Periyazhwar Vaibhavam

ஸ்ரீமதே ராமானுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

"பெரியாழ்வார் வரலாறு"

திருநக்ஷத்ர தனியன் :

"மிதுனே ஸ்வாதிஜம் விஷ்ணோ ரதாம்ஸம் தந்விந: புரே 
பரபத்யேஸ்வஸுரம் விஷ்ணோ விஷ்ணுசித்தம் புரஸ்ஸிகம்"

பெரியாழ்வார் "வேதவாய் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர்" (வேதம் ஒதுவதையே தொழிலாகக் கொண்ட அந்தணர்கள் வாழும் ஊர்) என்கிறபடியே "செய்த வேள்வியரான வையததேவர் நித்யவாசம்  பண்ணி வாழ்கின்ற   ஸ்ரீவில்லிபுத்தூரிலே, பிராம்மண உத்தமரான வேயர் தங்கள் குலத்திலே,  ஆனி மாதம் ஸ்வாதி நட்சத்திரம் அன்று எம்பெருமானின் வாகனமான (ஊர்தி) கருடனின் அம்சமாக  அவதரித்து, "விஷ்ணுசித்தர்" என்கிற திருநாமத்தை உடையவராய் இருப்பவர்.  இவர் திரு அவதரித்த நன்னாளை உபதேச இரத்தினமாலையில் ஸ்ரீமத் மணவாள மாமுனிகள்,

"இன்றைப் பெருமை அறிந்திலையோ ஏழைநெஞ்சே 
இன்றக்கென் ஏற்றமெனில் உரைக்கேன் - நன்றிபுனை 
பல்லாண்டு பாடிய நம்பட்டர்பிரான் வந்துதித்த 
நல்லானியில் சோதிநாள்" (பாசுரம் 16)
      என்று கொண்டாடுகிறார்

பாசுர விளக்கம்:  அறிவிலாத மனமே! இன்றைக்கு உண்டான பெருமையை அறியமாட்டாயோ?  இந்த நாளுக்கு என்ன பெருமை என்றால், சொல்லுகிறேன் கேள்!  சகல நன்மைகளையும் அளிக்கும் "திருப்பல்லாண்டு" என்னும் திவ்யப்ரபந்தத்தை அருளிச்செய்த நம் பெரியாழ்வார் வந்து தோன்றிய ஆனி மாதத்து சோதி  (ஸ்வாதிஎன்கிற நல்ல நாள் காண்.  மேலும் மாமுனிகள் பெரியாழ்வார் அவதார நன்னாளை,

"மாநிலத்தில்முன் நம்பெரியாழ்வார் வந்துதித்த 
ஆனிதன்னில் சோதியென்றால் ஆதரிக்கும் - ஞானியர்க்கு 
ஒப்போரிலை இவ்வுலகுதனில் என்று நெஞ்சே 
எப்போதும் சிந்தித்திரு" (பாசுரம் 17)
   என்றும் கொண்டாடுகிறார்.

பாசுர விளக்கம்:  மனமே! முற்காலத்தில் நமக்குத் தலைவரான பெரியாழ்வார் இவ்வுலகில் வந்துதித்த ஆனிமாதத்து ஸ்வாதி நக்ஷத்திரம் என்றபோதே கொண்டாடுகின்ற ஞானிகளான பெரியவர்களுக்கு சமமானவர்கள் இவ்வுலகில் எவருமில்லை என்று சதா சர்வகாலமும் அனுசந்திப்பாயாக.  

விஷ்ணுசித்தர் என்ற பெயர் கொண்ட பெரியாழ்வார் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வடபெரும் கோயில் உடைய எம்பெருமானுக்கு திருநந்தவனம் அமைத்து, மாலை கட்டி சாத்திக் கொண்டிருந்தார்  அப்போது, பாண்டிய குலத்தைச் சேர்ந்த ஸ்ரீவல்லபன் என்னும் அரசன் கூடல் என்ற மதுரை நகரில் அரசு செலுத்திவந்தான்.  ஒரு சமயம் ஒரு ஏழை அந்தணனின் வாக்கின்படி இகத்திலேயே (இந்த உலகத்திலேயே) பரலோகத்திற்கு வேண்டியவைகளுக்கு பரவத்ஸம் செய்யவேண்டும் (நற்கதியைப்  பெறுவதற்கான விஷயங்களை ஏற்படுத்தித் தருதல்என்பதை அறிந்து, அதனால், தன் புரோகிதனரான செல்வநம்பி என்பவரை அழைத்து பரம்பொருளை நிர்ணயம் செய்வது -  அதாவது, எது  முழுமுதற்கடவுள் எவ்வாறு என்று விளவினான்

செல்வநம்பி வித்வான்களைக் கூட்டி விவாதம் நடத்தி  செல்வம் நிறைந்த பொற்கிழி (ஸ்வர்ண நாணயங்கள் நிறைந்த பொற்கிண்ணம்ஒன்றை சபா மண்டபத்தில் ஒரு தோரணத்தில் கட்டி,, எந்த வித்வானுக்குக் கிழி தாழ்கிறதோ, "பரம்பொருள்" இதுதானென்று அவர் அளிக்கும் விளக்கமே உண்மையானது என்றுகொள்ளவேண்டும் என்று பணித்தார்

இதனிடையில், விஷ்ணுசித்தரின் (பெரியாழ்வார்) கனவில் எம்பெருமான் தோன்றி, அவரை அந்த மண்டபத்திற்குச் சென்று தன்னைப் பற்றி பேசி, தன் பரத்துவத்தை நிரூபணம் செய்யுமாறு பணித்தான்.  இதைகேட்ட இவர் மிகவும் அஞ்சி, பெரிய பெரிய வித்வான்களுக்கு இடையில் ஒன்றும் தெரியாத தான் எப்படி உம்மைப்பற்றி பேசி வெற்றிகொள்வது என்று கேட்க, எம்பெருமான் "நீர் அங்கு செல்லும் போதும்; மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று கூற, அவரும் அதற்கு சம்மதித்தார்.  பின்னர் தான் கனவில் கொண்ட எம்பெருமானின் ஆணைப்படி பல வித்வான்கள் கூடியிருக்கும் அந்த மண்டபத்திற்குச் சென்றபோது, அங்கே கூடியிருந்தவர்கள் அனைவரும் இவரைப் பார்த்து நகைத்துப்  (கேலிசெய்து) பேசினர்.  மேலும் ஒன்றும் தெரியாத இவர் இந்த அரங்கில் வந்ததே தப்பு என்றும், இந்த விஷயத்தில் இவர் கலந்து கொள்வது சரியில்லை என்றும் கூறி அவரது வருகையை ஆட்சேபித்தனர்.   இருந்தும், சபைக்கு வந்தோரை அவமதித்தல் தருமமன்று என்று கூறி, செல்வநம்பி விஷ்ணுசித்தரை அழைத்து வேதாந்தங்கள் கூறும் பரம்பொருள் யார் என்று நிச்சயிக்க (நிரூபிக்க) வேண்டினான்.  

விஷ்ணுசித்தர் வால்மீகி, துருவன்  ஆகியோரைப் போன்று  பகவானாலேயே  அறிவாற்றல் பெற்று, மிகுந்த திறமையுடன் ஸ்ரீமன் நாராயணனே முழுமுதற்கடவுள்என்று வேதங்கள், ஸ்மிருதிகள், இதிகாசங்கள், புராணங்கள் இவைகளிலிருந்தும் ஆயிரமாயிரம் மேற்கோள்களுடன் சந்தேகத்தை அறவே ஒழிக்கும் வண்ணம் விளக்கினார்.  இவர் இப்படி உரைத்தபோது பொற்கிழி இவர் பக்கம் தாழ, இவரும் அக்கிழியை அறுத்துக் கொண்டருளினார்.  இதனைக் கண்ட அரசன் மற்ற வித்வான்கள் எல்லோரும் வியக்கும் வண்ணம், பட்டத்து யானைமேல் விஷ்ணுச்சித்தரை ஏற்றி, ஊர்வலமாக அழைத்துச் சென்றதுடன், விஷ்ணுசித்தரைப் போற்றும் வண்ணம் புகழ்துதிகள் பாடி, சங்கம் போன்ற பல வாத்ய கோஷங்களுடன் அழைத்துச் சென்று  சிறப்பித்தனர்.  மேலும் அரசன் இவருக்கு "பட்டர்பிரான்" என்ற திருநாமத்தையும் அளித்துச் சிறப்பித்தான்.  

தன்னை ஸ்தாபித்து (நிரூபித்துஇப்படி இவர் ஊர்வலமாக வருவதைகக்காணஎம்பெருமான்  தன் பிராட்டியரான லக்ஷ்மியுடன் பெரிய திருவடியான கருடன் மேல் தன் பரிவாரங்களுடன் வந்து காட்சி தந்தான்.  தன் சிறப்புக்கு எம்பெருமானே காரணம் என்றறிந்த விஷ்ணுசித்தர், இப்படி அனைவரும் காணும்படி வந்து நின்ற எம்பெருமானுக்குத் தீங்கு நேருமோ என்று அஞ்சி, தன் அன்பு மிகுதியால் காப்பாக, தான் அமர்ந்திருந்த யானைமேல் இருந்த மணிகளைத் தாளமாகக் கொண்டு "பல்லாண்டு பல்லாண்டு"  என்று பாடல் பாடத் தொடங்கினார்.  

பின்பு விஷ்ணுசித்தர் செல்வநம்பியாலும் அரசனாலும் மேலும் கொண்டாடப்பட்டு, பரிசுகள் பெற்று வில்லிபுத்தூர் திரும்பினார்.  தான் பெற்ற செல்வமனைத்தையும் வடபெரும் கோயிலுடையானுக்கு அளித்து, தன் பழைய தொண்டான கைங்கர்யமான திருமாலை கட்டுதலையே நித்தியமாகக் கொண்டார்.  பரம்பொருளுக்கே தீங்கு நேரலாம் என்ற அச்சத்தால், எம்பெருமானிடம் அன்பைக் கூட்டி பரிவு கொண்டிருந்தார் இவர்.  அந்தப் பரிவே இவருக்கு "பெரியாழ்வார்" என்னும் திருநாமத்தைப் பெற்றுத் தந்தது.  

கண்ணன் திருஅவதாரம் தொடங்கி, பிள்ளைத் தமிழுக்கு இலக்கணமாக பாடல்கள் இயற்றிய பெரியாழ்வார் கிருஷ்ணாவதாரத்தில் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தார்.  இவர் அருளிச்செய்த திவ்யப்ரபந்தமானது "பெரியாழ்வார் திருமொழி" என்று வழங்கப்படுகிறது.  திருப்பல்லாண்டு 12 பாசுரங்கள் தவிர 461 பாடல்கள் கொண்டது இவரது அருளிச்செயல்கள் ஆகும்.  

******

பரம்பொருள் யார் என்ற நிரூபணத்தில், விஷ்ணுவை நிலைநாட்டிய விஷ்ணுசித்தர் அரசனால் பெரியாழ்வார்என்னும் திருநாமம்   (பெயர்) சூட்டப்பெற்று, யானையின் மேல் ஊர்வலம் வந்தபோது, அங்கே எம்பெருமான் தோன்றி பெரியாழ்வாரைச் சிறப்பித்தான். தன் முன்னே  தோன்றி,  பெருமான் தன்னைச் சிறப்பித்ததைக் கண்டு சிறிதும் பெருமை கொள்ளாமல், இப்படி அனைவரும் காணும்படி வந்து நிற்கிறாயே! உனக்கு என்ன தீங்கு நேருமோ என்று அச்சப்பட்டு பெருமானுக்குக் காப்பிடும் வண்ணம் "பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா" என்று பாடி, மேலும் மேலும் அவனைப் புகழ்ந்து பல பாசுரங்களை அருளிச்செய்தார்.  அகில உலகங்களையும் காப்பவன் எம்பெருமான்.  அப்படிப்பட்ட எம்பெருமானுக்கு யாரால் தீங்கு வந்துவிடுமோ என்று அஞ்சி, அவனைத் திரும்பிப்போகும்படி ப்ரார்த்தித்து அவனுக்குப் பல்லாண்டு பாடினார் இவர்.  கிருஷ்ணானுபவத்தில் மிகவும் ஊற்றம் கொண்டிருந்த இவர் தன்னை கண்ணனின் வளர்ப்புத் தாயான  யசோதையாகவே பாவித்து, கண்ணனை நீராட்ட அழைத்தார்; பூச்சூடிக்கொள்ள அழைத்தார்; காப்பிட அழைத்தார்; உணவுண்ண அழைத்தார்; இன்னுமின்னும் பலபல சிசிருஷைகளை ஏற்றுக்கொள்ள அழைக்கும் வண்ணம் பாசுரங்கள் பாடினார்.  

மற்ற ஆழ்வார்களும் எம்பெருமானின் மீது பரிவு கொண்டிருந்தனர்.  ஆனால், எம்பெருமானுக்கே பல்லாண்டு பாடியதால்இவர் கொண்டிருந்த அன்பு  "பொங்கும் பரிவு" ஆயிற்று.  "பெற்ற தாயினும் ஆயின செய்யும் நாராயணா என்னும் நாமம்" என்பது திருமங்கை ஆழ்வார் வாக்கு.  பெற்ற தாயைவிட பேருதவி செய்வது நாராயண நாமம் என்று அர்த்தம்.  ஆனால், அந்த நாராயணனிடம் அவன் தாயான யசோதையைக் காட்டிலும் பொங்கும் பரிவும் அன்பும் கொண்டிருந்தார் விஷ்ணுசித்தர்; அதனாலேயே இவருக்குப் பெரியாழ்வார் என்னும் திருநாமமாயிற்று.  

"சோராத காதல் பெருஞ்சுழிப்பால் தொல்லைமாலையொன்றும் 
பாராதவனைப் பல்லாண்டென்று காப்பிடும் பான்மையன்
         என்று இராமானுச நூற்றந்தாதியில் (பாசுரம் 15) பெரியாழ்வாரைப் போற்றிப் பாடியுள்ளார் திருவரங்கத்தமுதனார்  

ஒருநாளும் குறைவுபடாத பிரேமத்தில் பெருஞ்சுழிப்படுகையாலே, நித்யனான எம்பெருமானின் திருவடிகளே அனைவர்க்கும் காப்பு என்று இருந்தபோதும், "உன் செவ்வடி செவ்வித் திருக்காப்பு" அதாவது, அழகான உன் சிவந்த திருவடிகளுக்கு குறைவற்ற ரக்ஷை உண்டாகவேண்டும் என்று காப்புக்கட்டி, பல்லாண்டு பாடி மங்களாசாசனம் பண்ணிய புண்ணியர் (மேன்மையானவர், பெருமையுடையவர்என்று பெரியாழ்வாரைப் போற்றுகிறார் அமுதனார்.  

மேலும் இவர்  நித்யசூரிகள் அனைவரையும் அழைத்து, "நீங்கள்   ஒரு நொடியும் உறங்கிவிடாதீர்கள்எம்பெருமானை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்' சிறந்த காவலர்களாக இருங்கள்" என்னும் வண்ணம்

"உறகல் உறகல் ஒண்சுடராழியே சங்கே 
அறநெறி நார்ந்தகவாளே அழகிய சார்ங்கமே தண்டே 
பறவையறையா உறகல் பள்ளியறை குறிக்கொள்மின்
   என்று பாடினார்

இதுவே பொங்கும் பரிவு.  இப்படிப் பட்ட பரிவைக் கொண்ட பெரியாழ்வாரை,

"மங்களாசாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள் 
தங்கள் ஆர்வத்தளவுதான் அன்றி - பொங்கும் 
பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான் 
பெரியாழ்வார் என்னும் பெயர்." 
    என்று போற்றுகிறார் மாமுனிகள் (உப.இர.மாலை, 18)

பாசுர விளக்கம்:  ஸ்ரீவில்லிபுத்தூரிலெ அவதரித்த விட்டுச்சித்தர் பெரியாழ்வார் என்கிற திருநாமத்தை விருதாகப் பெற்றார்.  இது எதனால் என்றால், எம்பெருமானுக்குக் காப்பிடும் விஷயத்தில் இவர் மற்ற ஆழ்வார்களைக் காட்டிலும் விஞ்சி எழுந்த பரிவைக் கொண்டிருந்ததே ஆகும்.  

இப்படிப்பட்ட காப்பிடும் வண்ணம் பாடப்பட்ட "திருப்பல்லாண்டு" என்னும் ப்ரபந்தம் மற்ற பிரபந்தங்களைக் காட்டிலும் மேன்மையானதாகக் கருதப்படுகிறது.  "திருப்பல்லாண்டு" பிரபந்தத்தைப் போற்றும் வண்ணம், மாமுனிகள்,

"கோதிலவாமாழ்வார்கள் கூறுகலைக்கெல்லாம் 
ஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும் - வேதத்துக்கு 
ஓம் என்னும் அதுபோல் உள்ளதுக்கெல்லாம் சுருக்காய் 
தான் மங்கலம் ஆதலால்"    என்று பாடியுள்ளார் ((உப.இர.மாலை, 19)

பாசுர விளக்கம்குற்றமற்றவையான ஆழ்வார்களின் திவ்யப்ரபந்தக்களுக்கெல்லாம் திருப்பல்லாண்டே முதற் பிரபாந்தமாக அனுசந்திக்கப்படுகிறது.  எதனால் என்றால், சகல வேதங்களுக்கும் "ஓம்" என்னும் பிரணவம் போலே உள்ள அர்த்தங்களுக்கெல்லாம் ஸங்க்ரஹமாய்க் கொண்டு மங்கள ரூபமாயும் இருப்பது பற்றியே.  

இப்படிப்பட்ட சிறப்புடைய பெரியாழ்வாரையும் அவர் அருளிய திருப்பல்லாண்டு என்னும் பிரபந்தத்தையும் மேலும் போற்றும் வண்ணம் மாமுனிகள்,

"உண்டோ திருப்பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலைதான் 
உண்டோ பெரியாழ்வார்க்கு ஒப்பொருவர் - தண்டமிழ்நூல் 
செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில் அவர்செய்கலையில் 
பைதல் நெஞ்சே நீ உணர்ந்துபார்
    என்று பாடியுள்ளார் (உப.இர.மாலை, 20)

பாசுர விளக்கம்திவ்யப்ப்ரபந்தங்கள் அருளிச்செய்த ஆழ்வார்களுக்குள்ளே பெரியாழ்வாருக்கு நிகரான ஒருவர் உண்டோ என்றால் இல்லை; அவ்வாழ்வார்கள் அருளிச்செய்த நூல்களுள் திருப்பல்லாண்டோடு ஒத்ததொரு பிரபந்தம் உண்டா என்று பார்த்தாலும் இல்லை; மனமே! இதை நன்கு உணர்வாயாக

 "சென்னியோங்கு" பதிகத்தில் இவர் பெருமானை நோக்கி
"என்னையும் என் உடைமையையும் உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு 
நின்னருளே புரிந்திருந்தேன் இனியென் திருக்குறிப்பே"  (5,4,1) என்றும் 

"பறவையேறு பரம்புருடா நீ என்னைக் கைக்கொண்டபின் 
பிறவியென்னும்  வற்றி பெரும்பதம் ஆகின்றதால்" (5.4.2) என்றும் அருளிச் செய்துள்ளார்
     
பாசுர விளக்கம்:  “சென்னியோங்கு தண்திருவேங்கடம் உடையாய்" என்று தொடங்கி இந்தப் பதிகத்தை அருளி, திருவேங்கடவனிடம் சரணாகதி அனுட்டித்துள்ளார்  பெரியாழ்வார்..   திருவேங்கடவனேநீ எனக்கு  ஞானத்தை அருளினாய்.  அதனால்,, நானும் என் ஆன்மாவும் உனக்கே அடிமையாக ஆனோம். இதற்கு  அடையாளமாக, , உனது சின்னங்களான சங்கத்தையும்  சக்கரத்தையும் என் தோள்களில் பொரித்துக்கொண்டுவிட்டென்.  இதனால், என் கைங்கர்யங்கள் அனைத்தும் உனக்கே என்று இருக்கும்.  கருடனை  வாகனமாகக்   கொண்டு  அடியவர்களை  இரட்சிக்கும்  புருஷனேஎன்னை  உன் கைங்கர்யங்களுக்கு என்று ஆட்கொண்டபின், என் பாவங்கள் அனைத்தும் தொலைந்தது.  இதனால்,  நான் இதுநாள்  வரை ஜென்மம்  ஜென்மமாக பிறந்து கொண்டிருக்கும்  சாபமும்  நீங்கியது  பிறவித்துயர் என்னும் கடல் வற்றியதால்,  பிறவியில்லாப்  பேரின்பத்தை  அடைந்துவிட்டேன்  என்று  ஆனந்தப்படுகிறார்.

ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதத்தின் மங்கள ச்லோகம் :

ஸ்ரீவைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரிணீ  தடே |
ரமயா ரமமாணாய வேங்கடேசாய மங்களம் ||”

அதாவது ஸ்ரீவைகுண்டத்தில் நித்யனாக இருக்கும் எம்பெருமான், அவ்விருப்பிடத்தை வெறுத்து, தான் வானோர்க்கு மட்டும் தெய்வமில்லை; இந்தப் பூமியில் வாழ்பவர்க்கும் தெய்வம் என்பதை உணர்த்தும் வண்ணம்,  விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் நடுநாயகமாக இருக்கும் உயர்ந்த மலைகளையும், வராஹ புஷ்கரிணியையும் உடைய இடத்தை இருப்பிடமாகக் கொண்டான்.   வேங்கடேசன் என்ற திருநாமத்தையும் சார்த்திக்கொண்டான்.  இதனால் இந்த மலையானது  திருவேங்கடமலை என்று பிரசித்தி பெற்று திகழ்கிறது.  இப்படிப்பட்ட தயை உடைய திவ்யமான திருவேங்கடத்து எம்பெருமானுக்குப் பல்லாண்டு (வாழ்ச்சி) என்பது இந்த ச்லோகத்தின் அர்த்தம்.  .  

அப்படிப்பட்ட திருவேங்கடத்தையும் வெறுத்து, பெருமான் தன்னிடம் விருப்பம் கொண்டு, தன் மனத்தையே இருப்பிடமாகக் கொண்டுவிட்டான் என்பதை


"வடதடமும் வைகுந்தமும் மதிள்துவராபதியும் 
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே! "  
        ("சென்னியோங்கு" பதிகம், 5.4.10) என்று அருளிச்செய்து, தனது பிரபந்தத்தை நிறைவுசெய்துள்ளார் பெரியாழ்வார்.  .  

பெருமானே! நீ உன் இருப்பிடங்களான திருவேங்கடத்தையும், வைகுண்டத்தையும், துவாரகையையும் வெறுத்து, என்னிடம்  விருப்பம் கொண்டு,என் மனதையே நீ நித்யவாசம் செய்வதற்கு ஏற்ற இருப்பிடமாகக் கொண்டாயே! என்று மகிழ்கிறார்.  

பெரியாழ்வார் வாழித்திருநாமம்:

நல்ல திருப்பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே 
நானூற்று அறுபத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே 
சொல்லரிய லானிதனிற் சோதிவந்தான் வாழியே 
தொடை சூடிக்கொடுத்தாளைத் தொழுமப்பன் வாழியே 
செல்வநம்பி தனைப்போலச் சிறப்புற்றான் வாழியே 
சென்று கிழியறுத்து மால் தெய்வமென்றான் வாழியே 
வில்லிபுத்தூர் நகரத்தை விளங்கவைத்தான் வாழியே 
வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே.

முதல் நான்கு வரிகளின் அர்த்தங்கள் :

12 பாசுரங்கள் (நான்மூன்றோன்) திருப்பல்லாண்டு என்னும்  திவ்யப் பிரபந்தத்தை அருளிச்செய்த ஆழ்வாருக்குப் பல்லாண்டு.
461 பாசுரங்கள் கொண்ட இன்னொரு திவ்யப் பிரபந்தத்தை அருளிச்செய்த ஆழ்வாருக்குப் பல்லாண்டு.  இது, "பெரியாழ்வார் திருமொழி" என்று அழைக்கப்படுகிறது.
ஆனி மாதம் ஸ்வாதி நட்சத்திரத்தில் வந்து பிறந்த ஆழ்வாருக்குப் பல்லாண்டு.
பகவான் சூடவேண்டிய மாலையைத் தான் சூடி அழகுபார்த்து, பின் அதை பகவான் சாத்திக் கொள்ளும்படி கொடுத்த ஆண்டாள் நாச்சியாரால் வணங்கப்படும் அவளது தந்தையான பெரியாழ்வாருக்குப் பல்லாண்டு. 


பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்




No comments: