Mudaliandan Vaibhavam

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

முதலியாண்டான் வைபவம்
திருநக்ஷத்ரம் : சித்திரை மாதம், புனர்பூசம்

(Souce of Article : Dr.U.Ve.V.V.Ramanujan Swamigal's book )  

தனியன்  : 

பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா |
தஸ்ய தாசரதே பாதௌ சிரஸா தாரயாம்யஹம் ||

ஆசார்யனைப் போற்றுவதாக அமைந்துள்ள தனியன் இது  "யதிராஜருக்குப் (ஸ்ரீராமானுஜர்) பாதுகை (திருவடி நிலை) என்று போற்றப்படும் தாசரதி மஹாகுருவின் திருவடி நிலைகளை என் தலையால் தாங்கி வணங்குகிறேன் என்று அர்த்தம். 

மேஷே புனர்வசஸுதிநே தாசரத்யம்ஸ ஸம்பவம் |
யதீந்த்ரா பாதுகாபிக்யம் வந்தே தாசரதிம் குரும் ||

இராமபிரான் இவ்வுலகில் வந்து அவதரித்த "சித்திரை புனர்வஸு" நன்னாளில் தாசரதியான (தசரதன் மகனான) அவன் அம்சமாக வந்துதித்து, யதீந்த்ர பாதுகைகளாக போற்றப்படும் தாசரதிமஹாகுருவை (முதலியாண்டானை) வணங்குகிறேன் என்று அர்த்தம்.

ஸ்ரீவைஷ்ணவசிரோபூஷா ஸ்ரிராமானுஜபாதுகா |
வாதூலகுலோத்தம்ஸ ஸ்ரீதாசரதிரேததாம் ||

"ஸ்ரீராமானுஜ பாதுகையை ஸ்ரீவைஷ்ணவர் யாவருக்கும் தலைக்கணியாய்த் திகழும் வாதூலகுல திலகரான (தாசரதி) முதலியாண்டானின் புகழ் ஓங்குக என்பது மேற் தனியனின் பொருள் 

"முதலியாண்டான்" என்று நம் ஸம்பிரதாயத்தில் புகழ் பெற்றவரான தாசரதிமஹாகுரு ஸ்வாமி எம்பெருமானாரின் (ஸ்ரீராமானுஜர்) ஸஹோதரியின் குமாரராக பச்சைவாரணப் பெருமாள் கோவில் என்னும் ஊரில் அவதரித்தவர்.  இவ்வூர் தற்சமயம் "பேட்டை" என்றே அழைக்கப்படுகிறது.  எதிராஜரான ஜகத்குரு இவரைத் திருதண்டமாக (முக்கோல் மதித்திருந்தார்.  இவரோ, ஜகதாசார்யரான சுவாமியின் (ஸ்ரீராமானுஜர் பாதுகங்களாகவே (திருவடி நிலைகள்)  தம்மை நினைத்திருந்தார்.  எம்பெருமானார் ஸன்யாஸ்ரமம் புகும்போது, "நமது முதலியாண்டானைத் தவிர அனைத்தையும் துறந்தோம்" என்று அருளியதாக இவரது புகழ் பேசப்படுகிறது.  "மொழியைக் கடக்கும் பெரும்புகழான்"  எனப்படும் கூரத்தாழ்வானும், தாசரதியும் (முதலியாண்டான்) ஸ்வாமி ராமானுஜரை முதல் முன்னம் ஆச்ரயித்தவர்கள். ஆதலால் ஆழ்வான், ஆண்டான் என்று இவர்களைச் சேர்த்தே அழைப்பர் பெரியோர்.  இவர்களை ஸ்வாமியின் தண்டும்  பவித்ரமுமாகச் சொல்வது வழக்கம். 

இவரது  வரலாறு ஆசார்யரான ஸ்ரீராமானுஜருடைய வாழ்க்கையுடன் பின்னிக்கிடப்பது.  குருபரம்பராப்ரபாவம் தவிர, கோயிலொழுகு, வார்த்தாமாலை முதலிய நூல்களிலும் வாழ்க்கைக் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.

த்ரேதா யுகத்தில் பெருமாள் இராமபிரானாக வந்து அவதரித்தபோது, திருவனந்தாழ்வான் (ஆதிசேஷன்) இலக்குவனாக வந்து பிறந்து அவனுக்கு எல்லா அடிமைகளும் செய்து மகிழ்வித்தான்.  அந்த கைங்கர்ய ரஸத்தைத் தான் முழுதும் பருகவேண்டும் என்று ஆசைகொண்ட பெருமாள், கலியுகத்தில், தானே அவர் (ஸ்ரீராமானுஜர்) சகோதரியின் புதல்வனாக வந்துதித்து, "தாசரதி" என்ற பெயருடன் அவருக்கு அந்தரங்க கைங்கர்யங்களைச் செய்து மகிழ்வுற்றான்.  அதாவது, த்ரேதா யுகத்தில் இலக்குவனாக அவதரித்தான் திருவனந்தாழ்வான்;  இராமபிரானுக்கு அனைத்து கைங்கர்யங்களும் புரிந்தான்.  பின்னர் அவன் கலியுகத்தில்  ஸ்ரீராமானுஜராக அவதரித்தான்.   அதேபோல், இராமனாக அவதரித்து, இலக்குவனிடம் கைங்கர்யங்கள் பெற்றுக்கொண்ட பெருமான் அதற்கு ப்ரதி உபகாரமாக, கலியுகத்தில் ஸ்ரீராமானுஜருக்குக் கைங்கர்யங்கள் செய்ய, அவரது சகோதரி மகனாக அவதரித்தான்.  ஆக, இலக்குவனே ஸ்ரீராமானுஜர்; இராமனே முதலியாண்டான்.   இராமபிரான்  முதலியாண்டான் இருவர் அவதரித்ததும் "சித்திரை மாதம் புனர்பூசம் நக்ஷத்ர"மாகும் 

ஸ்ரீராமானுஜரின் ஸ்ரீவைஷ்ணவ ஸ்வாமிகள் (முதல்வர்கள்), இவரை ஆண்டானாக (ஆளும் பிரானாக) மதித்ததினால், இவர் "முதலியாண்டான்" ஆனார்.  ஆனால் இவரோ, எதிராசருக்கும் அவர்களுக்கும் அடிமையாய் இருப்பதையே விரும்பினார்.  ஒரு சமயம் இராமானுசர் இவரைத் தனது ஆசார்யரான பெரியநம்பிகளின் குமாரத்தியான (மகள்) அத்துழாய்க்கு சீதன வெள்ளாட்டியாக (பணிப்பெண்) அனுப்பினார்;  இவரும், அத்துழாயின் மாமியார் அகத்தில் ஒரு பணிப்பெண் செய்யும் அடிமைத் தொழில்களை மன நிறைவுடன் செய்தார்.  இராமானுசரிடம் இவர் கொண்ட ஆசார்ய பக்தி எவ்வளவு மேன்மையானது இதன் மூலம் தெரிகிறது. 


யதிராஜருக்கும் முதலியாண்டானுக்கும் உள்ள உறவைக் காட்டும் ஒரு புகழ்வாய்ந்த ச்லோகம்:

அஜஹத்பாகிநேயத்வம் பாதுகாத்வம் த்ரிதண்டதாம் |
ஸம்ப்ராப்தோ  யதிராஜஸ்ய  குணைஸ்தத்ப்ரீதி ஹேதுபி: ||

மகிழ்விக்கும் ஆத்மகுண பூர்த்தியால், யதிராஜருக்கு விலகாத சகோதரிபுத்ரர் என்ற உறவையும் பாதுகை (திருவடி) ஆகையையும், த்ரிதண்டமாகையையும் (முக்கோல்) ஆகிய மூன்று நிலையினைப் பெற்றார் (முதலியாண்டான்).  மருமான் என்ற உறவு பிறவியால் வந்தாகிலும், தாய்மாமன் துற்வியானபோது அது தானே விலகிவிடவேண்டும்.  யதீந்த்ரரான ராமானுஜர் துரவியானபோது, தாசரதியான மருமானைத் துறக்கவில்லை.  முதலியாண்டானைத் தவிர அனைத்தையும் துறந்தோம் என்றதும் இவரது பாகவத குணங்களைப் போற்றி, தனது த்ரிதண்டமாகவும் பாதுகையாகவும் மதித்தது இவர் உள்ளத் தூய்மையையும், அடிமையாய் (சேஷி) இருக்கும் விருப்பத்தையும் பற்றியவையாதல் வேண்டும்.  மேல்கோட்டை என்று வழங்கப்படும் திருநாராயணபுரத்தில் முதலியாண்டான் திருவடிகளை விளக்கி (அலம்பி), அந்த ஸ்ரீபாத தீர்த்தத்தைப் புருகிய அவ்வூரார்  பலர் மனம் திருந்தி உடையவர் பக்கம் பக்தர்களானார்கள் என்னும் விஷயம் முதளியான்டானின் மனத் தூய்மையை புலப்படுத்தும்.

மணவாள மாமுனிகள்,

மபூர்வம் பரதார்த்தித: பிரதிநிதிம் ஸ்ரீபாதுகாமாத்மந:
ராஜ்யாய ப்ரததௌ  ஏவஹி குரு:ஸ்ரீதாசரத்யாஹ்வய: |
பூத்வா லக்ஷ்மண பாதுகாந்திமயுகே ஸர்வாத்மநாம் ச்ரேயஸே 
ஸாம்ராஜ்யம் ஸ்வயமேவ நிர்வஹதி நோ தைவம்குலஸ்யோத்தமம் ||

எவன் முன்பொருகால் பரதனால் வேண்டப்பட்டு தன் திருவடி நிலைகளைத்   தன் பிரதிநிதியாகத் தந்தானோ, அவனே (அந்த இராமபிரானே) ஸ்ரீதாசரதிகுரு முதலியாண்டான்) என்ற திருநாமம் பூண்ட ஆசார்யனாய் கலிகாலத்தில் நம் குலத்திற்கு உத்தம தெய்வமான ஸ்ரீயதிராஜபாதுகையாகி  எல்லா ஆத்மாக்களும் உய்யும் வண்ணம் ஸ்ரீவைஷ்ணவ ஸாம்ராஜ்யத்தை தானே இங்கு நடத்துகிறான் என்று பொருள்.

நம் பூர்வர்கள் முதலியாண்டான் விஷயமாக அமைந்துள்ள துதிகள் எல்லாவற்றிலும் இவர் யதிராஜ பாதுகையாகக் கொண்டாடப்படுவதிலிருந்து அந்த ஆகாரமே இவருக்கு மிகவும் உகப்பை (மகிழ்வை) அளிப்பது என்பது விளங்குகிறது. 


தன் ஆரியனுக்குத் தான் அடிமை செய்வது அவன் 
இந்நாடு தன்னில் இருக்கு நாள் - அந்நேர் 
அறிந்தும் அதில் ஆசையின்றி ஆசாரியனைப் 
பிரிந்திருப்பார் ஆர், மனமே பேசு

என்று உபதேச இரத்தினமாலையில் தெரிவித்துள்ளார் மணவாள மாமுனிகள்.  அதாவது, ஆசார்யனுக்கு சிஷ்யனாகிய ஒருவன் கைங்கர்யங்கள் செய்வது என்பது அந்த ஆசார்யர் இந்தப் பூமியில் எழுந்தருளியிருக்கும் நாள்வரைதான்!  அந்த நேர்த்தியை (உயர்ந்த தத்துவம்) அறிந்திருந்தும், ஆசார்ய கைங்கர்யத்தில் ருசி (அன்பு, பக்தி, ஆசை) இல்லாமல் ஆசார்யனைப் பிரிந்து, வேறு ஒரு இடத்தில் வசிப்பவரும் இருப்பரோ?  மனமே சொல்! என்று தெரிவித்துள்ளார் மாமுனிகள்.  

ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தின் சிறப்பே, ஆசார்ய கைங்கர்யத்தில் ஈடுபாட்டுடன் இருப்பதுதான்.  ஞானமும் அனுஷ்டானமும் நன்றாகவே உடைய குருவை அடைந்து, அவருக்குக் கைங்கர்யங்கள் புரிந்துவந்தால், திருமகள் கேள்வனான பெருமான், தான்  நித்யவாசம் செய்யும் ஸ்ரீவைகுண்டத்தில் தானாகவே உகந்து (மகிழ்ந்து) நமக்கு இடமளித்து உதவுகிறான் என்பதும் மாமுனிகள் வாக்கு (உப.இர.மாலை, 61).  ஆசார்யனுக்குக் கைங்கர்யம் புரியாமல், ஆசார்யனிடத்தில் அன்பில்லாமல், ஒருவர் பகவானிடத்தில் பக்தியோ அன்போ கைங்கர்யாமோ செய்தால், அதை பகவான் ஒருபோதும் ஏற்பதில்லை; மேலும் அவன் அவருக்கு எந்த நன்மைகளையும் செய்வதில்லை.  தன்னிடத்தில் பக்தியோ அன்போ செய்யாமல் போனாலும்  ஒருவர் ஆசார்யனிடத்தில் பக்தியும், அன்பும், கைங்கர்யமும் செய்தால், எம்பெருமான் மிகவும் மகிழ்ந்து, அவருக்கு சகல நன்மைகளையும் செய்கிறான்.  

இப்படிப்பட்ட ஆசார்ய கைங்கர்யத்தில் மிகவும் சிறப்புடையவராக இருந்தவர் "முதலியாண்டான்".  இவர் தன் ஆசார்யராகக் கொண்டது, ஜகதாசார்யரான பகவத் ஸ்ரீராமாநுஜரையே; ஸ்ரீராமாநுஜர் இவருக்குத் தாய்மாமனும்கூட!  தான் துறவறம் மேற்கொண்டபோது, அனைத்தையும் துறந்தோம், "முதலியாண்டானைத் தவிர" என்று ஏன் ஸ்ரீராமாநுஜர் கூறினார் என்றால், ஞானமும், அனுஷ்டானமும், வைராக்யமும் நிரம்பப் பெற்றவராக "ஆண்டான்" இருந்ததே அதற்குக் காரணம் ஆகும்.  இனி, இவர் வைபவத்தைத் தொடர்ந்து அனுபவிப்போம்: 

மூன்று உறவுகள் :

"அஜஹத்பாகிநேயத்வம், பாதுகாத்யம், த்ரிதண்டதாம் ஸம்ப்ராப்தோ யதிராஜஸ்ய" - என்கிறபடி, முதலியாண்டானுக்கும் எதிராசரான உடையவருக்கும் அமைந்த மூன்று உறவுகளை மேலும் ஆராய்வோம்.  "அஜஹத் பாகிநேயத்வம் யதிராஜஸ்ய" என்றால் எதிராசருக்கு உடன் பிறந்தான் மகன் என்ற உறவு விலகாமல் அமைந்தது போற்றப்படுகிறது.  

பிதரம் மாதரம் தாராந் புத்ராந் பந்துந் ஸகீத் குரூந் |
ரத்நாநி தநதாந்யாநி க்ஷேத்ராணி க்ருஹாணி ||

ஸர்வ தர்மாம்ஸ்ச ஸந்த்யஜ்ய ஸர்வகாமாம்ஸ்ச ஸாக்ஷாந் |
லோகவிக்ராந்த சரணௌ ஸரணம் தேSவ்ரஜம் விபோ ||

என்று தந்தை, தாய், மனைவி, மக்கள்,  சுற்றம்,  விளைநிலம் முதலான எல்லாவற்றையும் நசையறத் (துளியும் பற்று இன்றி) துறந்தே அவன் திருவடிகளைப் பேற்றுக்கு (உயர்ந்த இன்பம்) உபாயமாகப் பற்றுவதாக சரணாகதி என்பது  பார்க்கப்படுகிறது லௌகீகக் தொடர்புகள் யாவையும் முற்றுமாகவிட்டே, ப்ரபத்தி (சரணாகதி) நிஷ்டையை நாம் மேற்கொள்ளவேண்டும்  துறவறத்தை மேற்கொள்ளுகையில் இவற்றைப் பூரணமாக விடவேண்டுவது அவசியம் என்று சொல்லத் தேவையில்லை.  யதிராஜன் என்ற திருநாமம் விரக்தியின் (வைராக்யத்தின்) எல்லையைக் குறிக்கும்.  இப்படிப்பட்ட உடையவருக்கு முதலியாண்டான் உறவு விலகாத மருமகனாக எப்படி இருக்கமுடியும்?  "முதலியாண்டானை ஒழிய ஸந்யஸித்தோம் ; ஆண்டானைத் த்ரிதண்டமாகவும், ஆழ்வானைப் பவித்ரமாகவும் கொண்டோம்" என்று எதிராசர் அருளிச் செய்ததாக ஐதீகம்.  மேற்கண்ட ச்லோகத்தில், பிறப்பால் இளையாழ்வாருக்கு (எம்பெருமானாரின் பூர்வாச்ரம நிலையில்) மருகராக வாய்த்ததைச் சொல்லவில்லை.  எதிராசருக்குத் தமது சீரிய குணங்களினால், விலகாத உறவைப் பெற்றதாக ஆண்டான் போற்றப்படுவது காண்க.  இளையாழ்வார் (ஸ்ரீராமாநுஜர்) ஸன்யாஸ்ரமம் மேற்கொண்ட பின்பே, முதலியாண்டானும், கூரத்தாழ்வானும் ஸ்வாமி திருவடிகளில் ஆஸ்ரயித்து, ஆத்ம சம்பந்தத்தை ஏற்படுத்திக்  கொண்டனர் அதன்பின்பே, மாமனுக்கும் மருமகனுக்கும் நெருங்கிய பழக்கமும் உறவும் ஏற்பட்டிருக்கவேண்டும்.  மருகராகவும், பாதுகையாகவும் (திருவடி) த்ரிதண்டமாகவும் இவர் மதித்துப் போற்றப்பட்டது ஸ்வாமி ராமாநுஜர், யதிராஜரான பின்பே ("யதி" என்றால் துறவி.  "யதிராசர்" என்றால், துறவிகளுக்கெல்லாம் தலைவர் என்று அர்த்தம்).    ஆகையால், இவருடைய (ஆண்டான்) குணங்களின் மேன்மை சொல்லாமலே விளங்கும். 

வேளுக்குடி ஸ்வாமிகள் உபன்யாசத்திலிருந்து தொகுக்கப்பட்டவை: 

இனி "விடவேண்டும் என்ற தேக (சரீர) சம்பத்தத்தை, விலக்கவேன்டாத உயர்ந்த உறவு என்று போற்றத் தகுமா?" என்ற கேள்விக்கு விடைகாண வேண்டியுள்ளது.  அதாவது, துறவியான பின்னும்,  உறவான முதலியாண்டானை எதிராசர் விடவில்லை. ஏன் சரீர சம்பந்தமானது விலக்கவேண்டியதாக கூறப்படுகிறது என்றால், எம்பெருமானையே அடையத்தகுந்த மேலான புருஷார்த்தமாகவும், அதற்கான உபாயமாகவும் பற்றும் ப்ரபந்நனுக்கு அவனை அடையவிடாமல் தடுப்பதாய் இருப்பது இந்தச் சரீரம் ஆகும்.  பகவத் ஸ்வரூபத்தை அறியவிடாமல் மறைப்பதும் தன்னை இன்பம் பயக்கும் பொருளாகக் காட்டி வஞ்சிப்பதுமான இச்சரீரம் விடவேண்டியதாக கூறப்படுகிறது.  ஆத்மா அறிவுடையது; மேலும் அழிவற்றது!  சரீரம் அறிவற்றது; மேலும் அழியக்கூடியது! எனவே, சரீரம் ஒருபோதும் ஆத்மாவாக முடியாது.  சரீரம் வேறு ஆத்மா வேறு ஆகும்.  சரீரத்தால் பகவானைக் காணலாம்; ஆனால் தரிசிக்கமுடியாது.  அதே சமயம், ஆத்ம சக்தியைக் கொண்டு பகவானை உணர்ந்தால், தரிசித்தால்  அது அழியாத நித்ய ஞானமாக இருக்கும்.  இதைத்தான் நம்மாழ்வார் பெரிய திருவந்தாதியில், "என்றேனும் கட்கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சென்னும் உட்கண்ணால் காண்டும் உணர்ந்து" என்று பாடியுள்ளார்.  அதாவது, சரீரத்தின் அங்கமாக உள்ள அழியக்கூடிய கண்ணால் தரிசிக்கமுடியாத பகவானை, மனம் என்னும் கண்ணால், அதாவது, ஆத்மாவைக் கொண்டு தரிசிக்க, அவனை உணரலாம் என்று அர்த்தம்.

முதலியாண்டானை எதிராசர் விடாததற்கு இன்னுமொரு முக்கியக் காரணம், முதலியாண்டான் உத்தம பாகவதாராய் இருந்ததே!  உத்தம பாகவதர்களின் சம்பந்தம் பொன்னே போல் போற்றத்தக்கது.  முதலியாண்டான் உடையவருக்கு சகோதரி மகனாகப் பிறந்தது பாக்கியமல்ல; அவர் துறவியான பின்பும், எதிராசரான பின்பும், அந்த உறவு விலகாமல் போற்றப்பட்டதே ஆண்டானுடைய ஆத்மகுணப் பெருமையைக் காட்டும்.
  
வைணவத் துறவிகள் விடக்கூடாத அடையாளங்களுள் ஒன்று "த்ரிதண்டம் (முக்கோல்)".  ஸ்ரீவிஷ்ணு புராணத்தின் படி, த்ரிதண்டம், அதாவது முக்கோல் என்பது "ஒரு கோல் மனதைத் (பற்று) துறந்தமையையும், இரண்டாவது கோல் நாவைத் (ருசி) துறந்தமையையும், மூன்றாவது கோல் தேக அபிமானத்தை (உடல் சுகம்) துறந்தமையையும் குறிக்கும் (ஸ்ரீ .வே.ஸ்ரீநிதி ஸ்வாமிகள் உபன்யாசத்தில் கேட்டது).  பிராம்மண ஸன்யாசிகள் சிகை (தலைமுடி, குடுமி), உபவீதம் (பூநூல்), த்ரிதண்டம், பவித்ரம் இவைகளை எப்போதும் விலக்காமல் கொண்டிருக்கவேண்டும்.  முக்கோல் விஷ்ணு ரூபமானது என்றும், "நீ எனது நண்பனாய் இருந்து சகல ரக்ஷணங்களையும் பண்ணவேண்டும்" என்று பொருள்பட மந்திரத்தைச் சொல்லி, முக்கோலை துறவறம் மேற்கொள்ளும் அந்தணன் கையில் ஏந்த வேண்டும் என்கையாலும், துறவி விஷ்ணுவையே வாழ்க்கைத் துணையாகப் பற்றி, பாகவத நெறியில் வாழக்கூடியவன் என்று அறியலாம்.

பகவான் அம்சமாகப் பிறந்த முதலியாண்டானை இராமாநுசர் த்ரிதண்டமாகக் கொண்டது மிகப் பொருத்தமே!  "த்ரிதண்டத்தைக் கைவிட்டாலன்றோ நாம் முதளியாண்டானைக் கைவிடுவது?" என்று ஸ்வாமி ஸாதித்ததாக பிரசித்தம்.  ஸன்யாஸம் மேற்கொள்ளாமலேயே எல்லாப் பற்றுகளையும் விட்டவர்கள் முதலியாண்டானும் கூராத்தாழ்வானும்.  இவர்கள் இருவரையும் த்ரிதண்டமாகவும் பவித்ரமாகவும் ஏற்று தாம் தூய்மை பெற்றதாக இராமாநுசர் கருதினார் என்றால் இவர்கள் இருவரும் எந்த அளவு உள்ளத்தூய்மை பெற்றிருந்தார்கள் என்பது புரியும்.  ராமானுஜ அஷ்டோத்ர ஸதநாம  ஸ்தோத்ரத்தில் "பவித்ரீக்ருத கூரேஸ பாகிநேயத்ரிதண்டக:" என்று இரண்டு திருநாமங்கள் காட்டப்பட்டுள்ளன.  அதாவது, ஆழ்வானைத் துறவிக்கு இன்றியமையாத ஜலபவித்ரமாகவும், ஆண்டானை உடன்பிறந்தான் மகன் என்றே இங்கும் கூறப்பட்டுள்ளது இரசிக்கத்தக்கது.  ஆண்டான், இராமானுசரின் பாதுகை என்றும் பார்த்தோம்; த்ரிதண்டமாக இருக்கிறார் என்றும் பார்த்தோம்.  எப்படி ஒருவர் இரு விஷயங்களாக இருக்கமுடியும் என்ற கேள்வி எழும்.  இளையபெருமாள் (லக்ஷ்மணர்) "அஹமஸ்யவரோ ப்ராதா குணைர்தாஸ்யமுபாகத:" என்று அநுமனுக்குச் சொன்ன வார்த்தை இக்கேள்விக்கு விடை அளிக்கிறது.  "பெருமான் (இராமபிரான்) என்னைத் தமது தம்பியாக எண்ணியிருப்பர்;  ஆனால், நான் அவர் குணங்களுக்குத் தோற்று அவரின் அடிமையாகவே எண்ணியுள்ளேன்" என்பது இளையோன் (லக்ஷ்மணர்) வாக்கு.  அதேபோல், இங்கே பகவத் ஸ்ரீராமாநுஜர் ஆண்டானைத் தமது த்ரிதண்டமாகக் கொண்டாலும், ஆண்டான் தன்னை அவரது பாதுகையாகவே எண்ணினார் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஆண்டானின் வைபவத்தில் இதுவரை நாம் அனுபவித்தது அவர் யதிராசரின் சகோதரி மகனாக அவதரித்து அவருக்கு மருமகனாக இருந்தார் என்பதையும், யதிராசர் ஸன்யாஸம் மேற்கொண்டபின் அவரது த்ரிதண்டமாகவும், மேலும் அவரது பாதுகையாகவும் இருந்தார் என்பதை விவரமாகப் பார்த்தோம்.  இதன் மூலம் ஆண்டான் இராமானுசருக்கு மூன்று வகை உறவினாகத் திகழ்ந்தார் - அதாவது, மருமகன், த்ரிதண்டம், பாதுகை - என்று பார்த்தோம்.  இதைவிட ஒரு பெருமையான விஷயம் வேறு எது இருக்கமுடியும்?  இந்தப் பெருமை வேறு எவருக்கும் அமையவில்லையே!  அனைத்துலகும் வாழப் பிறந்த இராமானுச முனி, ஆண்டானுடைய உறவை விரும்பி, அவரை விடாமல் பேணினார் என்றால், இவருடைய பெருமையை எப்படிப் பேசித் தலைக்கட்ட முடியும்?  எல்லாம் துறந்த யதிராசரையும், தமது சிறந்த குணங்களால் மகிழ்வித்துக் கவர்ந்தவறன்ரோ ஸ்வாமி முதலியாண்டான்! 

"சிற்றெயிற்று முற்றர் மூங்கில் மூன்றுதண்டர் ஒன்றினர்
அற்ற பற்றர் சுற்றி வாழும் அந்தணீர் அரங்கமே"! 
     (திருமழிசைப்பிரான்,  திருச்சந்தவிருத்தம், பாசுரம் 44)

சிறிய கணுக்களை உடைய முற்றிய மூங்கிலால் செய்யப்பட்ட த்ரிதண்டத்தை ஏந்தியவர்களும், ஏகாந்திகளும், பற்றற்றவர்களுமான துறவிகள் சூழ்ந்து வாழுமிடம் திருவரங்கமாகும்.  ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தாலும், இராமானுச முனி இருந்தது திருவரங்கமே!  புருஷமங்கலம் என்னும் தலத்தில் அவதரித்தாலும், பற்றுக்கள் அனைத்தையும் துறந்து ஆண்டான் இராமானுசருக்குக் கைங்கர்யங்கள் புரிந்து வாழ்ந்தது திருவரங்கமே! நம் பூருவர்கள் எங்கு அவதரித்திருந்தாலும், அவர்கள் வாழ்ந்தது திருவரங்கத்தில்தான்.  "சேராதன உளவோ பெருஞ்செல்வத்து" என்று திருவரங்கத்தின் பெருமை பேசப்படுகிறது.  அதாவது, செல்வந்தனாக இருப்பவனிடமே செல்வம் மீண்டும் மீண்டும் சென்று சேர்வதுபோல், திருவரங்கச் செல்வனிடமே, பூருவாசார்யர்கள் என்னும் செல்வம் சென்று சென்று சேர்ந்தது என்று அர்த்தம். 

ஆண்டானின் வாழ்க்கைச் சரித்திரம் :

இராமபிரானே முதலியாண்டானக அவதரித்தான் என்று பார்த்தோம்.  இருவரும் அவதரித்தது "சித்திரை மாதம் புனர்பூசம்" நக்ஷத்திரத்தில்.  இராமாநுசருக்கு உடன் பிறந்த சகோதரிகள் இருவர்.  மூத்தவர் நாச்சியாரம்மை (கோதாம்பிகா); இளையவர் கமலை.  இவைகளில் முதல் சகோதரி காஞ்சிபுரத்திர்க்குக் கீழ்த்திசையில், திருமழிசைக்கு அருகிலுள்ள புருஷமங்கலம் அநந்தநாராயண தீக்ஷிதர் என்கிற அந்தண நல்லார் ஒருவருக்கு வாழ்க்கைப் பட்டிருந்தார்.  பச்சைவாரணப் பெருமாள் கோயில் என்று இங்கு கோயில் கொண்டுள்ள பெருமான் பெயரையிட்டு வழங்கப்படும் இவ்வூர் இப்போது "நாசரத்பேட்டை" என்றே யாவராலும் அறியப்பட்டுள்ளது.  சித்திரை புனர்பூசத்தில் அவதரித்ததால், ஆண்டானுக்கு "தாசரதி" என்ற இராமபிரானின் பெயரையே இட்டனர் பெற்றோர்.  "தாசரதி" என்றால் தசரதனின் புதல்வன் என்று அர்த்தம்.  எனவே, இவ்வூர் அந்த காலத்தில் "தாசரதிப்பேட்டை" என்றே அழைக்கப்பட்டு வந்தது.  பின்னர், காலங்கள் செல்ல, இது மருவி மருவி, "நாசரத்பேட்டை" என்று மாறிவிட்டது.  ஆண்டானின் பெற்றோர் திருமணம் கொண்டு பல ஆண்டுகளாகியும் புத்திரப்பேறு இல்லாமல் இருந்தனர்.  எனவே அவர்கள் புத்திரப்பேறு வேண்டி, திருவேங்கடம் யாத்திரை மேற்கொண்டு, வழியில் திருநின்றவூரில் ஒரு இரவு தங்கி, ஏரிகாத்த இராமபிரான் ஸன்னதியில் உறங்கும்போது, அப்பெருமனே இவர்கள் கனவில் தோன்றி நேர் "திருவேங்கடம் செல்லவேண்டாம்; நாமே உமக்கு மகனாக வந்து பிறப்போம்" என்று சொல்லி மறைந்தான்.  உறக்கம் நீங்கப்பெற்ற அவர், பெருமகிழ்ச்சி கொண்டு, கனவில் நிகழ்ந்ததைத் தம் மனைவியிடம் சொல்லி, திருவேங்கடம் செல்லாமல் தமது ஊருக்கே திரும்பினார்.  நாளடைவில் அவர் கனவு நினைவானது.  சக்ரவர்த்தித் திருமகனின்அம்சமாய் , அவ்வெம்பெருமான் அவதரித்த சித்திரையில் புனர்வஸுவில்  ஆண்டான் அவதரித்தார்.  ஆண்டான் இராமபிரானின் பாஞ்சஜந்யாழ்வாரின் (சங்கம் - சங்கு) அம்சமாய் அவதரித்தார் என்றும், இவரிடம் இராமபிரான் ஆவேசித்து, யதிராசருக்கு அந்தரங்க கைங்கர்யங்களைச் செய்து மகிழ்ந்தனன் என்றும் அறியலாம்.  

ஆண்டானுக்கு சரியான வயதில் அவரது தந்தையார் வைதீக ஸம்ஸ்காரங்களான நாமகரணம், சௌனம், உபநயனம் முதலானவைகளை நடத்திவைத்து, பிள்ளைக்கு நல்ல வைதிக வித்யையும் கற்பித்தார்.  திராவிடம் (தமிழ்), வடமொழி (ஸம்ஸ்க்ருதம்) ஆகிய இரண்டு மொழிகளிலும் இவருக்கு விசேஷமான புலமை உண்டு என்பதை அருளிச்செயல் வியாக்யானங்களில் இவருடைய நிர்வாஹங்களாகக் காட்டப்பட்டுள்ளவை மூலமாக அறியலாம்.  பின்னர் திருமணமாகித் தம் ஊரிலேயே இவர் வாழ்ந்துவந்தபோது, தாய்மாமனான இளையாழ்வார் (ஸ்ரீராமாநுஜர்) துறவறம் மேற்கொண்டு பெருமாள் கோயிலில் (காஞ்சிபுரம்) ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யராய்ப் பொலிவுற்று விளங்குவதறிந்து. அவரையடைந்து, அவரிடமே பஞ்சஸம்ஸ்காரங்களை   யாசித்துப்பெற்று, அவரைவிட்டுப் பிரியாமல் குற்றேவல் (அந்தரங்க கைங்கர்யங்கள்) புரிந்துகொண்டு, கற்கவேண்டியவை எல்லாவற்றையும் கற்று, அவருக்கு வலக்கைபோல  வாழ்ந்துவரலானார்.  இப்படி, இராமாநுச முனிவரிடம் முதல்முதலில் சிஷ்யர்களாக ஆச்ரயித்தவர்கள் வாதூலகுல திலகரான முதலியாண்டானும், ஹாரீதகுல திலகரான கூரத்தாழ்வானும் ஆவர்.  பின்னர், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீ ஆளவந்தாரின் விருப்பத்தை நிறைவேற்ற திருவரங்கத்துக்கு எழுந்தருளி, திருவரங்கத்தையே தனது இருப்பிடமாகக் கொள்ள, ஆண்டானும் ஆழ்வானும் அவருடன் திருவரங்கத்துக்கு எழுந்தருளி மட கைங்கர்யங்களையும் பெரிய கோயில் கைங்கர்யங்களையும் ஸ்வாமியின் ஆணைப்படி செவ்வனே நிறைவேற்றி வந்தனர்  

"அர்ச்சாவதாரத்தில் ஈடுபாடு"

ஆண்டான் உடையவரை உய்வுக்கு உபாயமாகவும், உபேயமாகவும் கொண்டவர் ஆயினும், கூடவே எம்பெருமானின் திருவடிகளை உபாயமாகவும் திருமேனியை உபேயமாகவும் கொண்டிருப்பார்.  பெருமான் திருக்கையில் திவ்யாயுத ஆழ்வார்களை உடையவர் இல்லாதபோது தனக்குப் பெருந்துணையாகப் பற்றியிருப்பாராம்.  

"அருளிச்செயலில் ஈடுபாடு" 

ஆண்டான் அர்ச்சாவதாரத்தில் கொண்ட ஈடுபாடு ஒருவிதம். அதுபோலவே, அர்ச்சையைப் ப்ரதானமாக வைத்துப்பேசும் அருளிச்செயல்களிலும் இவருக்கு அளவுகடந்த ஈடுபாடுஉண்டு .  இதற்குச் சான்றாக ஒரு நிகழ்ச்சி: எம்பெருமானார் பகல் போதில் வேதாந்த காலக்ஷேபம் (ஸ்ரீபாஷ்யம்) ஸாதிப்பார்; இரவுப்போதில் அருளிச்செயல் கொண்டு பொழுதுபோக்குவது வழக்கம்.  இப்படி ஒருநாள் இரவு, உடையவர் திருவாய்மொழி பாசுர ஒன்றைச் சொன்னதும், அருகிலிருந்த ஆண்டான் மிகுந்த பரவசம் அடைந்து, பரமானந்தத்தை அடைந்தாராம்.  அதைக்கண்ட உடையவர்,  "வேதம் வால்மீகி இராமாயணமாக அவதரித்தது; அவ்வேதமே திருவாய்மொழியாக ஆழ்வார் (நம்மாழ்வார்) வாயிலாக அவதரித்துள்ளது.  இதை நினைத்து இவர் பரவசரானார் காணீர் என்று கூறினாராம்.  அதாவது, தன் குமாரர்களான லவகுசர்கள் வாக்கால் வேதத்தின் மறுபிறப்பான ஸ்ரீராமாயணத்தைத் திருச்செவியால் பருகினான் இராமபிரான்;   அப்பெருமானின் அம்சமான இவர் வேதத்தின் இன்னொரு மறுபிறப்பான திருவாய்மொழி கேட்டு பரவசமானதில் வியப்பில்லை என்பது கருத்து.  

முதலியாண்டான் வாழித் திருநாமம்: 
 அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே 
அருட்பச்சை வாரணத்தில் அவதரித்தான் வாழியே 
சித்திரையில் புனர்பூசம் சிறக்கவந்தோன் வாழியே
சீபாடியம் ஈடுமுதல் சீர்பெறுவோன் வாழியே 
உத்தமமாம் வாதூலம் உயரவந்தோன் வாழியே 
ஊர்திருந்தச் சீர்பாதம் ஊன்றினான் வாழியே 
முத்திரையும் செங்கோலும் முடிபெறுவோன் வாழியே 
முதலியாண்டான் பொற்பதங்கள் ஊழிதொறும் வாழியே.

ஸ்வாமி முதலியாண்டான் ஆசார்யரான ஸ்வாமி உடையவர் ஸ்ரீபாதத்திலே கைங்கர்யத்தைச் செய்து, பெரியபெருமாள் ஸந்நிதியிலே ஸ்ரீ சேனாபதி கைங்கர்ய துரந்தரராக வாதூல தேசிக பதம் நிர்வஹித்து ஸ்ரீரங்க ஸ்ரீயை அபிவிருத்தி செய்தவராய்க்கொண்டு 103 திருநக்ஷத்ரம் (கி.பி.1033 - கி.பி.1136) உடையவரின் பாதுகாஸ்தானியராக எழுந்தருளியிருந்தார்.

முதலியாண்டான் திருவடிகளே சரணம் 
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயார் திருவடிகளே சரணம்.




No comments: