பிற சமயங்களில் இருந்து, அவற்றை ஆராய்ந்து கொண்டிருந்த திருமழிசை ஆழ்வார் ஸ்ரீமஹாவிஷ்ணுவே எல்லாவற்றுக்கும் மேலானவர்; அவரே பரம்பொருள் என்ற ஞானத்தைப் பெற்றார். அப்படி இந்த ஞானத்தை இவ்வாழ்வார் பெறுவதற்குக் காரணாமானவர் பேயாழ்வார். பேயாழ்வார் இவரை எப்படித் திருத்தி, ஸ்ரீவைஷ்ணவராக, அதாவது, எம்பெருமான் நாராயணனுக்கு ஆட்படுத்தினார் என்பதை இந்தப் பகுதியில் அனுபவிக்கலாம்.
ஆயிரம் ஆண்டுகள் பிற மதங்களிலிருந்து வந்த திருமழிசை ஆழ்வாரைத் திருத்திப் பணிகொள்ளவேண்டும் என்று திருவுள்ளம் கொண்டு எம்பெருமான் தானும் பேயாழ்வாரைத்தூண்டிவிட. பேயாழ்வாரும் எம்பெருமானின் குறிப்பறிந்து செயல்படும் நோக்கில், திருமழிசை ஆழ்வார் எங்கு இருக்கிறார் என்று அவரைத் தேடிகொண்டு, பின்னர் அவர் எங்கு இருக்கிறார் என்று தெரிந்துகொண்டார். அவரைக் கண்டவுடன், நேரே போய் அவரிடத்தில் எம்பெருமானே பரதெய்வம் என்று வாதிட முடியாது; அப்படி வாதிட முயன்றால் தான்தோற்றுத்தான் போவோம் என்று நன்கு அறிந்த பேயாழ்வார் ஒரு திட்டம் தீட்டினார். அதாவது, தன் ஒரு செய்கையால் இவரது உள்ளத்தை மெல்ல கலக்கமுறச் செய்து, அப்படி அவர்உள்ளம் கலங்கி நிற்கும்போது அவரிடம் பேசி அவரை மாற்றிவிட முடியும் என்று கருதினார்.
திருமழிசை ஆழ்வார் சைவ மதத்தில் "சிவ வாக்கியராய்" ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு, சிவனைக் குறித்து தவம் செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற பேயாழ்வார் இவர்கண்ணில்படும்படியாக ஒரு விசித்திரமான ஒரு காரியத்தைச் செய்தார்பெயருக்குத் தகுந்தாற்போல், பேய்த்தனாமான ஒரு செயலைப் பண்ணினார் பேயாழ்வார். அதாவது, ஒரு செடியைஎடுத்தார்; அதைத் தலைகீழாக நட்டார்-அதாவது, வேர் பாகம் மேலே இருக்கும்படி செடியை நட்டார்; அந்தச் செடிக்கு நீர் வார்க்கவேண்டும் என்பதற்காக, ஒட்டை போடப்பட்ட ஒருபானையை எடுத்துக்கொண்டார் பானையைக் கிணற்றில் போட்டுத் தூக்க, அறுந்த தாம்புக் கயிற்றை எடுத்துக்கொண்டார். அறுந்த தாம்புக்கயிறு; ஒட்டையிடப்பட்ட பானை; செடிதலைகீழாக நடப்பட்டுள்ளது! பார்த்தார் திருமழிசை ஆழ்வார். "இதென்ன பேய்த்தனமான செயல் என்று பேயாழ்வாரைபார்த்துக் கேட்டு,மேலும் அவரை நீர் என்ன பித்தனா(பைத்தியமா?), இப்படி ஒரு காரியத்தைச் செய்கிறீரே? இதனால் யாருக்கு இலாபம்? உமக்கே என்ன நன்மை விளையும் இதனால்" என்றெல்லாம் கேட்டு,அவரைக் கேலி செய்து சிரித்தார்.உடனே, பேயாழ்வார, "நானா பித்து கொண்ட செயலைச் செய்கிறேன்? பித்தனை (சிவனை) வழிபாட்டு, வெறும் சித்துக்களாலும், யோக வித்தைகளினாலுமே பரம்பொருளைஅடைந்துவிட முயற்சிக்கும் நீர்தான் பித்து பிடித்தவர் செய்யும் செயலைச் செய்கிறீர். நான் செடி நடுவதைக் கண்டு பேதமையால் ஏளனம் செய்து சிரித்தீரே தவிர, அதன்உட்பொருளை (உள் காரணத்தை) உம்மால் உணரவும் முடிய வில்லை. நீரோ மறுமையில் முக்தியெனும் பேரின்பத்தை அடைவதற்குரிய வழியை உலக மக்களுக்கு எடுத்துக்காட்டப்போகிறீர்? என்று திருமழிசை ஆழ்வாரைப் பார்த்துக் கேட்டார். இப்படிச் சொல்லி, நீர்தான் பித்து பிடித்த ஒரு காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறீர். நீர்தான் பேய்த்தனமான செயலைச்செய்கிறீர் என்றும், பரமசிவன் மோக்ஷம் கொடுப்பான் என்று நீர் நம்புகிறீர்! அது, என்றுமே நடக்காது. அவனால் மோக்ஷம் கொடுக்கமுடியும் என்று நீர் நம்பினால், என்னால் அறுந்ததாம்புக் கயிற்றால் ஓட்டை போடப்பட்ட பானையில் நீர் எடுத்து, தலைகீழாக நடப்பட்டுள்ள செடிக்குத் தண்ணீர்விட்டு அது வளரும்படி செய்யமுடியும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று திருமழிசை ஆழ்வாரை நோக்கி அவர் நெஞ்சைக் குத்தும்படி கூறினார் பேயாழ்வார்.
திருமழிசை ஆழ்வார் சற்றுத் திகைப்புற்று ஒன்றும் புரியாமல் நின்றார். பிறகு அவர், மாயனை வழிபடுபவரே! உம் செயலின் உட்பொருள் (காரணம்) என்ன? என்று பேயாழ்வாரைக் கேட்டார். பேயாழ்வார் அதற்கு, "சிவயோகியாரே! நாம் செய்த செயல் உம்முடைய மன நிலையைக் குறிப்பதாகும். அது எவ்வாறு என்று விளக்குகிறேன்.
உம்முடைய மனம் சிறிது காலம் ஒரு மதத்தைச் சார்ந்திருந்து, அதைவிட்டு மற்றொரு மதத்தைப் பற்றிக் கொள்ளுவதையே இந்த அறுந்த முடிபோட்ட கயிறு குறிக்கிறது
இந்த ஓட்டைக் குடத்தில் எடுக்கும் தண்ணீரெல்லாம் அதில் ஒழுகி ஓடிவிடுமல்லவா? அதுபோலவே, உம்முடைய மனத்தில் எந்தவித மதக் கொள்கையும், தத்துவ ஞானங்களும் நிலைகொள்ளாமல், ஒட்டைக் குடத்தில் நிரப்ப முயலும் தண்ணீர் போல, பலவாறாக நீங்கி ஓடிவிடுகின்றன.
செடிகளைத் தலைகீழாக நட்டது உலகத்திற்கு முதற்பொருளின் ஆதி அந்தம் (முதலும் முடிவும்) தெரிந்து கொள்ளாமலே உண்மையான பரம்பொருளை அறிந்துவிட்டதாக நினைத்துமயங்கித் தலைகீழாகச் செல்லும் உம்முடைய ஞான நிலையையே குறிப்பதாகும்! என்று கூறினார் பேயாழ்வார்.
அடுத்த நிமிடம் அவர் ,மேன்மேலும் இவரிடம் வாதப்போர் செய்யத் தொடங்கி. ,ஒன்றல்லஇரண்டல்ல; இருப்பதுபோல், வேதங்களிலிருந்து என்னென்ன சாஸ்திர வாக்கியங்களைஎல்லாம் எடுத்து உதாகரிக்க முடியுமோ (உதாரணம் காட்டி நிரூபிப்பது), அத்தனையும் தெரிவித்தார் பேயாழ்வார். எவ்வளவுதான் சொன்னாலும், பரம சாத்வீக புண்ணியரானபேயாழ்வாரால் வாதப் போரிலே திருமழிசையாரிடம் ஜெயிக்கமுடியவில்லை. என்னதான் ஒருத்தன் சமர்த்தராக இருந்தாலும், தான் செய்த செய்கையானது உண்மையாகஇல்லாவிட்டால் அவன் வாக்கு சாதுரியத்தால் எதையும் ஜெயித்துவிடமுடியாது. உண்மைக்குப் புறம்பான கொள்கை என்பது, தலைகீழ் செடி, ஓட்டைப்பானை, அறுந்த கயிறு. இவர்எவ்வளவுதான் நியாயம் தெரிந்திருந்தாலும், தர்க்கம் தெரிந்திருந்தாலும், அது தெரிந்திருந்தபடியாலேயே ஒரு மதத்தை ஸ்தாபித்து விட முடியாது. இதைத்தான் நம்மாழ்வார்தெரிவித்தார்:"பேசநின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே;கபால நன்மோக்கத்துக் கண்டுகொன்மின்" (திருவாய்மொழி, "ஒன்றும் தேவும்" பதிகம், 4.10.1) என்று பாடியுள்ளார். பேசநின்ற சிவன், பிரமன் மற்றும் அனைவர்க்கும் நாயகன் பகவான்தான்; இவர்கள் எல்லாம் எவ்வளவு நாட்கள் இருப்பர் தெரியுமா? என்றால் பேசிப்பேசி ஒருபொம்மையைத் தூக்கி நிறுத்தும்வரை நிற்கலாம். அதாவது, பெரிய பெரிய பொம்மையை ஒரு கட்டையை வைத்து நிற்கவைப்பார்கள்; ஆனால், பொம்மை நிற்பதற்கு உதவும் கட்டையைச்சிறிது தட்டிவிட்டால் தெரியும் அந்த பொம்மை எவ்வளவு நாள் நிற்கும் என்று. அதேபோல இந்த மற்ற மதத்தினர் தங்கள் தெய்வங்களை உயர்த்திப் பேசிப்பேசி தூக்கி நிற்கும்படிநிறுத்தலாமே தவிர, இந்தப் பேச்சை அறுத்து விடுவோமானால் அவற்றை நிறுத்துவது ஒருநாளும் முடியாது. பேச்சென்றால் வேத வேதாந்தங்கள்தான் பேச்சே தவிர, மற்றபேர் நாக்குபேசுவது பேச்சாகுமா? வேத வேதாந்தங்கள் எதை உரைத்தனவோ, அதைக்கொண்டு பரதெய்வம் யார் என்று அறுதியிட்டு பார்க்கவேண்டும். இதைத்தான் நியாய சாஸ்திரஅனுக்ருஹீதமான நியாயம் என்று சொல்லுவார்கள். நியாயம் என்றால் வேண்டுமென்று தர்க்கம் பேச ஆரம்பிக்கக்கூடாது. எதைவேண்டுமானாலும் தர்கத்தில் நாம் சொல்லிக்கொண்டே போகலாம். அது நியாய அனுக்ருஹீதமாக இருக்கவேண்டும்; சாஸ்திர அனுக்ருஹீதமாக இருக்கவேண்டும்; அப்போதுதான் தர்க்கம் தர்க்கமாகுமே தவிர, அப்படிஇல்லாவிட்டால்,தார்க்கிகன் (சிறந்த வாதி) என்று யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.
ஒருத்தர் சொன்னார்,"ககனாரவிந்தம்" - அதாவது,ஆகாசத்தில் தாமரை அபார நறுமணத்தோடு உள்ளது என்றார்! ஒருவருக்கும் புரியவில்லை! "ஆகாசத் தாமரைக்கு நறுமணமா?நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "ஜலாரவிந்தம்" என்ற வார்த்தையைச் சொல்லி உதாரணம் காட்டினார் அதாவது, ஜலத்தில் இருக்கும் தாமரைநறுமணத்தோடு இருப்பதுபோல், ஆகாசத்தில் இருக்கும் தாமரையும் நறுமணத்தோடு இருக்கும்" என்றார். தர்க்கரீதியாக இந்த வாக்கியத்தில் தவறே கிடையாது; தர்க்கரீதியாகப்பார்த்தோமென்றால், ஆகாசத்தில் தாமரை, தாமரைக்கு நறுமணம் உண்டு!! எதைப்போல்? இதைப்போல்? அதாவது, ஜலத்தில் இருக்கும் தாமரையைப் போல். எதனாலே? "அரவிந்தத்துவாத்" -அதாவது, தாமரையான படியால்! ரொம்ப அழகான வாக்கியம். ஆனால், உண்மையை ஆராய்ந்தோம் என்றால், பிரத்யக்ஷத்திற்கு (நேரே காண்பது) விரோதம்என்றால்,ஆகாசத்தாமரை என்றே ஒன்று கிடையாது. இல்லாததைத் தர்க்கத்தால் ஸ்தாபிக்க முயன்றால், ஒருநாளும் அதை ஸ்தாபிக்கமுடியாது. அதேபோல், இல்லாத பரத்துவத்தைஒரு சிவனுக்கு ஸ்தாபிக்க முற்பட்டார்திருமழிசை ஆழ்வார், அந்த முயற்சியில் அவர் பேயாழ்வாரிடம் தோற்றும் போனார் . தோற்றது நல்லதுக்காக. அப்படித் தோற்றது அவருக்குஏற்பட்ட தாழ்ச்சியா? என்றால், அது ஸ்ரீவைஷ்ணவத்துக்குக் கிடைத்த ஏற்றமே தவிர, அவர் தோற்றார் என்பது கொள்வது முடியாது. அவரும், சரி; தொலைத்தோம்; இனி, இந்த மதங்களில்நாம் இருப்பது கிடையாது என்று கூறி, உயர்ந்த விஷயத்தைக் காட்டிக்கொடுத்த பேயாழ்வார் திருவடிகளே சரணம் என்று சொல்லி, அவர் திருவடிகளில் விழுந்து வணங்கி, சரணாகதிஅனுட்டித்தார் (செய்தார்). ஆசாரியரின் கிருபையிலே அன்று மாறினவர் திருமழிசை ஆழ்வார்.
என்றைக்கும் சிலர் பேச்சு எப்படியிருக்கும் என்றால், அதிலேயே பிறந்து அதிலேயே வாழ்ந்தால், அவ்வளவாக பக்குவமாக அவர்கள் பேசமாட்டார்கள். ஆனால், பிறந்தது ஓரிடம்;போய்ச்சேர்ந்தது இன்னோரிடம் என்று இருந்ததானால், அந்தப் பேச்சுவன்மையை நம்மால் தாங்கிக்கொள்ளவே முடியாது. வீர்யம் சற்று அதிகமாகத்தான் இருக்கும். இவர் பிற மதங்கள்அனைத்தையும் தொலைத்துவிட்டு, வைஷ்ணவத்தில் புகுந்துவிட்டார் அல்லவா? இவர் பேச்சிலே எவ்வளவு வன்மை உள்ளது என்று பார்த்தோமானால், முதல் பாசுரத்திலிருந்துதொடங்கினார்:
"நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் தான் முகமாய் சங்கரனைத் தான் படைத்தான் யான்முகமாய் அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ்பொருளைச் சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து" (நான்முகன் திருவந்தாதி, பாசுரம் 1) என்று பாடி, நாராயணன்தான் முழுமுதற் கடவுள் என்பதை உணர்த்தி, இரண்டு பிரபந்தங்களை அருளினார் திருமழிசை ஆழ்வார். அவை: : (1) நான்முகன் திருவந்தாதி; (2) திருச்சந்தவிருத்தம். இப்படி இவரைத் திருத்தி, எம்பெருமானுக்கு ஆட்ப்படும்படி செய்து, தான் வந்த நோக்கம்முடிந்தது என்று அவ்விடத்தைவிட்டு அகன்றார் பேயாழ்வார்அத்துடன் இவர்கள் முதல் சந்திப்பு முடிந்தது.
இப்படி, தான் அஜ்ஞானத்துடன், பிற சமயங்களி வாழ்ந்த அந்த ஆயிரம் ஆண்டு காலத்தை திருமழிசை ஆழ்வார் ஒரு பிறவியாகவே கருதவில்லை. இப்போது, பேயாழ்வாரால் திருத்தப்பட்டதையே ஒரு புதிய பிறவியாகக் கருதினார். இதை உணர்த்தும் வண்ணம், "அன்றுநான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன்" என்று தனது பிரபந்தமான திருச்சந்தவிருத்தத்தில் (பாடல் 60) பாடியுள்ளார்.
திருமழிசை ஆழ்வார் "பக்திஸாரர்" என்னும் திருநாமம் பெற்ற சிறப்பு:
ஒருநாள் ஆழ்வார் பகவானை தியானித்துக்கொண்டே கந்தலைத் தைத்துக் கொண்டிருந்தார் அப்போது ஆகாயவழியில் சிவனும் பார்வதி தேவியும் சென்று கொண்டிருந்தனர். பார்வதி தேவி சிவனிடம் ஆழ்வாரைக் காண்பித்து, "இவர் யார்? நம்மைத் திரும்பிக்கூட பார்க்காமல் இருக்கிறாரே?"என்று கேட்க, சிவன் அவளிடம், "இவர் ஒருவிஷ்ணு பக்தர் ஆதலால் இவர் யாரையும் திரும்பிப் பார்க்கமாட்டார்" என்று கூறினார். "ஏன் அப்படி?" என்று அவள்கேட்க, விஷ்ணு பக்தர்கள் விஷ்ணுவைத்தான் பார்ப்பார்களே தவிர, வேறு ஒருவரையும் இலட்சியம்செய்யமாட்டார்கள் என்று சிவன் கூறினார். இதைக் கேட்டு பார்வதி சிவனிடம் நாம் கீழே சென்று அவருக்குஏதாவது உபகாரங்கள் செய்துகொடுப்போம் என்று கூற ,சிவனும் அதற்கு இசைந்து ஆவலுடன் கீழே இறங்கி, ஆழ்வார் முன் வந்து நிற்க, ஆழ்வார் சிறிதும் அவர்கள் வருகையை அறியாதவராய், "நன்று இருந்து யோகநீதி நண்ணுவார்கள் சிந்தையுள்" (திருச்.விரு .63) என்ற அவர் பாடிய பாசுரத்திற்கு ஏற்றதுபோல் கண்ணன்எம்பெருமானின் சிந்தையிலேயே இருந்தார்.
பரமசிவன் ஆழ்வாரை நோக்கி, "நான் விந்திருக்கிறேன்; என்னை நீரி திரும்பிக்கூட பார்க்காமல் இருக்கிறீரே?"என்று கேட்க, ஆழ்வார் சிவனிடம், உம்மால் எனக்கு ஆகவேண்டியது ஒன்றுமில்லை என்று இருக்கும்போது நான்எதற்கு உம்மைத் திரும்பிப் பார்க்கவேண்டும்?" என்று கேட்டார். அதற்கு சிவன் ஆழ்வாரிடம், "ஒன்றுமில்லை;நான் எங்கு போனாலும் வரம் கொடுக்காமல் போவதே இல்லை. ஆதலால், உமக்கும் ஏதாவது வரம்கொடுத்துவிட்டுப் போகலாம் என்று வந்துள்ளேன்" என்றார். ஆழ்வார் அதற்கு "உம்மிடத்தில் நான் என்ன வரம் கேட்கமுடியும்? எங்கள் நாதனான பெருமானிடமே வரம் கேட்டு எங்களுக்குப் பழக்க மில்லை; இப்படி இருக்கஉம்மிடத்தில் கேட்பதற்கு ஒன்றுமில்லை" என்றார். மேலும் ஆழ்வார், "வரமில்லாததுதான் எங்கள் சம்பிரதாயமேதவிர, வரத்தைக் கேட்கும் பழக்கம் எங்களுக்குக் கிடையாது" என்றும் கூறி, நீர் எந்த வரமும் தரவேண்டாம்" என்றுமறுக்க, சிவனும் விடாமல் "ஏதாவது கேட்டுத்தான் ஆகவேண்டும்" என்று ஆழ்வாரை நிர்ப்பந்திக்க, ஆழ்வார் உடனே, "சரி, மோகஷம் கொடு; நெடுநாட்களாக அதுதான் இல்லை இல்லை என்று தவித்துக்கொண்டிருக்கிறேன்" என்றார. சிவன் அதற்கு, "மோக்ஷம் கொடுப்பதற்கு எனக்கு அதிகாரம் கிடையாதுஎன்றும்,
"ஆரோக்யம் பாஸ்கராதிச்யேத்: ஸ்ரீமிச்யேத்: உதாஸனாத்:ஸங்கராத்: ஞானமன் இச்யேத்: :மோக்ஷம் இச்யேத்:ஜனார்தனாத்:" (ஸ்ரீமத் பாகவதம், 2வது ஸ்கந்தம், 3வது அத்தியாயம்) - அதாவது, ஆரோக்கியம் மட்டும் வேண்டும் என்று விரும்பவர்கள் அதை சூரியனிடத்தில் கேட்கவேண்டும்; செல்வங்கள் மட்டும் வேண்டும் என்று விரும்புபவர்கள், அக்னி பகவானிடம் கேட்கவேண்டும்; ஞானம் மட்டும் வேண்டும் என்று விரும்புபவர்கள் சிவனாகிய என்னிடம் கேட்கவேண்டும்; ஆனால், இவை அனைத்துக்கும் மேலான மோக்ஷ சாம்ராஜ்யத்தை விரும்புபவர்கள் ஜனார்தனானகிய ஸ்ரீமன் நாராயணனிடத்தில் மட்டும்தான் கேட்கமுடியும். நாராயாணன் ஒருவனே மோக்ஷம் கொடுக்கக்கூடிய அதிகாரி ஆவான் என்பதால், "ஜனார்தனிடத்தில் போனால்தான் மோக்ஷம் கிடக்குமே தவிர, என்னிடம் கிடைக்காது" என்றுகூறிவிட்டார்.
இதன் மூலம் இன்னொரு முக்கிய விஷயத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். அது யாதெனில், மற்ற தேவதைகள் அனைத்தும் தங்கள் சக்திக்கு உபட்டதை மட்டுமே, அதாவது, ஆரோக்கியம், செல்வம், ஞானம் ஆகியவற்றை மட்டுமே கொடுக்கக்கூடியவை. ஆனால், பகவான் ஜனார்தனன் ஆரோக்கியம், செல்வம், ஞானம் என்று எதை வேண்டினாலும் கொடுக்கக்கூடியவன் - எல்லாவற்றுக்கும் மேலான, பிறவித்துயரை அறுக்கும் மோக்ஷம் உட்பட!!!
அடுத்துஆழ்வார் சிவனிடம், "சரி போகட்டும்; அந்த மோக்ஷம் கிடைப்பதற்காக நிறைய ஸாதனங்கள் (வழிமுறைகள்) எல்லாம் செய்யணும்னு நினைத்துக்கொண்டிருக்கிறேன்; அப்படி ஸாதனம் செய்ய, என்ஆயுளையாவது கொஞ்சம் நீட்டிக்கோடு" என்று கேட்டார். அதற்கு சிவன், "ஆயுள் நீள்வதும் குறைவதும் கர்மஅனுகூலத்தாலே ஒழிய, அதை மாற்றுவது நம்மால் முடியாது" என்றும்."உன் கர்மத்தின்படி ஆயுள் எவ்வளவு நியமிக்கப் பட்டுள்ளதோ அதுவரை ஆயுளே தவிர அதை மாற்றுவது இயலாது" என்றார்.
ஆழ்வார் அதற்கு, இதனால்தான் நாம் கேட்கமாட்டேனென்று சொன்னேன்; ஏனென்றால், நான் கேட்பதை உம்மால்கொடுக்கமுடியாது என்று எனக்குத் தெரியும்" என்று சொல்லி நான் ஒவ்வொன்றாய் கேட்கக் கேட்க, நீர் மறுத்துக்கொண்டே வருகிறீர்; பரவாயில்லை! ஒன்று செய்யும். உம்மால் நடக்கும் விஷயமாக ஒன்று செய்யும்.நான்தைத்துக் கொண்டிருக்கிறேனே. இந்தத் துணி;இதைத் தைக்கும் ஊசியின் வழியே நூல் போகும்படி செய்யும்படியாகஉதவிசெய்யும் என்று சிவனை ஏளனப்படுத்துவதுபோல் கூறினார். இப்படி ஊசி வழியே நூல் போவதற்குயாருடைய அனுக்ரஹமும் தேவை இல்லை. ஊசி முன்னே செல்ல நூல் பின்னேதான் வரும்.
இதைக் கேட்ட சிவனுக்கு அபார கோபம் ஏற்பட, தனது மூன்றாவது கண்ணைத் திறந்து ஊழிக்காலத் தீயைகிளப்பிவிட்டார். அதாவது, இந்த பூமியே எரிந்து சாம்பலாகும்படி தன் நெற்றிக்கண்ணைத் திறந்து அக்னிக்கனலை வீசினார். பார்த்தார் திருமழிசை ஆழ்வார் -தானும் தன் திருவடியில் (கால்) உள்ள கட்டை விரலில்இருந்த உயர்ந்த ஞானக்கண்ணைத் தானும் திறந்துகாட்ட, அந்த விரலிலிருந்து ஊழிக்காலத் தீயைக் கிளப்பிவிட்டார்; ஆக, இப்படி இருவரும் மாறி மாறி தீயை வீச, ஒரு மகா யுத்தமே அங்குநடந்தது. ஆழ்வார் கிளப்பிய தீயை அணைப்பதற்காக சிவனும் தன் ஜடை முடியை அவிழ்த்து அதிலிருந்துமேகங்களை எல்லாம் ஏவிவிட்டார் - மேகங்கள் கூடி மழை பொழிந்து தீயை அணைத்துவிடவேண்டும்என்பதற்காக. ஆனால், கூடிய மேகங்கள் எல்லாம் ஒன்றுகூடி மழை பொழியாமல், நேரே ஆழ்வாரிடம் வந்து, அவரைப் பிரதட்சிணம் செய்து (சுற்றி வருவது) , ஸ்ரீபாத தீர்த்தம் வாங்கிக்கொண்டு, சிவனிடம்,, "இவர் வீசும் தீயை அணைப்பது நம்மால் முடியாது; இவர் யாரென்று தெரியாமல் நீரும் இவரிடம் அபச்சாரப்படுவது கூடாது" என்று அவரிடத்திலேயே சொல்ல, இருவருக்குமான சண்டை நிறுத்தப்பட்டு, பரமசிவன் திருமழிசை ஆழ்வாருக்கு "பக்திஸாரர்" என்ற பெயரைச் சூட்டி, அங்கிருந்து தனது தேவியுடன் (பார்வதி தேவி) புறப்பட்டுச் சென்றார்.
ஈஸ்வரனுடைய பக்தியே ஸாரமான பக்தி; அந்த அற்புத பக்தி திருமழிசை ஆழ்வாரிடம் இருந்ததால் " பக்திஸாரர்"என்ற பெயரையே சிவனிடமிருந்து வாங்கிக்கொண்டார் ஆழ்வார்.
அதன்பின், இவ்வாழ்வார் பகவான் நாராயணனை நோக்கித் தவங்கள் செய்தும், தோத்திரங்கள் பாடியும், பாடல்கள் பாடியும் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தார். அப்படி வாழ்ந்துகொண்டிருந்த காலத்தில், இன்னும் சில விஷயங்கள் அவரது வாழ்க்கையில் நடந்தது.
"திருமழிசை ஆழ்வார் ஸ்ரீமன் நாராயணனே பரதெய்வம் என்று ஸ்தாபித்தல்"
"தர்மத்தை நிலைநாட்டவும், அதர்மத்தை ஒழிக்கவும், சாதுக்களைக் காக்கவும் நான் அவ்வப்போது அவதாரங்கள் செய்கிறேன்" என்று ஸ்ரீ கிருஷ்ணர், யுத்தகளத்தில் அர்ஜுனனுக்கு உபதேசித்தார். "கிமேகம் தைவதம் லோகே ......" - "தர்மங்களில் எது மேலான தர்மம்?" என்று, பஞ்சபாண்டவர்களில் மூத்தவரான தருமர், தனது பிதாமகரான (தாத்தா) பீஷ்மரிடம் கேட்க, அதற்கு பீஷ்மர்,"ஜகத்ப்ரபும் தேவதேவம் அநந்தம் புருஷோத்தமம்" - "இந்த ஜகத்துக்கே பிரபுவாய், ஆதி அந்தம் அற்றவனாய், புருஷோத்தமனாய் திகழும் விஷ்ணுவே உயர்ந்த தர்மம். அப்படிப்பட்ட மேலானவனான தர்மவானான விஷ்ணுவின் திருநாமங்களை வாயாரச் சொல்லுவதும், மனமாரத் தியானிப்பதும்தான் சிறந்த தர்மம்" என்று உபதேசித்து, பகவானுக்கு உள்ள ஆயிரம் திருநாமங்களை தருமருக்கு உபதேசித்து அருளினார். அபப்டி பீஷ்மர் அருளிய பகவானின் ஆயிரம் நாமங்களின் தொகுப்பே "ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம்" என்று போற்றப்பட்டு, அனைவராலும் ஓதப்படுகிறது.
தர்மத்தை நிலைநாட்ட பகவான் அவ்வப்போது பிறக்கிறார். அப்படிப் பிறக்கும் அவரே பரதெய்வம் என்பதை நிலைநாட்ட ஆழ்வார்கள் பிறந்தனர். ஆழ்வார்கள் பிறந்தனர் என்று சொல்வதைக் காட்டிலும், தனது மேன்மையை உலகுக்கு அறிவிப்பதற்காகவே நாராயணமூர்த்தியான பகவான், ஆழ்வார்களைப் பிறப்பித்தான் என்று சொல்வதே பொருத்தமானதாகும்.
ஏன் நாராயண மூர்த்தியே பரம்பொருள் என்று போற்றப்படுகிறான்? அதாவது, முழுமுதற்கடவுள் என்று போற்றப்படுகிறான்? என்பதை ஓரளவு பகுதி 4-இல் பார்த்தோம். இது எல்லாக் காலங்களிலும். விஷ்ணுவே பரதெய்வம் என்று ஒரு வர்கத்தாரும், சிவனே உயர்ந்தவர் என்று இன்னொரு வர்கத்தாரும், இவர்களுக்கும் மேலாக பிற சமயத்தவர்கள் தங்கள் தங்கள் தேவதைகளே உயர்ந்தவர்கள் என்றும் வாதப்போர் நடத்தும் விஷயமாகிவிட்டது. ஆனால், உண்மையான பரம்பொருள் விஷ்ணுவே என்று வேதங்கள் உரைக்கின்றன. பகவானுக்குக் கேசவன் என்ற ஒரு திருநாமம் உண்டு. கேஸி என்னும் அசுரனை அழித்ததால் அவர் கேசவன் என்றழைக்கப்படுகிறார் என்பது பொதுவான அர்த்தம். "நதைவம் கேஸவாத்பரம்" - கேசவனைக் காட்டிலும் ஒரு உயர்ந்த தெய்வம் இல்லை என்று வால்மீகி முனிவர் உரைத்ததையும் முன்பு பார்த்தோம். ஏன் அவர் "கேசவன்" என்று அழைக்கப்படுகிறார்? அதன் முக்கியக் காரணம் யாது? என்று பார்த்தால், அவருக்கு இந்தத் திருநாமத்தைக் (பெயரைக்) கொடுத்தவரே "பரமசிவன்"தான். பரமசிவன், ஸ்ரீமஹாவிஷ்ணுவிடம், "க" என்ற பிரமனும், "ஈசன்" என்ற நானும் உம்மிடமிருந்து உண்டானபடியால், உம்மால் படைக்கப்பட்டதால், உமக்குக் "கேசவன்" என்ற திருநாமத்தை அளிக்கிறேன் என்று கூறினார். கேசவன் - பிரமனையும், சிவனையும் உள்ளடக்கி வைத்துள்ளவன் ஆகையால், பகவான் "கேசவன்" என்ற திருநாமத்துடன் திகழ்கிறார். நல்ல கேசங்களை (குழல்கள், கூந்தல்) உடையவன் என்பதாலும், கேசவன். ஆக, கேசவன் என்ற சொல்லுக்கு மூன்றுவிதமான அர்த்தங்களைப் பார்த்தாலும், அவற்றுள், முக்கியமான அர்த்தம், பகவான் விஷ்ணுவுக்குள் உறைபவர்கள் பிரமனும், பரமசிவனாரும் என்பதே. விஷ்ணுவே எல்லோரைக் காட்டிலும் மேலானவர் என்று பரமசிவன் உரைத்ததைத் திருமழிசை ஆழ்வார், தனது "நான்முகன் திருவந்தாதி" என்னும் பிரபந்தத்தின் 17ஆவது பாடலில் தெரிவிக்கிறார்
:
"ஆலநிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு
மேலையுகத்துரைத்தான் மெய்த்தவத்தோன் - ஞாலம்
அளந்தானை ஆழிக்கிடந்தானை ஆல்மேல்
வளர்ந்தானைத் தான் வணங்குமாறு."
பாடலின் விளக்கம் : ஆகமங்களின் படி (வேதசாத்திரங்கள் படி) மிகவும் புகழ் பெற்ற ஆலமரத்தின் கீழே அமர்ந்தபடி,, உண்மையான தவ நெறியை உடைய பரமசிவன், , தனக்கு மிகவும் வேண்டியசிஷ்யர்களில் நான்கு பேரான அகத்தியர், புலஸ்த்யர், தக்ஷர் மற்றும் மார்கண்டேயர் ஆகியோருக்கு, தர்ம மார்க்கத்தை உபதேசித்தான் (உரைத்தான்). இப்பாசுரத்தில், ஆழ்வார் தான் மட்டும்எம்பெருமானை மேன்மைப்படுத்திப் பேசவில்லை; மிகவும் முக்கியமனானவர்களான பரமசிவன் முதலானவர்களும் எம்பெருமானின் மேன்மையான குணங்களை எடுத்துக்கூறி, அவனையேபற்றும்படி, தங்கள் சீடர்களுக்கு உபதேசிக்கிறார்கள் என்று கூறுகிறார்.
பகவான் நாராயணனே "பரதேவதை". "தேவஹா" என்றால், பரதெய்வம் என்று பொருள். அப்படிப்பட்ட பரத்வம், அதாவது "பரதெய்வம்" என்ற பெருமை விஷ்ணு ஒருவனுக்கே உண்டு ஸ்ரீமன் நாராயணன் ஒருத்தனைத் தவிர இந்த தேவத்வம் யாருக்கும் கிடையாது என்பதை "பொல்லாத தேவரைத் தேவரல்லாரைத் திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு"("நான்முகன் திருவந்தாதி", 53) என்ற பாடலின் மூலம் அறுதியிட்டுக் காட்டினார் திருமழிசை ஆழ்வார். இதற்கு, பெரியவாச்சான் பிள்ளை என்னும் மகாசாரியர் தன்னுடையவ்யாக்யானத்திலே (Explanation) அற்புதமாக அர்த்தங்களைக் காட்டியுள்ளார்.
அதாவது, "தேவ:" (Devaha) என்ற சொல் "திவு திவு" என்ற தாதுவிலிருந்து பிறந்ததாம்!
“திவு க்ரீடாயாந் தாது; || திவு விஜிஹீஷாந் தாது; || திவு வியவஹாரந்: தாது; || திவு த்யுதீந்: தாது; || திவு ஸ்துதிந்:தாது; || திவு மோதாந்: தாது; || திவு மதாந்: தாது; ||திவு காந்தீந்: தாது; || திவு கதீந்:தாது.”
என்று வேதம் இதை உரைக்கிறது. ஆக, பலபல தாதுக்களிளிருந்துதான் "தேவஹா" என்கிற சப்தம் பிறந்துள்ளது!
முதலில், திவு க்ரீடாந்:(தேவஹா) என்று சொன்னால் எவன் விளையாட்டு உடையவனோ அவன்தான். தேவன். யார் விளையாட்டுடையவன் என்றால்,இன்புறும் விளையாட்டுடையவன் - அதாவது, ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களையே (படைக்கும் வியாபாரம்) விளையாட்டாகக் கொண்டவன். "அலகிலா விளையாட்டுடையாரவன்"என்று கம்பர் தெரிவித்தாரே! அந்த விளையாட்டுடையவன் இவனே தவிர, மற்றவர்கள் ஸ்ருஷ்டிக்கப் படுபவர்கள்; ஸம்ஹரிக்கப் படுபவர்கள் (படைக்கப் படுபவர்கள்; அழிக்கப்படுபவர்கள்). அவர்கள் யாரும் ஸ்ருஷ்டி ஸ்திதி (படைத்து, அழிப்பது) செய்வது கிடையாது; ஆகையாலே, இவன்தான் விளையாட்டுடையான்.
அடுத்து, "விஜிஹீஷாந்:" என்றால் புறமுதுகிட்டு ஓடாதவன் என்று அர்த்தம். ஓடிக்கொண்டே இருக்கிறார் நித்யப்படி சிவனும்; ஆகையால், இந்தப் பெயரும் அவருக்கில்லை.
அடுத்து “திவு த்யுதிந்:" என்று சொன்னால், அபாரமான ஒளி படைத்தவன் என்று அர்த்தம். இப்படி, அபாரமான ஒளி படைத்தவன் யார் என்றால், சாம்பல் பூசிக் கொண்டிருப்பவனுக்கு ஒளிஇருக்கப்போவதில்லை பகவானிடத்தில்தானே ஒளி உண்டு! அந்த ஒளியைக் கொண்டுதானே சூரியனும் பிரகாசிக்கிறான்!
அடுத்து, "திவு வியவஹாரந்:" என்று சொன்னால், எவன் தானே வேதங்களை வியவஹறிக்கிரானோ (வேதங்களைப் படைத்து, அதன் ஆழ்ந்த அர்த்தங்களை விவரிப்பவன்). அவன்தான்தேவன். யார் வியவஹறிக்கிரான் என்றால், பகவான்தான் நரநாராயணனாய் உலகத்தை நூல் சிந்தாமல் விரித்தான்; எட்டெழுத்து அடங்கிய திருமந்திரத்தைக் கொடுத்ததும் அவன்தான்;ஹம்சாவதாரம் செய்து பிரமனுக்கு வேதத்தைக் கொடுத்ததும் அவன்தான்.
அடுத்து, "திவு ஸ்துதிந்:" என்றால், ஸ்தோத்ரம் செய்வது எவனுக்குத தகுதியோ, அவன்தான் தேவன்! சிவனுக்கு அந்தத் தகுதி, அதாவது, ஸ்தோத்ரம் செய்து போற்றப்படும் தகுதி இல்லைஎன்று இதிலிருந்து தெரிகிறது. இதைத்தான், ஆழ்வார், "காணிலும் உருப்பொலார் செவிக்கினாத கீர்த்தியாய் , பேணிலும் வரம்தர மிடுக்கிலாத தேவரை" (திருச்சந்தவிருத்தம்,பாடல் 69) என்று பாடியுள்ளார். இதன் அர்த்தம், "மற்ற தேவதைகள் காண்பதற்குச் சகியாமலும், அவர்கள் சரித்திரமோ செவிக்கு இனியதாக இல்லாமலும், அவர்கள் தகுதியோ கேட்பதைக்கொடுக்கக்கூடிய சக்தி அற்றவைகளாயும் உள்ளன" என்பதாகும்.
அடுத்து, "திவு மோதந்:" என்று சொன்னால், எவன் ஆனந்தப் பட்டிருக்கிறானோ அவனுக்குத்தான் தேவன் என்று பெயர். இவர்தான் (சிவன்) துன்பப்பட்டுக் கிடக்கிறாரே! "பிண்டியார்மண்டையேந்தி பிறன்மனை திரிதந்துண்ணும் உண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர்" (திருமங்கை ஆழ்வார், திருக்குறுந்தாண்டகம், 19) -சிவன், பிரமனிடமிருந்து பெற்ற சாபத்தால், கபாலத்தைக் கையில் ஏந்திக்கொண்டு திரிந்தாரே! சாபம் பெற்றுத் திரிபவர் எப்படி ஆனந்தப்பட முடியும்? அவர் சாபத்தைப் போக்கினவன் பகவான் அல்லவா? ஆகையால், பகவான்தானேதேவன்! அடுத்து, "திவு மதந்" என்றால், மதம்; மதம் பிடித்தவன் என்றால், செருக்கு இருக்கிறவனுக்குத்தான் தேவன் என்று பெயர். சிவனுக்கு செருக்கு இருக்கா என்றால் உண்டு. எப்படியென்றால், அடுத்தடுத்து துன்பத்தைத் தருவதற்காக! அதுவரைதான் இவன் செருக்கு இருக்கும். ஆக, சிவன் தேவன் அல்ல!
அடுத்து, “தீவு காந்திந்:" காந்தி (நறுமணம்) இருப்பது பகவானுடைய திருமேனிக்கே தவிர, சிவனுக்குக் கிடையாது.
அடுத்து, கடைசியாக, "திவு கதிந்:" உபாயமும், உபேயமும் ஒருத்தனே. அதாவது, அடையப்படவேண்டியவனும், அடையப்படுவதற்கான வழியை ஏற்படுத்தித் தருபவனும் ஒருத்தனே! கதி பகவான்தானே தவிர மற்றவர் யாரும் கதியாக முடியாது!
ஆகையால், "திவு" என்ற தாதுப்படி எந்த அர்த்தத்தைப் பார்த்தாலும், "தேவ" சப்தமே ஸ்ரீமன் நாராயணனைத்தான் சொல்லுமே தவிர, மற்ற பேருக்குச் சேராதுஎன்பதையே திருமழிசை ஆழ்வார், “பொல்லாத தேவரைத் தேவரல்லாரைத் திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு" என்று பாடினார் இது மட்டுமில்லை; "திருவுடைய" (திருமகள்) தெய்வம்தான் தெய்வமாகுமே தவிர, திருவில்லாத தெய்வம் தெய்வமாகாது. "திருவுடையவன்" என்றால் ஸ்ரீமஹாலக்ஷ்மியை உடையவன் என்று அர்த்தம். பகவான்நாராயணன் ஒருவனே திருவுடையவன். திருவுடைய ஒருவனைத்தான் தான் வணங்குவேனே தவிர, திருவில்லாத வேறு எவரையும் வணங்கமாட்டேன் என்கிறார் திருமழிசை ஆழ்வார்.
"திருக்கண்டேன்" என்று தனது பிரபந்தத்தைத் தொடங்கி, பகவானைத் திருவுடையவன் என்று அறுதியிட்டார் பேயாழ்வார். அவரால் திருத்தப்பட்ட திருமழிசை ஆழ்வார், "திருவில்லாதவன் தெய்வமன்று" என்று அறுதியிட்டார்.
ஆக, திருமழிசை ஆழ்வார் பகவானே முழுமுதற்கடவுள் என்று அறுதியிட்டு, "இனி அறிந்தேன் ஈசர்க்கும் நான்முகற்கும் தெய்வம்; இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -இனிஅறிந்தேன் காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ - நற்கிரிசை நாரணன் நீ நாரணன் நீ நன்கறிந்தேன் நான்" (நான்முகன் திரு., 96) என்று தன் முதல் பிரபந்தத்தை நிறைவு செய்தார். அதாவது, நான் கற்றதும் நீதான், கற்கவேண்டியதும் நீதான்; எதுவாயினும் அதற்கு நீயே காரணம் என்றும், பிரமன் சிவன் மற்றும் அனைவர்க்கும் பகவானே தெய்வம் என்று வேதங்களைக்கொண்டு தான் உணர்ந்ததை அறுதியிட்டுக் காட்டினார். ஆக, ஸ்ரீமன் நாராயணனே பரதெய்வம் என்று பலவாறாகத் தனது திவ்யப் பிரபந்தங்களின் மூலம் நிரூபணம் செய்தார் திருமழிசை ஆழ்வார்.
No comments:
Post a Comment