ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
தொண்டரடிப்பொடி ஆழ்வார் வைபவம்
“கோதண்டே ஜ்யேஷ்டநக்ஷத்ரே மண்டங்குடி புரோத்பவம் |
சோனோர்வ்யாம் வனமாலாம்சம் பக்த பத்ரேணுமாச்ரயே ||”
சோழ வளநாட்டில் திருமண்டங்குடி என்று அழைக்கப்படும் ஊரில், மார்கழித் திங்கள் கேட்டை நக்ஷத்திரத்தில் வைஜெயந்தி என்னும் திருமாலின் வனமாலையின் அம்சமாக, ஒரு முன்குடுமிச் சோழியப் பிராமணரது திருக்குமாரராய் (பிள்ளையாய்) இவ்வாழ்வார் அவதரித்தார். விப்ரநாராயணர் என்று தந்தையால் பெயரிடப்பட்டு அந்தணர் குலத்துக்கேற்ற நான்கு வேதங்களையும் அதன் ஆறு அங்கங்களையும் உரிய காலத்தில் கற்று வைணவ குலத்துக்கே உரிய திருவிலச்சினைகளையும் (திருமாலின் சங்கம் மற்றும் சக்கரப் பொறிகளைத் தோள்களில் பொறித்துக்கொள்வது).
"மாஸானாம் மார்க்கசீர்ஹோஷம்" என்று கீதாசார்யனான கிருஷ்ணனும், "நீளாதுங்கஸ்தநகிரிதடீ ஸுப்தமுத்போத்யகிருஷ்ணம் என்கிறபடி, மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்" என்று பாடி எம்பெருமானை எழுப்பிய ஆண்டாளும் உகந்த உயர்வும், திரு அத்யயன உத்ஸவம் தொடங்கும் காலமாகிற கௌரவமும் தேவர்கள் தினத்திற்கு ப்ராஹ்ம முஹூர்த்தமாகிற மகிமையும், அரங்கத்தம்மானை துயிலில் இருந்து எழுப்பும் மாதமாகவும் இருக்கும் பெருமையுமாகிய நன்மைகளை உடையது இம்மார்கழி மாதமாகும். மார்கழியில் கேட்டை இந்த ஆழ்வார் அவதாரத்தாலும், ஆசார்யர்களில் பெரிய நம்பிகள் பிறப்பினாலும் முப்புரி (பூணூல்) ஊட்டின ஸ்ரீவைஷ்ணவ நக்ஷத்திரமாக விளங்குகிறது. மாசங்களில் ஸ்ரேஷ்டமானது (சிறந்தது) மார்கழி. நக்ஷத்திரங்களில் ஸ்ரேஷ்டமானது ஜ்யேஷ்டை (கேட்டை). ஆகையால் இவ்வாழ்வார் மன்னியசீர் மார்கழியில் கேட்டையில் தோன்றியது தகுதியே.
இனி விப்ரநாராயணர் என்னும் இயற்பெயர் கொண்ட இவர் எப்படித் தொண்டரடிப்பொடி ஆழ்வார் ஆனார்? இவர் சரித்திரத்தைச் சற்று அனுபவிப்போம்
விப்ரநாராயணர் திருவரங்கம் பெரிய கோவிலை அடைந்து, நம்பெருமாளது திருநந்தவனப் பணியில் ஈடுபட்டு, அப்பெருமானுக்குத் திருமாலைகள் கட்டி அணிவித்து மகிழ்ந்தார். தன் உணவிற்காக, திருவைட்டணவர்களிடமிருந்து (ஸ்ரீவைஷ்ணவர்கள்) இரந்தே (உஞ்சவிருத்தி செய்து) காலம் கழித்தார். உறையூரைத் தலைநகராகக் கொண்ட சோழ மன்னவனின் அவையில் கூத்தாடிப் பரிசுபெற்ற தேவதேவி என்ற விலைமாது ஒருத்தி, வீடு திரும்பும்போது, இவர் நந்த வனத்தைக் கண்டு அங்குள்ள பூம்பொழிலின் எழிலைக் கண்டு, அதில் மயங்கி, அந்த நந்த வனத்தையே தனதாக்கிக்கொள்ள விரும்பினாள்.
அந்த நந்தவனத்தின் சொந்தக்காரரான விப்ரநாராயணரைத் தன் அழகால் மயக்கி, தன் வசப்படுத்த நினைத்து, இவர் நந்தவனத்திற்கு நீர் பாய்ச்சும்போது அவர் அருகில் புன்னைகை செய்து நின்றாள். விப்ரநாராயணர் திருமால் பணியைத் தவிர வேறு ஒன்றை சிந்தையில் கொள்ளாதவர் ஆகையால், இவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
தன்னுடனிருந்த தன் அக்காளுக்கு எவ்வாறேனும் அவரை வசப்படுத்துவதாக சபதம் செய்து, மெல்லிய சிவந்த காவி உடைமட்டும் அணிந்து, விப்ரநாராயணரிடம், தான் அவர் செய்யும் கைங்கர்யப் பணியில் உதவுவதாகக் கூற, அவள் நல்லெண்ணத்தை எண்ணி, அவரும் அதற்கு இசைந்தார்
ஒருநாள், மிகுந்த மழை பெய்தபோது அவள் நனைவது கண்டு விப்ரநாராயணர் அவளைத் தன் குடிலில் வந்து அமர வேண்டினார் அவளும் இந்தத் தக்க தருணத்தை (சந்தர்ப்பத்தை) எதிர்பார்த்தவள் ஆதாலால், அவர் குடிலின் உள்ளே நுழைந்து அவரைத் தன வலையில் சிக்க வைத்தாள். சிறிது காலம் அவருடன் களித்து (மகிழ்ந்து பிறகு அவரைத் துறந்து தன் இல்லத்திற்குத் திரும்பிச் சென்றாள். இதன்பின், விப்ரநாராயணர் அவள்மீது மோகம் கொண்டு, அவள் இருக்கும் இடத்திற்க்குச் சென்றபோது, அவளது ஊழியர்கள் அவளை உள்ளேவிடாமல் திருப்பி அனுப்பினர். இதனால் மிகவும் வருத்தமடைந்த விப்ரநாராயணர், அவள் வீட்டு வாசலிலேயே கிடந்தார்
தன் அடியவராகிய விப்ரநாராயணர் இவ்வாறு இருப்பதைக்கண்டு வருத்தமுற்ற திருமகள் (மகாலக்ஷ்மியான திருத்தாயார்) அவரைத் திருத்திப் பணிகொள்ளும்படி எம்பெருமானை வேண்ட, அதாவது அவர் இந்த மோகத்தைவிட்டு, மீண்டும் எம்பெருமானுக்குக் கைங்கர்யம் புரிபவராய் ஆக்க விரும்ப, எம்பெருமானும் அவள் விருப்பத்தை நிறைவேற்றும் எண்ணம் கொண்டான். எம்பெருமான் ஒருநாள் இரவு, ஒரு அந்தணச் சிறுவன் உருவம் கொண்டு நம்பெருமாளது சந்நிதியில் இருந்த பொன் வட்டில் ஒன்றை, தேவதேவியிடம் விப்ரநாராயணர் கொடுத்துவரச் சொன்னதாகக் கூறி மறைந்தான். அந்தப் பரிசைக் கண்டு மகிழ்ந்து, தேவதேவி, அச்சிறுவன் (எம்பெருமான்) மூலமே விப்ரநாராயணரை உள்ளே அழைத்தாள். அவரும் அவளுடன் கூடி மகிழ்ந்தார். மறுநாள் காலை, கோயிலில் வட்டில் காணாமல் போனது அரசருக்குத் தெரிவிக்கப்பட்டது.
புலன் தோட்டத்தில் விலைமாதின் வீட்டில், காணாமல் போன அந்த வட்டில் இருப்பதை அறிந்து, அவர்கள் இது எப்படி உனக்குக் கிடைத்தது என்று அவளிடம் கேட்க அவள் விப்ரநாராயணர்தான் அதைத் தனக்குப் பரிசாகத் தந்தார் என்று கூற, விப்ரநாராயணர்தான் குற்றவாளி என்று கருதப்பட்டு, அவர் சிறையில் பூட்டப்பட்டார். திருடப்பட்ட பொருளைப் பரிசாகப் பெற்றதால், அரசன் அவளுக்கும் அபராதக் கட்டணம் செலுத்தும்படி கட்டளையிட்டான். இரவு, அரசனின் கனவில் எம்பெருமான், வேசியின் வலையிலிருந்து விப்ரநாராயணரை விடுவிக்க தான் நடத்திய நாடகத்தைக் கூறி, குற்றமற்ற விப்ரநாராயணரை சிறையிலிருந்து விடுதலை செய்யுமாறு அரசனுக்குக் கட்டளையிட்டான்.
மறுநாள் காலை, அரசனால் விடுவிக்கப்பட்ட விப்ரநாராயணர், எம்பெருமான் தனக்காகக் கீழிறங்கி இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறானே என்று வருத்தப்பட்டு, உள்ளம் தூய்மைபெற, "திருமால் தொண்டரடிப்பொடி" என்று பெயர்பெற்று, சிறந்த அடியாராகத் திகழ்ந்தார். திருவரங்க நாதனைத் தவிர வேறு ஒரு பெருமானைப் பாடாமல், அதாவது மற்ற திவ்யதேசத்து எம்பெருமான்களைப் பாடாமல், அப்பெருமானுக்கே தொண்டு புரிந்து, 105 ஆண்டுகள் வாழ்ந்தார்.
இவ்வாழ்வார் இரண்டு பிரபந்தங்களை அருளியுள்ளார். அவை: (1) திருமாலை (45 பாசுரங்கள்) மற்றும் (2) திருப்பள்ளியெழுச்சி (10 பாசுரங்கள்) ஆகியவை ஆகும்.
(1) திருமாலை (45 பாசுரங்கள்) : மாலை என்பது தோத்திர ரூபமான
பிரபந்தம் ஆகும். ஒரு பொருளைக் குறித்து, பல செய்யுள் பாடுவதை மாலை என்பர்.
திருவரங்கத்தம்மானைப் பாடுவதால், இப்பிரபந்தம் திருவோடு சேர்ந்து, "திருமாலை"
ஆயிற்று. இந்தப் பிரபந்தத்தில் திருநாமப் பெருமை, திருவரங்கத்தின் சிறப்பு, திருவரங்கநாதனின் திருமேனி அழகு, உடலை உருக்கும் சயன திருக்கோலம் ஆகிய
மலர்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட மாலையே, "திருமாலை" ஆகும். திருமாலை, ஸ்ரீ சௌனபகவான் அருளிய வடமொழியில் "ஸ்ரீவிஷ்ணு தர்மம்" என்னும் நூலின் ஸாரம்
என்பது ஆசார்யர் கொள்கை. "திருமாலை" என்னும் பிரபந்தத்தை
அறியாதார் (அறியாதவர்கள்) "திருமால்" எனப்படும் எம்பெருமானை
அறியாதாரே (அறியாதவர்களே)! அதாவது, "திருமாலை அறியான் பெருமானை
அறியான்"
என்று
வழங்குகிற பழமொழிகளினால் திருமாலை என்னும் பிரபந்தத்தின் பெருமையை அறியலாம். வனமாலையின் அம்சமாகிய
இவ்வாழ்வார் திருமாலுக்குத் "திருமாலை" பாடினார்.
இந்தப் பிரபந்தத்தின் முதல் இரு பாசுரங்களில் பெரிய பெருமாளின் (மூலமூர்த்தி)
அரங்கன் என்னும் திருநாமம் கற்றதனால் ஆன பயனையும், திருநாம சங்கீர்த்தனத்தைத் தவிர பரமபத இன்பமும்
வேண்டியதில்லை என்கிறார். மூன்றாம் பாசுரத்தில் பிறவி வேண்டேன் என்று கூறி, ஸ்ரீரங்கத்தில் வாழும் வாழ்ச்சியே
(வாழ்க்கையே) போதும் என்றார். அதற்கு மேல், பதினோரு பாட்டுக்களாலே, பகவத் விஷயத்தை சம்சாரிகள் இழப்பதைப் பார்த்து, பெரிய பெருமாளின் பெருமையை
உபதேசிக்கிறார். இதனை அவர்கள் உணராமையாலே, பெரியபெருமாள் தனக்குச் செய்த பரமபக்தி வரையிலான பெரிய
உதவிகளைப் பத்து பாடல்களாலே தெரிவிக்கிறார். இதனைப் பெற தம்மிடம் கைம்முதல்
(தகுதி) ஏதும் இல்லை என்று அடுத்த
பத்துப் பாட்டுக்களாலே அருளிச்செய்து, 35ஆம் பாட்டில், பெரியபெருமாள் தாமே தனக்கு அருள்புரிந்ததைப் பேசி, அடுத்த இரண்டு பாட்டுக்களில்
பெரியபெருமாள் தனக்குத் தந்தையும் தாயுமான ரக்ஷகன் என்றும், அவர் அடியார்களை (தொண்டர்களை) மிகவும்
உகப்பவர் என்பதைக் கூறி, 38 முதல் 43 வரையிலான பாடல்களில் பாகவதர்களின்
(ஸ்ரீவைஷ்ணவர்கள்) பெருமையையும், அவர்களைக் குறைவாக
நினைப்பவர்களுடைய தாழ்வையும் காட்டினார். 44ஆம் பாட்டில் பிரமன், சிவன் ஆகியோர் பெறாத பேற்றை. தன்னையே எல்லாமாகப் பற்றிய
கஜேந்திரன் ஆன யானை பெற்றுவிட்டது; ஆதலால் கண்ணான அரங்கமாலையே பற்றவேண்டும் தனது உறுதியைக்
கூறி, இந்தப் பிரபந்தத்தை நிறைவு
செய்கிறார்.
(2) திருப்பள்ளியெழுச்சி (10 பாசுரங்கள்) : அடுத்து, எம்பெருமானைத் துயில் எழுப்பும் ப்ரபந்தமாக "திருப்பள்ளியெழுச்சி" என்னும் ப்ரபந்தம் அமைந்துள்ளது . திருமாலையில் விவரிக்கப்பட்ட ஆழ்வாரின்
நிஷ்டையைக் (உறுதி, சிரத்தை) கண்ட திருவரங்கநாதன் உலகிலுள்ள
எல்லோரையும் இவரைப்போல தம்மிடம் ஈடுபட்டு உய்விக்கச் செய்ய வழி என்ன என்பதை
அறிந்துகொள்ள சிந்திக்கலானார். சம்சாரிகளை உறக்கத்திலிருந்து கரையேற்ற
விரும்பிய ஆழ்வார் யோக நித்திரை செய்யும் பெரியபெருமாளைப் பத்து பாசுரங்களால், வேதம் "உத்திஷ்ட புருஷ, ஹரி லோகித பிங்களாக்ஷி" என்றும், "கௌசல்யா ஸுப்ரஜா ராம" என்று வால்மீகி
முனிவர் சக்ரவர்த்தித் திருமகனை எழுப்பியது போல், "அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே"
என்று எழுப்பி, பத்தாம் பாசுரத்தில், "அடியார்க்கு ஆட்படுத்தாய்" என்று
பாகவத கைங்கர்யத்தைப் பிரார்த்தித்து, அதாவது, பகவானுக்குத் தொண்டு
செய்பவர்களுக்குத் தான் தொண்டு செய்பவராய் இருக்கவேண்டும் என்று வேண்டி, தமது "திருப்பள்ளியெழுச்சி"
என்னும் பிரபந்தத்தை நிறைவு செய்கிறார். எம்பெருமானைத் துயிலெழுப்பும்
பொருண்மையில் பாடப்பட்டதால், இப்பிரபந்தம்
"திருப்பள்ளி எழுச்சி" என்று பெயர் பெற்றது.
எவ்வளவோ திவ்யதேசங்களில் எம்பெருமான் கோயில் கொண்டிருந்தாலும், "கோயில்" என்ற பெருமையுடன் திகழ்வது திருவரங்கமே ஆகும். "கோயில், மலை, பெருமாள்" என்று முறையே திருவரங்கம், திருமலை மற்றும் திருக்கச்சி (காஞ்சிபுரம்) ஆகிய திவ்யதேசங்கள் அழைக்கப் படுகின்றன. திருநாராயணபுரம் என்னும் தேசமானது பெருமாள் கோயில் என்றழைக்கப்படுகிறது. திவ்யதேசங்களில் தலைமைத் தலமாக இருப்பதும் திருவரங்கமே. திருவரங்கநாதனுக்கு மட்டுமே பாசுரங்களைப் பாடியவர் இவர்.
“பச்சைமாமலைபோல் மேனிப் பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா! அமரரே! ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர இந்திர லோகமாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே!”
என்று "திருமாலை"யில் அருளிச்செய்தார் இவ்வாழ்வார் (பாசுரம் 2).
பாசுர விளக்கம் : அடியவர்களுக்காகத் திருவரங்கத்தில் நித்யவாசம் செய்பவனே! பசுமை நிறமுள்ள பெரிய மலைபோன்ற திருமேனியையும், பவளம் போன்ற (சிவந்த) திருவதரத்தையும், செந்தாமரை மலரை ஒத்த கண்களையும் உடையவனாய், அடியவரை ஒருநாளும் நழுவவிடாதவனே! நித்யஸூரிகளுக்கு நிர்வாஹகனே! இடையர்களுக்குத் தலைவனே! எண்ணும்படியான, இந்த ரசத்தை விட்டு, (உன் திருநாமங்களைச் சொல்லும்) நான், வேகுதூரம்போய் பரமபதத்தை ஆளும்படியான அந்த போகத்தை அடைவதாயிருந்தாலும் அதை நான் விரும்பமாட்டேன்! என்று திருவரங்கநாதனிடம் விண்ணப்பிக்கிறார். பரமபதத்தைக் காட்டிலும், திருவரங்கத்தில் அர்ச்சாமூர்த்தியாய் எழுந்தருளியிருக்கும் திருவரங்கநாதனின் திவ்ய அழகை எப்பொழுதும் தரிசித்துக் கொண்டிருப்பதில்தான் தனக்கு பேரானந்தத்தை அளிக்கும் என்று, வைகுந்தத்தைத் தவிர்த்து, திருவரங்கத்திலேயே தன்னை இருத்தும்படி விண்ணப்பிக்கிறார் (வேண்டுகிறார்) இவ்வாழ்வார்.
இராமானுச நூற்றந்தாதியில் (பாசுரம் 13) தொண்டரடிப்பொடி ஆழ்வாரின்
சிறப்பைக்கூறி,
அவரைப்
பணிந்த இராமானுசரின் பெருமையைப் போற்றும் வண்ணம்,
"செய்யும் பசுந்துளவத்
தொழில் மாலையும் செந்தமிழில்
பெய்யும் மறைத்தமிழ் மாலையும் பெறாத சீர் அரங்கத்து
ஐயன் கழற்கணியும் பரண் தாள் அன்றி ஆதரியா
மெய்யன் இராமானுசன் சரணே கதி வேறு எனக்கே"
என்று அருளியுள்ளார் திருவரங்கத்தமுதனார்.
பாசுர விளக்கம் : தொண்டரடிப்பொடி ஆழ்வாராகிற
தம்மாலே செய்யப்பட்டதாய்,
பசுமைதங்கிய
திருத்துழாய் மயமாய் வேலைப்பாடுகளை உடையதான பூமாலைகளையும், அழகிய தமிழ் மொழியிலே
உண்டாகப்பாட்டதாய் வேதங்களின் சத்துக்களை உடைய திருமாலை, திருப்பள்ளியெழுச்சி ஆகிய
திவ்யப்ரபந்தங்களாகிற சொல் மாலைகளையும் (பாமாலை), நித்ய சித்தமான கல்யாண
குணங்களை உடையவனுமான திருவரங்கநாதனுடைய திருவடிகளிலே திளைப்பவரான தொண்டரடிப்பொடி
ஆழ்வாராகிற பெரியவருடைய திருவடிகளைத் தவிர மற்றொன்றையும் விரும்பாத சத்யசீலரான
எம்பெருமானாருடைய (ஸ்ரீ ராமானுஜர்) திருவடிகளே அடியேனுக்கு
விசேஷமானது என்று திருவரங்கத்தமுதனார் தெரிவிக்கிறார்
இவ்வாழ்வார் திருவவதரித்த பெருமையை,
"மன்னியசீர் மார்கழியில்
கேட்டை இன்று மாநிலத்தீர்
என்னிதனுக்கு ஏற்றம் எனில் உரைக்கேன் - துன்னுபுகழ்
மாமறையோன் தொண்டரடிப்பொடி ஆழ்வார் பிறப்பால்
நான்மறையோர் கொண்டாடும் நாள் "
(உபதேச இரத்தினமாலை, பாசுரம் 11) என்று பாடி மகிழ்கிறார் மணவாள மாமுனிகள்.
பாசுர விளக்கம் : பரந்த உலகத்தில்
உள்ளவர்களே இன்றைய தினம் சிறப்பு
வாய்ந்த "மார்கழிக் கேட்டை" ஆகும். இந்நாளுக்கு என்ன ஏற்றம்
என்று கேட்டால்,
சொல்கிறேன்
கேளுங்கள்:
மிகுந்த
புகழை உடைய,
பரம
வைராக்கியரான தொண்டரடிப்பொடி ஆழ்வாருடைய அவதாரம் காரணாமாக, வேத விற்பன்னர்கள்
அனைவரும் மகிழும் நாளாகும்
தொண்டரடிப்பொடி ஆழ்வார் வாழித்திருநாமம்:
மண்டங்குடியதனில் வாழ வந்தோன் வாழியே
மார்கழியில் கேட்டை நாள் வந்துதித்தான் வாழியே
தென்டிரைசூழ் அரங்கரையே தெய்வம் என்றான் வாழியே
திருமாலை ஒன்பதஞ்சும் செப்பினான் வாழியே
பண்டு திருப்பளியெழுச்சி பத்தும் அருளினான் வாழியே
பாவையர்கள் கலவிதன்னைப் பழித்த செல்வன் வாழியே
தொண்டு செய்து துளவத்தால் துலங்கினான் வாழியே
தொண்டரடிப்பொடி ஆழ்வார் துணைப்பதங்கள் வாழியே.
தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.