Manavala Mamunigal Vaibhavam

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

மணவாள மாமுகள் வைபவம்
அவதார திருநக்ஷத்திரம்: ஐப்பசி மூலம் 

"துலாயாம் அதுலே மூலே பாண்ட்வே குந்திபுரீவரே 
ஸ்ரீஸேஷாம்   ஸோத்பூதம் வந்தே ரம்யஜாமாதரம் முனீம்". 

மணவாள மாமுனிகள் அவதாரப் பெருமை :

பூருவாசார்யர்கள் பரம்பரையில் கடைசியாக அவதரித்தவர் மணவாள மாமுனிகள். ஆதிசேஷனுடைய அவதாரமாகவும், பகவத் இராமானுசரின் அவதாரமாகவும் அவதரித்தவர் மாமுனிகள்.  அவர் அவதரித்தது, நம்மாழ்வார் அவதரித்த ஆழ்வார் திருநகரில் (திருக்குருகூர்), ஐப்பசித் திங்கள் "மூல" நக்ஷத்திரத்தில்.  மாமுனிகளின் இயற்பெயர் "அழகிய மணவாளர்" என்பது.   மாமுனிகளுக்கு, ஆழ்வார்களின் அருளிச்செயல்களையும்,  பிள்ளை உலகாரியனின் சீரிய நூல்களையும் கற்பித்தார் பிள்ளை உலகாரியனின் சீடரான திருவாய்மொழிப்பிள்ளை என்கிற திருமலையாழ்வார்.   
திருவாய்மொழிப்பிள்ளை இராமானுசர் மாறனடி பணிந்து உய்ந்தமை பற்றிய சிறப்பை மனத்தில் கொண்டு, ஆழ்வார் திருநகரியில் இராமானுசருக்கு ஒரு    திருக்கோயிலமைத்து, அதைச்சுற்றி, அந்தணர்களைக் குடியேற்றி, “இராமானுச சதுர்வேதி மங்கலம் என்ற சிற்றூரை அமைத்து, அழகிய மனவாளரிடம் அந்த அமைப்பைச் சிறப்புற நடத்தும் பணியை ஒப்படைத்தார்.   மணவாளரின் சீரிய பணியைக் கண்ணுற்று அவருக்கு எதிராசரிடம் பேரன்பு கொண்டவர் என்ற பொருளில் "யதீந்த்ரப்ரவணர் " என்ற விருதை வழங்கினார், அவரது ஆசார்யரான திருவாய்மொழிப்பிள்ளை.    பிள்ளை ஆணையிட்டபடி, உடையவரைப் பற்றி இருபது பாக்கள் கொண்ட "யதிராஜ விம்சதி" என்ற வடமொழி நூலையும், அழகிய மணவாளர் இயற்றினார்   சில காலம் கழித்து, அழகிய மனவாரை திருவரங்கம் "பெரிய கோயிலில்" வாழ்ந்து வைணவ சமயத் தலைமை பூண்டு பணி  செய்ய ஆணையிட்டு, திருநாட்டுக்கு எழுந்தருளினார், திருவாய்மொழிப்பிள்ளை. 
அழகிய மணவாளர் வைணவர்கள் பாரிப்பதுபோல், செந்தமிழ், வடமொழி என்ற இருமொழியிலமைந்த வைணவ சமய நூல்களையும் பரப்பும் உபய வேதாந்த பிரவர்த்தகாசார்யராய், புகழ்மிக்கு விளங்கினார்   உறவினர்கள் நிறைந்தமையால் பல நாள் அழகிய மணவாளருக்கு, அரங்கனின் கோயிலினுள் செல்ல முடியாத தீட்டு ஏற்பட்டுவந்தது. இதற்கு வருந்தி, மணவாளர், தன்னுடன் பயின்ற சடகோப சீயர் என்பவரிடம், முறையே துறவறம் வேண்டிப்பெற்றார்  அழகிய மனவாளச்சீயர் என்ற பெயரும் பெற்றார்.  புகழ்மிக்கமைபற்றி,  இவர்  "பெரிய சீயர் என்றும் மணவாள மாமுனிகள் என்றும் அழைக்கப்பட்டார். 
மாமுனிகள் தம் மடத்தைச் சீர்படுத்தி, பிள்ளையுலகாசிரியர் திருமாளிகையிலிருந்து மண் கொண்டிட்டு, தன் ஆசாரியரான திருவாய்மொழிப்பிள்ளையின் பெயரால் "திருமலை ஆழ்வார் மண்டபம்" என்ற மண்டபம் எழுப்பி, சீர் வைட்டணவ  சமயம் பரப்ப விரிவுரைகளும் தொண்டும் செய்துவந்தார்.   மாமுனிகளின் சீடர் கூட்டம் நாள்தோறும் பெருகிக்கொண்டே சென்றது 

மாமுனிகள் எம்பெருமானார் பற்றிய "யதிராஜ விம்சதி" என்கிற வடமொழித்துதி நூல் தவிர, பிள்ளை உலகாசிரியரின் ஸ்ரீ வசன பூஷணம், தத்வத்ரயம், முமுக்ஷுப்படி , அழகியமவாளப் பெருமாள்  நாயனாரின் ஆசார்ய ஹ்ருதயம் ஆகியவைகளுக்கு தெள்ளிய, சீரிய உரைகளும் இராமானுச நூற்றந்தாதிக்கு உரையும், அருளாளப் பெருமானாரின் ஞானசாரம், பிரமேயசாரம் என்ற நூல்களுக்கு உரைகளும் சீடர்களின் வேண்டுகோளுக்கிணங்கி ஆழ்வார்கள், பூருவாச்சர்யார்கள்  இவர்களின் ஏற்றத்தைப் பேசும் உபதேச இரத்தினமாலை என்ற நூலையும், திருவாய்மொழியின் பொருளைச் சுருக்கமாகவும், உணர்ச்சியுடனும் அறிவிக்கும் "திருவாய்மொழி நூற்றந்தாதி" என்ற நூலையும் செய்தருளினார்   பகவத் கீதைக்கு தாத்பர்ய தீபமென்று ஒரு உரையிட்டதாகவும், அது இப்போது கிடைக்கவில்லை என்றும் கூறுவர்    ஈடு முப்பத்தாறாயிரத்துக்கு மேற்கோள்களின் திரட்டு, திருவாராதன முறை, ஆர்த்தி பிரபந்தம் என்பவை இவருடைய மற்றைய நூல்கள்.  இந்நூல்களின் தெளிவை உரைக்கும் வகையில் , மாமுனிகளை "விசதவாக் சிகாமணி" என்றழைப்பர்.  மாமுனிகளின் சிறப்பைப் பற்றி எறும்பியப்பா, பிரதிவாதி பயங்கரம் அண்ணன் முதலானோர் நூல்களை இயற்றியுள்ளனர்.

இவ்வாறு சீரும் சிறப்பும் மிக்கு விளங்கிய அழகிய மணவாள மாமுனிகள், திருவரங்கன் இட்ட ஆணையின்படி, ஓராண்டு முழுவதும், திருவாய்மொழிக்கு உரையான நம்பிள்ளை ஈட்டை, திருக்கோயில் விழாக்கள் நிறுத்தப்பட்டு,  திருவரங்கன் தன் நாச்சிமார்கள், ஆழ்வார்கள், ஆசாரியர்கள் புடைசூழ பெரிய திருவோலக்கமாக எழுந்தருளியிருக்க, திருவாய்மொழியின் சாராம்சங்களை பறக்க விரித்துரைத்தார். அவருடைய புகழ் மேலும் உயர்ந்து அவருடைய விரிவுரையைக் கேட்கக் கூடிய கூட்டம் மிகுந்தது.  அவர் தம் காலக்ஷேபம் முடிவடையும் நாளான, சாற்றுமறை தினத்தன்று, அரங்கன் அவருக்கு சீர்கள் பல தந்து, தவிர, அரங்க நாயகமென்ற ஐந்து வயது அர்ச்சகப்பிள்ளையுருவாய் வந்து, 

ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் 
யதீந்த்ரப் பிரணவம் வந்தே ரம்யஜா மாதரம் முனீம்  

என்று அவரைப்புகழ்ந்து, ஒரு தனியனும் அருளிச்செய்தான்.   இத்தனியன், திருவதரியிலும் திருநாராயணபுரத்திலும் திருமலையிலும், திருமாலிருஞ்சோலையிலும்கூட பெரியோர்களுக்கு தெய்வ நியமனத்தால் வெளியிடப்பட்டது. 

மாமுனிகள், யதிராசரின் புகழைப் போற்றி   இயற்றிய வடமொழிப் ப்ரபந்தம்  "யதிராஜ விம்சதி" ஆகும். .  மேலும் அவர்,  ஆழ்வார்களும் ஆசாரியர்களும் அவதரித்த திருத்தலங்களைப்பற்றியும், அவர்கள் அவதரித்த மாதங்களையும் திருநக்ஷத்ரங்களைப் பற்றியும்,  ஆழ்வார்கள்  பாடியுள்ள திவ்யப் பிரபந்தங்களின்  சிறப்பையும், ஆசாரியர்கள் அருளிச்செய்த கிரந்தங்களின் சிறப்பினையும் பற்றி  உலகோர்கள்   அனைவரும் அறியும் வண்ணம்  "உபதேச இரத்தினமாலை" என்ற அற்புத கிரந்தத்தை இயற்றினார்.  மாமுனிகளின் ஒவ்வொரு நூலுமே, வைணவத்திற்கு அவர் இட்ட கிரீடமாகும்.  ஆனால் கிரீடத்திற்குக்  கிரீடம் வைத்தாற்போல் அவர் இயற்றியது   "திருவாய்மொழி நூற்றந்தாதி" என்னும் அற்புதப் பிரபந்தமாகும்.  அதன் சிறப்பு என்ன என்பதைச்   ற்று அனுபவிப்போம்: 

திருவாய்மொழியின் சாரார்த்தங்களையெல்லாம் ஒரு வருடகாலத்தில்  திருவரங்கம் பெரிய கோயிலில் விரித்துரைத்தும், மாமுனிகளுக்குத்  திருவாய்மொழியின் மீது கொண்டிருந்த தாபம் தீரவில்லை.   அதனை அனைவருடனும் சேர்ந்து அனுபவிக்கும் பொருட்டே, "திருவாய்மொழி நூற்றந்தாதி" என்னும் அற்புதப் பிரபந்தத்தை அருளிச்செய்தார் மாமுனிகள்.   இந்தப் பிரபந்தத்தைப் பற்றி  நமக்குத் தெரிந்தவரை  சற்று அனுபவிப்போம் 

ஆழ்வார்கள் அருளிய அனைத்து திவ்ய பிரபந்தக்களுக்கும், நமது பூருவர்கள் அந்தப் பிரபந்தத்தை அருளிய ஆழ்வாரது திருநாமத்தையும், மேலும் அந்தப் பிரபந்தத்தின் மூலப்பொருளையும் சுருக்கமாக விளக்கும் வகையில், "தனியன்" என்ற ஒன்றை, அந்த பிரபந்தத்திற்கான ஒரு முன்னுரை  போல், அருளிச்செய்திருப்பார்கள்.       ஏன் அது "தனியன்" என்று அழைக்கப்படுகிறது என்றால், பிரபந்தங்களின் எண்ணிக்கையில் அது சேராமல் இருப்பதால்.   ஒருவர் ஒரு நூலை எழுதினால், அதற்கு அவரே முன்னுரை எழுதுவது என்பது இயல்பில் இல்லை;  ஆதலால்,  நம் பூருவாச்சரியர்கள் இதை நன்கு புரிந்துகொண்டு, ஆழ்வார்களது திவ்யப்ப்ரந்தகளுக்கு, முன்னுரையாய்  "தனியன்" இட்டு, தங்கள் "தொண்டர்" கைங்கர்யத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள்.  ஆழ்வார்களது பிரபந்தம் எவ்வளவு மேன்மையாகக் கருதப்படுகிறதோ, அதற்கு இணையாக, பூருவர்கள் அருளியுள்ள தனியனும் மேன்மையாகக் கருதப்படுகிறது.  அதனால்தான், இன்றும் எங்கும், பூருவர்கள் அருளிய தனியனை சேவித்த பிறகுதான்,  ஆழ்வார்களது பிரபந்தங்கள் சேவிக்கப்படுகிறது.  மேலும், ஆழ்வார்களது பிரபந்தங்களை விரித்துரைக்கும் உபன்யாசகர்கள்கூட, முதலில் தனியனைப் பற்றி விளக்கிவிட்டுத்தான் (அவதாரிகை), பிரபந்தத்தைப் பற்றிய விரிவுரையைத் தொடங்குகிறார்கள் 

மாமுனிகள் அருளியுள்ள இந்த அற்புதப் பிரபந்தமான "திருவாய்மொழி நூற்றந்தாதி" என்னும் பிரபந்தமும் கீழ்க்கண்ட அற்புதமான தனியனை முன்னிட்டுக்கொண்டுதான்  சேவிக்கப்படுகிறது.   

"அல்லும் பகலும் அனுபவிப்பார் தங்களுக்குச் 
சொல்லும் பொருளும் தொகுத்துரைத்தான் - நல்ல 
மணவாள மாமுனிவன் மாறன்மறைக்குத் 
தணவா நூற்றந்தாதிதான் 

மன்னுபுகழ்சேர் மனவாளமாமுனிவன் 
தன்னருளால் உட்பொருள்கள் தம்முடனே - சொன்ன 
திருவாய்மொழி நூற்றந்தாதியாம் தேனை 
ஒருவாதருந்து நெஞ்சே உற்று. 

இதன் விளக்கத்தை  சுருக்கமாக நோக்குவோம்:  திருவாய்மொழியின் சாரார்த்தங்களை, மாமுனிகளுக்கு முன்னர் இவ்வுலகை அலங்கரித்த பூருவர்கள் அனைவருமே, ஓராண்வழியாய்த்தான்  விளக்கியுள்ளனர்.  ஆதலால் அவர்கள் காலத்தில், திருவாய்மொழி பிரபந்தத்தையும் அதன் ஆழ்ந்த அர்த்தங்களையும் அறிந்திருந்தவர்கள் எண்ணிக்கையில்  மிகமிகக் குறைவாகவே இருந்தனர்.   மாமுனிகளின் ஆசார்யரான திருவாய்மொழிப்பிள்ளையும், திருவாய்மொழியின் சாரார்த்தங்களை ஓராண்வழியாய் உபதேசிக்கும்  பொருட்டே  மாமுனிகளுக்கு அருளிச்செய்தார்     ஆனால், மாமுனிகள் இந்த வரம்பிலிருந்து, சற்றே மாறி, "பாருலகில் ஆசையுடைர்க்கெல்லாம் ஜகதாசர்யரான எம்பெருமானார் திருமந்திரத்தை உபதேசித்ததுபோல்"  "மாமுனிகள்"  திருவாய்மொழியின் அர்த்தங்களை அனைவரும் அறிந்துகொள்ளும் வகைசெய்தார்.    திருவாய்மொழி என்பது வேதங்களின் சாரம்; அனைவரும் வேதங்களைக் கற்பது என்பது எளிதல்ல; ஆனால்,  வேதங்களைத் தமிழ்படுத்தி, நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியின் கரும்பினின் சாருபோன்ற அர்த்த விஷயங்கள் அனைவரையும் சென்றடைந்தால்தான்  அது அவர்களது பிறவிப்பயனாய் இருந்து, எம்பெருமானின் கடாட்சத்தைப் பெற்றுத்தந்து, எங்கும் திருவருள்பெற முடியும் என்பதனை உள்ளத்தில் கொண்டு, நம்மாழ்வாரது "திருவாய்மொழியின்" சாராம்சங்களை பொருள்மாறாமல் சுருக்கமாய் எடுத்துரைக்கும் வகையில், "திருவாய்மொழி நூற்றந்தாதி" என்னும் "தனிச் சிறப்பு வாய்ந்த  பிரபந்தத்தை" அருளினார்.  இதனைக் கற்றாலே, திருவாய்மொழியின் மூலப்பொருள்கள் எளிதில் புரிந்துவிடும்.  அந்த அளவிற்கு, மாமுனிகள் அயர்ச்சியின்றி பெருமேன்மையுடன் இதனை அருளியுள்ளார்.

மேலும்,  வேதங்களுக்கு இணையானது "மாறன்" அருளிய  திருவாய்மொழி;   திருவாய்மொழிக்கு   இணையானது மாமுனிகள் அருளிய "திருவாய்மொழி நூற்றந்தாதி".  ஆகையால்,  திருவாய்மொழி வேறல்ல; அதன் நூற்றந்தாதி வேறல்ல.  "இரண்டுருவும் ஒன்றா இசைந்து" என்று "மலையப்பனை" பேயாழ்வார் அனுபவித்ததுபோல், நாமும் திருவாய்மொழியுடன் பின்னிபிணைந்துள்ள நூற்றந்தாதி என்னும் தேனை உண்டு களித்து, அதில் பொலிந்துள்ள கடலினும் பெரிய விஷயார்த்தங் களைக் கற்றுத்தேர்ந்து, மாமுனிகளின் அனுக்ராஹத்துடன் திருமாமகள் கேள்வனின் இன்னருளைப் பிரார்த்திப்போம்.
இனி, "திருவாய்மொழி நூற்றந்தாதி" என்ற பிரபந்தத்தின் விசேஷ விஷயங்களை அனுபவிப்போம்.

ஒரு திருவாய்மொழி என்பது "ஒரு பதிகமாகும்".  ஒரு பதிகமென்றால் "பத்து பாடல்களைக்" கொண்டது என்று பொருள்.   திருவாய்மொழிப் பிரபந்தம் என்பது மொத்தமாக "நூறு பதிகங்களைக்" கொண்டது. ஆக, திருவாய்மொழியில் உள்ள நூறு பதிகங்களுக்கு இணையாக, அதன் சாராம்சங்களை ஒட்டி, நூறு பாசுரங்களை அருளினார் மாமுனிகள்.      ஆனால், ஒரு பதிகத்தின் சாராம்சங்களை, ஒரு பாசுரத்தில், அதுவும்  நான்கே அடிகளில் சுருக்கமாக எடுத்துரைப்பது என்பது சாதாரண விஷயமல்ல. 

அப்படி சுருக்கமாகக் கொடுப்பதற்கு முன்,   சில நிபந்தனைகளை  ஏற்றுக்கொண்டு, அவைகளையெல்லாம் நிறைவேற்றவும் செய்தார் மாமுனிகள்.   அவை:
(1) ஒவ்வொரு பாடலிலும் நம்மாழ்வாரின் திருநாமமான "மாறன்" என்ற பெயர் வரவேண்டும்;
(2) திருவாய்மொழியின் ஒரு  பதிகத்தின் தொடக்கத்தில் வரும் வார்த்தையானது, அந்தப்  பதிகத்தை ஒட்டி  இயற்றப்படும்  பாசுரத்தின் தொடக்கச் சொல்லாக இருக்கவேண்டும்.;
(3)   திருவாய்மொழியின்  ஒரு பதிகத்தின் இறுதியில் வரும் வார்த்தையானது,   அந்தப்  பதிகத்தை ஒட்டி  இயற்றப்படும்  பாசுரத்தின் இறுதிச்சொல்லாக இருக்கவேண்டும்;  
(4) அது "அந்தாதித் தொடையில் இருக்கவேண்டும் - அதாவது திருவாய்மொழிப் பிரபந்தமே அந்தாதித் தொடையில் அமைக்கப்பட்ட பிரபந்தமாகும்  - அதாவது, ஒரு பாசுரத்தில் முடியும் சொல்லைக்கொண்டே, அடுத்த பாசுரம் தொடங்கப்பட்டிருக்கும்  அதைப்போலவே இந்த நூற்றந்தாதியிலும் அதே முறையைக் கடைப்பிடிக்கவேண்டும் - அதாவது, ஒரு பதிகத்தின் சாராம்சமாக இருக்கும் ஒரு பாசுரத்தின் இறுதிச்சொல்லைக் கொண்டே, அடுத்த பதிகத்தின் சாராம்சமாக இருக்கும் அடுத்த  பாசுரத்தைத் தொடங்கவேண்டும். 
(5) கருத்து மாறாமல் இருக்கவேண்டும் - அதாவது, திருவாய்மொழியின் ஒரு பதிகத்தில், ஆழ்வார் உரைத்துள்ள ஆழ்ந்த கருத்துக்களை, அந்தப் பதிகத்தைச் சார்ந்த பாசுரத்தில் சுருக்கமாக உரைத்தாலும், ஆழ்வார் உரைத்துள்ள கருத்தை மாற்றாமல் உரைக்கவேண்டும். 
(6) கடைசியாக, பகவானைக் குறித்து ஆழ்வார் ஒவ்வொரு பதிகத்திலும் அனுபவித்ததை, தான் (மாமுனிகள்) ஆழ்வாரைக் குறித்து அனுபவிப்பதாய்  அந்தப் பாசுரம் இருக்கவேண்டும்.
இவற்றையெல்லாம் செவ்வனே செய்தார் மாமுனிகள்.  உதாரணத்திற்கு, திருவாய்மொழியின் முதல் பதிகமாகிய "உயர்வற உயர்நலம் உடையவன் எவனவன்" என்ற பதிகத்தை அடியொற்றி,  மாமுனிகள் திருவாய்மொழி நூற்றந்தாதியில் இயற்றியுள்ள பாசுரத்தை அனுபவிப்போம்:  
"உயர்வே பரன்படியை உள்ளதெல்லாம் தான்கண்டு 
உயர்வேத நேர்கொண்டுரைத்து - மயர்வேதும் 
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல் 
வேறாகவே விளையும் வீடு"

மேற்பாசுரத்தில், 

(1) ஆழ்வாரின் திருநாமமான "மாறன்" என்ற சொல் வந்துவிட்டது; 

(2)  ஆழ்வார் "உயர்வற உயர்நலம்" என்று தொடங்கிருப்பதை, மாமுனிகள் "உயர்வே  பரன்படியை" என்று தொடங்கியிருக்கிறார் 

(3) ஆழ்வார் இப்பதிகத்தை "நிரநிறை ஆயிரத்து இவைபத்தும்  வீடே" என்று முடித்திருப்பதை, மாமுனிகளும், "வேறாகவே விளையும் வீடு" என்று முடித்திருக்கிறார். 

(4)  ஆழ்வார் முதல் பதிகத்தின் இறுதிச்சொல்லான "வீடு" என்பதைக் கொண்டே இரண்டாம் பதிகத்தை "வீடுமின் முற்றவும்"  என்று "அந்தாதித் தொடையில்" அமைத்திருப்பார்.  மாமுனிகளும், அதுபோலவே,   மேற்பாசுரத்தின் இறுதிச்சொல்லான  "வீடு" என்பதைக் கொண்டே, அடுத்த பாசுரத்தை "வீடுசெய்து" என்று அமைத்திருக்கிறார் ("வீடுசெய்து  மற்றெவையும்   மிக்கபுகழ் நாரணன் தாள்"..).

(5) ஆழ்வார் இந்தப் பதிகத்தில், பேரின்பப்பெருவீடான மோக்ஷத்தை அருளக்கூடியவன் எம்பெருமானே என்று சொல்லி அவன் திருவடியைப் பற்றுங்கள் என்ற ஆழ்ந்த கருத்தினை உணர்த்தியுள்ளார்.  மாமுனிகளும், மேற்பாசுரத்தில், ஆழ்வார் உரைத்துள்ள கருத்தினை உணர்த்தும் வகையில் "மயர்வேதும் வாராமல் மானிடரை வாழ்விக்கும் 'மாறன் சொல்' வேறாகவே விளையும் வீடு"  என்று பாடியுள்ளார்.

(6) இப்படி, பேரின்பப் பெருவீட்டை அருளக்கூடிய சர்வவல்லமை படைத்தவன் எம்பெருமானே என்று உரைத்து, ஆழ்வார் எம்பெருமானின் குணங்களை அனுபவிக்கிறார் இந்தப் பதிகத்தில்.  மாமுனிகளோ, பகவானின் திருவடியைப் பற்றிய ஆழ்வாரின் திருவடியைப் பற்றி, அதுவே, நமக்குப் பேரின்பப் பெருவீட்டை அளிக்கும் என்று உரைக்கிறார்.  அதாவது, "மாறன்  வேறாகவே விளையும் வீடு" என்று பார்த்தால் மாமுனிகள் ஆழ்வாரை அனுபவிப்பதை உணரமுடியும். 

திருவாய்மொழிப்  பிரபந்தத்தின் மூலம்  எம்பெருமானை உலகுக்குக் காட்டினார் நம்மாழ்வார்;  திருவாய்மொழி நூற்றந்தாதி பிரபந்தத்தின் மூலம், ஆழ்வாரை உலகுக்குக் காட்டியவர் மாமுனிகள். ஆழ்வார் வேறல்ல; மாறன் அடிபணிந்து உய்ந்த  இராமானுசர் வேறல்ல, அப்படிப்பட்ட இராமானுசரின் அம்சமாகவே அவதரித்த மணவாள மாமுனிகள் வேறல்ல.
இவ்விதம் பார்புகழும்  அறிவாற்றல்,  தொண்டு, ஞானம் என்று  எல்லாத்துறைகளிலும் மிகச் சிறந்து விளங்கிய மாமுனிகள்  "வைணவ உலகத்துக்குக் கிடைத்த ஞானமென்னும் நிறைவிளக்கு" என்று சொன்னால் அது மிகையாகாது 
"அடியார்கள் வாழ அரங்கநகர்வாழ 
சடகோபன் தண்தமிழ் நூல்வாழ 
கடல்சூழ்ந்த மண்ணுலகம் வாழ 
மணவாளமாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்". 

ஸ்ரீமதே ரம்யஜாமாத்ரு முநீந்த்ராய மஹாத்மனே 
ஸ்ரீரங்க வாஸினே பூயாத் நிதயஸ்ரீ:  நித்யமங்களம். 

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 

  

No comments: