நம்மாழ்வார் அருளிச்செய்த திவ்யப்ரபந்தங்கள்
சடகோபரைக் கொண்டு உலகை உய்விக்க எண்ணிய திருமால் தன் பிராட்டியுடன் கருடன்மேல் வந்து, அவர் முன் தோன்றினார். தவிர, பல திவ்யதேசங்களில் கோயில் கொண்டிருந்தவாறும் காட்சி கொடுத்து அருளினார். இப்படி பெருமான் தானே வந்து தனக்கு தரிசனமும் அளித்து, ஞானத்தையும் அருளிய மகிழ்ச்சியில், அவரைக் குறித்து, நான்கு வேதங்களுக்கு இணையாக திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய அதாவது, ருக் வேத சாரமாக "திருவிருத்தம்" என்னும் பிரபந்தமும், யஜுர் வேத சாரமாக "திருவாசிரியம்" என்னும் பிரபந்தமும், அதர்வண வேத சாரமாக "பெரிய திருவந்தாதி" என்னும் பிரபந்தமும் மற்றும் ஸாம வேத சாரமாக அகிலத்தை உய்யவைக்கும் (நற்கதிக்கு ஆட்படுத்தும்)
"திருவாய்மொழி"
என்னும் பிரபந்தமும் ஆகும்.
இவற்றில், முதல் மூன்று பிரபந்தங்கள் "இயற்பா"வில் (3ஆவது ஆயிரம்) இடம் பெற்றுள்ளது. நான்காவது பிரபந்தமான திருவாய்மொழி 4ஆவது ஆயிரமாக இடம் பெற்றுள்ளது. இவர் அருளிச்செய்த நான்கு ப்ரபந்தங்களில், திருவாய்மொழி என்னும் ப்ரபந்தம் 1102 பாடல்களைக்
கொண்டதாகும். திருவாய்மொழி பிரபந்தமானது, "ஸஹஸ்ர ஸாகோபநிஷத் ஸமாகமம் நமாம்யஹம்
த்ராவிடவேதசாகரம்" என்று வைணவ ஆசார்ய புருஷர்களில்
முதல்வரான ஸ்ரீமன் நாதமுனிகளால் போற்றப்படுகிறது. அதாவது, உபநிஷத்த்தில் உள்ள ஆயிரம் வேத சாக்கைகளுக்கு சமமாக இந்தத்
திருவாய்மொழி என்னும் திவ்யப்ரபந்தம் திகழ்கிறது. இதனாலேயே, இது திராவிடவேதம் பெருமையையும் பெற்றுள்ளது. இதனாலேயே, "வேதம்
தமிழ்செய்த மாறன்" என்று இவ்வாழ்வார் போற்றப்படுகிறார்.
நம்மாழ்வாரின் தனிச்சிறப்பு
ஆழ்வார்களுக்குள்ளே நம்மாழ்வார் தலைவராகக் கருதப்படுகிறார். நம்மாழ்வாரை அவயவி என்று உடலாகவும்,ஏனைய ஆழ்வார்களை அவயவங்கள் (அங்கங்கள்) என்று கூறுகளாகவும் கருதுவது வைணவ மரபு. இந்த உருவகத்தில் பூதத்தாழ்வாரைத் தலையாகவும், பொய்கை ஆழ்வார் மற்றும் பேயாழ்வாரைக் கண்களாகவும், பெரியாழ்வாரை முகமாகவும், திருமழிசைப்பிரானைக் கழுத்தாகவும், குலசேகரப் பெருமானையும்,திருப்பாணாழ்வாரையும் கைகளாகவும், தொண்டரடிப்பொடி ஆழ்வாரை மார்பாகவும், திருமங்கை ஆழ்வாரைக் கொப்பூழாகவும்
(நாபி), மதுரகவிகளைத் திருப்பாதங்களாகவும் கொள்வர்.
ஒப்புயர்வற்ற நம்மாழ்வார் எம்பெருமானது திருவடிகளாகவே கருதப்படுவதால், திருக்கோயில்களில் திருமாலின் பாதுகைகள் "ஸ்ரீசடகோபம்"என்று தமிழிலும் "ஸ்ரீசடாரி" என்று வடமொழியிலும் வழங்கப்படுகிறது.
******
இவ்வாழ்வார்
எங்கு அவதரித்தார், யாருக்கு மகனாக அவதரித்தார் என்பதைக்
கடந்த பகுதியில் ஓரளவு அனுபவித்தோம். மேலும், பகவானே நம்மாழ்வாராக அவதரித்தார் - அதாவது, திருக்குறுங்குடி என்னும் திவ்யதேசத்து எம்பெருமானே நம்மாழ்வாராக அவதரித்தார் என்ற ஒரு குறிப்பையும் முதல்
பகுதியில் பார்த்தோம். ஆனால், இப்படி பகவானே நம்மாழ்வாராக அவதரித்தார்
என்று சொல்வதைக் காட்டிலும், அதற்கு உண்டான ஆதாரங்களையும்
காட்டினால்தான், இது உண்மை என்பது புலப்படும். எனவே, புராணங்களில் உள்ளபடி, நம்மாழ்வார் என்னும் சடகோபர் அவதாரம் அவதரித்த காரணத்தையும் சற்று
அறிந்துகொள்வோம்:
இதிஹாச புராணங்களில் நம்மாழ்வார் அவதாரம் பற்றிய சிறு குறிப்புகள் :
ப்ரம்மாண்ட புராணம் : ஸ்ரீமந்நாராயணன் ப்ரம்மாவிடம், இருபத்தெட்டாவது கலியுகத்தில் "சடகோபர்" என்று திருநாமம் கொண்டு, நானே அவதரிக்கப் போகிறேன்; அப்போது, வடமொழி மறைகளைப் (வேதங்கள்) போல, தமிழ் மறைகளை (திவ்யப்ரபந்தங்கள்) வெளியிடுவேன். அத்தமிழ் மறைகளாலே கலியுகத்தில் மக்கள் பெருவாழ்வு வாழ்ந்து முக்தி அடைவார்கள் என்று தெரிவித்தான்.
இதைப்போல, விஷ்ணு-ரிஷி ஸம்வாதம் (பேசிக்கொள்வது), நாராயண-அகஸ்த்ய ஸம்வாதம் ஆகியவைகளிலும் பெருமான் தான் "சடகோபராக" அவதரிக்கப் போவதை
அறிவித்தான். மேலும், இதிஹாசத்தில் மேன்மையானதான ஸ்ரீராமாயணம் "தக்ஷிணா திக் க்ருதா யேந சரண்யா புண்யகர்மணா" - தெற்கு, திக்கு யாவர்க்கும் புகலிடம், வேதம் தமிழ் செய்யவிருக்கும் முனியாலே என்றும் குறிப்பு உரைத்தது.
ஸ்ரீமத் பாகவதம் 11வது ஸ்கந்தத்தில், கலியுகத்தில் நாராயணனே பரம்பொருள் என்ற உறுதியான பொருளை வெளியிட, தமிழகத்தில்
தாம்ரபரணி நதிக்கரையில், நம்மாழ்வாராக அவதரிக்கப் போகிறார் என்று
குறிப்பு உரைத்தது.
விருத்தபாத்ம புராணம், கலியுக ஆரம்பத்தில், வைகாசி விசாக நக்ஷரத்தில் விஷ்ணு பக்தியை நிலைநிறுத்தும் வகையில், சேனை முதலியாருடைய (விஸ்வக்சேனர்) அம்சமான ஒருவர் அவதரிக்கப் போகிறார் என்று உரைத்தது.
மார்க்கண்டேய புராணம் நான்கு வேதங்களின் அம்சமாக (சாரமாக) நான்கு திவ்யப்ரபந்தங்களை அருள சடகோப முனிவர் தோன்றப் போகிறார் என்றும், ஸாம வேதத்தின் ஆயிரம் சாகைகளைத் தமிழ்ப்பாசுரம் வடிவமாக (திருவாய்மொழி)
அருளிச்செய்யப் போகிறார் என்றும்
உரைத்தது.
யஜுர் வேதம் : யஜுர் வேதம் ப்ராஹ்மணத்தில, காடகமென்ற பகுதியில், "பரத்வாஜோ ஹ த்ரிபிராயுர்பிர் ப்ரஹமசர்யமுவாஸ" என்ற ஒரு உபாக்யானம் உள்ளது. அதில், பரத்வாஜ மஹரிஷி அனைத்து வேதங்களையும் குறைவின்றிக் கற்க
விரும்பி, அதற்குத் தேவையான ஆயுளைப் பெற இந்திரனிடம் யாசித்துப் பெற்றார். இந்திரன், முன்னூறு ஆண்டு கழிந்து தளர்ந்த சரீரத்தை உடைய முனிவரை
மறுபடியும் கண்டு, ஒரு நூறு ஆண்டு வாழும் ஆயுளைத் தந்தால் என்ன செய்வீர்? என்றான். முனிவர் அதற்கு, மற்ற வேதங்களை அறிந்துகொள்ள முயல்வேன் என்றார். உடனே இந்திரன், வேதங்களுக்கு அளவே இல்லை. .அவை அனைத்தையும்
ஒருவன் தன் வாழ்நாளில் அறிந்துகொள்ள முடியாது என்றான். இதனால் மிகவும் வருத்தம் கொண்டார் பரத்வாஜர். இந்திரன் அவரைத் தேற்றி, "முனிவரே! கவலை
வேண்டாம்; திருவாய்மொழியாகிய ஸாவித்ர வித்யையை உபதேசிக்கிறேன் என்று சொல்லி, அதன்படி உபதேசித்து, வேதங்கள் அனைத்திலும் உள்ளதை இதன்மூலமாக அறியலாம் என்றான்.
நம்மாழ்வார் புகழுரைகள் :
ஆழ்வார்களில் தலைவரான நம்மாழ்வார் வேதத்தைத் தமிழாகச்
செய்தார் என்பதனை, "அருளினான் அவ்வருமறையின் பொருள்" (அருமறை : நான்கு வேதங்களின் அர்த்தங்களை, தனது திருவாய்மொழி என்னும் திவ்யப்
பிரபந்தத்தின் மூலம் பாடியவர்) என்று நம்மாழ்வாரையே தனது தெய்வமாகக் கொண்டிருந்த மதுரகவி ஆழ்வாரும், "வேதம்
தமிழ் செய்த மாறன் சடகோபன்" என்று ஸ்ரீமந் நாதமுனிகளும், நம்முடைய "முதல் குலபதி" என்று ஸ்ரீ ஆளவந்தாரும், "சீராரும் வேதம் தமிழ் செய்த
மெய்யன் எழில் குருகை நாதன்" என்று மணவாள மாமுனிகளும், "வேதத்தை செந்தமிழால் விரித்துரைத்தான் வாழியே" என்று அப்பிள்ளையும் கொண்டாடியுள்ளனர். "எய்தற்கரிய மறைகளை ஆயிரம் இன்தமிழால்
செய்தற்கு உலகில் வந்த சடகோபர்" (இராமாநுச நூற்றந்தாதி, 18) என்று திருவரங்கத்தமுதனார் என்னும் வைணவ ஆசார்யர் பாடியுள்ளார். அதாவது, "அணுகுவதற்கும் அறிந்து கொள்வதற்கும் கடினமான வடமொழி வேதங்களை, இனிய தமிழ்மொழிகொண்டு திருவாய்மொழியில் ஆயிரம் பாசுரங்களால் அறிவிக்க வந்தவர் என்று நம்மாழ்வாரைப் போற்றுகிறார். திருவாய்மொழியின் 1102 பாடல்களின் அர்த்தங்களை சுருங்கச்
சொல்லும் வண்ணம், 100 பாசுரங்களைக் கொண்ட திருவாய்மொழி
நூற்றந்தாதி என்ற ஒரு பிரபந்தத்தை அருளிச்செய்த மணவாள மாமுனிகள், ஒவ்வொரு
பாசுரத்திலும் நம்மாழ்வாரின் திருநாமத்தை (பெயர்) உரைத்து, அவர் புகழ் பாடியுள்ளார்.
தெய்வங்களிலே உயர்ந்த தெய்வம் திருமாலைப் போல், பரம்பொருளைத் துதித்துப் பாடிய புலவர்களில் தலைசிறந்தவர் தெய்வக் கவிஞரான நம்மாழ்வார். இவர் அருளிச்செய்த நான்கு பிரபந்தங்களில் தலைசிறந்தது, திருவாய்மொழி என்று கவிச்சக்ரவர்த்தி என்று போற்றப்படும் கம்பர் உரைத்துள்ளார். கம்பர், இராமாயணத்தை இயற்றி, அதைத் திருவரங்கம் பெரிய கோயிலில் உள்ள
மேட்டழகிய சிங்கர் சந்நிதியில் அரங்கேற்றம் செய்தபோது, அதைக் கேட்டு முடித்த அரங்கன், "என்னைப் பாடினீர் சரி! நம் சடகோபரைப்
பாடினீரோ" என்று கேட்க, அரங்கன் ஆணையைச் செவ்வனே நிறைவேற்றும் வண்ணம், நூறு பாடல்களைக் கொண்ட "சடகோபர் அந்தாதி" இயற்றி நம்மாழ்வாருக்குப் பெருமை சேர்க்க, அரங்கனும் அதைக் கேட்டு மகிழ்ந்தான்.
"திருவாய்மொழி -
தமிழ்க்கடல்"
நாதமுனிகள் திருவாய்மொழியை ஒரு கடலாக உருவகம்
செய்துள்ளார். கடலுக்குள்ள ஐந்து தன்மைகளும் திருவாய்மொழிக்கு உண்டு என்கிறார். (1) கடல் தேவர்களுக்கு அமுதம் அளித்தது; திருவாய்மொழி பக்தர்களுக்கு அமுதம் அளிக்கிறது. (2) கடலை உலகிலுள்ள மக்கள் கண்டு களிப்பர்;திருவாய்மொழியை உலகோர் விரும்புவர். (3) கடலில் எல்லாப் பொருள்களும் கிடைக்கும்; திருவாய்மொழியும் அனைத்து புருஷார்த்தங்களையும் (பெருமானுடன் சேர்த்துவைக்கும் தன்மை) கொடுக்கும். (4) கடல் அகத்தியர் வாங்க்மயம்; திருவாய்மொழி சடகோபர் வாங்க்மயம். (5) கடல், ஆறு நதிகள் போல் பல கிளைகளை உடையது; திருவாய்மொழியும் ஸாமவேதக் கிளைகளான 1000 கிளைகளின்
திரட்சி ஆகும்.
இவ்வாழ்வார் அவதரித்து, முதல் 16 ஆண்டுகள் எந்த அங்க அசைவும் இல்லாமல் இருந்தார். அதன்பின், தெய்வத்தின் அனுக்ரஹத்தால் (அருளால்)
உயர்ந்த ஞானத்தைப் பெற்றார். அந்த ஞானம்
கிட்டியபின், அந்த ஞானம் கிட்டியதன் பயனே பகவானைப் பாடுவதற்காகத்தான் என்று உணர்ந்து, பகவானை நோக்கிப் பாடல்கள் பாடினார். அதன் விஷயமாக உருவானதே (1) திருவிருத்தம், (2) திருவாசிரியம், (3) பெரிய திருவந்தாதி மற்றும் (4) திருவாய்மொழி ஆகிய நான்கு திவ்யப் பிரபந்தங்கள் ஆகும். ஒவ்வொரு பிரபந்தமும் ஒவ்வொரு வேதத்தின் சாரமாக அமைந்ததுடன், ஒவ்வொரு
பிரபந்தமும் ஒரு உயர்ந்த நோக்கைத் தேடுவதாக அமைந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக அறிந்துகொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால், மற்ற ஆழ்வார்கள் எம்பெருமான் கோயில் கொண்டுள்ள சில ஊர்களுக்குச் சென்று, அந்த ஊரைப் பற்றியும், அங்கு உள்ள பெருமாளைப் பற்றியும் பாட, ஆழ்வார்களால் பாடப்பெற்ற திருத்தலங்கள் என்பதால், அவை திவ்யதேசங்கள் என்ற பெரும்பேறு பெற்றன. நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட திவ்யதேசங்கள் மொத்தம் 36 ஆகும். ஆனால், நம்மாழ்வார்
இந்த ஊர்களுக்குச் சென்று பகவானுக்குப் பல்லாண்டு பாடுவதாகிய மங்களாசாசனம் செய்தாரா என்றால் கிடையாது. இவ்வாழ்வார் தான் பிறந்தது முதல், பகவானின் உயர்ந்த இடமாகிய பரமபதத்தை அடையும் வரை, தான் அவதரித்த இடமான திருக்குருகூர் என்னும் ஊரில் உள்ள ஒரு கோயிலின் உள்ளே இருக்கும் புளியமரத்தடியை விட்டு ஒரு அடி
கூட நகர்ந்தவர் அல்லர். பின்னர் எப்படி இவரால் பாடப்பட்ட ஊர்களானது
திவ்யதேசங்கள் ஆனது என்றால், அது பகவான் தானே இவருக்கு ஞானத்தை அருளியது மட்டுமன்றி, தான் கோயில் கொண்டுள்ள சில ஊர்களையும், அங்கு தான் எழுந்தருளியுள்ள திருக்கோலங்களையும் இவ்வாழ்வார் கண்ணாரக் கண்டு
இன்புறும்படி இவருக்கு ஞானக்கண்களை
அருள, பகவானால் அருளப்பட்ட அந்த ஞானக் கண்களால்
அவனைத் தரிசித்த இன்பம் பொங்கி, பாடல்கள் பாட, அப்படி அவரால் பாடப்பட்ட ஊர்கள் திவ்யதேசங்கள் ஆயிற்று. அதன் வகையில், 36 திவ்யதேசங்கள் நம்மாழ்வாரால் பாடப்பெற்றது.
இவ்வாழ்வார் அவதரித்து, இந்தப் பூமண்டலத்தில் வாழ்ந்தது 35 ஆண்டுகள் மட்டுமே.
இதில். முதல் 16 ஆண்டுகள் வாய் பேசாமல், நடக்காமல், அசைவு எதுவுமின்றி
இருந்திருக்கிறார். பின்னர், பகவானால் ஞானம் அருளப்பட்டார். பகவானால் அருளப்பட்ட ஞானத்தை அவனுக்கே அற்பணிக்கும் விதமாகவே இவரது எஞ்சிய
வாழ்க்கை அமைந்திருந்தது.
அதாவது, இவர் என்று பகவான் தனக்கு ஞானத்தை அளித்தானோ, அந்த நொடியே இவ்வுலகை விட்டு அகன்று, அவனைச் சேர விரும்பி, பகவானிடம் தன்னை உடனே அவனுடன் சேர்த்துக்கொள்ளுமாறு வேண்டினார். ஆனால், பகவானோ! "ஆழ்வாரே! உம்மை நாம் நிச்சயம் நம்முடன் சேர்த்துக் கொள்வோம்! ஆனால், அதற்குமுன் நீர் செய்யவேண்டியவை
நிறைய உள்ளன! அதை நீர் செய்துமுடித்தபின்தான், நம்முடன் சேரமுடியும்"என்று கூற, ஆழ்வார் உடனே, கதறத் தொடங்கினார். அந்தக் கதறல்களே அவரைப் பாசுரங்கள் பாடவைத்தது. இவரது பாசுரங்கள் அனைத்தும் அவரது இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறி அறிவிப்பதாக இருக்கும். அதாவது, ஆழ்வாருக்கு பகவான் தரிசனம் தந்தபோதெல்லாம், அவனுடன் தான் சேர்ந்துவிட்டதாக எண்ணி, மிக்க மகிழ்ச்சி அடைந்து பாடல்கள் பாடுவார்; அது அவர் தான் பெற்ற இன்பத்தை அறிவித்த நிலை; அதே சமயம், பகவான் ஆழ்வாரிடமிருந்து தன்னை மறைத்துக் கொள்ளும்போது, பகவானைப் பிரிந்த அந்த ஆற்றாமையை வெளிப்படுத்தி பாடல்கள் பாடுவார்; அது அவர் தான் பகவானைப் பிரிந்து தான்
அனுபவிக்கும் துக்கத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும். இதனால் விளைந்ததே நான்கு அற்புத திவ்யப்
பிரபந்தங்கள்.
ஒவ்வொரு திவ்யப் பிரபந்தமும், ஒவ்வொரு வேதத்தின் சாரமாக அமைந்தது. "மாறன் பணித்த தமிழ் மறை" என்று மணவாள மாமுனிகள் என்னும்
வைணவ ஆசார்யர்,
"நம்மாழ்வார்"
அருளிய திவ்யப் பிரபந்தங்களைப் போற்றுகிறார்.
"மாறன்"
என்பது நம்மாழ்வாரின் இன்னொரு திருநாமம் (பெயர்). "வேதத்தை செந்தமிழால் விரித்துரைத்தான் வாழியே" என்பது இவ்வாழ்வாருக்கு அமைந்துள்ள பல்லாண்டு (புகழ் பாடும் துதி) ஆகும். இனி, இவ்வாழ்வார் அருளிச்செய்த நான்கு பிரபந்தங்களைப் பற்றி
ஓரளவு அனுபவிப்போம்:
இவை முறையே (1) ருக் வேத சாரமாக "திருவிருத்தம்" என்னும் பிரபந்தமும், (2) யஜுர் வேத சாரமாக "திருவாசிரியம்" என்னும் பிரபந்தமும், (3) அதர்வண வேத சாரமாக "பெரிய திருவந்தாதி" என்னும் பிரபந்தமும் மற்றும் (4) ஸாம வேத சாரமாக அகிலத்தை உய்யவைக்கும் (மேம்பட வைக்கும்) "திருவாய்மொழி" என்னும் பிரபந்தமும் ஆகும். இவற்றில், முதல் மூன்று பிரபந்தங்கள் "இயற்பா"வில் (3ஆவது ஆயிரம்) இடம் பெற்றுள்ளது. நான்காவது பிரபந்தமான திருவாய்மொழி 4ஆவது ஆயிரமாக இடம் பெற்றுள்ளது. இந்த நான்கு பிரபந்தங்களைப் பற்றி சிறிது அனுபவிப்போம்.
"திருவிருத்தம்" (100 பாசுரங்கள்) - "ஆன திருவிருத்தம் நூறும் அருளினான் வாழியே" ..."ருக் வேத சாரம்".
கண்ணனைத் தலைவனாகவும், தன்னைத் தலைவியாகவும் கொண்டு பாடப்பெற்ற இவ்விலக்கியப் பாடல்கள் நூறு ஆகும் முதல் மற்றும் இறுதிப் பாடல்கள் தொடக்கம் பற்றியும், இந்தப் பிரபந்தத்தின் பயனைப் பற்றியும் உறைப்பன. மற்ற 98 பாடல்களிலும் ஆழ்வார் தம் நிலைமையை எம்பெருமானிடம் எடுத்துரைத்து, தனக்கு பேரின்பப் பெருவீட்டை (மோக்ஷம்) அருளுமாறு பிரார்த்திக்கிறார். அதாவது, பெருவீட்டைப் பெற்றால்தான் அது எம்பெருமானுடன் கூடியிருப்பதன் நிலையாகும் என்று கொண்டு, அது கிடைக்காதவரை, அவனைப் பிரிந்து இருக்கும் துன்பத்தை விவரித்து தன் பிரிவாற்றாமையை வெளிப்படுத்தியுள்ளார் ஆழ்வார். தாம் சொல்லவந்த செய்தியை எம்பெருமான் முன்னிலையில் விண்ணப்பம் செய்வதால், இந்தப் பிரபந்தத்திற்கு "திருவிருத்தம்" என்று பெயர் ஏற்பட்டது. விருத்தம் என்பது காரியவாகு பெயரைச் செய்தியைக் கூறும் நூலைக் குறிக்கிறது. முதற்பாசுரத்திலேயே எம்பெருமானை நோக்கி, "இமையோர் தலைவா!
மெய்! நின்று கேட்டருளாய்! அடியேன் செய்யும் விண்ணப்பமே" என்று கூறுகிறார். அதாவது, பெருமானே! உன் பெருமைகளைப் பேசி, உன்னுடன் கூடி இருக்கவேண்டும் என்று ஆவல் கொண்டு பாடுகிறேன்; நான் கூறப்போவது அனைத்தும் உண்மையே; ஆகையால் இதனை நிராகரித்துவிடாமல், நான் பாடப்போவதை நின்று கேட்டு அணைக்கு அருள்செய் என்று விண்ணப்பிக்கிறார். இறுதிப் பாசுரத்தில் (பாசுரம் 100) "மாறன் விண்ணப்பம் செய்த" என்றும் தெரிவிப்பதால், ஆழ்வார் திருமாலிடம் கூறும் செய்தியாகக் கொண்டு, விருத்தம் என்று திருநாமம் ஆயிற்று. இப்ப்ரபந்தத்தில் ஆழ்வார் தம்மை, திருமகளாகிய பிராட்டியின் நிலையில் சொன்ன செய்தியானதால், "திருவிருத்தம்" என்ற பெயர் ஏற்பட்டது.
இந்தப் பிரபந்தத்தில், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமன அவதாரம், இராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகிய ஐந்து அவதாரங்களையும் திருவிண்ணாடு (ஸ்ரீவைகுந்தம்), திருவரங்கம், திருவேங்கடம், திருவெஃகா, திருப்பாற்கடல் ஆகிய திவ்ய தேசங்களையும் போற்றிப் பாடியுள்ளார்.
"திருவாசிரியம்" (ஏழு பாசுரங்கள்) - "ஆசிரியம் ஏழு பாட்டு அளித்த பிரான் வாழியே" ...."யஜுர்வேத சாரம்".
ஆசிரியப் பாக்களால் அமைந்ததால், யாப்பின் அடிப்படையில் "திருவாசிரியம்" என்று பெயர் பெற்றது. பக்தி இலக்கியங்களில் ஆசிரிய யாப்பினால் பாடப்பெற்று, பாடப்பெற்ற யாப்பினாலேயே பெயர் பெற்ற முதல் நூல் "திருவாசிரியம்" ஆகும். இது ஒன்பது முதல் பதினாறு அடி வரையுள்ள ஆசிரியப்பாக்களால் ஆனது. அந்தாதி அமைப்புடையது. வடமொழி மறைகளில் (வேதங்கள்) யஜுர் வேதம் மிகப்பெரியது ஆகும். இது ஏழு காண்டங்களைக் கொண்டது. அவற்றின் சாரத்தை இவ்வாழ்வார் ஏழு ஆசிரியப் பாக்களில் அருளிச்செய்துள்ளார். பிரபந்தம் சிறிய அளவில் இருந்தாலும், பொருளில் (அர்த்த விஷயங்கள்) மிகப்பெரியது. சொற் சுவையும், பொருட் சுவையும், பக்திச் சுவையும் நிறைந்த சிறந்த பிரபந்தமாகும் இது. யஜுர் வேத மந்திரங்கள் வசன (உரை) நடையில் அமைந்தவை. அதை ஒட்டி, இப்பிரபந்தமும் அப்படியே அமைந்துள்ளது. யாகத்தின் நடைமுறையை விவரிப்பது யஜுர் வேதம்; யாகத்தினால் ஆராதிக்கப்படும் எம்பெருமானை அனுபவிப்பது திருவாசிரியம்.
நம்மாழ்வார் தமது முதற் பிரபந்தமான "திருவிருத்தத்தில்" வேண்டியபடி எம்பெருமான் பிறவியை முடித்துத் தரவில்லை. பரமபதத்தில் இவர் விரும்பும் பகவத் அனுபத்தை இங்கேயே அளித்து, மேலும் இவருடைய பாசுரங்கள் அவதரித்து, நாடு நலம் பெறவேண்டும் என்று எண்ணி, எம்பெருமான் தன்னை ஆழ்வாருக்குக் காட்டிக்கொடுத்தான். அப்போது தாம் பெற்று அனுபவித்த அனுபவத்தை இந்தப் பிரபந்தத்தில் வெளியிடுகிறார். இவர் எம்பெருமானுடைய ஸ்வரூப, ரூப, குண விபூதிகளை பிரத்யக்ஷமாக அனுபவித்தார் என்பது "மூவுலகளந்த சேவடியோயே" என்று முதற் பாட்டிலேயே அருளிச் செய்வதால் தெரிகிறது. ஸ்வரூப, ரூப, குண விபூதிகள் என்றால், "ஸ்வரூபம்"
- இயற்கையான தன்மை மாறாமல் இருப்பது; பகவான் நித்யமானவன் -
அதாவது நிலையானவன்; மேலும், அவனது
ரூபம் என்றுமே ஒளி படைத்ததாக இருக்கிறது; இது அவனது
தெய்வீகத் தன்மையின் வெளிப்பாடு; அடுத்து, குணம் - எல்லா சமயத்திலும் ஸத்வ குணம் துளியும் மாறாமல் இருக்கிறான். அதனாலேயே,
கருணை மிகுந்தவனாக இருக்கிறான். பகவானின்
இந்த மூன்று விஷயங்களையும் வெளிப்படுத்தினார் ஆழ்வார்
"திருவாசிரிய"த்தில். இதைச் சற்று சுருக்கமாக அனுபவிப்போம்:
முதலில் எம்பெருமானுடைய திருமேனி அழகை வர்ணித்து, உலகோரைக் காத்தருள "எறிகடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து" (பெருமான் திருப்பாற்கடலில் சயனித்திருக்கும்
கோலத்தை விவரிக்கிறார்)
என்றும், "சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த தாமரை உந்தி தனிப்பெரு நாயக மூவலகளந்த சேவடியோயே" என்று எம்பெருமானை அழைத்து, எல்லோரும்
இவனைப் பார்த்துக் கைகூப்பி நிற்பதாலேயே, இவனே
முதல்வன் என்பதை அறிவிப்பதாய், அவனுடைய ஸ்வரூப, ரூப, குண விபூதிகளையும் "தனிமாத் தெய்வத் தடியவர்க்கு இனி நாம் ஆளாகவே இசையுங்கொல்" என்று பகவானது அடியார்களுக்குச் செய்யும் கைங்கர்யமே பரம புருஷார்த்தம்
(பகவானைப் பெற்றுத்தரும்) என்பதையும், "மாயக் கடவுள் மாமுதல் அடியே", "ஊழிதோறூழி ஓவாது வாழியவென்று யாம் தொழ இசையுங்கொல்" என்று முதற்படியான எம்பெருமான் விஷயத்தில் மங்களாசாசனமும், அவன் ஜகத்காரணனாயும், ஜகத் ரக்ஷகனாகவும் இருக்கும் பெருமைகளைப் பேசி தேவர்களையும், உலகங்களையும் பிரளய காலத்தில் உடலில் வைத்து இரட்சித்ததை."ஓர் ஆலிலைச் சேர்ந்த எம்பெருமா மாயனை அல்லது ஒருமா தெய்வம் மற்றுடையமோ யாமே" என்று திருமாலைத் தவிர வேறு எந்தத் தெய்வமும் பரம்பொருள் ஆகாது என்று அறிவித்து, அவனைப் புகலாகப் பற்றுவதாக ((தஞ்சம் அடைவது) நிறைவு பெறுவதால், இப்பிரபந்தம் பரம்பொருளை நிர்ணயம் செய்வதாகக் கொள்ளப்படுகிறது. யஜுர் வேதம் ஸ்ரீமன் நாராயணனையும், அவனுக்குச் சரீரரமான பல தெய்வங்களையும் பற்றிய துதிகளையும், யாகங்களின் விவரங்களையும் கொண்டது. திருவாசிரியம் யாகங்களால் வணங்கப்படும் தெய்வம் ஸ்ரீமன் நாராயணனே என்று சந்தேகமறக் காட்டும் பெருமை கொண்டது.
"பெரிய திருவந்தாதி" - "ஈனமற அந்தாதி எண்பத்து ஏழு ஈந்தான் வாழியே"
இப்பிரபந்தத்தின் பொருள் (அர்த்த விஷயங்கள்) சிறப்பினைக் கருதி இது பெரிய திருவந்தாதி என்று பெயர் பெற்றது. பெருமை பொருந்திய அந்தாதி என்பதாலும் இந்தப் பெயர் ஏற்பட்டது. மேலும், இதில் ஆழ்வார் பெருமானை நோக்கி, "யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்?" - அதாவது பெருமானே! நீ பெரியவன்; உன்னைப் பாடுவதால் நானும் பெரியவன் என்பதனை யார் அறிவார் என்று அருளிச் செய்துள்ளதால் இது பெரிய திருவந்தாதி என்று போற்றப்படுகிறது. மேலும் ஆழ்வார்களில் தலைவராக இருப்பவர் நம்மாழ்வார்; ஆக அவரைப் பெரியவர் என்று கொண்டு, அவர் பாடிய இந்த அந்தாதிப் பிரபந்தத்தை பெரிய திருவந்தாதி என்று அழைத்தனர் என்றும் கூறுவர்.
திருவாசிரியத்தில் ஆழ்வார் தாம் பெற்ற இன்ப அனுபவத்தால் அதனை மேன்மேலும் அனுபவிக்கவேண்டும் என்ற ஆசை கரைபுரண்டு பெருகிச் செல்வதைப் பேசுவது பெரிய திருவந்தாதி. எனவே, பிரபந்தத்தின் பெருமையையும் அதைப் பாடிய ஆழ்வாரின் பெருமையையும் கொண்டு இதற்கு பெரிய திருவந்தாதி என்று பெயராயிற்று. சொல்லின்பம், பொருளின்பம் முதலிய குணங்களால் பெருமை பெற்று விளங்குவது இது.
முதற் பாசுரத்தில் பகவத் விஷயத்தை அனுபவிக்க முற்படும் ஆழ்வார் தமது நெஞ்சை நோக்கி,
"முயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மொடு நீ கூடி - நயப்புடைய
நாவின் தொடைகிளவி உள்போதிவோம் நற்பூவைப்
பூவின்ற வண்ணன் புகழ்" என்று அருளியுள்ளார்.
அதாவது, "நெஞ்சே! நீ தனியே ஓடாதே" நாம் இருவருமாக இணைந்து பூவைப் பூவண்ணனுடைய புகழைப் பாடுவோம் என்று ஆழ்வார் அழைக்கிறார். பிரபந்தத்தின் முடிவில், நமது பாவங்களைக் குறித்து யாரும் அஞ்சவேண்டாம் என்பதை,
"கார் கலந்த மேனியான் கைகலந்த ஆழியான்
பார்கலந்த பல்வயிற்றான் பாம்பணையான்,- சீர்கலந்த
சொல்நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ்துயரை
என் நினைந்து போக்குவர் இப்போது? என்று வருந்தி,
"எப்போதும் கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான்
மொய்கழலே எத்த முயல்"
என்று உலகோருக்கு நல்வழியைக் காட்டி, தமது பிரபந்தத்தை நிறைவு செய்கிறார்.
பாசுர விளக்கம்: எம்பெருமான் கருமை நிறம் கொண்டவன்; கையில் சக்கரத்தை ஏந்தியவன்; பிரளயம் வந்தபோது ஜகத்தைத் தன் வயிற்றில் தாங்கியவன்; மேலும், ஆனந்தாழ்வானைப் (ஆதிசேஷன்) படுக்கையாகக் கொண்டவன்; இப்படிப் பட்ட பெருமைகளை உடையவனைப் பாடித் தன் பாவங்களைப் போக்கிக் கொள்ளாமல் திரிபவர்கள், வேறு எதைச் செய்து அதனைப் போக்கிக் கொள்வர்? என்றும், மேலும், அவன் கையிலிருக்கும்
சக்கரமானது ஒருநொடிகூட பிரியாமல் இருக்கிறது; அடியவர்களை இரட்சிப்பதற்காகவே அவன் தன் கையில் எப்போதும் சக்கரத்தை ஏந்தி நிற்கிறான்; அவன் திருவடிகளையே உய்வதற்கான உபாயமாக (வழியாக) நாம் பற்றிக் கொள்ள முயற்சிக்கவேண்டும் என்று அறிவுறுத்துதல்.
"திருவாய்மொழி"
"இலகுதிருவாய்மொழி ஆயிரத்தொரு நூற்றிரண்டுரைத்தான் வாழியே"
மற்ற ஆழ்வார்கள்
அனைவராலும் பாடப்பெற்ற திவ்யப் பிரபந்தங்களைக் காட்டிலும்,
இவ்வாழ்வாரே அருளிச்செய்த முதல் மூன்று திவ்யப் பிரபந்தங்களைக் காட்டிலும், இவரால் பாடப்பெற்ற "திருவாய்மொழி" என்னும்
பிரபந்தம்தான் மிகவும் முக்கியமானது. கண்ணபிரான் கீதையில் "ச்ருதிஸ்ம்ருதிர் மமைவாஞ்ஞா" என்கிறார் - அதனால் வேதம் ஆணை (ஸத்யம்) என்பதும் மாறுபாடு இல்லாதது என்றும் பெருமைபெறுகிறது. அதைப்போலவே, 1102 பாடல்களைக் கொண்ட திருவாய்மொழியும் "ஆணை ஆயிரம், ஏதமில் ஆயிரம், பொய்யில் பாடல், முந்தை ஆயிரம், அழிவில்லா ஆயிரம்" என்றபடி மேம்பாடு உடையது. அநாதியான (மிகவும் பழமையான) வேதங்களை நாராயணன் நான்முகனுக்கு ஓதி வெளியிட்டான் அதுபோலவே, நித்தியமான தமிழ் வேதமான திருவாய்மொழியை பகவான் ஆழ்வாருக்கு ஓதினான். ஆதலால் இதனை ஆழ்வார் அருளினார் என்கிறோம். ருக்வேதம் ஸ்வர விவரணமாய் கானரூபமான ஸாமவேதமாயிற்று. அது போலவே ரிக்வேத சாரமான திருவிருத்தம் இசையோடு கூடிப்பரவி, திருவாய்மொழி (சாமவேத சாரம்) ஆயிற்று. திருவாய்மொழியின் ஒவ்வொரு பதங்களும் திருமால் பெருமையையே பேசுகிறது.
ஆழ்வார் எம்பெருமானை ஞானக்கண்ணால் கண்டுகளித்தார். அக்களிப்பினால் சொல்மாலைகள் பாடினார். ஒவ்வொரு பாசுரமும் இறைவனுக்கு அணிவித்த மாலை என்று கொள்ளுதலே பொருத்தமாகும். "அருள்கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான்" என்று நம்மாழ்வாரைப் போற்றுகிறார் மதுரகவிகள். அதாவது, உலகோர் அனைவரும் எம்பெருமானையே உபாயமாகப் பற்றி உய்யவேண்டும் என்று பேராவல் கொண்டு 1102 பாசுரங்கள் கொண்ட திருவாய்மொழியை அருளிச்செய்தார் நம்மாழ்வார் என்று பொருள்.
"என் நெஞ்சத்து உள்ளிருந்து இங்கிருந்து தமிழ்நூல் இவை மொழிந்து" என்றும், "பண்ணார் பாடல் இன்கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி" என்றும் பாடி, பகவானே தம் உள்ளத்திலிருந்து பாடல்களைப் பாடுகிறான் என்பது ஆழ்வாரது கூற்று (கருத்து).
பகவானது திருவருளால் ஆழ்வார் தாம் பெற்ற நலத்தை ஒவ்வொரு பதிகத்திலும் விளக்குகிறார். "பதிகம்" என்றால், பத்து பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகும். இதைப்போல ஒரு நூறு (100) பதிகங்களைக் கொண்டது "திருவாய்மொழி"ப் பிரபந்தம். ஒவ்வொரு பதிகமும் பகவானின் விசேஷ குணங்களை
அனுபவிப்பதாக இருக்கும். முதலில் இவர் மதிநலம் (தெளிந்த ஞானம்) பெற்றார். பகவானது அருளால் தாம் கண்ட தத்வத்தை (உண்மையை) மறவாமை நேர்ந்தது; இந்த ஞானத்தின் விளைவாக இவர் தேறியது; தாம் பெரும் மோக்ஷம் பெருமானது அருளாலேயே - அவனது கருணையாலேயே என்பதை உறுதிசெய்து பாடியுள்ளார் ஆழ்வார். பகவானுக்கு எல்லா காலத்திலும் எல்லா நிலைகளிலும், எவ்வகைகளிலும் அடிமை செய்வது தமது பேறென்று விரும்பினார். தாம் கோரும் (விண்ணப்பிக்கும்) அடிமைக்கு விரோதமான பிறவியை இவர் கடிந்தார் (வெறுத்தார்). பின்பு பகவானை அனுபவிப்பதற்குப் பெரியதோர் காதல் கொண்டார் இவனது திருவடிகளில் பணிந்து இவனே உபாயம் (வழி) என்று துணிந்திருந்தார்.
நம்மாழ்வார் "வேதம் தமிழ்செய்த மாறன்" என்று மணவாள மாமுனிகளால் போற்றப்படுகிறார். அவர் அருளிச்செய்துள்ள திருவாய்மொழியானது "தமிழ்வேதம்" என்றும் போற்றப்படுகிறது. இந்த வேதஸமான (வேதத்திற்கு சமமான) திருவாய்மொழி அவ்வேதத்தை வெளியிட்டது எவ்வாறு என்றால்,
"ஸத்யம் ஞானம் அநந்தம் பிரம்ம" என்கிற வாக்கியத்தை "உணர்முழுநலம்" என்றும், "பதிம் விச்வஸ்யாத்மேச்வரம் சாச்வதம் சிவமச்சுதம் நாராயணம்" என்கிற வாக்கியத்தை "நாரணன் முழு ஏழுலகுக்கும் நாதன்" என்றும், "எண்பெருக்கந்நலத்து ஒண்பொருள் ஈறில வண்புகழ் நாரணன்" என்றும், "சக்ஷூர் தேவநாம் உதமர்த்யாதாம்" என்கிற வாக்கியத்தை "கண்ணானாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு" என்றும், "ஹ்ரீச்சதே லக்ஷ்மீச்ச பத்ந்யௌ" என்கிற வாக்கியத்தை "தேவிமாராவார் திருமகள் பூமி" என்றும் தம்முடைய செஞ்சொற்களாலே வேதத்தை தமிழ்படுத்தி அருளினார் நம்மாழ்வார்.
திருவாய்மொழியின் பயன்: எம்பெருமானார் (இராமாநுசர்) இவ்வுலகோருக்கு உபதேசம் செய்தவைகளுள் "மிகச்சிறந்த செல்வமும், தந்தையும், தாயும் குருவும் தெய்வமும் நம்மாழ்வாரின் திருவாய்மொழியே ஆகும்" என்பதே சிறப்புடையதாய் இருக்கிறது. மாறனின் செந்தமிழ் ஆரணம் பெருமையுடையது. பரபக்தி, பரஞ்ஞானம், பரமபக்தி முதலான நல்லியல்புகள் உடையது திருவாய்மொழி. மோக்ஷத்தை அடையும் வழியைக் காட்டுவது இது. திருவாய்மொழியை ஒதுபவரை தவறாது காக்கும் தன்மையுடையது திருவாய்மொழி. இதனை நன்கு உணர்ந்து கற்பவர் வைணவர் ஆவார்.
அறிந்துகொள்ளவேண்டியது : பரபக்தி பரஞானம் பரமபக்தி என்றால், எம்பெருமானே பரன் அதாது முழுமுதற்கடவுள், ஆதிபகவன் என்ற உயர்ந்த அறிவைப் பெற்று,
அவனைத் தவிர
வேறு தேவதையை வணங்காமலோ,
வழிபடாமலோ
இருப்பது ஆகும்.
"மாமேகம் சரணம்
வ்ரஜ:" (கீதை)
- "என் ஒருவனையே சரணட" என்று உணர்த்திய பகவானின் வார்த்தையைச்
செவ்வனே மனதில் கொண்டு,
அவன் திருவடியே
நற்கதியைப் பெறுவதற்கான சிறந்த வழி என்று உணர்ந்து, அப்படி உணர்ந்தபின்,
மற்ற விஷயங்கள்
(உலக விஷயங்கள்) அனைத்தையும் புல்லுக்குச் சமமாக நினைத்து, மேலும், இந்தச் சரீரமானது (உடல்) அழியக்கூடியது; நிலையற்றது; ஆனால், உள்ளே இருக்கும் அந்தர்யாமியான ஆத்மாவோ நிலையானது; அழிவற்றது என்பதை நன்குணர்ந்து, அந்த ஆத்மாவை பகவானைப் பற்றிய சிந்தையிலேயே
வைத்து,
சம்சாரமாகிய
இந்தப் பிறவிக் கடலை வற்றச் செய்யக் கூடியதாக இருக்கும் நிலையே பரபக்தி பரஞானம் பரமபக்தி என்று வழங்கப்படுகிறது. ஆழ்வார்கள் அனைவரும் இந்த நிலையில்
இருந்ததால்தான் அவர்களால் உயர்ந்த பாடல்களைப் பாட முடிந்தது. பாடல்கள் என்றால் அவை வெறுமே ஒரு தமிழ் மொழியில் அமைந்தது என்றபடி இல்லாமல், பகவானால் அருளப்பெற்ற உயர்ந்த நான்கு வேதங்களின் சாரமாக, கரும்பிலும் இனிய சாற்றைப் போல் அமைந்ததால்தான்
இவை திவ்யப் பிரபந்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன. "கரும்பின் இன் சாறுபோல பருகினேற்க்கு இனியவாறே" என்று பகவானை அனுபவிக்கிறார் திருமங்கை
ஆழ்வார்.
பகவானையே ஒரு
அமுதமாகப் பருகுகிறேன் என்கிறார் இவர். ஏன் இப்படிச் சொல்கிறார்? திவ்யம் என்றால் இனிமை என்று பொருள். திவ்யப் பிரபந்தம் என்றால் இனிமையான சொற்களைக்
கொண்ட ஒரு தொகுப்பு ஆகும். இனிமையான சொற்கள் என்று ஏன் அழைக்கப்படுகிறது என்றால், அவை அனைத்தும், மனதாலும், வாக்காலும், செய்கையாலும் அனுபவிப்பதற்கு இனிமையானவனாய் இருக்கும், எவ்வளவு பருகினாலும் திகட்டாத அமுதமாய் இருக்கும் பகவானைப் பற்றிய
குறிப்புகளைத் தெரிவிப்பதாக இருக்கக்கூடியதால் "திவ்யப் பிரபந்தம்" என்று ஆனது ஆழ்வார்கள் அருளிச்செய்த பாடல்கள். இப்படி, பருகப்
பருக திகட்டாமல் இருக்கும் பகவானை "ஆரா அமுது" என்று உரைத்துள்ளார் நம்மாழ்வார் ஒரு பாசுரத்தில். "எனக்கு ஆரா அமுதாய், எனதாவியை இன்னமுதை" என்று திருவாய்மொழிப்
பிரபந்தத்தின் இறுதியில் தெரிவித்துள்ளார். ஆரா
அமுதம் என்றும், இன்னமுதம்
என்றும் பகவானைப் பாடி, தனக்குள்ளே இருக்கும் அவனது அந்தர்யாமித்துவத்தை, 'எனதாவியை" (எனது ஆவி - ஆவி என்றால் ஆத்மா) வெளிப்படுத்துகிறார்.
No comments:
Post a Comment