Nampillai Vaibhavam

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

நம்பிள்ளை வைபவம்
கார்த்திகை மாதம்,  "கார்த்திகை" நக்ஷத்திரம்

தனியன் :

வேதாந்தவேத்யாம்ருதவாரிராஸே: 
   வேதார்த்தஸாராம் ருதபூரமக்ர்யம் |
ஆதாய வர்ஷந்தமஹம் ப்ரபத்யே 
   காருண்யபூர்ணம்  கலிவைரிதாஸம் ||

விளக்கம் :  வேதாந்தி நஞ்சீயராம் அமுதக்கடலினின்றும், வேதவிழுப் பொருளாகிற  அமுதப்பெருக்கை முகந்து பொழிபவரும், கருணை நிறைந்தவருமான திருக்கலிகன்றிதாஸராம் நம்பிள்ளையை வணங்குகிறேன். 

நம்பூர்   என்னும் க்ஷேத்திரத்தில் கார்த்திகையில் கார்த்திகையில் நாளில் அவதரித்த  "திருமங்கை ஆழ்வாரின்" அம்சமாகவே பிறந்தவர்  நம்பூர் வரதாசார்யா  ஸ்வாமி..

இவரது அவதார ரகசியம் : இவர் பிறப்பின் ரகசியத்தை நாம் பெரிய திருமொழி 7.10.10ஆம் பாசுரத்தில் காணலாம்
"மெய்ம்மை சொல்லில் வெண்சங்கம் ஒன்றேந்திய கண்ணா !!
நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் !
கவியின் பொருள் தானே!"

கண்ணனாய் திருகண்ணமங்கையில் நிற்கும் பெருமாளுக்கு திருமங்கை ஆழ்வாரின் பாசுரங்களின் அர்த்தங்களைக்  கற்க வேண்டும்  என்று ஆசை. ஆழ்வாரும் சரி சொல்லி தருகிறேன் என்றார்.. அதற்கு பெருமாள் இப்பொழுது வேண்டாம் ஏனெனில் அர்ச்சை ரூபத்தில் இது முடியாது, மற்றொரு நாள் நாம் பிறப்போம்; நீரும் பிறந்து நமக்கு கற்றுத்தருவீர் என்றார்.  இதை கொண்டே, எம்பெருமான் திருமங்கை ஆழ்வாரை  நம்பிள்ளையாகவே கார்த்திகை மாதம் கார்த்திகை நக்ஷத்ரம் கூடிய சுபதினத்தில் தோற்றுவித்தான்.     கண்ணன் எம்பெருமான் தானும்,   தனது அவதார திருநக்ஷத்திரமான ஆவணி மாதம் ரோகிணி  நாளன்று  "பெரியவாச்சான் பிள்ளை"யாக அவதரித்தான்.  இதன்மூலம், பகவானின் அம்சமான பெரியவாச்சான்பிள்ளை, திருமங்கை ஆழ்வாரின் அம்சமான நம்பிள்ளையை ஆசார்யராகக் கொண்டு, அவரிடம் அனைத்து வேதவேதாந்தங்களையும், ஆழ்வார்களின் அருளிச்செயல்களையும் அவற்றின் விவரணங்களையும் கற்றுத்தேர்ந்தார்.

பெயர் காரணம் - நம்பிள்ளை: நஞ்சீயர் தம்முடைய 9000படி திருவாய்மொழி வ்யாக்யனத்தை நம்பிள்ளைக்குக்  கற்பித்து அதன் மூலத்தையும் அவரிடத்தில் கொடுத்தார்.  கொடுத்து இதை மறுபடியும் எழுதிக்கொண்டு வாரும் என்றார்.  சரி என்று நம்பிள்ளை அதை வாங்கிக்கொண்டு, தமது சொந்த ஊருக்குச்  சென்று எந்த விதமான இடையூறும் இல்லாமல் எழுதலாம் என்று  நம்பூருக்கு கிளம்பினார்.  செல்லும் வழியில் காவிரியை கடக்கும் போது வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு, தப்பிக்க முற்பட்டபோது கையிலிருந்த 9000படி ஆற்றில் சென்றது. பின் நம்பிள்ளை உயிர் தப்பி ஊருக்கு சென்று என்ன செய்வது என்று தெரியாமால் தனது ஆசார்யரை  மனதில் நினைத்துக்கொண்டு தியானம் செய்தார். கற்ற பொருள்களையெல்லாம் மறுபடி எழுதினார்,; ஆனால் அப்படி எழுதும்போ\து அங்காங்கே, அவர் தம்முடைய அர்த்தங்களையும், சில கருத்துகளையும் சேர்த்து  எழுதி, அதை  நஞ்ஜீயரிடம் மறுபடியும் கொடுத்தார்,   அவற்றைப்  படித்துப்பார்த்த  நஞ்சீயர், இதில் ஏதோ மாற்றம் தெரிகிறதே என்று கூற, நம்பிள்ளையும் நடந்த அனைத்தையும் கூறினார்..  சரி என்று கூறி நஞ்ஜீயரும் இவரை புகழ்ந்து, இவருக்கு 'நம்பிள்ளை' என்றும், திருமங்கை ஆழ்வார் அவதரித்த நாளிலே (கார்த்திகையில் கார்த்திகை) அவதரித்ததாலே, 'திருக்கலிகன்றி தாசர்' என்ற திருநாமங்களை அருளிச்செய்தார்.  

நம்பிள்ளை "லோகாசார்யர்" என்னும் திருநாமம் பெற்றது :  நம்பிள்ளைகளின் காலஷேப கோஷ்டி கலைந்தால், அப்பெருந்திரளைக் கண்டு  ஆனந்தமடைந்த ஸ்ரீவைஷ்ணவரான ராஜா, "நம்பெருமாள் கோஷ்டியா? நம்பிள்ளை கோஷ்டியா? என்று கேட்பாராம்.  அப்படிப் பெரும் புகழ்வாய்ந்த நம்பிள்ளை, நம்பெருமாளைச் சேவித்திருக்கும் போது, முதலியாண்டானின் திருப்பேரனாரும், கந்தாடையாண்டான் குமாரருமான "கந்தாடைத் தோழப்பர்", நம்பிள்ளையின் பெருமைகண்டு பொறாமை கொண்டு, பெருமாள் முன்பே நம்பிள்ளையைப் பலவாறாக நிந்தித்தார்.  இதைக்கேட்ட நம்பிள்ளைகள் அபச்சாரப் பட்டோமே என்று நடுங்கிப்போய், பெருமாளைச் சேவித்துவிட்டு, மடத்துக்கு எழுந்தருளி எல்லோரையும் அனுப்பிவிட்டு, தாம் அமுதுசெய்யாமல், மாலைப்பொழுது\ முழுதும் காத்திருந்தார்.   இதை அறிந்த தோழப்பரின் தேவிகள்  அவரிடம், "இதுவரை நாம் கைப்பிடித்த நாள்  ஆசார்யனிடத்தில் அன்புகொண்டு இருப்பதுதான் செய்தோமே ஒழிய, எதிர்கொண்டு நின்றதில்லையே!  மேலும், திருமங்கையாழ்வாரின் அம்சமாகவே அவதரித்த "நம்பிள்ளை"யானவர் நம்பெருமாளுக்குப் ப்ராணராய் இருக்கும்போது, அவர் சந்நிதியிலே காரணமில்லாமல் நம்பிள்ளையை நிந்தித்து, பாகவத அபசாரப்பட்டு, அபசாரப்பட்டோமே என்கிற அனுதாபமும் இல்லாமல் இருக்கும் உம்மோடு எனக்கு என்ன வேலையுண்டு? விவாஹ அடியேனுடைய உடம்புமட்டும்தான் உமக்குத் தரப்பட்டது.  அதை நீர் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்; ஆனால், இந்த ஆத்மாவானது ஏற்கனவே ஆசார்ய ரதீனமாகிவிட்டது" என்று சொல்லி'    "நீர் பெரும் தவறு இழைத்து விட்டீர்,; அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டு அவர் திருவடிகளிலே இரும்" என்று கூற, அவரும் அன்று இரவு, அவர் நம்பிள்ளை திருமாளிகைக்கு புறப்படத் தன்  வீட்டு கதவை திறந்தார்,  அப்போது அங்கே, நம்பிள்ளை அமர்ந்திருந்தார்.  நம்பிள்ளை அவரைப்  பார்த்து நாம் ஏதோ உங்களிடம் தவறு செய்திருக்கிறேன், அதற்கு என்னை மன்னித்து விடும் என்று கூறி அவர் கால்களிலே விழுந்தார். இதைப் பார்த்த  தோழப்பருக்கு மிக்க ஆனந்தம் உண்டாயிற்று.  உடனே இவர் அவர் திருவடிகளில் விழுந்து இனி நீரே நமக்கும் இந்த உலகனைத்திர்க்கும் ஆசார்யன் என்று கூறி இவருக்கு "லோகாசாரியார்'" என்னும் நாமத்தை சூட்டினார். பின் தோழப்பருக்கு பிறந்த முதல் மகனுக்கு, ஆசாரியன்  பெயரையே சூட்ட வேண்டும் என்று ஆசை. ஆனால், அப்படி செய்தால், ஆசாரியன் பெயரை சொல்ல வேண்டி வரும் என்று நினைந்து மகனுக்கு "பிள்ளை உலகாரியன்" என்று பெயர் இட்டார். இதை விளக்கும் வகையில், மணவாள மாமுனிகள் தம் உபதேச ரத்தினமாலையில் 

'துன்னுபுகழ் கந்தாடைத்   தோழப்பர் தம்முகப்பால் 
என்ன உலகாரியனோ என்றுரைக்க -  பின்னை 
உலகாரியன் என்னும் பேர் நம்பிள்ளைக்கோங்கி 
விலகாமல் நின்னதென்றும்  மேல்' (பாசுரம் 53) என்று பாடியுள்ளார் 

வியாக்யானமும் காலக்ஷேபமும் : இவர் தமிழிலும், ஸம்ஸ்க்ருதத்திலும் அதீத ஞானியாக இருந்தார்.  இவருடைய வியாக்யானங்களில் நாம் ஆங்கங்கே திருக்குறள் , நன்னூல் , கம்பராமாயணம்,  வால்மீகி ராமாயணம் ஆகியவற்றை உபயோகித்திருப்பதை காணலாம். இவர் காலக்ஷேபம் என்றால் அவ்வளவு கூட்டம் வருமாம். பார்ப்பவர்கள் நம்பெருமாள் கோஷ்டியோ நம்பிள்ளை கோஷ்டியோ என்று கூறுவார்களாம்.  நம்பிள்ளை வியாக்யான கோஷ்டியின் போது, நடுவில் நம்பெருமாள் புறப்பாடு ஏதேனும் நிகழ்ந்தால், அவர்கள் இந்தக் கூட்டத்தைக் கலைக்கும் வகையில்,   பெருமாளை இப்போ யார் வரச்சொன்னது என்று கூறுவர்களாம்.  

இவர் வழக்கமாக பெரிய பெருமாள் சன்னிதிக்குக்  கிழக்கில் இருக்கும் மண்டபத்தில் காலக்ஷேபம் செய்வார்.  ஒரு நாள் இவர் காலக்ஷேபம் நடந்து கொண்டிருந்த போது,  மூலமூர்த்தியான  பெரிய பெருமாளுக்கு அதைத் தானும் கேட்டு அனுபவிக்கவேண்டும் என்ற ஆசை எழுந்தது. நம்மாழ்வார் தம்மைப் பற்றிப்  பாடிய பாடல்களின் (திருவாய்மொழி) அர்த்தத்தை ஊரில் உள்ள அனைவரும் நம் கோயிலில் வந்து கேட்கும் படி இவர் காலக்ஷேபம் செய்து கொண்டிருக்கிறார்; ஆனால் நம்மால் இதைக் கேட்கமுடியவில்லையே  என்று மனம் உருகினார்.  ஆசை தாங்கவில்லை;  ஆனால், அர்ச்சை மூர்த்தி அசைய கூடாது;   இருந்தாலும்  நம்பிள்ளை ஈர்க்கிறார் -  முடியவில்லை -  விட்டேனா பாரென்று அர்ச்சை மூர்த்தி என்றும் பாராமல் எழுந்தார்;  எட்டி வெளியே பார்க்க முற்பட்டார்,; பெருமாள் சன்னிதியில் பெருமாள் மற்றும் திருவிளக்குபிச்சன் (விளக்கு பிடிப்பவன்) ஒருவனே இருந்தான், வேறு யாரும் இல்லை. அந்த திருவிளக்குபிச்சனும், கழுத்தை வெளியே நீட்டி நம்பிள்ளை காலக்ஷேபத்தை கேட்டு கொண்டிருந்தான். திடீரென்று பின்னிலிருந்து  யாரோ ஒருவர் தள்ளுவதுபோல்  அவனுக்கு இருந்தது, உள்ளே யாரும் கிடையாதே! பின் யார் தள்ளினார் என்று திரும்பிப்  பார்த்தால்,  15 அடியில் பச்சை மாமலை போல் மேனியைக்  கொண்டிருந்த திருவரங்கனாதனே எழுந்துவந்து,  அவன் பின் நின்று கொண்டிருந்ததை கண்டான்.  பார்த்த அவன் பெருமாளிடம் எதற்காக எழுந்தீர் என்று கேட்டான்,; பெருமாள் தழைந்து "காலக்ஷேபம் கேக்கனும்னு ஆசை அதான்" என்று கூற, இவன் அதெல்லாம் கூடாது, அர்ச்சை மூர்த்தி இவ்வாறு செய்வது தவறு என்று கூறி மறுத்து, பெருமானை ஒரே தள்ளு தள்ளினான்.  அன்றைக்கு மறுபடியும் தன் கருவறையின் உள்ளே  போய்  சயனித்தவர், இன்றுவரையிலும்  அப்படியேதான் இருக்கிறார்.

பேற்றுக்கு நம்பிள்ளை காட்டிய வழி :  மஹாபாஷ்ய பட்டர் என்பவர் நம்பிள்ளையைப் பார்த்து, ஞானரூபமான ஆத்மாவுக்கு, இந்த சரீரம் கழிந்தால் (மரணமானால்), வைகுந்த சித்தம் (பரமபதம்) என்று உறுதியோடு இருப்பது எதனாலே? என்று கேட்டதற்கு, நம்பிள்ளை, "ஸ்ரீயப்பதியான எம்பெருமானையே பேற்றைத் தருவானும், பேறாவானுமாகக் கொண்டிருப்பதும், நெடுங்காலம் இழந்து கிடந்த பகவானைக் காட்டித் தந்த ஆசார்யனிடத்தில் ஊற்றம் (பக்தி, அன்பு) மிகுந்திருக்கையும், ஸ்ரீபாஷ்யப்படி (விசிஷ்டாத்வைதம்) எம்பெருமானார் தர்சனமே ஸித்தாந்தம்  (முடிந்த கொள்கை) என்றிருக்கையும், ஸ்ரீராமாயணத்தாலே பகவத் குணங்களை அனுபவிப்பதும், ஆழ்வாரின் ப்ரபந்தங்களாலே போது போக்குவதுமாயும் இருந்தால், தேஹத்தின் முடிவில் பரமபத சித்தம்; 'மீட்சியின்றி வைகுந்த மாநகர் மற்றது கையதுவே' (திருவாய்மொழி, 4.8.11) சந்தேகம் வேண்டாம்" என்று அருளினார்.  பலம் இன்னது; பலத்தைக் கொடுக்கும் உபாயம் இன்னது என்ற முடிவும், ஆசார்யனிடம் நம்பிக்கையும், நம் தர்சன நம்பிக்கையும், பகவானுடைய மங்கள குணங்களில் , ஆழ்ந்து போதலும் உண்டானால், பேற்றைப் பெற்றுவிடுவது திண்ணம் (உறுதி) என்று இதனால் (நம்பிள்ளை) தெளிவுபடுத்தினாராயிற்று.

இதர தேவதா உபாஸனம் : "திருமாலைத் தவிர மற்ற தேவதைகளை வணங்கக்கூடாது என்கிற நீங்கள், நித்ய கர்ம அனுஷ்டானங்கள் (சந்த்யாவன்தனம் முதலான நித்யக் கடமைகள்), நைமித்திகங்கள் (ச்ரார்த்தம் முதலான  காரணத்துக்காக செய்யப்படும் விஷயங்கள்)  முதலானவற்றில், அக்னி, இந்திரன் முதலிய தேவதைகளைப் பூசிப்பது ஏன்? ஆலயங்களைப் பூசிக்காது இருப்பது ஏன்?" என்று நம்பிள்ளையிடம்  கேட்க, அதற்கு நம்பிள்ளை,  "இல்லறத்தான் செய்யும் வேள்வித்தீயில் அக்னியை பூசிப்பதும், சுடுகாட்டுத் தீயை ஒதுக்கியும் போவதுபோல், நித்யம் முதலானவற்றில் பகவானுக்கு அங்கங்கள் என்ற எண்ணத்தோடு செய்கிற இந்த இதர உபாசனம் பகவானையே உபாசிப்பதாகவே, மேலான சாஸ்திரம் விதிக்கின்றது; அதனால், செய்தே ஆகவேண்டிய நித்யம் முதலானவற்றில், இந்த தேவதைகள் பகவானாகவே வணங்கப்படுகின்றனர்.  ஆனால், ஆலயங்களில் உள்ள இதர தேவதைகள் தாமஸ குணங்கள் உடையவர்களால், சாஸ்த்ர விருத்தமான தாமஸ  சொல்லப்பட்ட மந்த்ர தந்த்ரங்களாலே பர தெய்வங்களாக பிரதிஷ்டை செய்யப்பட்டதால், அந்த ஆலயங்களை வணங்கும்படி விதி (கட்டளை) இல்லாமையாலும், இதர தேவதைகள் குடிகொண்டுள்ள ஆலயங்களை ஸ்ரீவைஷ்ணவர்கள் வணங்கமாட்டார்கள்.  மேலும், ருத்ரஸ்ஸத்வ குணத்துக்கு மிகவும் விரோதமான தமோ குணத்தையே உடையவனாகையாலே, இதர தேவதைகளை வணங்குவது படுகுழியில் தள்ளிவிடும்" என்று அருளிச்செய்தார்.  

நம்பிள்ளையின் பால் ஆர்வம் கொண்ட ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் அவரிடம், "உம்முடைய திருமேனி (சரீரம்) இளைத்திருக்கிறதே?"  என்று  கேட்க, அதற்கு நம்பிள்ளை, "ஒன்று தேய ஒன்று வளர்கிறது" என்று கூறினார்.  அதாவது, "ஞானம், பக்தி, வைராக்கியம் ஆகியவை வளர, பகவானை நினைந்து, நைந்து, உள் கரைந்து உருகதலால் உடல் தேயும்" என்று பொருள்.

இப்படி ஊரும் நாடும் உலகமுமெல்லாம் கலியிருள் நீங்கி, க்ருதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளத்தாழும்படித் திருத்தி, எல்லோரையும் திருமாலுக்கே அடிமையாக்கி, வாழ்ந்தருளிய நம்பிள்ளை, "நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டர்"   வைத்து, தன் ஆசார்யரான "நன்ஜீயரை" தியானித்துக்கொண்டே திருநாட்டுக்கு எழுந்தருளினார்.  பெரியோர்கள் அனைவரும் வேரற்ற மரம்போல் விழுந்து  ப்ருஹ்மபேதத்தாலே அவரைத் திருப்பள்ளிப் படுத்தினர். 

நம்பிள்ளையப் போற்றி, ஸ்வாமி மணவாள மாமுனிகள் "உபதேச இரத்தினமாலை"யில் அருளிச்செய்துள்ள பாசுரங்கள்: 

"நம்பிள்ளை தம்முடைய நல்லருளால் ஏவியிட 
பின் பெரியவாச்சான் பிள்ளை அதனால் - இன்பா 
வருபத்தி மாறன் மறைப்பொருளைச் சொன்னது 
இருபத்திநாலாயிரம்"  (பாசுரம் 43)  

விளக்கம் :  நம்பிள்ளை என்னும் ஆசிரியர் தமது பரம க்ருபையினால் நியமித்து அருள, அந்த நியமனத்தை அடியொற்றி, பெரியவாச்சான் பிள்ளை என்னும் ஆசிரியர் ஆனந்தரூபமான பெருகிவந்த பக்தியை உடையவரான நம்மாழ்வார் அருளிச்செய்த தமிழ் வேதமான திருவாய்மொழியினுடைய அர்த்தங்களை விவரித்து அருளிச்செய்த வியாக்யானம் "இருபத்திநாலாயிரப்படி" என்பதாகும்.

"தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை 
வள்ளல் வடக்குத் திருவீதிப் பிள்ளை இந்த 
நாடறிய மாறன் மறைப்பொருளை நன்குரைத்தது 
ஈடு முப்பத்த்தாறாயிரம்"  (பாசுரம் 44)

பாசுர விளக்கம் :  நம்பிள்ளை என்னும் ஆசிரியர் தெளிவாக அருளிச்செய்த ஸ்ரீஸுக்திக்ரமத்தை (உட்கொண்டு) உதாரரான "வடக்குத் திருவீதிப்பிள்ளை" என்னும் ஆசிரியர் திருவாய்மொழியின் அர்த்தங்கள் எல்லாம் உலகோர் அனைவரும் தெரிந்துகொள்ளும்படி நன்றாக அருளிச்செய்த வியாக்யானம் "ஈடு முப்பத்த்தாறாயிரப்படி" என்பதாகும். 

"பின்பழகராம் பெருமாள் சீயர் பெருந்திவத்தில் 
அன்பதுவும் அற்று மிக்க ஆசையினால் - நம்பிள்ளைக
கான அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே 
ஊனமற எப்பொழுதும் ஓர்."   (பாசுரம் ,66)

பின்பழகர் பெருமாள் ஜீயர் என்பவர்  பரமபத வாழ்க்கையிலும் விருப்பமின்றி, பரமபக்தியோடு தன் ஆசார்யரான நம்பிள்ளைக்கு அனுகூலமான கைங்கர்யங்களைச் செய்யப்பெற்ற அந்த நிஷ்டையை (நிலையை) நல்ல மனமே! அதை குறை ஒன்றுமின்றி, பரிபூரணமாக அனுதினமும் செய்வாயாக.  

மேலும், "நம்பெருமாள் நம்மாழ்வார், நஞ்சீயர், நம்பிள்ளை" என்று உப..மாலையில் (பா.50) பல்லாண்டு பாடியுள்ளார் ஸ்வாமி மணவாள மாமுனிகள்.  இதன் உட்பொருளை நோக்க, "நம்பிள்ளை"யைப் பற்றி சொல்ல நினைக்கும்போதே, "நம்" என்கிற உபபதம் பெற்றவர்களான "நம்பெருமாள் நம்மாழ்வார், நஞ்சீயர்" ஆகியோர் நினைவுக்கு வரவே, எல்லாரையும் சேர்த்து ஒரு கோவையாக எடுக்கிறார்.  "நம்" என்று சிறப்பித்துக் கூறுவது ப்ரேமவிசேஷ கார்யமதாலால், அந்த ப்ரேமவிசேஷ கார்யமாகவே ஒவ்வொரு கால விசேஷத்தில் ஒவ்வொரு மஹான்களால் "நம்பெருமாள்" என்பது முதலான திருநாமங்கள் வழங்கப்பட்டதாயின.  ஸ்ரீரங்கநாதனுக்கு "நம்பெருமாள்" என்ற திருநாமம் ஒருகால் ஒரு அரையரால் வழங்கப்பட்டது.  சடகோபர்க்கு "நம்மாழ்வார்" என்ற திருநாமம் ஸ்ரீரங்கநாதனால் நேர்ந்தது.  வேதாந்தி முனிவர்க்கு "நஞ்சீயர்" என்ற திருநாமத்தை  "பட்டர்" (ஸ்ரீபராசரபட்டர்) இட்டார்.   திருக்கலிகன்றி தாஸர்க்கு "நம்பிள்ளை" என்ற திருநாமத்தை நஞ்சீயர் சார்த்தினார்.  
நம்பிள்ளை வாழித் திருநாமம்: 

தேமருவும் செங்கமலத் திருத்தாள்கள் வாழியே 
திருவரையில் பட்டாடை சேர்மருங்கும் வாழியே 
தாமமணி வடமார்வும் புரிநூலும் வாழியே 
தாமரைக்கை இணை அழகும் தடம்புயமும் வாழியே 
பாமருவும் தமிழ்வேதம் பயில்பவளம் வாழியே 
பாடியத்தின் பொருள்தன்னைப் பகர்தாவும் வாழியே 
நாமனுதல் மதிமுகமும் திருமுடியும் வாழியே 
நம்பிள்ளை வடிவழகும் நாடோறும் வாழியே.

காதலுடன் நஞ்சீயர் கழல் தொழுவோன் வாழியே 
கார்த்திகைக் கார்த்திகை உதித்த கலிகன்றி வாழியே 
போதமுடன் ஆழ்வார் சொற்பொருள் உரைப்போன் வாழியே 
புதூரான் பாடியத்தைப் புகழுமவன் வாழியே 
மாதகவா வெவ்வுயிர்க்கும் வாழ்வளித்தான் வாழியே 
மதிள் அரங்கர் ஓலக்கம் வளர்த்திட்டான் வாழியே 
நாதமுனி ஆளவந்தார் நலம் புகழ்வான் வாழியே 
நம்பிள்ளை திருவடிகள் நாடோறும் வாழியே. 

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.



No comments: