்; தன்னைத் தானே வீழ்த்திக் கொள்ளக்கூடாது என்று பகவான் தெரிவித்துள்ளான். மனம் மற்றும் புலன்களை அடக்குபவன் ஆத்மாவிற்கு நண்பனாக இருக்கிறான்; தன்னை உயர்த்திக் கொள்கிறான். அப்படி அடக்காதவன், ஆத்மாவிற்கு எதிரியாய் இருக்கிறான்; அதனால் பிறந்துகொண்டே இருக்கிறான் என்று பகவான் தெரிவித்துள்ளான். மேலும் பகவான்,
"அநாந்யாச் சிந்தயந்தோ மாம் யேஜநா: பர்யுபாஸதே |
தேஷாம் நித்யாபியுக்தானாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம் ||"
என்றும் கீதையில் (அத்.9, ஸ்லோ.22) அருளியுள்ளான். இது, ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் இடம்பெற்றுள்ள ஸ்லோகமும் ஆகும்.
விளக்கம்: வேறொருவரையும், வேறு எதையும் மனதில் வைக்காமல், என்னையே அன்புடன் இடைவிடாமல் எவர் தியானிப்பவரோ, என்னையே கூடிநிற்கும் ஆசையில் நிற்பரோ அவர் என்னுடன் கூடி விலகாமல் இருக்கும்படியான வாழ்ச்சியை அளிப்பதற்கு நான் பொறுப்பாகிறேன்.
இதை உணர்த்தும் வண்ணமே சடகோபர், "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்றார். இங்கே "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்று ஆழ்வார் கூறியது, நல்ல விஷயமும் ஆகும்; தீய விஷயமும் ஆகும். இதில் நல்லதைக் கொள்பவன் பிறப்பறுக்கிறான்; கொள்ளாதவன் பிறந்து பிறந்து துன்பத்தை அனுபவிக்கிறான். இதை உணர்த்தும் வண்ணமே, "புலனொடு புலன் அவன் ஒழிவிலன் பரந்த அந்நலன் உடை ஒருவனை நணுகினம் நாமே" என்று பாடியுள்ளார் நம்மாழ்வார் (திருவாய்மொழி, 1.1.3). புலன்களால் தாக்கப்பட்டு அழிவதைவிட, புலன்களை அடக்கி, மனதினை அடக்கி அவனையே தியானித்திருப்போருக்கு சகல நன்மைகளையும் செய்கிறான் பகவான். அப்படிப்பட்ட நல்லெண்ணம் உடைய பகவானையே நம் மனமானது விரும்பவேண்டும் என்று தெரிவிக்கிறார் ஆழ்வார் இப்பாசுரத்தில்.
இப்படி நம்மாழ்வார் அளித்த பதிலைக் கேட்ட மதுரகவியாருக்கு உடல் சிலிர்த்தது. தமக்கு அருள்புரிய, பேரொளியாகத் தோன்றி, வழிகாட்டி அழைத்துவந்த தேஜஸ் இந்த சடகோபரிடமிருந்தே வந்திருக்கவேண்டும் என்பதை உணர்ந்துகொண்டு, அவருடைய திருவடிகளில் விழுந்து வணங்கினார்.
*****
இப்படி நம்மாழ்வாரைத் தரிசித்து, அவரது அருளைப் பெற்று, அவர் பாடிய பக்திரசம் மிகுந்த தெய்வீகப் பாசுரங்களை மதுரகவியார் பட்டோலையில் எழுதி வரலானார். நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் ப்ரபந்தம் அவர் மனம் முழுதுமாக ஆழ்ந்தது. "குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித்திரிவனே" என்று நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழிப் பாசுரங்களைப் பாடிப்பாடிக் களித்தார். ஆசார்ய பக்தியே தெய்வ பக்தியாகும்; ஆசார்யனுக்கு ஆற்றும் தொண்டே தெய்வத் தொண்டாகும் என்பதில் மிக்க ஊற்றம் உடையவராயிருந்தார். நம்மாழ்வாரைப் போற்றி பக்திப் பரவசத்துடன் 11 பாசுரங்கள் கொண்ட "கண்ணிநுண் சிறுத்தாம்பு" என்னும் பிரபந்தத்தை அருளிச்செய்தார்
பிறகு மதுரகவியார் நம்மாழ்வாரின் திருவுருவத்தை அர்ச்சக ரூபமாகச் செய்து, அப்பெருமான் கோயிலினுள்ளே எழுந்தருளச் செய்து, அதற்கான திருமண்டபத்தையும், மதிள்களையும், விமானத்தையும் தோற்றுவித்தார். நாள்தோறும், பலவகை மலர்களைக் கொண்டு மாலை தொடுத்து, அத்தெய்வ பிரானுக்குச் சூட்டி மகிழ்ந்தார் நம்மாழ்வார் பாடிய பாசுரங்களையெல்லாம் உலகெங்கும் பரவுமாறு பக்தியுடன் பாடினார். நம்மாழ்வாரின் விக்கிரகத்திற்கு மாலைகள் சூட்டி வழிபாடுகள் செய்து, திருவிழாக்களையும் ஏற்படுத்திக் கொண்டாடினார். அப்பொழுது அழகிய பொன் விமானத்தில் அத்தெய்வ உருவை எழுந்தருளச் செய்து, வீதிகள் தோறும் வலம் வரச் செய்தார். விமானத்தின் முன்னே அடியார்களுடன் அவரும் சேர்ந்து, "நம்மாழ்வார் வந்தார் நற்குணச் சீலர் வந்தார், தமிழில் வேதம் பாடிய பெருமான் வந்தார் திருக்குருகூர் நம்பி வந்தார், திருவாய்மொழி ஈந்த அருளாளர் வந்தார், திருவழுதி வளநாடர் வந்தார், வகுளாபரணர் வந்தார், காரி மாறர் வந்தார் சடகோபர் வந்தார், பராங்குசர் வந்தார், பவனிநாதர் வந்தார்" என்று விருதுகள் உரைத்து திருவுலா வருவார்.
இப்படி நம்மாழ்வாரின் புகழ் பரப்பி வந்துகொண்டிருந்தார் மதுரகவிகள். அச்சமயம், மதுரைத் தமிழ்ச் சங்கத்திலே புலவர்களாக இருந்த சிலர் மதுரகவியாரும் அவருடன் சேர்ந்து நம்மாழ்வாரின் புகழ் பாடிவந்த சிலரையும் நோக்கி, "நீங்கள் இப்படி உங்கள் ஆழ்வாரைப் பற்றி புகழ்ந்து பாடுவது தவறு! என்று "புலவரேறு" என்னும் பட்டம் பெற்ற சில புலவர்கள் அகம்பாவத்தினால் அடங்காத சினம் கொண்டார்கள். உடனே, மதுரகவிகளின் அடியவர்களிடம் சென்று, மதுரைத் தமிழ் சங்கத்தின் புலவர்களாகிய எங்களின் அனுமதி பெற்ற பின்பே, உங்கள் ஆழ்வாரைப் பற்றி புகழவேண்டும்; புலமையில் நாங்கள் ஒப்புயர்வு உடையவர்கள் என்பதைத் தமிழகம் அறியும். மன்னர்களும் எங்கள் புலமையை உணர்ந்தே எங்களை வணங்கிப் பேணிப் பாதுகாக்கின்றனர். இதையறியாமல், உங்கள் ஆழ்வாருக்கு விருதுகள் சொல்கிறீர்களே? எங்களைவிட உங்கள் ஆழ்வார் புலமை மிக்கவரோ?" என்று அடியவர்களை நம்மாழ்வாருக்கு விருதுகள் (புகழ்மாலை) சொல்லாதவாறு தடுத்தார்கள்.
உடனே மதுரகவிகளின் அடியவர்கள் விரைந்தோடிச் சென்று, மதுரகவியாரிடம் இதைப் பற்றிக் கூறினார்கள். இதைக் கேட்ட மதுரகவிகள், "நாளை நாம் அவர்களுடைய சங்கம் உள்ள இடத்திற்கு வருவோம்" என்று போய்க் கூறுங்கள்" என்றார். அவ்வாறே, அடியவர்களும் சங்கப் புலவர்களிடம் சென்று தெரிவித்தார்கள்.
நம்மாழ்வார் விழாவை இனிது முடித்துவிட்டு மதுரகவியார் அன்றிரவு ஆழ்வார் திருமுன் சென்று நிண்டார். "எம்மையாளும் தேவரீர்! இதென்ன பெரும் சோதனை? இன்று உமக்கு விருதுகள் கூறக்கூடாது என்று சங்கப் புலவர்கள் தடுத்துவிட்டார்களே! அவர்களின் அகந்தை அழியுமாறு ஏதேனும் செய்யவேண்டும்; இல்லாவிட்டால், நான் உணவும் உட்கொள்ளேன்; மேலும் உயிரையும் மாய்த்துக் கொள்வேன்" என்று பலவாறாகக் கூறியபின், அவ்விடத்திலேயே படுத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் ஆழ்ந்தும் உறங்கிவிட்டார்.
அப்பொழுது அவர் கனவிலே நம்மாழ்வார் தோன்றி, "நீர் கவலைப்பட வேண்டாம். நாம், ஒரு பாட்டை ஓர் ஏட்டிலே எழுதி இங்கு வைக்கின்றோம்; அந்த ஏட்டை எடுத்துச் சென்று, சங்கப் புலவர்களிடம் காட்டி, அப்பாட்டுக்குப் பொருள் கூறும்படி அவர்களைக் கேளும்" என்று கூறி மறைந்தார்
உடனே உறக்கம் கலைந்த மதுரகவியார், தம் முன் கனவில் கண்டபடி, ஓர் ஏடு இருப்பதைப் பார்த்ததும், ஆவலோடு அதை எடுத்துப் படித்து மனம் மகிழ்ந்தார். பிறகு, விடியற்க் காலையில் எழுந்து செய்யவேண்டிய அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு, மீண்டும் ஆழ்வார் திருவுருவத்தின் முன் வணங்கி எழுந்து, அந்த ஏட்டுடன் சங்கப் புலவர்களிடம் விரைந்து சென்று, "புலவர் பெருமக்களே! எம் தெய்வமாகிய நம்மாழ்வார் பிரானின் பெருமைகளை உணராது, அவரது புகழ் பாடுவதை இகழ்ந்து கூறிய புலவர்கள் யாவர்? என்று கேட்டார்? அகம்பாவிகளான சில புலவர்கள் துள்ளியெழுந்து, "நாங்களே!" என்று அவருக்கு மறுமொழி சொன்னார்கள்.
மதுரகவியார் அவர்களைப் புன்னகையோடு நோக்கிவிட்டு, "புலவரேறுகளே! இதோ எம்மிடம், எமது ஞானாசிரியரான பராங்குசர், ஆசிரியப்பாவில் இயற்றிய பாடல் கொண்ட ஏடு இருக்கிறது. இந்த ஏட்டில் உள்ள பாட்டுக்குப் பொருள் கூறுவீராக" என்று தாம் கொண்டுவந்த ஏட்டை அவர்கள் முன் நீட்டினார். அதை வாங்கிப் படித்த அனைத்து சங்கப் புலவர்களும், ஒருவர் மாற்றி ஒருவர் திகைத்து நின்று, நம்மாழ்வாரின் அந்தப் பாடலுக்கு பொருள் கூற முடியாமல் நின்றனர். மேலும் இது மன்னனுக்குத் தெரிந்தால், தங்கள் மதிப்பு போய்விடுமே என்று அஞ்சி, அவர்கள் மதுரகவியாரிடம், "நீர் கொண்டுவந்த பாட்டுக்குப் பொருள் கூறுவது ஒருபுறம் இருக்கட்டும்; எங்களை ஏற்றுக்கொண்ட சங்கப்பலகை, நம்மாழ்வாருடைய பாடல்களையும் ஏற்றுக் கொண்டால்தான் நாங்கள் உமது ஆழ்வாரைச் சிறந்த புலவர் என்று ஒப்புக்கொள்வோம்" என்று கூறி, இதற்கு சம்மதம்தானே? என்று கேட்டார்கள். மதுரகவிகளும் அதற்கு சம்மதித்து, "அப்படியே ஆகட்டும். ஆனாலும், எமது தெய்வமாகிய வகுளாபரணர் (நம்மாழ்வார்) அருளிய அனைத்துப் பாடல்களையும் சங்கப்பலகையில் ஏற்றவேண்டிய அவசியமில்லை! அவருடைய ஒரு திருப்பாசுரத்தை மட்டுமே ஏற்றினால் போதும்! அதுவே உலகில் உள்ள அத்தனை அரும்புலவர் பெருமக்களும் போற்றுதற்கு உரியவர் எங்கள் ஆழ்வார்பிரான் என்பதை நிரூபிக்கப் போதுமானது; அதை நீங்களே பாருங்கள்" என்று கூறினார். பிறகு அவர் நம்மாழ்வார் பாடி அருளிய
"கண்ணன் கழல் இணை நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே" (திருவாய்மொழி, 10.5.1)
என்னும் பாசுரத்தை ஒரு சிறிய ஏட்டில் எழுதி, அவர்களிடம் கொடுத்தார். "கண்ணன் எம்பெருமானின் திருவடியில் சரணம் அடைபவர்கள் விரும்பி ஏத்துவது, அவனது ஆயிரம் நாமங்களுக்கெல்லாம் தலையாய் இருக்கும் "நாராயணன்" என்னும் நாமமே" என்று பாடி, நாராயணா என்னும் நாமத்தின் ஏற்றத்தை ஏற்றிவைக்கிறார் ஆழ்வார் இப்பாசுரத்தில். அவர்கள் சங்கப்பலகையில் இந்தப் பாசுரத்தை வைத்துவிட்டுத் தாங்களும் அச்சங்கப் பலகையில் ஏறி அமர்ந்து கொண்டார்கள். சங்கப் பலகை அப்புலவர்கள் யாவரையும் கீழே தள்ளிவிட்டு, அச்சிறிய ஏட்டை மட்டும் சுமந்து, அதன் அளவிற்குக் குறுகிய நிலையில் பொற்றாமரைக் குளத்திலே மிதந்தது. அதைக் கண்டதும், தண்ணீரில் தள்ளப்பட்ட புலவர்கள் அஞ்சி நடுங்கியவாறு மெல்ல நீந்திக் கரையேறி வந்து, செய்வதறியாது திகைத்து தடுமாறி நின்றார்கள். தாங்கள் செய்த பழிச்செயலை எண்ணி மனம் கலங்கி வருத்தமுற்றார்கள். அதற்குப் பரிகாரமாக நம்மாழ்வாரைப் போற்றிப் புகழ்ந்து பாடுதலே அக்குற்றத்திற்கான மன்னிப்பைப் பெறுவதற்குரிய வழியாகும் என்று எண்ணினார்கள். பிறகு அச்சங்கப் புலவர்களுக்கெல்லாம் தலைவராகிய புலவர் ஒருவர்,
"ஈ ஆடுவதோ கருடர்கு எதிரே? இரவிக்கு எதிர் மின்மினியா ஆவதோ?
நாய் ஆடுவதோ உருவம் புலிமுன்? நரி ஆடுவதோ நரகேசரி முன்?
பேய் ஆடுவதோ அழகர் வசிமுன்? பெருமான் வகுளாபரணன் அருள்கூர்ந்து
தோலா துரையர் வீரமா மறையின் ஒரு சொற் பெறுமோ உலகிற் கவியே?"
என்று நம்மாழ்வார் என்னும் பெரியவருக்குமுன், மற்ற அனைத்தும் தாழ்ந்தவைகளே என்று ஏற்றுக்கொள்ளும் வண்ணம் பாடினார். அதாவது, கருடனுக்கு எதிரே ஈ ஆடுமோ? சூரியனுக்கு எதிரே மின்மினிப் பூச்சி பிரகாசிக்குமோ? புலியின் முன்பு நாய் ஆடுமோ? நரி ஆடுமோ சிங்கத்தின் முன்? பேய் ஆடுமோ ஆழ்வாரின் அழகான தோற்றத்தின் முன்? நம்மாழ்வார் என்னும் தெய்வம் அருளிய தெய்வப் பாசுரங்களுக்கு முன் வேறு எந்த சொல்லும் ஏற்றம் பெறுமோ? என்று அர்த்தம். மேலும் அவர்,
"சேமம் குருகையோ செய்யதிருப் பாற்கடலோ
நாமம் பராங்குசமோ நாரணமோ - தாமம்
துளவோ வகுளமோ தோளிரண்டோ நான்கும்
உளவோ பெருமான் உனக்கு"
என்று ஒரே பாடலாக நேரிசை வெண்பாவில் அமைந்திருக்க, அதைக் கண்டு பெரும் அச்சமும் வியப்பும் கொண்டார்கள். அதாவது, நம்மாழ்வாரின் இருப்பிடமானது அவர் பிறந்த திருக்குருகூரா அல்லது பெருமான் உறையும் திருப்பாற்கடலா? இவர் திருநாமமானது பராங்குசரா அல்லது பெருமானின் திருநாமமான நாராயணனா? இவர் சூடுவது பெருமான் சூடும் துளசி மாலையா அல்லது வகுள மாலையா? இவருக்குத் தோள்கள் இரண்டா அல்லது பெருமானைப் போல் நான்கா? என்று பொருள்பட பெருமானுடன் ஆழ்வாரைப் பொருந்தக் கூறி மகிழ்ந்தார்கள்.
மதுரகவிகளிடமும் தங்கள் செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டு, உங்கள் ஆழ்வாரின் மேன்மையை நாங்கள் உணர்ந்துகொண்டோம். தங்களால் எங்கள் அகந்தையும் அழிந்தது. இனி நீங்கள் ஆழ்வாருடைய புகழை வான் முட்டும் அளவு கூறுங்கள். இவ்வுலகம் முழுதும் அவருடைய அருட்புகழ் சென்று பரவட்டும். திக்கெட்டும் அவருக்குத் திருவிழா நடைபெறட்டும். நாங்களும் அவ்விழாவிலே கலந்து கொள்கிறோம். உடனே சென்று விழா நடத்துங்கள்" என்று கூறினார்கள். அவர்கள் மனம் திருந்தியதைக் கண்டு மதுரகவிகளும் பெருமகிழ்ச்சி கொண்டு, அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார்.
நம்மாழ்வார் பாடிய பாசுரங்களின் பொருள்களையெல்லாம் மக்களுக்கு எடுத்துக்கூறி, நல்வழிப்படுத்தி நெடுங்காலம் மதுரகவி ஆழ்வார் வாழ்ந்து, இறுதியில் எம்பெருமானின் பரமபதத்தை அடைந்தார்.
****
இவ்வாழ்வார் அருளிச்செய்த கண்ணிநுண் சிறுத்தாம்பு என்னும் பிரபந்தத்தைப் பற்றி சற்று சுருக்கமாக அறிந்துகொள்வோம். இந்தப் பிரபந்தம் ஆசார்ய வைபவத்தை, அதாவது, மதுரகவி ஆழ்வார் தனது குருவாக ஏற்றுக்கொண்ட நம்மாழ்வாரின் பெருமையை விளக்கும் பிரபந்தமாகும். இந்தப் பிரபந்தம் இரண்டு பிரிவாக இருக்கும். முதல் ஐந்து பாசுரங்களால் ஆசார்யரான நம்மாழ்வார் வைபவம் (பெருமை) பேசப்படுகிறது. அதாவது,
முதல் பாசுரத்தில் "குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே" - நம்மாழ்வாரின் திருநாமத்தைச் சொல்ல, தனது நாவுக்குப் பரம போக்யமாய் இருக்கிறது என்று உரைக்கிறார்; 2ஆம் பாசுரத்தில் "நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்" - நாவினால் நம்மாழ்வாரின் துதி பாடி, பரம ஆனந்தத்தைப் பெற்றேன் என்கிறார்; அடுத்து 3ஆம் பாட்டில், "குருகூர் நம்பிக்கு ஆள் உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே" - நம்மாழ்வாருக்கு அடிமையாய் இருப்பது தான் பெற்ற பெரிய பேறு என்கிறார்; 4ஆம் பாட்டில் "அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான் சடகோபன்" - மாதாவாகவும் பிதாவாகவும் அடியேனைக் (என்னை) கைக்கொண்டு அருளும் இயல்புடையவரான நம்மாழ்வார் எனக்குத் தலைவர் என்கிறார்; 5ஆம் பாட்டில் "குருகூர் நம்பிக்கு அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே" - திருநகரி என்னும் ஊருக்குத் தலைவரான நம்மாழ்வாருக்கு பக்தனாகப் பெற்று சமர்த்தனாகிவிட்டேன் என்கிறார்.
அடுத்த ஐந்து பாடல்களில். ஆசார்யன் (நம்மாழ்வார்) தனக்குச் செய்த உபகாரங்களைத் தெரிவிக்கிறார்: அதாவது,
6ஆம் பாட்டில், "தன் புகழ் எத்த அருளினான்" - தம்முடைய (நம்மாழ்வார்) திருப்புகழ்களைத் துதிக்கும்படி எம் ஸ்வாமியான (என் தலைவரான) நம்மாழ்வார் கிருபை (அருள்) பண்ணினார் என்கிறார்; 7ஆம் பாட்டில் “பண்டை வல்வினை பாற்றி அருளினான்" - ஆசார்யரான நம்மாழ்வார், தனது அநாதியான (பல பல பிறவிகளில் செய்த) பிரபலமாய் இருந்த பாவங்களை உரு மாய்ந்து போகும்படி பறக்கடித்து அருளினார் என்கிறார்; 8ஆம் பாட்டில் "அடியவர் இன்புற ஆயிரம் இன்தமிழ் பாடினான்" - பக்தர்கள் ஆனந்தம் அடையும்படி, அந்த அருமையான வேதத்தின் உட்பொருள்களை ஆயிரம் பாசுரங்களை உடைய திருவாய்மொழியைப் பாடியவர் நம்மாழ்வார்; 9ஆம் பாட்டில் "வேதத்தின் உட்பொருள் நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்" - திருவாய்மொழியைப் பாடி அதன் உட்பொருள்களானது என்னுடைய இதத்திலே நிலைத்து இருக்கும்படி அருளினார் நம்மாழ்வார் என்கிறார்; 10ஆம் பாட்டில் "செயல் நன்றாக திருத்திப் பணிகொள்வான்" - தனது சீரிய அனுஷ்டானத்தாலே (தர்ம நெறியால்) நன்றாக சிக்ஷித்து தன்னை ஆட்கொள்கிறார் நம்மாழ்வார் என்கிறார்.
கடைசியாக, 11ஆம் பாட்டில் "தென்குருகூர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி சொன்னசொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே" - நம்மாழ்வார் விஷயத்திலே பக்தனாய் இருந்துகொண்டு, மதுரகவி அருளிச்செய்த இந்த திவ்யப் பிரபந்தம் சகல நன்மைகளை அளிக்கவல்லது என்ற விசுவாசத்துடன் இருப்பவர்களுக்கு (இந்தப் பிறவியின் இறுதியில்) பரமபத பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்று சொல்லி இந்தப் பிரபந்தத்தைக் கற்றவர்க்கு ஏற்படும் பயனை விவரிக்கிறார்.
பகவானைக் காட்டிலும் ஆசார்யனே உயர்ந்தவர் என்ற ஸ்ரீவைஷ்ணவ சம்பிராதாயத்தை (கொள்கையை) நன்கு தெளிவுபடுத்துவதாய் இருக்கிறது மதுரகவி ஆழ்வார் அருளிச்செய்த இந்தப் பிரபந்தம். ஒரு நல்ல ஆசார்யனை அடைந்து, அவர் மூலமாகத் தன்னை அடைவதையே பகவான் விரும்புகிறார். ஆசாரியர் உதவியைக் கொண்டே பகவானைப் பற்ற வேண்டும் என்பதே ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் ஆகும். ஆசார்ய சம்பந்தம் அற்றவரை, அதாவது, ஒரு குருவின் துணையின்றி தன்னை அணுகுபவரை பகவான் ஏற்பதில்லை என்பதும் இந்த சம்பிரதாயத்தின் உயர்ந்த கோட்பாடு ஆகும்.
மதுரகவிகள் வாழித்திருநாமம் :
சித்திரையிற் சித்திரைநாள் சிறக்கவந்தோன் வாழியே
திருக்கோளூர் அவதரித்த செல்வனார் வாழியே
உத்தர கங்காதீரத்துயர் தவத்தோன் வாழியே
ஒளிகதிரோன் தெற்குதிக்க உகந்து வந்தோன் வாழியே
பத்தியோடு பதினொன்றும் பாடினான் வாழியே
பராங்குசனே பரன் என்று பற்றினான் வாழியே
மத்திமமாம் பதப்பொருளை வாழ்வித்தான் வாழியே
மதுரகவி திருவடிகள் வாழிவாழி வாழியே.
மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
No comments:
Post a Comment