ஸ்ரீமதே ராமானுஜாய நம:
"குருகைக்காவலப்பன் வைபவம்"
திருநக்ஷத்திரம் : தை - விசாகம்
நாதமௌநி பதாஸக்தம் ஜ்ஞாநயோகாதி ஸம்பதம் |
குருகாதிப யோகீந்த்ரம் நமாமி ஸிரஸா ஸதா ||
(விளக்கம் : "நாதமுனிகளின் திருவடிகளை ஆச்ரயித்து, அவரிடம் ஞானயோக வித்யைகளைப் பெற்றவரும், குருகூரில் அவதரித்தவருமான யோகசாஸ்த்ரத்தில் வல்லவராய்த் திகழ்பவரை (குருகைக்காவலப்பன்) அனுவரதமும் தலையால் வணங்கிச் சரண் புகுவோம்" - ஓரளவு தமிழ்படுத்தப்பட்டுள்ளது. பிழை இருந்தால் பொறுத்துத் திருத்தவும்).
திருநக்ஷத்திரத் தனியன்:
ம்ருகே விஸாக ஸம்பூதம் நாதமௌநி பதாஸ்ரீதம் |
ஜ்ஞான யோகாதி ஸம்பந்தம் குருகாத்யக்ஷமாஸ்ரயே ||
(விளக்கம் : "மகர (தை) மாசத்தில் விசாக நக்ஷத்திரத்தில் திருவவதரித்து, நாதமுனிகளின் திருவடியை ஆச்ரயித்து, அவரிடமிருந்து ஜ்ஞான யோக விதைகளை கற்றுத் தேர்ந்த குருகூர் என்னும் மஹாக்ஷேத்திரத்தில் அவதரித்த (குருகைக்காவலப்பனை) ஆச்ரியிக்கிறேன்" - ஓரளவு தமிழ்படுத்தப்பட்டுள்ளது. பிழை இருந்தால் பொறுத்துத் திருத்தவும்).
வர் (குருகைக்காவலப்பன்) நாதமுனிகள் உகந்த சிஷ்யர் என்றும், அவரிடமிருந்து யோக ரஹஸ்யத்தைப் பெற்றார் என்றும் பல கிரந்தங்களில் உள்ளன. நாதமுநிகளிடமிருந்து யோக ரஹஸ்யத்தைக் கற்று, அதன் மூலம் எம்பெருமானை தியானித்து, அஷ்டாங்க யோகத்தில் ஸர்வ வல்லமை படைத்தவராய்த் திகழ்ந்தார். எம்பெருமானிடமிருந்து பிரிந்திருப்பதைத் தரிக்க (தாங்க) முடியாமல், பரமபதத்திற்கு எழுந்தருளிய நாதமுனிகளின் சுத்த ஸத்வமயமான திருமேனி திருப்பள்ளிப்படுத்தப்பட்ட திருவரசின் நிழலிலேயே தன் எஞ்சிய காலம் முழுவதும் தங்கி, எம்பெருமானைத் தியானித்தும், அத்திருவரசைப் பாதுகாத்தும் வந்தார் குருகைக்காவலப்பன்.
மணக்கால் நம்பிகளிடம் ஸ்ரீ கீதையின் உயர்ந்த அர்த்த விஷயங்களைக் கேட்டு அறிந்த ஸ்ரீ ஆளவந்தார் அந்த கீதையை அருளிச்செய்த எம்பெருமானை அடையும் வழி யாது என்று நம்பியிடம் கேட்க, "அவனை அடைய அவனே வழி ஆவான்" என்று மேலும் உபதேசித்து அருளி, அவரைத் திருவரங்கத்து எம்பெருமானிடம் அழைத்துச் சென்று, பெருமானிடம் ஆளவந்தாரைக் கடாக்ஷிக்க வேண்டுமாறு விண்ணப்பிக்க, பெருமாளும் ஆளவந்தாரைக் கடாக்ஷித்து அருளினான். அருள்பெற்ற ஸ்ரீ ஆளவந்தார் அதுமுதல் தான் நடத்திவந்த ராஜ்ய பரிபாலனங்களைத் துறந்து, "எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்" என்று கோதை நாச்சியார் அருளிச்செய்தபடி, பகவத் கைங்கர்யத்துக்குத் தன்னை முழுவதுமாக அர்பணித்துக் கொண்டார்.
அப்போது மணக்கால் நம்பிகள் "தேவரீருடைய பாட்டனாரான நாதமுனிகள் அஷ்டாங்க யோக ரஹஸ்யத்தை குருகைக்காவலப்பனிடம் சேமித்து வைத்திருக்கிறார். அவரிடம் சென்று, அந்த நிதியைப் பெற்றுக்கொள்ளும் என்று நியமித்து அருளினார். ஆளவந்தாரும் குருகைக்காவலப்பன் யோகம் செய்யுமிடத்தில், அவருடைய யோகத்தைக் கலைக்கக்கூடாது என்னும் திருவுள்ளத்தால் ஓசைப்படுத்தாமல் சுவருக்குப் பின்புறம் நிற்க, அப்பனும் பின்புறம் திரும்பிப் பார்த்து "இங்கு சொட்டைக் குலத்தவர் எவரேனும் வந்ததுண்டோ?" என்று கேட்டருள, ஆளவந்தாரும் "அடியேன் யமுனைத்துறைவன் விடை கொண்டிருக்கிறேன்" என்று வணங்கி நின்று, "அடியேன் வந்தது தேவரீருக்கு எப்படித் தெரிந்தது?" என்று கேட்க, "பிராட்டியோடு போக ரஸத்தை அனுபவிப்பதைக் காட்டிலும், என்னோடு கலந்திருப்பதை விரும்பும் எம்பெருமான் என்னையும் உபேஷித்துப் (விட்டு) பின்புறம் திரும்பிப் பார்த்ததனால், நாதமுனிகள் வம்சத்தவர் ஒருவர் வந்திருக்கவேண்டும் என்று உணர்ந்தேன்" என்று அருளிச் செய்தார். ஆளவந்தாரும் "யோக ரஹஸ்யத்தை அருளிச்செய்யவேண்டும்" என்று பிரார்த்திக்க, அப்பனும் தாம் பரமபதம் செல்லவிருக்கும் நாளைக் குறிப்பிட்டு, "அதற்கு முன் வந்தால் உபதேசிக்கிறோம்" என்று திருமுகம் (வாக்குறுதி) எழுதிக் கொடுத்து, ஆளவந்தாரைக் கோவிலுக்கு (திருவரங்கம்) அனுப்பினார்.
கோயிலில் தர்ஸனம் நிர்வஹித்து வரும்போது, நம்பெருமாள் திருவத்யயன உற்சவத்திலே அரையர் ஸேவையில் "கெடுமிடர்" பதிகம் (திருவாய்மொழி, 10.2) என்கிற திருவாய்மொழியை அபிநயித்துப் பாடிய திருவரங்கப் பெருமாள் அரையர், ஆளவந்தாரின் திருமுக மண்டலத்தைப் பார்த்து, "நடமினோ நமர்களுள்ளீர் நாம் உமக்கு அறியச் சொன்னோம்" (திருவாய்மொழி, 10.2.8) என்று பலவாறு பாடியருள, ஆளவந்தாரும் பெரியபெருமாளுடைய நியமனம் (உத்தரவு) பெற்று, திருவனந்தபுரம் திவ்யதேசத்துக்கு எழுந்தருளி, அனந்தபத்மநாதனைத் திருவடி தொழுது, குருகைக்காவலப்பன் எழுதிக்கொடுத்த வாக்குறுதி நினைவுக்கு வர, அதை எடுக்கச் செய்து பார்க்கையில்,அப்பன் பரமபதம் செல்லும் தினம் அன்றேயாக இருக்கக்கண்டு, "ஒரு புஷ்பக விமானம் பெற்றிலோமே" என்று மிக வருந்திக் கோயிலுக்கு (திருவரங்கம்) எழுந்தருளினார். அதாவது, தாம் செல்லும்வரை அப்பன் காத்திருக்கமாட்டார் என்றுணர்ந்த ஆளவந்தார், குருகைக்காவலப்பனிடமிருந்து அஷ்டாங்க யோகத்தைப் பெறமுடியாமல் போனதுபற்றி மிகவும் வருந்தினார் என்பது ஆளவந்தாரின் வைபவக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
ஒருமுறை ஒருவர் குருகைக்காவலப்பனிடம் "ஜகத்துக்கும் ஈஸ்வரனுக்கும் தொடர்பு எத்தகையது (எப்படிப்பட்டது) என்று கேட்டார். அதற்கு அப்பன், "இதை நீயா கேட்பது? என்று பதில் கூறினார். இதன் கருத்தாவது: "ஈச்வரனான இந்த ஜீவாத்மா பிறக்கும்பொழுது எந்த ஒரு சரீரத்தைப் பெற்று, பின்னர் மரணமடையும்பொழுது எந்த ஒரு சரீரத்திலிருந்து புறப்படுகிறானோ" (கீதை, அத்தியாயம் 15, ஸ்லோ.8) என்று இந்த்ரியம் முதலானவற்றோடு கூடி வளர்வதாயிருக்கும் இந்த தேகமாகிற இந்த ஜகத்திற்கு ஜீவாத்மாவை ஈச்வரனாகச் சொல்லிற்று அல்லவோ கீதை.
கீதை ஸ்லோகம் (15.8) :
ஸரீரம் யதவாப்நோதி யச்சாப்யுத்க்ராமதீஸ்வர: |
க்ருஹீத்வைதாநி ஸம்யாதி வாயுர்கந்தாநிவாஸயாத் ||
விளக்கம் : காற்று மணமுள்ள இடத்திலிருந்து, பலவித மணங்களை இழுத்துச் செல்வதுபோல, உடலை ஆள்பவனான ஜீவாத்மாவும் எந்த உடலைவிட்டுக் கிளம்புகிறானோ, அதிலிருந்த மனத்ததோடு கூடிய புலன்களையும் எடுத்துக்கொண்டு, (மீண்டும் பிறவிகொள்ளும்போது) எந்த உடலை அடைகிறானோ, அதில் .வந்து சேர்கிறான்.
இந்த சரீரத்திற்கும் இதற்கு ஈச்வரனான ஜீவாத்மாவுக்கும் உள்ள தொடர்பாகிற சரீராத்மத் தன்மையே உலகிற்கும் ஸர்வேஸ்வரனுக்கும் உள்ளதாகும் என்று மேல் ஸ்லோகத்தைச் சொல்லி விளக்கினார் குருகைக்காவலப்பன்.
இன்னொருமுறை, ஒருவர் அப்பனைப் பார்த்து, "எம்பெருமானை எப்பொழுதும் நினைத்துக்கொண்டிருக்கும் நீர் அவனை நினைக்க எனக்கு ஒரு வழி சொல்லவேண்டும்" என்று கேட்டார். அதற்கு அப்பன், "நான் உனக்கு எம்பெருமானை நினைக்க வழி சொல்லுகிறேன்; நீ அவனை மறக்க எனக்கு வழி சொல்லுவாயாக" என்று பதில் கூறினாராம். இந்த பதிலின் கருத்தாவது: "இந்த உலகே எம்பெருமானின் சிருஷ்டியாய் இருக்கும்போது, அதில் இருக்கும் அத்தனை விஷயங்களும் அவனை நினைவுபடுத்துவதாகத்தானே இருக்கவேண்டும்" என்றாகும்.
குருகைக்காவலப்பன் அவதரித்த ஸ்தலம் "திருக்குருகூர்". நம்மாழ்வார் அவதரித்த திருத்தலமும் "திருக்குருகூர்" ஆகும். "ஆழ்வார் திருநகரி" என்றே பெயர்கொண்டு வழங்கப்படுகிறது இவ்வூர். அப்பன் அவதரித்ததும் நம்மாழ்வார் அவதரித்த திருநக்ஷத்திரமான "விசாகம்" ஆகும். அப்பன் ஆசார்யராய்க் கொண்டது ஸ்ரீமந் நாதமுனிகள்; ஸ்ரீமந் நாதமுனிகள் ஆசார்யராய்க் கொண்டது நம்மாழ்வாரை. இதன்மூலம், அப்பனுக்கும் நம்மாழ்வாருக்கும் உள்ள நெருங்கின தொடர்பு எப்படி அமைந்திருக்கிறது என்பது ஆச்சர்யத்திற்குரிய விஷயமாகும். அப்பன் தனது இருப்பிடமாகக் கொண்டது, ஸ்ரீமந் நாதமுனிகளுடைய திருப்பள்ளி (திருவரசு). அது அன்றுமுதலாக, சோழதேசத்திலே திருக்காவேரிதீரத்தில், "குருகைக்காவலப்பன் கோயில்" என்று பிரசித்தமாயிற்று. இவருக்கு வித்யை "அஷ்டாங்க யோகம்". திருவாராதனம் "சக்கரவர்த்தித் திருமகனார்". வர்ணம் "ப்ராஹ்மாணோத்தமர். புருஷகாரர் "புண்டரீகாக்ஷர்". இவர் இப்பூவுலகில், 151 திருநக்ஷத்ரங்கள் (ஆண்டுகள்) எழுந்தருளியிருந்து, இறுதியில் தனது ஆசார்யரான ஸ்ரீமந் நாதமுனிகளை தியானித்துக்கொண்டு, அவர் திருவடி அடைந்து உய்ந்தார்.
குருகைக்காவலப்பன்
வாழித்திருநாமம் :
மகரமதில்
விசாகம்நாள் வந்துதித்தான் வாழியே
மாறந்தாள்
நாதமுனி மலரடியோன் வாழியே
நிகரில்நன்
ஞானயோகம் நீண்டு செய்வோன் வாழியே
நிர்ணயமாய்
ஐந்துபொருள் நிலையறிவோன் வாழியே
அகமறுக்கும்
இராமர்பதம் ஆசையுள்ளோன் வாழியே
ஆழ்வார்கள்
மறையதனை ஆய்ந்துரைப்போன் வாழியே
செகதலத்தில்
குருகூரில் செனித்த வள்ளல் வாழியே
செய்(ய)குருகைக் காவலப்பன்
திருவடிகள் வாழியே.
குருகைக்காவலப்பன் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே
சரணம்.
No comments:
Post a Comment