ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத்
வரவரமுநயே நம:
முதலாழ்வார்கள் வரலாறு - பகுதி 3
பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்
இப்படி மூன்று ஆழ்வார்களும் ஒன்று சேர்ந்து நின்று பெருமானை
அனுபவித்து, முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி மற்றும்
மூன்றாம் திருவந்தாதி என்று மூன்று திவ்யப்ரபந்தங்களை முறையே அருளிச்செய்தனர்.
இவர்கள் மூவரும் நின்று பெருமானை அனுபவித்து திவ்யப் பிரபந்தங்கள் அருளிச்செய்த
இடமானது திருக்கோவலூரில் உள்ள “ம்ருகண்டு” மகரிஷியின்
ஆசிரமத்து இடைகழி (தாழ்வாரம்) ஆகும்.
இவர்கள் மூவருடன் சேர்ந்து தானும் நிற்க விருப்பம் கொண்டு
பெருமானும் பிராட்டி சகிதமாய் அங்கு எழுந்தருளினான். அர்ச்சாமூர்த்தியாய் தான் எழுந்தருளியிருக்கும்
மற்ற திவ்யதேசங்களைக் காட்டிலும், பரவாசுதேவனாய் வீற்றிருக்கும் வைகுந்தத்தைக்
காட்டிலும், வியூக வாசுதேவனாய் சயனித்திருக்கும் திருப்பாற்கடலைக் காட்டிலும்,
மெய்யடியார்கள் இதயமே அவன் தனது பிரதான
இருப்பிடமாகக் கொள்கிறான். "உளன்கண்டாய்
நன்னெஞ்சே உத்தமன் என்னும் உளன் கண்டாய்" என்று பொய்கையாழ்வாரும், "மனத்துள்ளான்
வேங்கடத்தான் மாகடலான்" என்று பூதத்தாழ்வாரும், "மனத்துள்ளான் மாகடல்
நீருள்ளான்" என்று பேயாழ்வாரும்,
தங்கள் மனத்தினுள் எம்பெருமான் கோயில் கொண்டிருப்பதைத் தெள்ளத் தெளிவாக
உணர்த்தியுள்ளனர்.
வருத்தும்
புற இருள் மாற்றும் திவ்ய விளக்கை ஏற்றும் வண்ணம்
"வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்யகதிரோன் விளக்காக - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று." - என்று அருளிச்செய்தார் பொய்கையார்.
விளக்கம் : பூமியை அகலாகவும் அதை சூழ்ந்திருக்கும் கடலை
நெய்யாகவும், உஷ்ணமான (சூடான) கிரணங்களை
(கதிர்கள், ஒளிக்கற்றைகள்) உடைய சூரியனை
விளக்காகவும் கொண்டு, சிவந்த ஒளியுள்ள
சங்கராயுதத்தை உடைய எம்பெருமான் திருவடிகளில் இடர் (துன்பக்) கடல் நீங்க
வேண்டுமென்று சொற்களாகிய இப்பாமாலையை சார்த்துகிறேன்.
அடுத்து, இறைவனைக் காணும் பக்தியும் அன்பும் கொண்ட
பூதத்தார்,
"அன்பே தகளியா ஆர்வமே
நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியாக - நன்புருகி
ஞானச் சுடர் விளக்கேற்றினேன், நாரணற்கு
ஞானத்தமிழ் புரிந்த நான்" - என்று அருளிச்செய்தார்.
விளக்கம்: அன்புசேர்ந்த பக்தியையே அகலாகவும், ஈடுபாடே நெய்யாகவும், மகிழ்ச்சியால்
கரைந்திருக்கும் மனமானது திரியாகவும், ஞான ஸ்வரூபமான ஆத்மா
கரைந்து நாராயணனாகிய எம்பெருமானுக்கு ஞானத்தைத் தரும் தமிழ் நூலைச் செய்த நான், பரபக்தியாகிற சுடர் விடும்
விளக்கைத் ஏற்றினேன்
இவர்கள் இருவரும் ஏற்றிய விளக்கில், தங்களை நெருக்கியது எம்பெருமானே என்றறிந்த பேயாழ்வார் தான் பெற்ற தரிசனத்தை உணர்த்தும் வண்ணம்,
"திருக்கண்டேன் பொன்மேனி
கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று"
பாசுர விளக்கம்: பெரிய பிராட்டியாரை (ஸ்ரீமஹாலக்ஷ்மி) சேவித்தேன்; அழகிய திருமேனியையும் சேவிக்கப்
பெற்றேன்;
ஒளிவிடுகின்ற
சூரியனைப் போன்று அழகிய ஒளியைக் கண்டேன்; போரில் கிளர்ந்து எழுந்த
அழகிய சக்ராயுதத்தைக் கண்டேன்; வளைந்த சங்கத்தையும் திருக்கையில் கண்டேன்
என்று பாடுகிறார்
ஒருவரைப் பார்த்தால், அதைப் பற்றி மற்றவரிடம்
பேசும்போது, அவரைப் பார்தததற்கு அடையாளமாக
சிலவற்றைக் கூறினால்தானே, மற்றவர்கள் அதை ஏற்றுக்கொள்வர். "கண்டேன் சீதையை" என்று வெறுமனே சொன்னால் தன் நாதனான இராமன் அதை ஏற்றுக்கொள்ளமாட்டான்; நம்பமாட்டான். ஆதலால், திருமகளைத் தான் கண்டேன் என்பதை உணர்த்துவதற்காகவே, பிராட்டியிடமிருந்து கணையாழியைப் (மோதிரத்தை) பெற்றுக்கொண்டு, இராமனிடம் அதைக் காட்டி, அவனை மகிழ்வித்தான் அனுமான். இதைக் கருத்தில் கொண்டே
பேயாழ்வார் தான் பெற்ற தர்சனத்தை வெறுமனே அறிவிக்காமல், பெருமானுடன் சேர்ந்திருக்கும்
திருமகளையும்,
திருக்கைகளில்
ஏந்தியிருக்கும் சக்கரத்தையும், சங்கையும் தரிசித்தேன்; பொன்மயமான ஜோதியை உடைய
எம்பெருமானை தரிசித்தேன் என்று தான் தரிசித்தது திருமாலையே என்று பல வித ஆதாரங்களையும்
அடையாளங்களையும் சொல்லி அறிவித்தார்.
"திருவரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள் இன்பமிகு
பெருங்குழுவும் கண்டு யானும் இசைந்துடனே என்று கொலோ இருக்குநாளே" என்று
(பெருமாள் திருமொழி) பிரார்த்தித்தார் குலசேகர ஆழ்வார். எம்பெருமானின் அடியார்களுடன்
(தொண்டர்கள் - தொண்டாகிய கைங்கர்யத்தைச் செய்து வாழ்பவர்கள்) கூடி இருக்கவேண்டி, அதைப்
பிரார்த்திக்கும் பாசுரம் இது. ஆனால், முதலாழ்வார்களின் வைபவத்தால் நாம்
அறியவேண்டியது என்னவென்றால், அனைவரும் தன் அடியவர்களாக இருக்கவேண்டும்;
எப்பொழுதும் அவர்களுடன் நான் சேர்ந்து இருக்கவேண்டும் என்று பேரவா கொள்கிறான்
எம்பெருமான்; அதை உணர்த்தும் வண்ணமே, மெய்யடியார்களான முதலாழ்வார்களுடன் தான்
ஒன்றுசேர்ந்து நின்ற இடத்தையே (இடைகழி) தன் "கர்ப்பக் க்ருஹமாக"க்
கொண்டு, அங்கு (திருக்கோவலூர்) திரிவிக்கிரமனாய் நித்யவாசம் செய்து அனைவர்க்கும்
இன்னருள் செய்துகொண்டிருக்கிறான் எம்பெருமான். "மன்னும் இடைகழி எம்
மாயவன்" என்று இப்பெருமானுக்குப் பல்லாண்டு (மங்களாசாசனம்) பாடியுள்ளார்
திருமங்கை ஆழ்வார் (பெரிய திருமடல்).
இவர்கள் ஏற்றிவைத்த பக்திவிளக்கானது, இருள்தருமா ஞாலத்தில்
பிரகாசத்தை விளைவித்து, அனைவரும் எம்பெருமானின் தர்சனத்தைப் பெறும் பெரும் பாக்கியத்தை
அடைவித்துத் தரும் என்பது திண்ணம் (உறுதி). "உபாயமும் அவனே; உபேயமும் அவனே"! அதாவது, அடையப்பட
வேண்டியவனும் அவனே; அவனை அடையும் வழியை ஏற்படுத்தித் தருபவனும் அவனே" என்று
பொருள். தன்னை அனைவரும் வந்தடைய
வேண்டும் என்ற பெருத்த ஆவல் கொண்டே, அவன் மெய்யடியார்களான ஆழ்வார்களையும்,
ஆசார்யர்களையும், பலபல மகான்களையும் இப்பூவுலகில் தோற்றுவித்திருக்கிறான்.
"கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்" என்பது
சான்றோர் வாக்கு. பகவானின் தர்சனத்தைப்
பெற்றவர்கள், அவனைவிடத் துணியமாட்டார்கள்; அவனை விடத்துணிபவர்கள், அவனது தர்சனத்தை
ஒருபோதும் பெறப்போவதில்லை. இதை உணர்ந்து, தங்கள் திவ்யப்ரபந்தங்கள் மூலம், ஆழ்வார்கள் ஏற்றிவைத்த
பக்தியென்னும் திருவிளக்கின் ஒளியை நம் உள்ளத்திலும் தக்கவைத்துக்கொண்டு, அவன்
தர்சனத்தைப் பெற பிரார்த்திப்போம்.
முதலாழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
No comments:
Post a Comment