Nammazhwar Vaibhavam - 3

"உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொருநாள் 
உண்டோ சடகோபர்க்கொப்பொருவர் - உண்டோ 
திருவாய்மொழிக்கொப்பு தென் குருகைக்குண்டோ 
ஒருபார் தனிலொக்குமூர்."

என்று நம்மாழ்வாரைப் போற்றி வைணவ ஆசார்யரான மணவாள மாமுனிகள் (உபதேசரத்தினமாலை, 15) பாடியுள்ளார்.  அதாவது

வைகாசி மாதத்தில் வரும் விசாக நக்ஷத்திரத்திற்கு நிகரான ஒரு திருநாள் உண்டோ என்றால் இல்லை!  நம்மாழ்வாருக்கு நிகரான ஒருவர் உண்டோ என்றால் இல்லை! இவர் அருளிச்செய்த திருவாய்மொழிக்கு நிகரான ஒரு பிரபந்தம் உண்டோ என்றால் இல்லை!  இந்தப் பூமண்டலத்தில் நம்மாழ்வார் அவதரித்த திருநகரி என்னும் தேசத்திற்கு நிகரான ஒரு திவ்யதேசம் உண்டோ என்றால் இல்லை!என்று சொல்லி, நம்மாழ்வாரையும் அவர் அவதரித்த நாளையும், அவர் அவதரித்த ஊரையும், அவர் அருளிச்செய்த பிரபந்தத்தையும் போற்றிப் பாடியுள்ளார் மணவாள மாமுனிகள்.  மேலும், "சீராரும் வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில்குருகை நாதன் அவதரித்த நாள்" -சீர்மை மிகுந்த வடமொழி வேதத்தைத் திராவிடமாக (செந்தமிழ்) செய்தருளின யதார்த்தவாதியாய் அழகிய திருநகரிக்குத்  தலைவரான நம்மாழ்வார் தோன்றிய திருநாள் அல்லவோ இது! என்றும் போற்றியுள்ளார் மணவாள மாமுனிகள்.  

எம்பெருமானால் தெளிந்த ஞானத்தைப் பெற்ற ஆழ்வார், அந்த ஞானத்தைப் பெற்றதின் மிகுதியால், இந்தப் பூமண்டலத்தை விட்டு, உயர்ந்த லோகமான விஷ்ணு லோகத்தை (பரமபதம்) அடைந்து, எம்பெருமானுக்குக் கைங்கர்யங்கள் செய்யவேண்டும் என்ற பேராவல் கொண்டார்.  அதனால், எம்பெருமானிடம் தன்னை உடனே அழைத்துக் கொள்ளும்படி வேண்டி நிற்க, எம்பெருமான் ஆழ்வார் விண்ணப்பத்தை உடனடியாக நிறைவேற்றி வைக்கவில்லை.  ஏனென்றால்,

1) சரண் என்று சொல்லி ஒருவர் தன்னிடம் சரணாகதி செய்த உடனேயே, அவருக்கு மோக்ஷத்தைக் கொடுத்தால், அது நச்சுப் பொய்கை (விஷம் நிறைந்த குளம்) ஆகிவிடும்.   அதாவது, சரணாகதி செய்தவுடன் ஒருவருக்கு மரணத்தைக் கொடுத்தால், அது விஷத்தை உண்டதற்கு ஈடாகிவிடும். அப்படி சரணாகதியானது விஷமான விஷயமாகிவிட்டால், உலகோர் "சரணாகதி" செய்ய அஞ்சி, எம்பெருமானைத் தஞ்சம் அடையாமல் விலகி நிற்பர்.  எனவே, "மரணமானால் வைகுந்தம்" , அதாவது, இந்த சரீரத்தின் முடிவில்தான் மோக்ஷமானது அருளப்படும் (அவரவர் விதிக்கேற்றபடி) என்று ஸ்தாபித்தான்.

2) ஆழ்வார் திருவாக்கிலிருந்து நான்கு வேதங்களின் சாரமாக நான்கு பிரபந்தங்கள் தோன்றவேண்டும்.  அந்த நான்கு பிரபந்தங்களில் உயர்ந்த பிரபந்தமாக திருவாய்மொழி இருக்கவேண்டும் என்று எம்பெருமான் பேராவல் கொண்டான்.  ஏனென்றால், திருவாய்மொழி என்ற உயர்ந்த பிரபந்தம் தோன்றவேண்டும் என்பது உயர்ந்த யோகிகள் மற்றும் ரிஷிகளின் விண்ணப்பமாய் (வேண்டுதல்) இருந்தது. ஆக, அவர்களது விண்ணப்பம் நிறைவேறவேண்டும். 

3) பிரபந்தம் தலைக்கட்டவேண்டும் - அதாவது நிறைவுக்கு வரவேண்டும்.  "திருவிருத்த்தத்தில்" பிரிவாற்றாமையை (எம்பெருமானுடன் சேராத துன்பம்) வெளிப்படுத்தினார் ஆழ்வார்.  அடுத்து"திருவாசிரியத்தில்" ஆழ்வாரின் துன்பத்தை ஓரளவு தீர்க்கும் வண்ணம் எம்பெருமான் தன்னை ஆழ்வாருக்குக் காட்டிக் கொடுக்க, பரமபதத்தில் அவன் வீற்றிருக்கும் எழிலை அனுபவித்தார். அடுத்து, திருவாசிரியத்தில் தான் பெற்ற இன்பம் கரைபுரண்டு ஓட, அதை மேன்மேலும் அனுபவிக்கும் வண்ணம்"பெரிய திருவந்தாதி" என்னும் பிரபந்தத்தை அருளிச்செய்தார்.  இந்த மூன்று பிரபந்தங்களிலும் ஆழ்வாரது அனுபவங்களே நிறைந்து காணப்பட்டன.  ஆனால், இதுவல்லவே எம்பெருமானது திருவுள்ளம் (விருப்பம்).  உலகத்தார் அனைவரும் நற்கதி பெறுவதற்கு ஒரு வழியை ஏற்படுத்தித் தரவேண்டுமே! அதை மிகவும் ிரத்தை (கவனம்) கொண்டு ஆழ்வாரின் திருவாக்கிலிருந்து (நாவிலிருந்து)  ஸாம வேத சாரமான "திருவாய்மொழி" என்ற பிரபந்தம் தோன்றும்படி செய்தான்.  1102 பாசுரங்கள் கொண்டது திருவாய்மொழிப் பிரபந்தம். இதைத் தெரிவிக்கும் வண்ணமே, "அருள்கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான்" (கண்ணிநுண் சிறுத்தாம்பு, பாசுரம் 8) என்று மதுரகவி ஆழ்வார்.   எம்பெருமான் அருளுக்கு மேலான விஷயம் ஆழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி என்று பாகவதர்கள் கொண்டாடுகின்றனர்.  ஏனென்றால், வேதங்களைக் காட்டிலும் இனிமையானதாக இருக்கிறது திருவாய்மொழி என்பதால்.  

4.  எம்பெருமான் வடிவழகை ஆழ்வார் அனுபவித்தது ஒருபுறம் இருக்க, ஞானமே வடிவான ஆழ்வாரது திவ்யமங்களமான திருமேனியை (உடல்) எம்பெருமான் அனுபவிக்க ஆசை கொண்டான்.  இந்தத் திருமேனியோடேயே ஆழ்வாரை வைகுந்தம் ஏற்ற வேண்டும் என்றும் ஆவல் கொண்டான் என்றால் ஆழ்வாரது ஞானமானது அவ்வளவு ஏற்றமுடையதாய் இருந்தது. 

மேலே பார்த்தபடி ஆழ்வாருக்கு நிகரானவர் வேறொருவர் இல்லை; திருவாய்மொழிக்கு நிகரான பிரபந்தம் இன்னொன்று இல்லை.   உலகோர்களை எம்பெருமானுடன் சேர்த்துவைக்கக் கூடிய பிரபந்தமாக இருப்பது திருவாய்மொழி.  இந்தப் பிரபந்தம் பகவானைப் பற்றிய ஞானம் என்னும் உணவை நம் ஆத்மாவிற்கு ஊட்டி, பகவானை அனுபவிக்கக் கூடிய உணர்வை ஏற்படுத்துகிறது. 

எம்பெருமானை அடையவேண்டும் என்று ஆசைகொண்டவர்களுக்கெல்லாம் பகவத் இராமானுசர் உரைத்தது,  கீதையில் கண்ணன் எம்பெருமான் அருளிய சரம ச்லோகமும் அதன் அர்த்தமும் ஆகும்.  சரம ச்லோகத்தில் கவான் உபதேசித்தது என்னவென்றால், "கவலைப்பட வேண்டாம்! என் திருவடியில் சரண் புகுந்து நல்லதைப் பெறுங்கள்" என்பதாகும்.  திருவாய்மொழியின் முதல் பாசுரத்திலேயே அதை நேராகக் காட்டிக் கொடுத்தார் நம்மாழ்வார், "துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே" என்று.  பகவான் "மாஸுச:|" என்றதை, இவர் "துயர் அறு" என்றார். "மாமேகம் சரணம் வ்ரஜ" (என் ஒருவனையே சரணடை) என்பதை விளக்கும் வண்ணம், எவன் நாம் உயரவேண்டும் என்றும் உயர்ந்த நன்மையை அடையவேண்டும்  என்றும்  விருப்பம் கொள்கிறானோ, எவன் நாம் உயர்வதற்கான தெளிந்த ஞானத்தை அளிப்பவனோ, எவன் தேவர்களுக்கெல்லாம் தலைவனாக இருக்கிறானோ, அவன் திருவடிகளை அடைந்து, வணங்கி, பிறவித் துயரை அறுத்து கொள்ளுங்கள் என்று உபதேசிக்கிறார் ஆழ்வார்.  இதை உரைக்கும் வண்ணம் அமைந்துள்ள "உயர்வற உயர்நலம் உடையவன் எவனவன் மயர்வற மதிநலம் அருளினன் எவனவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி எவனவன் துயரறு சுடரடி தொழுதெழென் மனனே!" என்ற பாசுரமே திருவாய்மொழி பிரபந்தத்தின் தொடக்கப் பாசுரமாகும்.  சரம ச்லோகத்தில் பகவான் அர்ச்சுனனுக்குத் தானே நேராக உபதேசித்தான்; அதை நாமும் அறியும்படி செய்தான்.  அதேபோல், "துயரறு சுடரடி தொழுதெழென் மனனே!" என்று தான் தன் மனதுக்கு உபதேசித்து, அதை உலகோருக்கும் உபதேசிக்கிறார் ஆழ்வார். இன்னொரு கோணத்தில் பார்த்தால், ஆழ்வாரைக் கொண்டு பகவான் நமக்கு உபதேசிக்கிறான் என்று புரிந்துகொள்ள வேண்டும்..  பகவான் அர்சுனனுக்கும் ஞானத்தை அருளினான்; ஆழ்வாருக்கும் ஞானத்தை அருளினான்.  ஆனால், அர்ச்சுனன் அதை உணரவில்லை; அதனால் உயர்கதியை அடையவில்லை.  ஆனால், ஆழ்வார் உணர்ந்தார்; அதனால் உயர்கதியைப் பெற்றார். தான் பெற்ற நல்லதை  மற்றவர்களும் பெறவேண்டுமே என்று உயர்நலம் உடையவராய், திருவாய்மொழியை அருளிச்செய்தார்.  பகவத் இராமாநுசரின் அருளால், நம்மாழ்வாரின் திருவாய்மொழியை ஆரப்பருகி, எம்பெருமானின் இன்னருளைப் பெற விழைவோம். 

மேலே பார்த்த "உயர்வற உயர்நலம் உடையவன் எவனவன்" என்ற திருவாய்மொழிப் பிரபந்தத்தின் முதல் பாசுரத்திற்கான விளக்கத்தைச் சற்று விரிவாக அனுபவித்தால்தான், நம்மாழ்வாரின் சிறப்பு என்ன? என்பதும் அவர் அருளிச்செய்த திருவாய்மொழி என்னும் திவ்யப் பிரபந்தத்தின் சிறப்பு என்ன என்பதும், மேலும் நமக்கு எது நல்லதைப் பெற்றுத் தரும்? என்பதும்  நன்றாகப் புரியும்.  அதை அடுத்த பகுதியில் அனுபவிப்போம்.
****

"ஸஹஸ்ரசீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ராபாத்" என்று எம்பெருமானைப் பற்றி புருஷஸுக்தமானது (தைத்ரியோ உபநிஷத்) தெரிவிக்கிறது.  அதாவது, பகவான் ஆயிரம் தலைகளையும், ஆயிரமாயிரம் (எண்ணற்ற) கண்களையும், ஆயிரமாயிரம் (எண்ணற்ற) கால்களையும் உடையவன்.  அப்படிப்பட்ட திருமாலின் திருக்கல்யாண குணங்களைப் பற்றி விவரிக்கக் கூடிய பிரபந்தமாக இருக்கும் நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியும் ஆயிரத்திற்கு மேற்பட்ட (1102) பாசுரங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.  இதை நேராகத் தமிழ்ப்படுத்தும் வண்ணம்ஆழ்வார் தானும்  எம்பெருமானைத் "தோள்களாயிரத்தாய் முடிகளாயிரத்தாய் துணைமலர்க் கண்களாயிரத்தாய் தாள்களாயிரத்தாய் பேர்களாயிரத்தாய் தமியனேன் பெரியவப்பனே"(8.1.10) என்று பாடியுள்ளார். 

1102 பாசுரங்கள் கொண்ட திருவாய்மொழி பிரபந்தம் முழுவதற்கும் வித்தாகவும் (விதை)), மேலும் இந்தப் பிரபந்தத்தின் மொத்த அர்த்தங்களையும் உரைப்பதாகவு,ம்  இருப்பது அதன்  முதல் பதிகத்தின் முதல் பாசுரம் ஆகும்.    ஒரு பதிகம் என்றால், அது பத்து பாசுரங்களைக் கொண்டதாகும். 11வது பாசுரத்தில், முன் உரைத்த பத்து பாசுரங்களைச் சொல்பவர்களுக்குக் கிடைக்கும் நன்மையை (பலச்ருதி) உரைத்திருப்பார் ஆழ்வார்.   100 பதிகங்களைக் கொண்டது திருவாய்மொழி. அதாவது, ஒவ்வொரு பதிகத்திலும் பலச்ருதி பாசுரமான 11வது பாசுரத்தைச் சேர்த்து 1102 பாசுரங்கள் கொண்டது திருவாய்மொழி.   இந்த 1102 பாசுரங்களின் சாரம் எதுவென்றால் அது இந்த ஒரு பாசுரத்தில் காட்டப்பட்டிருக்கின்றது.  இதை மட்டும் சற்று விரிவாக அனுபவித்தால்தான், ஆழ்வார் நமது நெஞ்சில் விளைக்கும் விதை என்ன என்பது தெளிவாகத் தெரியும்.  

திருவாய்மொழி முதல் பதிகத்தின்  முதல் பாசுரம் (1.1.1) - அதாவதுஒன்றாம் பத்து, ஒன்றாம் திருவாய்மொழி, ஒன்றாம் பாசுரம் என்று புரிந்துகொள்க.

உயர்வற உயர்நலம் உடையவன் யவனவன் 
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன் 
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன் 
துயரறு சுடர் அடி தொழுதெழென் மனனே. 

விளக்கம் :  என் மனனே : எனது மனமே. 

உயர்வு அற உயர்நலம் உடையவன் யவனவன் : (தன்னைப் பார்க்கிலும்) உயர்த்தி இல்லாதபடி உயர்ந்த (ஆனந்தம் முதலிய) திருக்கல்யாண குணங்களை சுயமாக (இயற்கையாக) உடையவன் எவன் ஒருவனோ

மயர்வற மதிநலம் அருளினன் யவனவன் : (மனதில் சூழ்ந்துள்ள) அஞ்ஞானம் முற்றிலும் அழியும்படி ஞானத்தையும் பக்தியையும் அடியேனுக்கு க்ருபை பண்ணினவன் எவன் ஒருவனோ,

அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன் : மறப்பு இல்லாத நித்யசூரிகளுக்கு ஸ்வாமி (தலைவன்) எவன் ஒருவனோ

துயரறு சுடர் அடி தொழுதெழு : துக்கங்களைப் போக்கக்கூடிய அந்த எம்பெருமானுடைய சோதி மயமான திருவடிகளை வணங்கி, நீ கடைத்தேறக் கடைவாய் (விழைவாய், விரும்புவாய்).

இந்தப் பாசுரத்தில், மஹோபாரங்களைத் தமக்குச் செய்தருளின எம்பெருமானுடைய திருவடிகளைத் தொழுது மேன்மை பெறும்படியாக ஆழ்வார் தமது நெஞ்சிற்கு உபதேசிக்கிறார் (அறிவுறுத்துகிறார்).  

பகவானுக்கு அடிமைப்படுதல் என்பது இரண்டு வகைகளாய் அமையும். அவற்றுள் ஒன்று அவனுடைய குணங்களுக்குத் தோற்று அடிமைப்படுதலும், இன்னொன்று இயற்கையாகவே அடிமைப் பட்டிருப்பதும் ஆகும்.  இவற்றில், ஜீவாத்மாவாது பரமாத்மாவிற்கு அடிமைப்பட்டது என்ற சாஸ்திரத்தின் படி, இயற்கையாகவே அவனுக்கு அடிமைப்பட்டு இருப்பதே சிறப்பாயினும்எம்பெருமான் தன் குணங்களைக் காட்டி தன்னை ஆட்படுத்திக் கொள்கிறான் என்று தெரிவிக்கிறார் ஆழ்வார்.   

நம் குற்றங்களைப் பாராமல், தன் மேன்மையைக் கருத்தில் கொண்டு, எம்பெருமான் அருள்செய்வதே "குணம்" என்று போற்றப்படுகிறது.  இதைச் செய்பவன் எம்பெருமான் என்பதால், அது "கல்யாண குணம்" என்று போற்றப்படுகிறது.  ஆகையாலேயே, "உயர்வு அற உயர்நலம் உடையவன்" என்றும், பெருமான் தன் குணத்தைக் காட்டி,  தனது  (ஆழ்வாரது) அஞ்ஞானத்தைப் போக்கி தன்னை அடிமைப் படுத்திக் கொண்டதால் "மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்" என்றும் உரைத்துள்ளார் ஆழ்வார்.  

உயர்வு அற உயர்நலம் உடையவன் யவனவன்

பிற மதத்தவர்கள் எம்பெருமானை குணங்கள் அற்றவன் என்று பிரஸ்தாபிக்க, பகவான் அப்படிப்பட்டவன் அல்லன் என்பதை உலகத்தாருக்கு உரைக்கவேண்டுமே. அதனால் அவனை, "உயர்வற உயர்நலம் உடையவன்" என்று காட்டுகிறார் ஆழ்வார்.  

மயர்வற மதிநலம் அருளினன் யவனவன் 

நம் மனதில் சூழ்ந்துள்ள அஞ்ஞானத்தை நீக்கி, மெய்ஞானத்தைக் கொடுப்பவன் எவனோ அவனே பகவான் ஆவான்.    எது அஞ்ஞானம்? என்று அறிவோம்.  ஏற்கனவே பார்த்தபடி, இந்தத் தேஹமானது (சரீரம்) அழியக்கூடியது; ஆகையால் நிலையற்றது.  அதே சமயம், நம் உள்ளில் அந்தர்யாமியாய் இருந்துகொண்டு, நம்மை நடத்துவது "ஆத்மா" ஆவார்.  அவர் (ஆத்மா) அழிவற்றவர் - நிலையானவர் ஆவார்.  தேஹம் வேறு; ஆத்மா வேறு.  அதாவது, அழியக்கூடிய சரீரம் வேறு; அழிவற்ற ஆத்மா வேறு.  இரண்டும் ஒன்றே - அதாவது, "தேஹமே ஆத்மா" என்று நினைத்துக்கொண்டு, சரீர சுகங்களை வளர்த்துக் கொண்டு, அதைக் காத்துக் கொள்வதிலேயே கவனத்தை வைப்பது அஞ்ஞானம் ஆகும்.  மாறாக, நம்மை வழி நடத்தும் உரிமை நமக்கில்லை; நம்மை நியமிப்பவன், அதாவது, வழி நடத்துபவன் பகவானே.  அவனே, நமக்குள் ஆத்மாவாக இருந்துகொண்டு நம்மை நடத்துகிறான் என்ற எண்ணம் முதலில் வரவேண்டும்; அப்படி வருவதே, ஞானத்தின் பிறப்பு ஆகும்.  இந்த ஞானம் தோன்றாத வரை, தேஹமே ஆத்மா என்ற பொய்யான அறிவுடன் வாழ்ந்து, இறந்து, அதனால் கர்ம பந்தங்களுக்கு ஆட்பட்டு, மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்புகளுக்கு ஆளாகி, சம்சார பந்தத்தில் சிக்கிக்கொள்கிறோம்.  இந்தச் சுழற்சி ஒரு தொடர்கதை ஆவதற்கு, நமக்குள் இருக்கும் "தேஹமே ஆத்மா" என்ற பொய் ஞானமே (அஞ்ஞானம்) ஆகும்.  

மேலே சொன்னபடி, தேஹம் வேறு; ஆத்மா வேறு என்பதை நன்றாக உணர ஆரம்பிப்பது அறிவின் தொடக்கம்; அந்த அறிவு பிறந்தபின், அதிலிருந்து மீண்டும் வழுவாமல் (தவறாமல்) இருந்தால், பகவான் நமக்கு மெய்ஞானத்தை மேலும் மேலும் ஊட்டி, ஆத்மாவை நன்கு பராமரித்து, அது அடையவேண்டிய தன் திருவடியான உயர்ந்த கதிக்கு வகை செய்கிறார்.   இவ்வாழ்வார் அவதரித்தது தெய்வக்ருபையாலேயே!  எல்லோரும் பிறப்பது கர்மபந்தங்களின் விளைவால்; ஆனால், ஆழ்வார்களின் பிறப்பு அப்படிப்பட்டது அல்ல; பகவான் நம் மீது உயர்ந்த கருணைகொண்டு, ஆழ்வார்கள் மூலம் நமக்கு மெய்ஞானத்தை அளிப்பவதர்க்காகவே அவர்களைப் பிறப்பித்தான். ஆதலால், ஆழ்வார்கள் அஞ்ஞானம் என்னும் வலையில் ஒருபோதும் அகப்பட்டவர்கள் அல்லர்கள்.  இருந்தும், தனது அஞ்ஞானத்தைப் போக்கியவன் பகவான் என்பதைத் தெரிவிக்கும் வண்ணம் "மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்" என்று பாடியுள்ளார்.  ஏனென்றால், ஞானம் அருளப்பட்ட பின்னும், அதிலிருந்து தவறி படுகுழியில் வீழ்ந்தவர்கள் பலர் உண்டு; அப்படிப்பட்ட ஒரு தாழ்வு தனக்கு வந்துவிடப்போகிறதே என்ற அச்சம் அவ்வப்போது ஆழ்வார்களுக்குள் தோன்றிக் கொண்டே இருக்கும்.  அதனால், பொய்யறிவு (அஞ்ஞானம்) இறந்ததால் பிறந்த மெய்யறிவானது (மெய்ஞானம்) நிலைத்திருக்கும்படி பகவானை வேண்டிக்கொண்டே இருப்பார்கள்.  "பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம் நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே" என்று பாடியுள்ளார் திருமழிசை ஆழ்வார் (திருச்சந்தவிருத்தம், பாடல் 101).  உன் பாதங்களையே பற்றிக்கொண்டு, உன்னாலேயே உயர்ந்த கதியைப் பெற்று, எப்போதும் உன்னுடன் கூடியிருக்கும் பாக்கியமானது எப்போதும் நிலையாக இருக்கவேண்டுமே! பகவானே! தயவுசெய்து, இந்த நிலையான சுகத்தை எனக்கு அருள நீ எண்ணம் கொள்ளவேண்டுமே என்று அர்த்தம். ஆத்மாவே நமக்கு நண்பன்; ஆத்மாவே நமக்கு எதிரி என்று கண்ணன் எம்பெருமான்  கீதையில் அருளியுள்ளபடி, பகவானின் அருளால், இந்த ஆத்மாவானது நமக்கு நல்லது செய்யும் நண்பனாக இருந்து, இந்தப் பிறவித் துயரிலிருந்து கடைத்தேற்றவேண்டுமே என்று அச்சப்படுபவர்கள் ஆழ்வார்கள்.  அந்த பயத்தையும் போக்குபவன் பகவான் ஆவான்.  ஆகையால், "மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்" என்று பகவானைக் குறிப்பிடுகிறார் நம்மாழ்வார்.  


"அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்" 

அயர்வு என்றால் "மறப்பு" (மறதி).  எம்பெருமானைப் பற்றியே எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் நித்யசூரிகள்.  நித்யசூரிகள் என்றால் யார் என்பதை முதன் முதலில் பார்த்திருக்கிறோம்.  ஆனாலும், இன்னொரு முறை நினைவு கொள்வோம் சுருக்கமாக.  நித்யசூரிகள் என்றால், பரமபதத்தில் வீற்றிருக்கும் எம்பெருமானை ஒரு நொடியும் பிரியாமல், அவனுக்குத் தொண்டுகள் செய்பவர்களே நித்யசூரிகள் எனப்படுவர்.  அநந்தன் (ஆதிசேஷன்), கருடன், விஸ்வக்சேனர் போன்றோரும், இதைப் போல பலபல பேர்களும் நித்யசூரிகள் எனப்படுவர்.  பகவானைக் கண்கொட்டாமல் அனுபவிப்பவர்கள் நித்யசூரிகள்.  அதனால்,  அவனைப் பற்றிய மறதி என்ற ஒன்றே இல்லாதவர்கள் நித்யசூரிகள்.  ஆக, எம்பெருமானையே நினைத்துக் கொண்டிருக்கும் நித்யசூரிகளுக்கு அல்லது எம்பெருமானைப் பற்றிய நினைவிலிருந்து தவறாத (மறப்பு) நித்யசூரிகளுக்குத் தலைவனாய் இருக்கும் எம்பெருமானை "அயர்வறும் அமரர்கள் அதிபதி" என்று காட்டுகிறார்.  

"துயரறு சுடர் அடி தொழுதெழென் மனனே"  (துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே! - மனமே என்பதே இங்கு மனனே என்று காட்டப்பட்டுள்ளது). 

மேலே உள்ள இந்தப் பாடலின் முதல் மூன்று அடிகளோடு இந்த அடியை நன்கு இணைத்துக்கொள்ளவேண்டும்.  (முதல் அடி) மேலே விளக்கியுள்ளபடியான குணங்களை உடையவன் எவனோ அவனே பகவான்.  (2ஆவது அடி)  அஞ்ஞானத்தை நீக்கி, மெய்ஞானத்தை அளிப்பவன், அருளுபவன் எவனோ, அவனே பகவான்!  (3ஆவது அடி) தன்னைப் பற்றிய சிந்தையிலிருந்து ஒரு நொடியும் தவறாமல் இருக்கும் நித்யசூரிகளை நிர்வகிக்கும் திறன் உடையவன் எவனோ, அவனே பகவான்!   இப்படிப்பட்ட உயர்ந்தவனுடைய திருவடிகளை வணங்கி, நல்லதைப் பெறுவாயாக என்று தன் நெஞ்சிற்கு உபதேசிக்கிறார் ஆழ்வார் "துயரறு சுடர் அடி தொழுதெழென் மனனே" என்பதன் மூலம்.  

இந்தப் பிரபந்தத்தில் நிரூபிக்கப்படுகிற தத்துவ ஹித புருஷார்த்தங்களை சுருக்கமாக எடுத்துரைக்கிறது இந்தப் பாசுரம்.  திருமாலே பரத்துவம், அதாவதுஎம்பெருமானே முழுமுதற்கடவுள் என்றும், அவனது திருவடிகளைத் தொழுவதே பரமஹிதம் (பரமசுகம்) என்றும், அதனைப் பற்றிப் பேசுவதே உயர்ந்த நோக்கமாகும் என்பது இந்தப் பாசுரத்தில் உணர்த்தப்படுகிறது.   இதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் வண்ணம், 1000 பாசுரங்கள் பாடினார் ஆழ்வார்.  அந்த ஆயிரம் பாசுரங்கள் பாடுவதற்கு எந்த இடையூறும் ஏற்படாத வண்ணம் ஒரு இஷ்ட தெய்வத்தைப் போற்றித் துதிக்கவேண்டுமே!  அதையும் கருத்தில் கொண்டு, தேவதா நமஸ்காரம் முதலான மங்களமும் "சுடரடி தொழுதெழு" என்பதன் மூலம் வேண்டுகிறார் ஆழ்வார். 

இன்னும் சில விளக்கங்கள் உள்ளன இந்தப் பாடலுக்கு.  அவற்றை நன்கு தெரிந்துகொள்ள, திருவாய்மொழி பிரபந்தத்தின் உயர்வு என்ன? அல்லது எதனால் இது மிகவும் போற்றப்படுகிறது என்பது விளங்கும்.  அதனை அடுத்த பகுதியில் அனுபவிப்போம். 

அன்பன்தன்னை அடைந்தவர்க்கெல்லாம் அன்பன் தென்குருகூர் நம்பி என்று போற்றப்படும் நம்மாழ்வாருக்கு மிகவும் ஆப்தமானவராய் (ப்ரீதியுடையவர்) இருக்கும்  மதுரகவி ஆழ்வாரையும், நம்மாழ்வாரின் அவயவங்களாக இருக்கும் ஏனைய ஆழ்வார்களையும் இத்திருவாய்மொழிக்கு அற்புதமான உரைநூல் அருளிச்செய்த ஆசார்யர்களையும் வணங்கி, ஏற்றுக்கொண்ட இத்திருப்பணியும் ஸ்ரீய:பதியான அவன் அருளால் நன்கு வளரவேண்டும் என்றும் பிரார்த்திகின்றேன்.  
திருவாய்மொழியின் முதல் பதிகமான "உயர்வற உயர்நலம்" எண்ணில் அடங்காத கல்யாண குணங்கள் உடையவனான பகவானின் துயர் தீர்க்கும் திருவடியை வணங்கி எழுமாறு ஆழ்வார் தன்னுடைய மனதுக்கு உபதேசிக்கிறார்.  பிற சமயத்தவர்கள் அனைவரும் பகவானின் தத்துவங்களையும் அவனது ஸ்வரூபத்தையும் உள்ளதற்கு மாறாகப் (எதிராக) பேச, அவை அனைத்துக்கும் பதில் அளிக்கும் வண்ணம் ஆழ்வார் எம்பெருமானின் மேன்மைகளை திருவாய்மொழி "உயர்வற உயர்நலம் உடையவன்: முதல் பதிகத்தில் சொல்லி, அவனது திருவடியே நல்லதைப் பெறுவதற்கான வழியாய் இருக்கிறது. ஆகவே, அந்தத் திருவடியைப் பற்றி உய்யுமாறு தன் நெஞ்சிற்கு உபதேசிக்கிறார்.

ஏன் ஆழ்வார் தன் நெஞ்சிற்கு உபதேசிக்கவேண்டும்?  ஏனென்றால், எங்கோ இருக்கும் பகவான் தன் அருகில் வந்து தனது அஜ்ஞானத்தைப் போக்கி அருளினான் ("மயர்வற மதிநலம் அருளினன்").  இதற்குக் கைம்மாறாகத் (பதிலுக்குச் செய்ய) தன்னிடம் ஏதுமில்லை; அவன் செய்த உபகராத்திற்கு நன்றி சொல்லக்கூட தன்னிடத்தில் திடம் இல்லை.  ஏனென்றால், "உயர்வற உயர்நலம் உடையவன் யவனவன்" என்று பிரபந்தத்தைத் தொடங்கினவர் பகவானது உயர்ந்த குணங்களைத் தன் மனதில் நினைத்துப் பார்த்து நினைத்துப் பார்த்துஅடுத்த வார்த்தை நாவில் எழாமல் ஆறு மாத காலங்கள் மோஹித்து விழுந்திருந்தார்.  திடம் என்பது தேகத்தில் (உடலில்) இருப்பதைக் காட்டிலும், மனதில் இருப்பதே உசிதம் (நல்லது).  ஆக, தன் அஜ்ஞானத்தைப் போக்கிய பகவானைத் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டுமெனில், அதற்கு முதலில் மனதானது துணை நிற்கவேண்டும்.  மனது இடும் கட்டளையைத்தான் உடல் செய்கிறது. மனதே மோக்ஷத்திற்கும் பந்தத்திற்கும் காரணமாய் இருக்கிறது.  "ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்து: ஆத்மைவ ரிபுராத்மாந" (ஸ்ரீபகவத்கீதை, அத.6, ச்லோ.5 - அதாவதுஆத்மாவே நம்மை சம்சாரக் கடலிலிருந்து மீட்கும் நண்பனாய் இருக்கிறான்;  ஆத்மாவே நம்மை சம்சாரக் கடலுக்குள் மூழ்கச் செய்யும் எதிரியாய் இருக்கிறான் என்று ஸ்ரீபகவத்கீதையில் கண்ணன் எம்பெருமான் அருளியுள்ளான்.  எனவே, தன் மனதினுள் இருந்த அஜ்ஞானத்தைப் போக்கி, ஞானத்தைக் கொடுத்து மஹோபகாரம் செய்த பகவானுக்குத் தன்னால் முடிந்த பரோபகாரம் ஏதாவது ஒன்றைச் செய்யவேண்டுமே என்று எண்ணி, அவனது திருவடியை வணங்கி எழு என்று தன் மனதிற்கு அறிவுறுத்துகிறார். "வாழ்த்தி அவனடியைப் பூப்புனைந்து நின்தலையைத் தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாத பாழ்த்த விதி" என்று இவர் பெரிய திருவந்தாதியில் (பாசுரம் 84) அருளியுள்ளார்.  பெருமானிடம் நாம் செய்யவேண்டிய முதல் செய்கை "அஞ்சலி" (வணங்குவது).  அப்படிச் செய்வதால் என்ன நன்மை? அறிவோம். 

எம்பெருமானின் குணங்கள் ஏராளம்.  அவற்றில் ஒன்று அவனது சௌலப்யம்; அதாவது எளிமை.  அந்த எளிமையை எப்படி நாம் அறியமுடியும்? என்றால்,  ஸ்ரீவைகுண்டத்தில் (பரமபதம்) எங்கோ இருக்கிறான் அவன்; ஆனால், அவன் நம் அருகிலும் இருக்கிறான்!!  எதற்காக அருகில் இருக்கவேண்டும்? உபகாரம் செய்வதற்கு!!  உபகாரம் எதற்கு செய்யவேண்டும்? குணம் இருப்பதால்!!   குணம் இருப்பவருக்கு ஒன்றுமே இல்லையோ என்றால், "துயர் அறு சுடர் அடி" உண்டு!!   சுடரடியை என்னசெய்யவேண்டும் என்று யோசிக்கவேண்டாம் - தொழலாம்!!   தொழுதால் என்ன கிடைக்குமோ என்று நினைக்கவேண்டாம் - எழலாம்!!  எழலாம் என்று யாருக்கு சொல்லவேண்டும் என்றால் அவரவர் தம் மனதிற்கு சொல்லவேண்டும். ஆகவேதான் ஆழ்வார், "துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே" என்று தன் மனதிற்கு முதலில் உபதேசித்தார்.  மேலே "நின்தலையைத் தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் பாழ்த்த விதி" என்று பெரிய திருவந்தாதியில் அருளினாரே? அதற்கும் இங்கு திருவாய்மொழியில் "தொழுதெழென் மனனே" என்பதற்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், "அவன் "திருவடியைத் தொழுதால் எழலாம் இல்லையேல் விழலாம்" என்ற படி. அவன் திருவடியை வணங்க மறுத்தால்அது கேட்டை விளைவிக்கும் பாழ்த்த விதியாய் இருக்கிறது.  அவன் திருவடியில் சரணாகதி செய்த விபீஷணர் வாழ்ந்தார்வணங்க மறுத்த இரணியனும் இராவணனும் வீழ்ந்தார்கள்.  இதுவே "பாழ்த்த விதி".  ஆக, "துயரறு சுடரடி தொழுதெழு" என்று தன் நெஞ்சிற்கு உபதேசிக்கிறார் ஆழ்வார். 

இந்தப் பாடலைச் சரிவரப் புரிந்துகொள்ளவேண்டும் என்றால், சரியாகப் பிரித்துக் கொள்ளவேண்டும்.  எப்படி என்றால்,

"உயர்வற உயர்நலம் உடையவன் எவனோ, மயர்வற மதிநலம் அருள்பவன் எவனோ, அயர்வறும் அமரர்கள் அதிபதி எவனோ, அவன் திருவடிகளே நம் துன்பத்தைத் தீர்க்கக் கூடியது ஆகும்; ஆகவே, அப்படிப்பட்டவனின் திருவடிகளை வணங்கி, ஏழு! மனமே! மேன்மையடை! என்று தனக்கு உபதேசித்துக் கொள்கிறார் நம்மாழ்வார்.  இங்கு ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.  இந்த "அவன்" என்று ஆழ்வார் பகவானைக் குறிக்கிறார்.  ஆனால், அந்த பகவான் யார் என்ற கேள்விக்கு அவரவர் தங்கள் தெய்வங்களைத் தான் ஆழ்வார் உரைத்துள்ளார் என்று பொய் அர்த்தங்கள் புகட்டிக் கொள்ளக்கூடும்.  ஆனால், மற்ற தேவதைகள் எதுவும் தெய்வம் ஆகாது; பகவான் என்றால் அது நாராயணன் ஒருத்தனையே குறிக்கும்.  மற்றவர்கள் யாரும் ஏதோ அவரவர் பக்தர்களால் பகவான் என்று அழைக்கப்பட்டனரே ஒழிய, எவன் ஒருவன் இந்த ஜகத்துக்கே அதிபதியாய் இருப்பதுடன், எல்லோரையும் காத்து அருளுகிறானோ, எவன் ஒருவன் எல்லோருடைய துயரையும் தீர்த்து அருளுகிரானோ, எவன் ஒருவன் எல்லோருக்குள்ளும் வெளியும் இருந்து அவர்களை நியமிக்கிரானோ, எவன் ஒருவன் யார் எதைக் கேட்டாலும் தரவல்லவனாய் இருக்கிறானோ அவனே பகவான்.  அந்த பகவான் யார் என்றால் "நாராயணனே!' ஆவான்.  அவனே முழுமுதற்கடவுள் என்று வேதங்கள் எல்லா இடத்திலும் எடுத்துக் காட்டுகிறது.  

"உயர்வற உயர்நலம் உடையவன்" என்ற திருவாய்மொழியாகிய இந்தப் பிரபந்தத்தைத் தொடங்கும்போதே, பகவானின் பரத்வத்தை, அதாவது, அவனே பரம்பொருள் என்பதைத் தெளிவாக உரைக்கிறார் ஆழ்வார்.  இந்தப் பிரபந்தம் முழுவதும் ஒவ்வொரு பாசுரத்திலும் பகவானது தனித்தன்மையைச் சொல்லிச்சொல்லி, அவரே எல்லோருக்கும் மேற்பட்டவர் என்று உரைத்துள்ளார் இவ்வாழ்வார்.  அத்தனையும் ஸாக்ஷாத் வேதவாக்கியங்களின் தமிழ்த் தொக்குப்புகள் ஆகும்.  

இந்தப் பாடலில் வரும் கடைசி வரிக்கு ஒரு சுவாரஸ்யமான அர்த்தமும் உள்ளது.  இந்தத் "துயர் அறு சுடர் அடி" என்பதற்கு,  வைணவம் போற்றும் பரமபுருஷரான  ஸ்ரீராமாநுஜருக்கு  முற்பட்ட வைணவ ஆசார்யர்கள்  விளக்கங்கள் அருளிச்செய்தது எப்படி என்றால்எம்பெருமானுடைய திருவடி  நம் துயர் அறுக்கும் சுடர் அடி என்றபடி ஆகும்.  ஆனால், ஸ்ரீராமாநுஜர்  இதை, "துயர் அறும் சுடர் அடி" - அதாவது, அடியார்கள் துயர் தீர, தன் துயர் தீரப்பெறுகிறான் எம்பெருமான் என்று பொருள் சொன்னாராம்.  அடியார்கள் துயரைத் தீர்ப்பதற்கே அவன் இருக்கிறான்.  அடியார்களோடு சேர்ந்து இருக்க விரும்புபவன் அவன்.  அப்படி இருப்பவனை ஒருவரும் நாடவில்லை என்றால், அவன் வருத்தம் கொள்கிறான்.  ஆனால், துன்பம் என்று தன்னை நாடி வந்தவரின் துன்பத்தைத் தீர்த்து, அந்த வருத்தத்தைத் தீர்த்துக் கொள்கிறான் எம்பெருமான் என்று ஸ்ரீராமாநுஜர் நிர்வஹித்தார்.  இங்கே, அஞ்ஞானத்தால் துன்பமுற்ற நம்மாழ்வாருக்கு "மயர்வற மதிநலம்" அருளி, தன் துயரைத் தீர்த்துக் கொண்டான் என்பது இதன்மூலம் எடுத்துக் காட்டப்படுகிறது. 

"துயர் அறு சுடர் அடி" - "செய்ய சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை இடராழி நீங்குகவே என்று" முதல் திருவந்தாதியில் பொய்கை ஆழ்வார் அருளியுள்ளார். சிவந்த ஒளியுள்ள சக்கராயுதத்தை உடைய எம்பெருமான் திருவடிகளில் இடர்க்கடல் நீங்கவேண்டும் என்று சொற்களாகிய பாமாலையைச் சார்த்தினேன் என்று பொருள். அவன் திருவடியை வணங்க, பிறவி என்னும் பெருங்கடல் வற்றி, பேரின்பத்தை அடையலாம் என்பதை"இன்றே கழல் கண்டேன் ஏழ்பிறப்பும் யான் அறுத்தேன்" என்று பேயாழ்வார் தாமும் அருளிச்செய்துள்ளார் (மூன்றாம் திருவந்தாதி, பாசுரம் 2).

'புருஷ ஸுக்தம் பகவானை "ஹ்ரீச்ச தே லக்ஷ்மீச்ச பத்ந்யௌ" என்று அடையாளம் காட்டுகிறது.  அதாவது, (பகவானே!) உனக்கு பூமிதேவியும் ஸ்ரீதேவியும் பத்னிகள் என்று சொல்லிற்று.  ஆனால், அவன் யார் என்பதை அனைவரும் அறியும் வண்ணம் அவன் பெயரைச் சொல்லவில்லை. அதேபோல்ஆழ்வார் உரைக்கும் பகவான் யார் என்பது இந்த முதல் பதிகத்தில் சூஷ்மமாகத்தான்  (மறைமுகமாக) காட்டப்பட்டுள்ளது;  அவன் யார் என்பதை அவன் பெயரை நேராகச் சொன்னால்தானே புரியும்.  துயர் அறுக்கும் சுடர் அடியை உடையவனின் திருநாமம் என்ன என்பதைத் தெளிவுபடுத்துகிறார் ஆழ்வார் அடுத்த பதிகமான "வீடுமின் முற்றவும்" என்ற பதிகத்தில், "வண்புகழ் நாராணன் திண்கழல் சேரே" (திருவாய்மொழி, 1-2-11) என்பதன் மூலம், அந்தத் துயர் அறுக்கும் சுடர் அடியை உடைவன் நாராயணனே என்கிறார்.  "வண்புகழ் நாரணன்" - பகவான் நாராயணன் எண்ணற்ற கல்யாண குணங்களை உடையவன் ; அதாதுஉயர்வற உயர்நலம் உடையவன்! "திண்கழல் சேரே" - "துயர் அறு சுடர் அடி தொழுது ஏழு என் மனனே! எளிதாகப் புரியவேண்டும் என்பதற்காக இரண்டு பாசுரங்களின் அர்த்தம் ஒன்றோடொன்று எப்படிப் பின்னிப் பிணைந்துள்ளது என்பதும் நிரூபணம் ஆகி, பரம்பொருள் ஒருவனே! அவன் ஸாக்ஷாத் ஸ்ரீமன் நாராயணனே! என்பது தெளிவிக்கப்படுகிறது.  


இப்படிப் பட்ட உயர்ந்த அர்த்தங்களை உடைய,  நம்மாழ்வாரால் அருளப்பெற்ற திருவாய்மொழி என்னும் மங்களகரமான திவ்யப் பிரபந்தமானது உலகத்தார் அனைவரும் தன்னை அறிந்து, தன்னை அடைந்து, உயர்ந்த கதியை அடையவேண்டும் என்ற "உயர்நலம்" கொண்ட பகவானாலேயே போற்றப்பட்ட விஷயமாகும்.  இதனை அறிவதாலோ அல்லது கற்பதாலோ என்ன பயன் என்பதைச் சுருக்கமாக அடுத்த பகுதியில் அனுபவித்து, நம்மாழ்வார் வைபவத்தை (வரலாற்றை) நிறைவு செய்வோம். 

No comments: