Azhwargal Avataram - 2

ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஆழ்வார்கள் அவதாரம்  - 2


"ஆழ்வார்கள் வாழி அருளிச்செயல் வாழி 
தாழ்வாதுமில் குரவர்தாம் வாழி - ஏழ்பாரும் 
உய்ய அவர்கள் உரைத்தவைகள்தாம் வாழி 
செய்யமறை தன்னுடனே சேர்ந்து

 யுகங்கள் நான்கு:  அவை: க்ருத யுகம், த்ரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலியுகம் ஆகும்.  இவற்றுள் தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருப்பது கலியுகம் ஆகும்.  பகவானின் அவதாரங்கள் அனைத்தும் முதல் மூன்று யுகங்களில் தோன்றியவை ஆகும்.  துவாபர யுகத்தில் தோன்றிய கண்ணன் எம்பெருமான், தனது அவதாரக் காரணம் முடிந்தபின், தன் பிரதான இருப்பிடமான பரமபதத்துக்கு எழுந்தருளினார் .  இப்பூவுலகில் எழுந்தருளியிருந்த காலத்தில் அசுரர்களை எல்லாம் அழித்து, கௌரவர்களின் அகங்காரத்தை ஒழித்து, பாண்டவர்களுக்கு நல்லது செய்து, எல்லாவற்றுக்கும் மேலாக சத்திய வாக்காய் "ஸ்ரீபகவத்கீதை"யை அருளிச்செய்தார் .  உலகோர் பெருநன்மை அடையவேண்டும் என்றே கீதையை அருளினார்.  அவனது அவதாரக் காரணம் முடிந்து, அவன் இங்கிருந்து புறப்பட்டு தன் ஆஸ்தானத்தை (பரமபதம்) அடைந்தபின், "கலி புருஷன்" இந்த பூமியை ஆட்கொண்டான்.  அப்படி, கலி புருஷன் இந்த பூமியில் வந்து ஆட்சி செய்து கொண்டிருக்கும் இக்காலமானது "கலியுகம்" என்று வழங்கப்படுகிறது.  


கலி புருஷன் ஆட்சி செய்யும் கலியுகத்தில் வாழ்பவர்கள் பெரும்பாலும் ஸத்வ குணத்தை இழந்து, அகங்கார மமகாரங்கள் (நான், எனது என்ற மனப்பான்மை) மிகுந்த ரஜோ (ராஜஸம்குணத்தையும், சோம்பல், தூக்கம், தளர்ச்சி மிகுந்த தமோ (தாமஸ) குணத்தையும் உடையவர்களாக இருப்பார்கள்.  இப்படி, மனிதர்களிடையே ஸத்வ குணம் அழிந்து, ராஜஸ, தாமஸ குணங்கள் வளர்ந்துவிட்டால், அது அவர்களை மீண்டும் மீண்டும் துன்பத்திற்கு ஆளாக்கி, ஏதோ ஒரு பிறவியைத் தந்து கொண்டே இருக்கும்;  அதனால், தன்னை அடைபவர்கள் குறைந்துகொண்டே வருவர் என்று பகவான்  எண்ணினார் .  ஆகையால், தெய்வமாகத் தான் இனி அவதாரம் செய்து உபதேசிப்பதைக் காட்டிலும், மனிதர்களுக்குள் ஞானம் மிகுந்த சிலரைப் படைத்து, உலகோரைத் திருத்தி நல்வழிப்படுத்தவேண்டும் என்று எண்ணினார்.  அதன் விளைவாகவே, அவன் ஆழ்வார்களைத் தோற்றுவித்தார்.  

ஆழ்வார்கள் அனைவரும் பகவானால் "மயர்வற மதிநலம்" அருளப்பட்டவர்கள் ஆவர்..  அதாவது, அஜ்ஞானமானது விலக்கப்பட்டு, தெளிவான, உண்மையான ஞானம் புகுத்தப்பட்டவர்கள் ஆவர்.   பகவானின் பெருமைகளைப் பாடுவதற்காகவே தோற்றுவிக்கப்பட்டவர்கள் ஆழ்வார்கள்.  ஆனாலும், இந்தப் பூமியில் வந்து பிறந்ததால், அவர்களுக்குள்ளும் பாவ புண்ணியங்கள் எங்கே தங்களையும் ஆட்கொண்டு விடுமோ என்ற அச்சம் மிகுந்திருந்தது.  ஏனெனில், நம்மை ஒரு விஷயத்தைச் செய்யச் சொல்லுவதும் மனம்தான்; அதைச் செய்யவிடாமல் தடுப்பதும் மனம்தான்.  மனமே நமக்கு நண்பனும், எதிரியும் ஆவான்.  கண்ணன் எம்பெருமானும் கீதையில் இதை  நன்கு எடுத்துக் காட்டியுள்ளார்.  பகவானைப் பற்றி இருக்கவேண்டும் என்று தூண்டுவதும் மனம்தான்; அவனைப் பற்ற விடாமல் தடுப்பதும் மனம்தான்.  பகவானிடத்தில் பற்று வைக்க, அவர் மெல்ல மெல்ல நம்மை உயர்த்துகிறார்.  அவரை  நோக்கி நாம் ஒரு அடி எடுத்துவைக்க, அவர் நம்மை நோக்கி பல அடிகள் எடுத்து வைக்கிறார்.   ஆனால், அந்த ஒரு அடியையும்   அவரை   நோக்கி எடுத்துவைக்க   அவன் அருள் இல்லையேல் அது நடக்காது.  உபாயமும் அவரே ; உபேயமும் அவரே!  அதாவது,  அடையப்பட வேண்டியவரும் பகவானே!  அதற்கான வழியை ஏற்படுத்தித் தருபவரும் பகவானே! என்று அர்த்தம்.  உபாயம் என்றால் வழி; உபேயம் என்றால் அதனை அடையும் முறை.  இரண்டும் பகவானின் அருள் இன்றி நடைபெறாது.  "பற்றுடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய வித்தகன்" என்பது நம்மாழ்வார் தனது "திருவாய்மொழி" என்னும் பிரபந்தத்தில் அருளிச்செய்த விஷயமாகும்.  அதாவது, பகவானைப் பற்றவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அவர் எளியவனாய் இருந்து, உதவி செய்கிறார்; அப்படி நினைக்காதவர்களுக்கோ, அவர் அறிவதற்கு அப்பாற்பட்டவனாய் இருக்கிறார் என்று அர்த்தம்

ஆக, பகவானை நோக்கி ஒரு அடியாவது எடுத்துவைக்க அனைவரும் முயற்சி செய்யவேண்டும் என்று ஆழ்வார்கள் அனைவரும் பேராவல் கொண்டார்கள்; பகவானைக் குறித்துப் பாடல்கள் பாடினார்கள்; அவனை அடையும் வழியைக் காட்டினார்கள்.   இதுவே பகவான் தன்னை அடைய நமக்கு ஏற்படுத்தித் தந்த உயர்ந்த வழி ஆகும்.   

ஆனாலும், ஆழ்வார்கள் தங்கள் நெஞ்சுக்கு பயந்தார்கள். ஏனென்றால், நெஞ்சானது நல்லதை நோக்கி நகர்ந்தால் பரவாயில்லை; ஆனால், தீயதை நோக்கி நகர்ந்தால் அது பகவானுக்குத் தாங்கள் செய்யும் துரோகம் ஆகிவிடுமே என்று அஞ்சினார்கள்.  பகவானுக்கு என்ன தீங்கு நேரிடுமோ என்று அஞ்சி, அவருக்குப் பல்லாண்டு பாடிக்கொண்டே தங்கள் வாழ்நாளைக் கழித்தனர்.  அந்தப் பாடல்கள் அனைத்திலும், சம்சார பந்தத்தின் கொடுமைகளையும் பேசி, ஆகையால், பிறவி என்னும் சுழற்சியில் சிக்கிக் கொண்டு துன்பப்படவேண்டாம் என்று அஞ்சி அஞ்சி, அவரது பேரருளை வேண்டிப் பாடல்களைப் பாடினார்கள்.  அப்படிப் பாடும்போதெல்லாம், தங்கள் நெஞ்சைத் துணைக்கு அழைத்துக் கொண்டார்கள். "பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம் நிரந்தரம் நினைப்பதாக நீநினைக்க வேண்டுமே"  என்று திருமழிசை ஆழ்வார் தனது "திருச்சந்தவிருத்தம்" என்னும் பிரபந்தத்தின் ஒரு பாடலில் பகவானிடம் வேண்டுகிறார்.  இதன் அர்த்தமாவது, (பகவானே!) (புலன்களால் தூண்டப்படும்விஷயங்களிலே காடு பாய்ந்திருக்கும் என் நெஞ்சானது, (மற்றொன்றில் போகாமல்) ஒருமைப்பட்டு நின்று, உன்னுடைய திருவடித் தாமரையை (ஒரு நொடியும்) பிரிவில்லாதபடி நினைக்கும்படி நீ அருளவேண்டுமே! என்பதாகும்.  ஆதலால், நம் நெஞ்சானது எவ்வளவு தூரம் பகவானைப் பற்றி நிற்கும் என்பது நமக்குத் தெரியாது; ஆனால், அதற்கு பகவானே அருளவேண்டும் என்பதே இந்தப் பாடலின் நோக்கமாகும்.  

மேலும், ஆழ்வார்களின் பாடல்கள் அனைத்திலும், அவர்கள் தங்கள் நெஞ்சுக்கு நல்லதை உபதேசித்தே பாடியிருப்பார்கள்.  பகவானால் தூய்மையான ஞானத்தைப் பெற்றவர்கள், எதற்கு தங்கள் நெஞ்சுக்கு பயப்படவேண்டும் என்று கேட்டால், நெஞ்சானது யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் திசை திருப்பும் என்பதால்.  இன்னொரு வகையில், அவர்கள் தங்கள் நெஞ்சுக்கு உபதேசித்தவைகளை எல்லாம், நம் நெஞ்சுக்கு உரைத்ததாகக் கொள்ளவேண்டுமே அன்றி, அவர்கள் தங்களுக்கு அறிவுறுத்திக் கொண்டார்கள் என்று கொள்ளக்கூடாது என்பதும் முக்கியம் ஆகும்.  

இனி, அடுத்த சில பகுதிகளில் முதலாழ்வார்கள் என்று போற்றப்படும் முதல் மூன்று ஆழ்வார்கள் பாடிய பாடல்கள் ஒரு சிலவற்றைச் சற்று அனுபவித்து, அதன் அர்த்தங்களையும் உற்று நோக்கி, அதன்பின் மற்ற ஆழ்வார்களின் சரித்திரத்தை அனுபவிப்போம்.  முதல் மூன்று ஆழ்வார்களின் நிலை என்ன என்பதைச் சற்று சுருக்கமாக அறிந்துகொள்ள, ஆழ்வார்களின் உயர்ந்த நோக்கமும், அவர்களை பகவான் படைத்த நோக்கமும் என்ன என்பது தெளிவாகும்.  

கண்ணன் எம்பெருமான் அருளிய கீதையும் சரி; ஆழ்வார்களின் பாடல்களும் சரி! இரண்டும் ஒரே விஷயத்தைத்தான் உபதேசித்தது.  அதுவே "சநாதன தர்மம்" என்பதாகும்.  "சநாதன தர்மம்" என்றால் சாதாரணமானவர்களும் கடைபிடிக்கவேண்டிய தர்மம் என்று பொருள்.  



No comments: