ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத்
வரவரமுநயே நம:
முதலாழ்வார்கள் வரலாறு - பகுதி 2
பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும்
மிக உயர்ந்த ஞானம் படைத்தவர்களாவர். இவர்கள் இந்நிலவுலகில்
எழுந்தருளியிருந்தமை, ஞானத்தில் மிக்கவர்களான முக்தர்கள் (முமுக்ஷு - மோக்ஷத்தில்
விருப்பமுடையவர்கள்) இவ்வுலகில் வசித்ததைப் போன்றதாகும். பகவானை அனுபவிப்பதில் முற்பட்டவர்களான இவர்கள்,
பிற ஆழ்வார்களைக் காட்டிலும்
எம்பெருமானிடத்தில் மிகவும் ஈடுபாடு உடையவர்களாக இருந்தனர்; ஆதலால், இவர்களை
நித்யசூரிகளைப் (அனந்தன், கருடன்...) போன்றவர்கள் என்றே
கூறுவர். "இன்கவி பாடும் பரமகவிகள்"
(திருவாய்மொழி, 7-9-6) என்று நம்மாழ்வாராலும், "செந்தமிழ் பாடுவார் (பெரிய
திருமொழி, 2-8-2) என்று திருமங்கை ஆழ்வாராலும் கொண்டாடப்பெற்ற இவர்களுக்கு
எம்பெருமானுடைய பரத்வ நிலையோடு, திவ்யதேசங்களில் எழுந்தருளியிருக்கும் அர்ச்சாவதார
நிலையோடு வேறுபாடில்லாமல் எல்லா நிலைகளிலுமே ஈடுபாடு இருந்தது. கடலானது எல்லா இடத்திலும்
சமமாகப் பரவியிருப்பதைப் போல் இவர்களுக்கும் எம்பெருமானுடைய எல்லா நிலைகளிலும்
ஞானம், பக்தி முதலியவை பரவியிருக்கும்.
ஆயினும்,வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகின்ற ஆறானது எல்லா இடத்திலும் சமமாகப் பாய்ந்து
ஓடினாலும், நீரானது பள்ளத்திலேயே பாய்வது போல, இவர்களும் எம்பெருமானுடைய விபவ
(இராம, கிருஷ்ண) அவதாரங்களில் திரிவிக்ரம அவதாரத்திலும்,
அர்ச்சாவதராங்களில் திருவேங்கடமலையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பர்கள்.
எம்பெருமானிடத்தில் பிரதிகூலர்களாக (பலனை விரும்புபவர்கள்)
இருப்பவர்களுடன் கூடி இருப்பதைக் காட்டிலும், அறிவில்லாத தாவரங்கள் உள்ள இடத்தில் வாழ்வதே சிறந்தது
என்றெண்ணி, காட்டிலேயே திரிந்துகொண்டிருந்தார்கள் இவர்கள். அவ்விடங்களிலும் மாலை
வேளைகளில் எங்கு இருக்கின்றனரோ, அவ்விடத்தையே அன்றைக்குத் இடமாகக் கொண்டு இவர்கள்
மூவரும் தனித்தனியே ஒருவரை ஒருவர் அறியாமல் திரிந்துகொண்டிருந்தனர். ஏதோவொரு
காரணத்தால், இவர்கள் மூவரும் (தனித்தனியே) "திருக்கோவலூர்" என்னும்
திவ்யதேசத்திற்கு வந்து சேர, அப்பொழுது எங்குமில்லாத பெரும் மழையும் காற்றும்
உண்டாக, முதலாமவரான பொய்கையாழ்வார் ம்ருகண்டு மகரிஷியின் ஆசிரமத்தின் இடைகழியிலே
(தாழ்வாரப் பகுதி) மழைக்கு ஒதுங்கி நின்றார். அப்பொழுது அங்கே,
இரண்டாமவரான பூதத்தாழ்வார் வந்து கதவைத் தட்ட, அதுகேட்ட பொய்கையாழ்வார் இங்கே
ஒருவர்தான் படுக்கலாம்; என்று கூற, வந்த பூதத்தாழ்வார், "ஒருவர் படுக்கும்
இடத்தில், இருவர் இருக்கலாமே (அமரலாமே) என்று கூற, பொய்கையார் அதற்கு சம்மதித்து
பூதத்தாரை உள்ளே அழைத்துக்கொண்டார். மேலும், அதே சமயம், மூன்றாமவரான
பேயாழ்வார் வந்து கதவைத் தட்ட, பொய்கையார், "நாங்கள் இருவரும் இங்கே
இருந்தோம் (அமர்ந்தோம்); இடம் போதாது என்று கூற, பேயார் அதற்கு, இருவர் அமரும் இடத்தில்,
மூவர் நிற்கலாமே என்று கூற, பொய்கையாரும் பூதத்தாரும் அதற்கு சம்மதித்து, பேயாரை
உள்ளே அழைத்துக் கொண்டனர்.
இப்படி இந்த மூவரும் ஒரு குறுகிய இடத்தில் சேர்ந்து
நிற்பதைக் கண்ட பகவான் அவர்களுடன் தானும் சேர்ந்து நிற்க ஆவல் கொண்டு,
பிராட்டியுடன் (ஸ்ரீமஹாலக்ஷ்மி) சேர்ந்து அங்கே சூஷ்ம
நிலையில் எழுந்தருளி (கண்களுக்குப் புலப்படாமல்
தோன்றி ) அவர்களோடு சேர்ந்து நிற்க விருப்பம்
கொண்டான். மூவர் நிற்பதே கஷ்டமான
அந்த இடத்தில், வேறு ஏதோ ஒன்று சேர்ந்து தங்களை இறுக்குவதாக மூவருமே எண்ணினர்.
அது எது (என்ன) என்பதை அறியும் வண்ணம், பொய்கையாழ்வார் உபய
விபூதியுடன் கூடிய எம்பெருமானை ஒரு விளக்காக ஏற்றினார்; பூதத்தாழ்வார் அவனிடத்தில்
உள்ள பக்தியை, அன்பை, ஒரு விளக்காக ஏற்றினார்; பிறகு பேயாழ்வார் இறுக்குவது பகவானே
என்பதை நன்கறிந்த வண்ணம், அவனை நேரே கண்டு அனுபவித்தார்.
உடலளவில் மூவரும் வேறானவர்களாக இருந்தாலும், பகவானிடம் உள்ளத்தளவில் கொண்ட
பக்தியினாலும் அன்பாலும் பெருக்கெடுத்த பரவசத்தாலும், மூவரிடத்திலும் அது ஒன்று சேர்ந்து பிறந்த நிலைகளாய்
இருந்தன. அதாவது, முதலில் ஞானம்
பிறந்தது (பொய்கை ஆழ்வார்), பிறகு, பக்தி முதிர்ந்தது (பூதத்தாழ்வார்); அதன்பின், நேரில்
தரிசனம் ஏற்பட்டது (பேயாழ்வார் ).
ஆக, இவை மூன்றும் ஒவ்வொருவர் இடத்தில் ஒவ்வொரு விதமாகத்
தோன்றிய மூன்று நிலைகளாகவும் கொள்ளலாம்; அல்லது மூன்றும் ஒருங்கிணைந்து
மூவரிடத்திலும் சங்கமமாகி, மூவரும் ஒரே நிலையில் இருந்ததால், அது ஒரே சாத்திரமாகக்
கொள்ளப்படுவது போல, இங்கும் ஆழ்வார்கள் மூவரும் தனித்தனியே நின்று மூன்று
பிரபந்தங்களை அருளிச்செய்திருந்தாலும், பொருளில் (அர்த்தம், கருத்து) வேற்றுமை இல்லாமையால்
அவற்றை ஒரே பிரபந்தமாகவும் சொல்லலாம்.
எம்பெருமானைத் தவிர்ந்த பொருள்கள் அனைத்தும் அவன் உடைமைகள்;
அவற்றிற்கு அவன் தலைவன் என்ற இந்த ஞானத்தால், ஒரு விளக்கு ஏற்றினார்
பொய்கையார். இப்படிப்பட்ட
எம்பெருமானிடத்தில் பிறந்த பக்தியைத் துணையாகக் கொண்டு, அதனால் ஒரு
விளக்கேற்றினார் பூதத்தார். அந்த பக்திக்கு அடுத்த
நிலையான தர்சனம் (கண்ணால் காணுதல்) பேயாழ்வாருடைய நிலை. இப்படித் தாங்கள்
அனுபவிதத்ததோடு நின்றுவிடாமல், உலகனைத்தும் அவனை அனுபவித்து வாழும்படியாக, தாங்கள்
அனுபவித்த விதத்தை மூன்று பிரபந்தங்களாக அருளிச்செய்தார்கள்.
தொடர்ந்து அனுபவிப்போம்.
முதலாழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
No comments:
Post a Comment