Mudhalazhwargal Vaibhavam - 1

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

முதலாழ்வார்கள் வரலாறு - பகுதி 1

பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் 

ஆழ்வார்கள் பன்னிருவரில், முதலில் தோன்றியவர் பொய்கை ஆழ்வார்; இரண்டாவதாக அவதரித்தவர் பூதத்தாழ்வார்; மூன்றாவதாக அவதரித்தவர் பேயாழ்வார்.  இவர்கள் மூவரும் முறையே ஐப்பசி மாதத்தின் அடுத்ததடுத்த நாட்களில் (திருவோணம், அவிட்டம், சதயம்) தோன்றியவர்கள் ஆவர்.  இவர்கள் எப்போதும், "முதலாழ்வார்கள்" என்றே அழைக்கப்படுகின்றனர்.  இவர்களைப் பற்றி அறிவோம்
இவ்வாழ்வார்களின் தோற்றத்தைப் பற்றி உணர்த்தும் வடமொழி ச்லோகங்கள்

பொய்கை ஆழ்வார்:

துலாயாம் சரவணே ஜாதம் காஞ்ச்யாம் காஞ்சநவாரிஜாத் 
த்வாபரே பாஞ்சஜந்யாஸம் ஸரோயோகி நமாஸ்ரயே

பூதத்தாழ்வார்:

துலா தநிஷ்டானம்பூதம் கல்லோல மாலிந:
திரே புல்லோத்பலே மல்லாபுர்யாபிடே கதாம்ஸகம்: 

பேயாழ்வார்:

துலா சதபிஷக்ஜாதம் மயூரபுரிகைரவாத் 
மஹாந்தம் மஹதாக்யதம் வந்தே ஸ்ரீகந்தகாம் ஸகம் 

பொய்கை ஆழ்வார் ஸித்தார்த்தி வருடத்தில், ஐப்பசி மாதத்தில், சுக்லபக்ஷ அஷ்டமி திதியும் செவ்வாய்க்கிழமையும் கூடிய திருவோண நக்ஷத்திரத்தில்,  திருமாலின் சங்கமான பாஞ்சசன்யத்தின் அம்சமாய், கச்சி (காஞ்சிபுரம்) நகரத்தில் உள்ள திருவெக்கா என்னும் இடத்தில் உள்ள ஒரு பொற் தாமரையில் தோன்றியவர்.  பொய்கை குளத்தில் தோன்றியதனால் இவர் பொய்கையார் என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்   இவர் அருளிச்செய்த திவ்யப்ரபந்தம் "முதல் திருவந்தாதி" என்று வழங்கப்படுகிறது.  "வையம் தகளியா" என்று தொடங்கம் இந்தப் ப்ரபந்தம் 100 பாசுரங்களைக் கொண்டது.  திவ்யப்ரபந்தக் க்ரமத்தில் (அநுசந்தானம்) "பெரியாழ்வார் அருளிச்செய்த "திருப்பல்லாண்டு"  என்னும் ப்ரபந்தமே முதலில் வைக்கப்பட்டிருந்தாலும், "திவ்யப்ரபந்தம்" அவதார க்ரமத்தில், ஆழ்வார்களில் முதலாகத் தோன்றிய பொய்கை ஆழ்வார் அருளிச்செய்த "முதல் திருவந்தாதிஎன்னும் ப்ரபந்தமே முதலாவதாகும்

"வேதமனைத்துக்கும் வித்தாகும் கோதைதமிழ்" என்று ஸ்ரீ ஆண்டாள் அருளிய "திருப்பாவை"யானது போற்றப்படுகிறது.  "வேதத்துக்கு ஓம் என்னும் அதுபோல் உள்ளதுக்கெல்லாம் சுருக்காய் தான் மங்கலமாதலால்"  என்று பெரியாழ்வார் அருளிய "திருப்பல்லாண்டு" போற்றப்படுகிறது.  ஆனால், இவர்கள் அருளிச்செய்த ப்ரபந்தங்களுக்கும் வித்தாக இருப்பது ஆழ்வார்களில் முதலாகத் தோன்றிய "பொய்கையாழ்வார்" அருளிச்செய்த "முதல் திருவந்தாதி"யே என்று கூறினால் அது மிகையாகாது.  

பூதத்தாழ்வார்: பொய்கை ஆழ்வார் தோன்றிய மறுநாள் திருக்கடல்மல்லையில் (மகாபலிபுரம்)  மலர்ந்த நீலோற்பலமலரில்,  அவிட்ட நக்ஷத்திரத்தில் திருமாலின் கதையின் அம்சமாய்த் தோன்றினார்   கடல் வண்ணம்  பூதமென்பது  போலத் தோன்றும்.  அதனால் பூதத்தாழ்வார் என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.    இவர் அருளிச்செய்த திவ்யப்ரபந்தம் "இரண்டாம்  திருவந்தாதி" என்று வழங்கப்படுகிறது.  "அன்பே  தகளியா" என்று தொடங்கம் இந்தப் ப்ரபந்தம் 100 பாசுரங்களைக் கொண்டது.  

பேயாழ்வார், பூதத்தாழ்வார் தோன்றிய மறுநாள் சதய நக்ஷத்திரத்தில்  திருமாலின் வாளான நந்தகத்தின் அம்சமாய், திருமயிலையில் (மயிலாப்பூர்) ஒரு கிணற்றில் நெய்தல் நில மலரான செவ்வல்லிப் பூவில் தோன்றினார்.   திருமாலின் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்ததனால் அந்த அன்பு, பேய்த்தனமாக இருந்ததனால் பேயாழ்வார் என்று அழைக்கப்படுகிறார்.   இவர் அருளிச்செய்த திவ்யப்ரபந்தம் "iமூன்றாம் திருவந்தாதி" என்று வழங்கப்படுகிறது.  "திருக்கண்டேன்"  என்று தொடங்கம் இந்தப் ப்ரபந்தம் 100 பாசுரங்களைக் கொண்டது.  

இம்மூன்று ப்ரபந்தங்களும் நாலாயிர திவ்யப்ரபந்தத்தில் மூன்றாவது ஆயிரமான" " இயற்பா"வில் ஸ்ரீமந்நாதமுனிகளால் வகை செய்யப்பட்டிருக்கிறது.  

ஆக, மூவரும் உலகு இயற்கைக்கு மாறாக ஒரு தாயின் வயிற்றில் தோன்றியவர்கள்  அல்லர்.  இவர்கள் மூவரும் தோன்றியது முதலேயே  திருமாலால் அருளப்பட்டு அவனுக்கு அடிமை பூண்டு அவன் புகழ்பாடி அவன் அடியார்களுக்குத் தொண்டு செய்து, மேலும் ஓரிடத்திலும் நிலை நில்லாது அவன் (திருமால்) புகழ் பரப்பித்  திரிந்தனர்.

இவர்கள் எப்படி ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர்? இந்த திவ்ய விஷயம் எந்த இடத்தில் நடந்தது? எதனால் இது நிகழ்ந்தது? என்பவையெல்லாம் மிகவும் சுவையான விஷயங்களாகும்.  அவற்றை அடுத்த இரு தினங்களில் தொடர்ந்து அநுபவிப்போம். 

முதலாழ்வார்கள் திருவடிகளே சரணம் 
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 

No comments: